பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும் (பகுதி 2)

This entry is part of 18 in the series 20010211_Issue

ரேமண்ட் ஃபெடர்மன் (தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்)


நான் இக்கட்டுரையின் முதல் பகுதியை ஒரு மேற்கோளின் நடுவே ஆரம்பித்தேன். இரண்டாம் பகுதியையும் ஒரு மேற்கோளின் நடுவிலேயே ஆரம்பிக்கப் போகிறேன், ஒரு வேளை இன்னொரு மேற்கோளின் நடுவே முடித்தாலும் முடிக்கலாம். பின் நவீனத்துவத்திலேயே வாழ்ந்து அதைப் படித்ததனால், மேற்கோள்கள் அதன் இருப்பின் மையம் என்பது நமக்குத் தெரியும். ஒரு மேற்கோளிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிச் செல்வதின் மூலமும், அடிக்கடி தன்னையே மேற்கோளாகக் காண்பிப்பது மூலமும் (known as inter-textuality, but which I prefer to call incest-uality), பின் நவீனத்துவப் பிரதி எங்கும் போகாது முன்னகர்ந்தது…..இப்படியே தன் முடிவைத் தாமதிப்பு செய்து, அல்லது முடிய விடாது.

மேற்கோள் என்பது ஏற்கெனெவே சொல்லப்பட்டதன் அல்லது எழுதப்பட்டதன் மறுவாசிப்பு. எழுதப்படுவதன் சாரத்திற்கு அது ஏதும் புதிதாகச் சேர்ப்பதில்லை. முன்னேற்றம், விரிவு, பெரிதாக்கப்படுதல் போன்ற மாயைகளையே மேற்கோள்கள் தோற்றுவிக்கின்றன. மேற்கோள்களினால் உருவாக்கப்பட்ட பிரதி முன்னகர முடியாது; அது காலத்துள் அல்லது தனக்குள் பின்வாங்கிச் செல்லவே முடியும். டிடரோ ஒரு முறை தன்னைப் பற்றிச் சொன்னது, பின் நவீனத்துவப் பிரதிக்கும் பொருந்தும்: காதால் கேட்பது கேட்டதைத் திரும்பிச் சொல்லும் இன்பத்திற்காகவே. அதனால் இந்த இரண்டாம் பகுதி எதையோ நோக்கி முன்னகர்ந்து செல்கிறது என்ற மாயையை உருவாக்க, இதோ ஒரு மேற்கோள்:

சில பொதுவான குறிப்புகளோடு தொடங்கலாம். என் நிலைமையில் நான் என்ன செய்வது, என்ன செய்ய வேண்டும், எப்படித் தொடர்வது ? வரையறுக்கப்படாத அர்த்தத்துடனா ? அல்லது சொல்லப்பட்ட நொடியில் அல்லது கூடிய சீக்கிரமே பொய்யாக்கப்படும் ஒப்புதல்கள் மறுப்புகள் மூலமா ? பொதுவாகத்தான் சொல்கிறேன். மற்ற பெயர்ச்சிகளும் இருக்கலாம் ? இல்லையென்றால் அது பயனற்றதாகி விடும். ஆனால்

இது பயனற்றதுதான்.

இந்தப் பொதுவான குறிப்புகள் The Unnamable என்ற கதாபாத்திரத்தால் அத்தலைப்புள்ள பெக்கெட்டின் நாவல் துவக்கத்தில் கூறப்படுகின்றன. இப்பொதுக் குறிப்புகள் பின் நவீனத்துவத்தின் தத்தளிப்பின் தொகுப்பு என்று நான் நம்புகிறேன். அதாவது, முதல் பகுதியில் நான் கூறிய பின் நவீனத்துவத்தின் மாபெரும் தீர்வின்மை.

அதன் துவக்கத்திலிருந்து முடிவு வரை–சொல்லப்பட்ட நொடியில் பொய்யாக்கப்படும் ஒப்புதல்கள் மறுப்புகள் மூலம்–பின் நவீனத்துவம் எப்படி முன்னகர்வது என்று தன்னைக் கேட்டுக் கொண்டது. மறைந்த பின் நவீனத்துவவாதி (மறைந்த என்பது இயக்கத்தின் நிலையைக் குறிப்பது) என்ற முறையில் எனக்கும் அதே கேள்வி இருப்பது போல் தோன்றுகிறது. பின் நவீனத்துக்கு அப்பால் எப்படிச் செல்வது, முடிவடைந்து–இறந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு அப்பால் எப்படிச் செல்வது ? மேற்கோளிலிருந்து மேற்கோளுக்குத் தாவிச் செல்வது மூலம்தான்.

ஆகையினால், நாம் பின் நவீனத்துவத்தின் முடிவிற்குத் தாவிச் செல்வோம்!

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு சில மாதங்களுக்கு முன், நான் எனது இருபது

நண்பர்களுக்கு (எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள்) பின்வரும் இந்த இரு கேள்விகளுக்குப் பதில் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்:

1. பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று நினைக்கிறீர்களா ?

2. அப்படியெனில், அதைச் சாகடித்தது எது ?

எனக்குப் பெருமகிழ்ச்சியூட்டும் வகையில், அனைவரும் பதிலளித்தனர், தம் பெயரை வெளியிடக்கூடாதென்ற நிபந்தனையுடன். இதோ அந்த இருபது பதில்களும்:

1. பின் நவீனத்துவம் என்பது தொடங்கிய நாளிலிருந்தே சாகும் வரம் வாங்கியது. ஏனெனில் அது விரிசல், உடைதல், மாறுதல், மாற்றுச்சேர்க்கை, தொடர்ச்சியின்மை என்பவற்றைப் பற்றியது….

2. எல்லா புதுமைகளையும் போல், பொருளாதார அமைப்புக்குள் இடம் பெற்று அடக்கமானதும் பின் நவீனத்துவமும் தானாகவே முடிந்து விட்டது….

3. உடை, உணவு, இருப்பு என வேறுபட்ட பல துறைகளிலும் பின் நவீனத்துவத்தின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன, புரிந்து கொள்ளக் கூடிய வடிவத்தில். இனி முடிவு வெகு தூரத்தில் இல்லை.

4. பின் நவீனத்துவம் என்பது உண்மையான இலக்கிய இயக்கமாகத் தொடங்கி வெறும் பேரங்காடிக் காட்சிப்பொருளாக முடிந்து விட்டது….

5. பின் நவீனத்தைப் பற்றிப் பல்கலைக்கழகப் பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்ததுமே அந்த வாதத்தின் அடிப்படைச் சாரம் இறந்து விட்டது….

6. ஒரு நாளின் வெற்றியில், பின் நவீனத்துவம் தோற்று விடுகிறது, நிச்சயமாக….

7. பின் நவீனத்துவம் என்பது இயக்கமாகவும் நறுமணப்பொருளாகவும், அறிவுஜீவித்தனமாகவும் கிண்ணத்துப்பழமாகவும் என இருமுகத்தோடு பார்க்கப் பட்டதால் அது பிழைப்பதற்கு வாய்ப்பு இருந்ததே இல்லை….

8. இலக்கியரீதியாக பின் நவீனத்துவம் உருவானதன் காரணம் இரண்டாம் உலகப்போரில் யூதர்களின் ஒட்டுமொத்த அழிவான ஹோலோகாஸ்ட்டை எதிர்கொள்வதற்காகவே. போருக்கு முற்பட்ட காலத்திய இலக்கியத்தின் பொருள்-வடிவப் பிரிவினையால் ஹோலோகாஸ்ட் ஏற்படுத்திய moral crisis-ஐ எதிர்கொள்ள இயலவில்லை. எனவே சாமுவேல் பெக்கெட், வால்ட்டர் அபிஷ், ரானல்ட் ஸுகெனிக், ப்ரீமோ லீவி, ரேமண்ட் ஃபெடர்மன், ஜெர்ஸி கோஸின்ஸ்கி மற்றும் பலர் பின் நவீனத்துவத்தை உருவாக்கினர்…….சடலங்களினூடே தேடலாக, ஒட்டுமொத்த சவக்குழிகளை மீண்டும் தோண்டித் திறப்பதற்காக, தொலைந்து காய்ந்த குருதியையும் கண்ணீரையும் மீண்டும் உயிர்க்க வைப்பதற்காக……அல்லது சாவை விட சுவாரஸ்யமான ஒன்றைப் படைப்பதற்காக….

9. தருக்கம், ஒழுக்கம் ஆகிய இரண்டும் காட்டும் பாதையில் பயணம் முடிந்ததும், இப்பயணியைப் பூட்டிய பெட்டகத்திலிட்டு வழிபடுவதே மரபு, பழந்தவஞானிகளின் சடலங்களைப் போல், அதே முறையில், அதே உபயோகமற்ற முடிவுடன். பின் நவீனத்துவமும் இது போலவே….

10. விமர்சகர் வாதங்களின் தொனி தருக்கத்திலிருந்து ஒழுக்கக்கூறுக்கு மாறும்போது, பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று நமக்குத் தெரிகிறது…..

11. எதன் இறப்பும் அதன் இறப்பைப் பற்றிய கூற்று அல்ல. அதன் உபயோகம், பயன் பற்றிய கூற்றாகும். பின் நவீனத்துவத்தால் இப்போது பயனில்லை….

12. ஓர் இயக்கம் என்பது அவசியத்தேவை என்பதன்றி ஒரு தேர்ந்தெடுப்பு என்றாகும்போது அந்த இயக்கத்தின் இறப்பை உணர்த்துகிறது. பின் நவீனத்துவத்தின் நிலை இதுதான். ஒன்றின் இறப்பைப் பற்றி நிகழ்காலத்தில் பேசுவதில்லை….இறப்பைப் பற்றி அதன் நிகழ்வுக்குப் பின்னரே பேச முடியும்…..இப்போது பின் நவீனத்தின் இறப்பைப் பற்றி எங்கும் எல்லோராலும் பேசப்படுகிறது….

13. பின் நவீனத்துவத்தின் அடிப்படை முதுகெலும்பாகும் இலக்கியவாதப் புத்தகங்கள்: Texts for Nothing, The Library of Babel, Cosmicomics, Lost in the Funhouse, The Voice in the Closet. இப்புத்தகங்கள் பின் நவீனத்துவத்தின் துவக்கமாக நடித்துக்கொண்டே அதன் முடிவையும் அறிவித்து நடத்தி வைத்து விட்டன…..

14. இன்றைய இலக்கிய உலகால் அங்கீகரிக்கப்படும் எழுத்துக்களை விட, கலைகளுக்கு விலையை நிர்ணயிக்க பொருளாதாரச் சந்தை கொண்டிருக்கும் பலமும் அதன் நீட்சியுமே பின் நவீனத்துவத்தின் இறப்பை அடையாளம் காட்டுகின்றன…..

15. இலக்கிய பாதிப்புப்போக்கு (trends/fashion) என்பது அந்த இலக்கியத்தின் படைப்பை விட அதன் அங்கீகரிப்பைப் பற்றியது, அதாவது அதன் பிறப்பை விட முடிவைப் பற்றியது….

16. ஒரு கோணத்திலிருந்து அணுகினால், இன்றைய இலக்கிய உலகம் ஜீவனற்றதாய்த் தெரியலாம். உண்மையென்னவெனில் அது உழப்பட்டு விதைக்கப்படாமல் கிடக்கும் நிலம் போன்று ஆணைக்குட்படவும் எதையும் அங்கீகரிக்கவும் எதனுடனும் சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பது. இத்தகைய சமரசத்துக்கு உடன்படாததால் பின் நவீனத்துவம் இறந்து விட்டது…..

17. பின் நவீனத்துவத்தின் இறப்பு முடிவானது 1960-இல்…அது பிறந்த வருடத்தில்.

18. எந்த காலகட்டத்திலும் அரும்பெருங்கலைகள் தோன்றியது தனிப்பட்ட

அத்தியாவசியத்தினால் மட்டுமே. காலப்போக்கில் அதுவே இந்த theory அந்த theory என்று நாமகரணம் செய்யப்பட்டு பெரிதாக்கப்படுகிறது, அக்கலைகளை மக்களிடையே பெருமளவில் பரப்பும் பொருட்டு. பின் நவீனத்தைக் கொன்றது theory; இதில் வேடிக்கை என்னவென்றால் theory என்பதுமே பின் நவீனத்துவம்தான்…..

19. பின் நவீனத்துவம் என்பது சில முடிவுகளின் எதிர்விளைவு…இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் முடிவுக்கு எதிர்விளைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ‘தானாகப் புலப்படும் உண்மை ‘ (self-evident truth) என்பதன் முடிவுக்கு எதிர்விளைவாக நவீனத்துவம் தோன்றியது போல். பின் நவீனத்துவம் இன்மையையும் இறப்பையும் பற்றி விரித்துரைக்கையில், தன் இன்மையையும் இறப்பையும் பரிந்துரைத்து விட்டது….

20. பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று கூறி விட முடியாது. ஆனால் அடையாளப்படுத்தக் கூடிய, அர்த்தமுள்ள எந்தவொரு இயக்கத்தையும் போல்–இம்ப்ரெஷனிஸம், டாடாயிஸம், ஸர்ரியலிஸம், மாடர்னிஸம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரெஷனிஸம், முதலியன போல்–பின் நவீனத்துவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மேல் தளத்தில் பொங்கி நுரைத்து, பின் அடித்தளத்துக்கு மூழ்கி, அங்கிருக்கும் பிறவற்றோடு சேர்ந்து, வளமான கலாச்சார-கலைக் கலவையின் ஒரு பகுதியாகிறது. இந்த முழுகி, அழுகும் கணமே அந்த இயக்கத்தின் மரணம் என்று அழைக்கப் படுகிறது….

இந்த இருபது பதில்களிலிருந்தும் நமக்குப் புலப்படுவது பின் நவீனத்துவம் நிச்சயமாக இறந்து விட்டது, முடிந்து விட்டது என்பதுதான்: அதைப் பொருளாதார

அமைப்பு விழுங்கி, ஜீரணித்து, அதன் கழிவுகளை கலாச்சாரக் குழம்பில் மீண்டும் சேர்த்து விட்டதால். பல்கலைக்கழக பண்டிதர்களின் அர்த்தமற்ற சண்டைகளின் காரணமாக ஒடுக்கப் பட்டதால் (முக்கியமாக அமெரிக்காவில்).

சிலர் இந்தச் சூழல் ஊக்கமுள்ளதாகத் தெரியவில்லை என்று முணுமுணுக்கலாம்; ஆனால் இப்படிச் சொல்பவர்களை ஊக்குவிப்பது பின் நவீனத்துவத்தின் குறிக்கோளல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஓ, நான் அதை ஏற்கெனவே சொல்லி விட்டேன்…முதல் பகுதியிலும் பிற இடங்களிலும். என்ன செய்வது, எல்லா நல்ல பின் நவீனத்துவவாதிகளையும் போல் நானும் பிரதிக்குள் பிரதி, சொன்னதையே திரும்பச் சொல்வது என்பவற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

கேள்வி கேட்கும் முறையிலேயே தொடர்ந்து நாம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்:

ஏன் ? ஏன் பின் நவீனத்துவம் தன்னைப் பிற சக்திகள் விழுங்கி ஏப்பமிடவோ அல்லது

பல்கலைக்கழகப் பண்டிதர்களால் அமுக்கப்படவோ அனுமதித்தது ?

பதில்: பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு (வரலாற்றிலும் இலக்கியத்திலும்) ஆகியவற்றிலிருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை, புனைவு பற்றிய புனைவு (metafictionality), பிரதிக்குள் பிரதி, பன்முகத்தன்மை ஆகியவற்றிற்குச் சென்றது. காலப்போக்கில், பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்பற்ற நிலைகளின்

தொடுப்பாக, கணங்களின் கூட்டலாக, சம்பந்தம் புரியாத பட்டியல்களாக, வார்த்தைக் கிறுக்கல்களாக மாறி, இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொண்டது.

கேள்வி: இலக்கியம் என்பது மொழியும் அல்லவா ? மொழி என்பது எப்போதும் நிலையானதல்லவா ?

பதில்: இலக்கியமென்பது மொழியால் உருவாகியது. ஆனால் மொழியென்பது நிச்சயிக்கப்பட்ட அடிப்படை அணுக்களின், அவை சேரும் விதிமுறைகளின் எண்ணிக்கைகளால் தளையிடப்பட்டது. பின் நவீனத்துவ இலக்கியத்தின் சுவையும் முக்கியமும் (அதன் பலவீனமும் கூட) என்னவென்றால், அது மொழியின் இயற்கையான தளைகளை மீறி, மொழிக்கு அப்பாற்பட்டதைக் கூற முயன்றதுதான்.

சொல்ல இயலாததைச் சொல்ல முடியாது; எனினும், இந்தச் சாத்தியமின்மையைப் பற்றிப் பின் நவீனத்துவம் பேச முயல்கிறது.

கேள்வி: இலக்கியம் என்பதே ஒரு படைப்புதானே. அது தனக்கென்று கூடவே ஒரு

மொழியையும் படைத்துக் கொள்ள முடியாதா என்ன ? (என் கற்பனைக் கேள்வியாளர் பிடிவாதம் பிடித்தவர்.)

பதில்: இலக்கியம் என்பது படைப்பு அல்ல. அது ஒரு மறுபடைப்பு; புதிதாய் ஒன்றையும் படைக்காமல், புதிதல்லாதை மீண்டும் மீண்டும் படைக்கிறது–சூரியன் எப்படி வேறு வழியில்லாமல் தினம் தினம் புதிதல்லாததன் மேல் கண்விழிக்கிறதோ அது போல். பின் நவீனத்துவப் படைப்பிலக்கியம் நமக்கு அளித்தது அதுவரை மனிதனின் தனிப்பட்ட அல்லது ஒட்டுமொத்த ஞாபகங்களிலிருந்து மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்டவற்றையே. அதனால்தான் பின் நவீனத்துவ புனைவிலக்கியத்தை இலக்கியக் களவு (plagiarism) என்றும் தனக்கே

எதிரியாகும் சக்தி என்றும் பலர் விமர்சித்திருக்கின்றனர்.

கேள்வி: இலக்கியமென்பது அதை எழுதியவரினின்றும் தனிப்பட்டதல்லவா ?

பதில்: இலக்கியம் அப்படிப் பாசாங்கு செய்து கொள்ளலாம். ஆனால், எழுத்தென்பது அதை எழுதுபவரின் ப்ரக்ஞைக்குள் ஆழ்ந்திருக்கும் obsession, அவர் வாழும் சமூகத்தின் obsession ஆகியவை பற்றியது. பின் நவீனத்துவ இலக்கியத்தில் இது இன்னும் கொஞ்சம் முக்கியமாகிறது.

கேள்வி: இலக்கியம் என்பது திசை சார்தலைச் சுட்டும் வடிவம்தானே ?

பதில்: இலக்கியமென்பது தற்போதுள்ள சூழலை உறுதிப்படுத்தும், ஒப்புக்கொள்ளும், சார்ந்து கொள்ளும், பாதுக்காக்கும். அல்லது அதைக் கேள்வி கேட்கும், எதிர்க்கும், தூற்றும், மறுதலிக்கும். எப்படியிருப்பினும், திசை சார்தல் (தெளிவு) என்பது ஏற்படுவதற்கு, திசை சாராதிருத்தல் (குழப்பம்) என்ற நிலை தேவை. பின் நவீனத்துவம் அதைத்தான் செய்தது: திசை சாராதிருத்தல் (குழப்பம்).

கேள்வி: எழுத்தாளர் எழுத்தின் மூலம் தெரிவிக்க முயலும் உணர்வுதானே விமர்சனத்தின் திசையை நிர்ணயிக்கிறது ?

பதில்: எழுதுவதற்கும் அதைப் படிப்பதற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு எப்போதும் தெளிவாக வரையப் படுவதில்லை. பின் நவீனத்துவ எழுத்தை ஒருவர் படிக்கும் விதம்தான் அதன் மோசமான விமர்சனத்தை நிச்சயிக்கிறது. தனது ‘The Pleasure of the Text ‘ புத்தகத்தில் ரோலண்ட் பார்த்தெஸ் சுட்டிக்காட்டுவது போல் தன் எழுத்திலிருந்து உணரக் கூடாதது என்னவென்பதை எழுத்தாளரால் தேர்ந்தெடுத்து எழுத முடியாது.

இந்தக் காரணங்களினால்தான் பின் நவீனத்துவ எழுத்தாளன் தனிப்படுகிறான். தனிப்படுவதனால் பலருக்கும் குழப்பத்தை உண்டாக்குபவனாகிறான். இந்த வித்தியாசத்தின் மையத்துள், அந்தப் பின் நவீனத்துவ எழுத்தாளன் வித்தியாசமாய் இருப்பதற்கும், எவ்வளவு குழப்பமாகவும் குழம்பியதாகவும் உலகம் இருந்தாலும், தன் வழியில் அந்த உலகைக் காண்பதற்கும் எழுதுவதற்கும் தனக்கு உரிமை உண்டென்று உணர்ந்தவன்.

பின் நவீனத்துவ காலத்தில் (நான் பின் நவீனத்துவ காலத்தை இறந்த காலத்திலேயே

அழைக்கிறேன் என்பதைக் கவனிக்கவும்) எழுதுவதென்பது ஒரு வித்தியாசத்தைப் படைப்பதே; புனைவு என்பது யதார்த்தத்தின் பிம்பம் என்று நம்ப வைக்கும் உபகரணமல்ல எழுத்து.

இது நான் முன்பு சொன்னதற்கு முரணாகத் தோன்றலாம். புனைவிலக்கியம் என்பது

மறுபடைப்பு அல்லது சொன்னதையே மீண்டும் சொல்வது என்று சொல்லியிருந்தேன். நான் இங்கு சுட்டிக்காட்ட முயலும் வித்தியாசம் எழுத்தின் பொருள்/கருவில் அல்ல. சொல்லும் விதத்தில், வடிவமைப்பில் உள்ள வித்தியாசம். இங்கு படைப்பு என்பது தெரிந்தவற்றைப் புதிதாய்ச் சீர்ப்படுத்த புதிய விதிமுறைகள் வகுப்பதேயாகும். தெரிந்து பழகிய விளையாட்டை அதே விதிமுறை கொண்டு ஆடுவதற்குத் தேவை வெறும் திறமை மட்டுமே, கலைத்திறன் அல்லவே.

மரபுவழி யதார்த்த புனைவிலக்கியம் என்பது ஒன்று போலத் தெரிவதன் பிரதிநிதித்துவ வடிவம் என்றால், பின் நவீனத்துவ புனைவிலக்கியம் என்பது வித்தியாசத்தின் வடிவம் ஆகும்–எது வித்தியாசமோ அதன் விடுதலை. எது வித்தியாசமோ அதுதான் வித்தியாசம். அல்லது Chimera சொல்வது போல்: புதையல் பெட்டியின் சாவியே புதையல் போலத் தெரிகிறது.

எழுபதுகளில் மிஷெல் ஃபூக்கோ: வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட

சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது; பன்மையை வரவேற்பது; அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது; ஒப்புதல் உள்ளது, அதே நேரத்தில் தனிப்படுத்துவதை உபகரணமாகக் கொண்டது; பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது, தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை.

பின் நவீனத்துவ புனைவிலக்கியத்துக்கு இதை விடப் பொருத்தமான விளக்கவுரை

இருக்க முடியாது. திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் பின் நவீனத்துவப் புனைவிலக்கியம் ஒரு வித்தியாசத்தை உருவாக்கி விட்டது. உண்மையானவை, இயற்கையானவை என்பவற்றை முழுமையாய் எதிர்கொள்ள முடியும் என்பதை மறுதலித்ததால் வரும் வித்தியாசம்.

தன்னையே ஒரு விளையாட்டாய், விளையாட்டுப் பொருளாய், போகப்பொருளாய்க் கூட வாசகருக்குச் சமர்ப்பித்துக் கொண்டு, வாசகரைத் தன்னுடன் விளையாடச் சொல்கிறது பின் நவீனத்துவப் புனைவிலக்கியம். டானல்ட் பார்த்தெல்மின் Snow White, ஜான் பார்த்தின் Lost in the Funhouse, ஸ்டாவ் காட்ஸின் Creamy and Delicious, ராபர்ட் கூவரின் Spanking the Maid முதலியனவற்றைப் படித்தால், பின் நவீனத்துவப் புனைவுகள் தம்மை விளையாட்டுப் பொருளாய் அளிப்பது புரியும். அல்லது, ரானல்ட் பார்த்தெஸ் தன் Pleasure of the Text நாவலில் மகிழ்ச்சியுடன் காண்பிப்பது போல், பின் நவீனத்துவப் புனைவுகள் இன்பத்தைப் பேச வழி கண்டுபிடித்தன–இல்லை, அதை விடப் பெரிதாய், பேரின்பத்தை உயர்த்திக்

கொண்டாட வழி கண்டுபிடித்தது.

ஆனால், எல்லாரும் பின் நவீனத்துவத்தின் பேரின்பப் பிரதி ஏற்படுத்தும் சங்கடத்தை

எதிர்கொள்ள விரும்புவதில்லை. விமர்சகர் ஆலன் ப்லூம் தனது The Closing of the American Mind புத்தகத்தில் பின் நவீனத்துவத்தை முற்றும் நிராகரிக்கிறார்: ‘நீடித்து நிற்கும் முக்கியமான ஒரு புத்தகம் கூட பின் நவீனத்துவ இயக்கத்தின் காலத்தில் எழுதப்படவில்லை ‘, என்கிறார் இவர். அவரைப் பொறுத்த மட்டும் பின் நவீனத்துவ எழுத்தாளன் relativism என்பதால் பீடிக்கப்பட்டவன். அவன் வாழ்க்கைக் குணநலன்/பண்புகள் என்பவை வெறும் கருத்துக்கள் என்றும், ஒரு கருத்து அடுத்ததை விடச் சிறந்தது இல்லை என்றும் நினைப்பவன். எனவே, திசை அறியாத இந்தப் பின் நவீனத்துவ எழுத்தாளன் எதையும் ஒப்புக்கொள்ளுதல், அறியாமை, எதிர்வாதம் என்ற நிலைகளில் வாழ்ந்திருந்தான். ஆலம் ப்லூமின் இக்கூற்றுகள் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை. பின் நவீனத்துவ இலக்கியங்கள் பல இன்னும் இருக்கின்றன, முறையான விமர்சனம் வேண்டி நிற்கின்றன. ஆலன் ப்லூமிற்கு

எது சங்கடத்தை விளைவிக்கிறது ? பின் நவீனத்துப் புனைவிலக்கியம் அவர் போன்றோர் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு யதார்த்தத்தைச் சித்தரிப்பதே. குழப்பமான யதார்த்தம் என்பது உண்மை. ஆனால், முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் சித்தரிக்கப்பட்ட யதார்த்தத்தின் மாயைப் பிம்பங்களை விட, எண்பதுகளில் வெளிவந்த புது-யதார்த்தைத்தை விட, இப்போது வரும் செயற்கை யதார்த்தத்தை விட, பின் நவீனத்துவத்தின் குழம்பிய அன்றாட இருப்பு சரியெனத் தோன்றுகிறது.

ஆலன் ப்லூமைப் போன்றோர்தான் பின் நவீனத்துவத்தை முடித்தது, அல்லது யாரையும் நெருடாத பாண்டித்திய விவாதத் தலைப்பாக மாற்றி, இன்னொரு கலாச்சாரப் பிரதேசத்திற்கு அனுப்பியது. தனக்குப் பழகிய வசதியையே ஒருமித்த அடிப்படையாகப் பாதுகாப்பதற்காக, 40 வருடங்களின் பிரமிக்கத்தக்க இலக்கியப் புரட்சியை ஆலம் ப்லூமால் நிராகரிக்க முடிகிறது.

அவர் மட்டுமல்ல. இன்றைய நாட்களில் பல வகையான பல அறிவற்றவர்கள் பிரதியையும் அதன் இன்பத்தையும் ஒதுக்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார்கள் (ரானல்ட் பார்த்தெஸின் மேற்கோள்): கலாச்சாரக் கட்டுப்பாடு, அரசியல் ஒழுக்கக்கூறு, தெளிவில்லாத நடைமுறை வழக்கு, பிடிவாதக்கார பகுத்தறிவுவாதம், அறிவற்ற ஏளனம், அல்லது சொல்லாடலின் அழிவு, ஆகியவற்றின் மூலம்.

ஈ. டானல்ட் ஹர்ஷின் முறையான அறிதலுள்ள கலாச்சாரத்திற்கான பட்டியல், பழங்காலத்து பாணி இலக்கியத்தின் மறு உயிர்ப்புக்காக ராபர்ட் ரிச்மன் விடுத்த அறைகூவல், பழங்காலக் கல்விமுறைக்குத் திரும்புமாறு வில்லியம் பென்னட்டின் வேண்டுகோள், இவை எல்லாம் பழையன தரும் வசதிக்கு இடையூறாகும் பின் நவீனத்துவ வாதிகளை நசுக்குவதற்கான முயற்சிகளே. இந்த அறிவற்றவர்கள் (ரானல்ட் பார்த்தெஸின் வார்த்தைகளில்) புதியன தரும் வித்தியாசத்தை விரும்பாமல் அதே பழையனவற்றைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.

ஆலன் ப்லூமும் அவரைப் போன்றவர்களும் தங்களுக்குத் தெரிந்தவையே மீண்டும்

மீண்டும் சொல்லப்பட வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதாவது, தங்கள் அறிதலைப் பற்றிய ஆறுதலையே எதிர்பார்க்கிறார்கள். அதனால், சங்கடம் தரும் எல்லா புதிய பரிசோதனை முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்க அல்லது நிராகரிக்க வேண்டியுள்ளது (அலுப்பு தட்டும் அளவுக்கு). பின் நவீனத்துவப் புனைவுகள் நிறைய வாசகர்களைச் சங்கடப் படுத்துகிறது. அவர்களது சரித்திரம், கலாச்சாரம், உளவியல் பற்றிய சாத்தியக்கூறுகளைக் கலைக்கிறது; வார்த்தைகளுக்கும் சுட்டுப்பொருளுக்கும் உள்ள வசதியான உறவைக் குலைக்கிறது; வாசகர்களுக்கு மொழியுடனும் யதார்த்தத்துடனும் உள்ள உறவைக் கேள்விக்குறியாக்குகிறது.

இவை யாவற்றின் மூலமும் பின் நவீனத்துவப் புனைவுகள் பல வாசகர்களையும்

சங்கடத்தில் ஆழ்த்துகிறது.

மிஷெல் ஃபூக்கோ இதை மொழிப்பெயர்ச்சி அல்லது உடைதல் என்கிறார்: இது மொழியைத் தாழ்த்துகிறது; இதையும் அதையும் பெயரிடுவதைத் தடுக்கிறது; சாதாரண வார்த்தைகளின் அர்த்தத்தையும் மாற்றி அழிக்கிறது; வரிகள் எழுதப்படும் நியதிகளை மட்டுமின்றி, வார்த்தைகளை அவற்றின் சுட்டுப்பொருளோடு பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத நியதிகளையும் அழிக்கிறது.

அறிஞர்கள் எல்லா இலக்கியங்களையும் இரண்டு நோக்கில் பார்க்கலாம் என்கின்றனர்: கட்டுமானம் (construction), கட்டவிழ்ப்பு (deconstruction). ரானல்ட் பார்த்தெஸ் இலக்கிய நோக்கை இருவகையாகப் பிரிக்கிறார்: கற்றல் (லத்தின் மொழியில் Studium), புள்ளி (லத்தின் மொழியில் Punctum). ‘கற்றல் ‘ அணுகுமுறை கலையின் கலாச்சார, சமூக பின்புலத்தை நிர்ணயிக்கிறது. இந்த அணுகுமுறையில், வாசகர் உற்சாக வேகமின்றி மரியாதைக்காகத் தரும் கவனத்தை மட்டுமே பிரதி பெறுகிறது; ‘ஏதோ சுமார் ‘ எனும்படி அமையும் கலை பெறும் கவனம். உற்சாகமற்ற கவனம். ‘புள்ளி ‘ அணுகுமுறை இந்த உற்சாகமின்மையை உடைத்தெறிந்து, ஒரு வேகத்தையும் தனிப்பட்ட எதிர்வினையையும் வாசகருக்குள் உருவாக்குகிறது. ‘படிப்பு ‘ அணுகுமுறை புனைவைச் சாத்தியமாக்கிய பழைய, தெரிந்த அடிப்படைக்கே வாசகரைத் திரும்ப அனுப்புகிறது–அதாவது, வாசகருக்குத் தனிப்பட்ட ஆர்வமில்லாத அடிப்படை. ‘புள்ளி ‘ அணுகுமுறை பிரதிக்குள் வாசகரைப் பிணைத்து, ஓர் உற்சாகத்தையும் கண்டுபிடிப்பு உணர்வையும், கூடவே ஒரு சங்கடத்தையும் விளைவிக்கிறது. ‘படிப்பு ‘ அணுகுமுறை ஏற்கெனவே தெரிந்தவற்றை

அடையாளம் காணுவதால் வரும் நிறைவை ஏற்படுத்துகிறது. ‘புள்ளி ‘ அணுகுமுறை அறியாததை எதிர்கொள்ளும் அனுபவத்தையும், அதன் அடையாளமற்ற தன்மை விளைவிக்கும் சங்கடத்தின் வலியையும் தருகிறது.

ஆனால், எளிதாக அடையாளம் காண்பதற்கும் அடையாளம் காண முடியாத வலிக்குமிடையே தேர்வு செய்ய வேண்டுமெனில், ‘புள்ளி ‘ முறை சிறந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், பின் நவீனத்துவம் ஏற்கெனவே கீழ்க்கண்டதைத் தெளிவுபடுத்தி விட்டது: வரலாறு என்பது ஏற்கெனெவே கூறப்பட்டு இன்மையாக்கப்பட்ட புனைவு, ஏற்கெனவே கண்டு மறக்கப்பட்ட

கெட்ட கனவு–முக்கியமாக, மேற்கத்திய உலகில்….பல நூற்றாண்டுகளாக தன் கடந்த காலத்துக்கு ஏற்ற வலியைத் தேடிக் கொண்டிருக்கும் மேற்கத்திய உலகில்.

எந்தவொரு புதுமையான, avant-garde இயக்கத்தின் மறுதலிப்பும் நிராகரிப்பும்,

சங்கடப்படுத்துபவற்றைத் தூக்கி எறிவதற்கான வழக்கமான முறைகளே.

பின் நவீனத்துவத்தின் முடிவு இலக்கியத்தின் உற்பத்தித்தொழில் சூழலை வெகுவாக மாற்றியுள்ளது. ஆனால் இது பரிசோதனை முயற்சிகளுக்கோ புதுமைகளின் தேவைக்கோ ஒரு முடிவல்ல. நானும் என் சக பின் நவீனத்துவ எழுத்தாளர்களும் புதுமைகள் தேவையில்லை என்று வெகுஜன ஊடகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புது-யதார்த்தத்துக்கு (neo-realism) இலக்கியத்தைத் தாரை வார்க்கப் போவதில்லை. இலக்கியம் அவ்வளவு எளிதாகச் சாத்தியமானவற்றுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாது. என்றும் போல் இன்றும் இலக்கியம் சாத்தியமாகாததை எதிர்கொள்கிறது; குறைபட்ட மொழியையும் யதார்த்தத்தை

முழுதாய்ப் புரிந்து கொள்ள இயலாத எண்ணத்தையும் எதிர்கொள்கிறது. ஆயினும், புது வடிவங்களின் தேடல்கள் மூலம் இலக்கியமென்பது மீண்டும் மீண்டும் சாத்தியமற்றவைக்கு உயிர் கொடுத்துக் கொண்டேயிருக்கும். எங்கு, எப்போது, யாரால் ? இந்தக் கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. ஐம்பது வருடங்களுக்கு முன், தன் கதையின் வாயிற்படியில்–பின் நவீனத்துவத்தின் வாயிற்படியில் நின்றவாறு பெக்கெட்டின் Unnamable கேட்கிறான்: எங்கு இப்போது ? யார் இப்போது ? என்று இப்போது ? இன்றும் நாம்

ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த அதே குழம்பிய நிலையில்தான் இருக்கிறோம்.

ஆயினும் நாம் கேட்கலாம்: பின் நவீனத்துவத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா ? இதற்கு ‘ஆம் ‘ என்றும், ‘இல்லை ‘ என்றும் பதிலளிக்கலாம். அதன் இயல்பினாலும் அர்த்தத்தினாலும் பின் நவீனத்துவ காலத்திலும் பின் தற்காலிகத்திலும்–அதாவது ஒரு விதமான எதிர்காலத்துவத்தில் பின் நவீனத்துவம் உயிர்த்து செயலாற்றியது. இனி நாம் பின் நவீனத்துவத்தைப் பற்றிப் பேசக் கூடாது; பின் எதிர்காலத்துவத்தைப் (Futurism) பற்றிப் பேச வேண்டும். இந்தச் சொல் விளையாட்டை விட்டு விடுவோம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பதங்களை விடுத்து, அவற்றிற்குப் பதிலாக முன்னர், தற்போது, பின்னர் என்ற பதங்களைப் பிரயோகிக்கலாம். ‘தற்போது ‘ என்பது காலக்கோட்டில் நிலைத்த ஒரு புள்ளி அல்ல–அதாவது நம் நிகழ்காலம் அல்ல; அது முன்பு நடந்ததாலும் பின்பு நடந்ததாலும் வரையறுக்கப்பட்டு, எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கும் ஒரு புள்ளி. இப்படிப் பார்த்தால், பின் நவீனத்துவத்தின் புதுமைகள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்தாலும், அது மறைந்து விட்டது. ஒரு வகையில், எல்லா ‘இஸங்க ‘ளும் அவை தோன்றிய

கணத்திலேயே இறப்பவைதானே ?

நாட்ஸிஸம், ஃபாஸிஸம், காம்யூனிஸம், ஃப்யூச்சரிஸம், ஸர்ரியலிஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், இன்னும் பிற இஸங்கள் எல்லாமே அவற்றிற்கு முற்பட்ட லட்சியவாதக் கொள்கை அல்லது அழகியலின் அடிப்படையில் அமைந்தவை–அதாவது எல்லா இஸங்களும் retroactive ஆனவை. இத்தகையவை உருவாக்கும் வக்கிரமும் வன்முறையும் நிகழும் தருணத்தில் கூட கடந்தவற்றின்

நினைவுகளாகவே நிகழ்கின்றன. எல்லா இஸங்களும் வரலாற்றில் அவை பிறக்கும் கணத்திற்கு முன்பே நிகழ்ந்த அதிகார அல்லது இறப்புக் காட்சிகளே. அதுவே பின் நவீனத்துவத்தின் விதியுமாகும். அது அழுகிக் கொண்டிருந்த ஓர் இயக்கத்தின் செயற்கைச் சித்தரிப்பு, முன்னர் இருந்ததன், கடந்து போனதன் அடையாளம்–இங்கு நான் நவீனத்துவத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

இதனால்தான் பின் நவீனத்துவப் புனைவிலக்கியம் என்பது avant-garde புதுமை இயக்கம் என்று அழைக்கப் பட்டாலும், அது மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்ட அதிசய அனுபவமாகவும் அதே சமயம் வரலாற்றைப் பின்னோக்கித் திருப்பும் (retroversion) அத்தியாவசியமாகவும் அமைகிறது. ஆனால், avant-garde அல்லது பின் நவீனத்துவம் ஆகிய பதங்களை ஒரே மூச்சில் சொல்வதால் சில குழப்பங்கள் ஏற்படலாம். ஏனெனில் பின் நவீனத்துவக் கலாச்சாரத்தில், பொதுநடைமுறைக் (mainstream) கலைக்கும் avant-garde புதுமைக் கலைக்கும் உள்ள எல்லைக்கோடு அழிய ஆரம்பித்தது. மேட்டிமை கலைக்கும் பாப்-கலைக்கும் உள்ள வேறுபாடு பின் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்; இன்று இந்த வேறுபாட்டை நிலைநாட்டுவது மிகக் கடினம்.

உதாரணத்துக்கு: மடானா, பீட்டர் காப்ரியேல், லாரீ ஆண்டர்ஸன் போன்றவர்களின்

‘ராக் ‘ விடியோக்கள் வெகுஜனங்களிடையே மிகவும் பிரபலமானவை; அவர்களால்

விரும்பப்படுபவை. ஆனால், அவை உபயோகிக்கும் ஒலி/காட்சி, வசன முறைகள்

மிகவும் புதுமையானவை, பின் நவீனத்துவமாக நினைக்கத் தோன்றுபவை. வில்லியம்

கிப்ஸனின் ஸைபர்பங்க் நாவல் Neuromancer வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்துவதால் (வெட்டி ஒட்டப்பட்டவை, பிற பிரதிகள், வினோதமான பதப் பிரயோகம், காலப்பெயர்ச்சி) அது பின் நவீனத்துவம் ஆகுமா ? அல்லது, விஞ்ஞானப்புனைவு என்ற பிரிவின் கீழ் பிரசுரமாகி விற்பனைச்சந்தையில் வெற்றி பெற்றதால் அது பாப்-நாவல் ஆகிவிடுமா ? சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல பின் நவீனத்துவ புதுமைகளைப் புகுத்தினாலும், இடம்பெறுவது தொலைக்காட்சி ஊடகமென்பதால் அவை பாப்-கலையா ?

இவை மிகவும் சிக்கலான கேள்விகள். இத்தகைய கேள்விகள் எழுகையில் பின்

நவீனத்துவம் என்ற சொற்றொடரைப் யன்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.

POST-POMO/ AVANT-POP போன்ற புதுப் பதங்களைச் சிலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஊடகக் கலாச்சாரத்தின் வளர்ச்சியும், கலைகளின் (இலக்கியம் உட்பட) உற்பத்தி,

வாங்குதல், விற்பனை ஆகியவற்றின் மாறுதல்களும் சேர்ந்து மேற்கண்ட கேள்விகளை

காலப்போக்கில் அர்த்தமற்றதாக ஆக்கி வருகின்றன. குறிப்பாக, பொருளாதாரச் சந்தை (அதாவது, முதலாளித்துவம்) முன்பு குறுக்கிடாத துறைகளில் இன்று விரிந்துள்ளது; அதாவது, முன்பு சந்தைப் பொருட்களாகக் கருதப்படாதவற்றிற்கும் இன்று குறிப்பிடத்தக்க லாபகரமான சந்தை இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது: மிகவும் புதுமையான, புரட்சிகரமான, அதிர்ச்சிகரமான, சங்கடப்படுத்தக்கூடிய கலைகளுக்கும், முதலாளித்துவ அமைப்பைக் குலைப்பதையே தம் குறிக்கோள் என்று கூறிக்கொள்ளும் கலைகளுக்கும் கூட.

பல உதாரணங்கள். (குறிப்பு: பல துறைகளிலும் உள்ள நீண்ட அமெரிக்க உதாரணப் பட்டியல் கொண்ட பத்தி இங்கு வெட்டப்படுகிறது.) ப்ரெட் எல்லிஸ் எழுதிய American Psycho பின் நவீனத்துவத்தின் விளைவுப்பொருள். ஒரு நாணயமான பிரஜை, வாசகன், எழுத்தாளன் என்ற முறையில் நான் அப்புத்தகத்தைக் கடனே என்று வாசித்தாலும், அது வெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும், ஒரு அறிவுபூர்வமான எதிர்வினையையும் என்னுள் ஏற்படுத்தாது என்றே எதிர்பார்த்தேன்.

ஆனால், ஏதோ ஒரு உந்துதலால் அந்த நாவலின் பெரும் பகுதியை படித்து விட்டேன் (இப்படிப்பட்ட வக்கிரக் கதைகள் எப்படி முடியுமென்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் கதையை முடிக்கவில்லை.) ஆயினும், எல்லிஸின் நாவலில் கதைநடை (narrative) சுவையானது; வக்கிரம், வன்முறை, சங்கடப்படுத்தும் தன்மை ஆகியன கொண்டது. ஆனால் எண்பதுகளின் அமெரிக்காவைப் பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த அல்லது வெளிப்படையான புத்தகம் அதுவே என்று சொல்லலாம்.

இப்போதுள்ள பல புதுமை எழுத்தாளர்கள் பின் நவீனத்துவ யுகத்தில் வளர்ந்து, பின் நவீனத்துவத்தை உருவாக்கியவர்களைப் பார்த்துப் படித்தவர்கள். இந்தப் பின் நவீனத்துவத்திற்குப் பிற்பட்ட தலைமுறைக்கும் முந்திய தலைமுறையைப் போல் தன் சொந்த வழியில் யதார்த்தத்தைப் பார்ப்பதற்கு உரிமை உண்டு–அது எவ்வளவு நம்ப முடியாததாய், செயற்கையாய், கோணலாய் இருந்தாலும் சரி.

இங்கு ஒரு முரண்: தன்னை வாழ வைப்பதையே வெளிப்படையாக எதிர்த்துத் தாக்கும் கலை பரவலாகப் பிரபலமாகிறது. இது இலக்கியத்தில் மட்டுமல்ல, பிற நுண்கலைகளிலும், புது ராக், ராப் இசையிலும், MTV-யிலும் தெளிவாகிறது. இவை அனைத்திலும் படிமங்களும் தகவல்களும் தொடர்ச்சியும் தொடர்புமற்ற துண்டங்களாய் படுவேகத்தில் முதலாளித்துவ அமைப்பின் மீது எறியப்படுகின்றன.

இந்தப் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் காலகட்டத்தில்

வாழ்ந்து அதனால் உருவாக்கப்படுவது இயல்பு: இது ஒரு கணிப்பொறி, தொலைநகல், தொலைத்தொடர்பு யுகம். கூடவே பேராசையும் ஏமாற்று எத்து வேலைகளும் நிறைந்த யுகம்.

அறுபதுகள், எழுபதுகளின் பின் நவீனத்துவவாதிகள் தம் அறிவு முதிர்வு (அல்லது முதிர்வின்மை) வயதை எட்டியது நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும். அவர்களது அறிவு, அழகியல் உணர்வுகள் ஆகியவற்றை வடிவமைத்தது எக்ஸிஸ்டென்ஷியலிஸம், ஸ்ற்றக்சுரலிஸம், ஜாஸ் இசை, ஆப்ஸ்ற்றாக்ட் எக்ஸ்ப்ரெஷனிஸம், மற்றும் அமெரிக்காவில் கஃப்கா, நபோக்கோவ், போர்ஹே, பெக்கெட்

போன்றோரின் இலக்கியம். இந்தப் பின் நவீனத்துவ வாதிகளைப் பிறப்பித்த கலாச்சார அமைப்பு இன்று தொலைதூரத்தில் பழங்காலத்து பாணியாகத் தெரிகிறது.

பின் நவீனத்துவம் என்ற பதம் யாருக்குமே முழு வசதியுணர்வை அளித்ததில்லை. ஆனால், அது பல வருடங்களாக ஒரு புதுமையான இயக்கத்தைப் பெயரிட்டு வரையறுக்க உதவியது. இந்த இயக்கம் அறிவுஜீவித்தனமான கலாபூர்வமான உயர்ந்த வட்டாரங்களில் உலவியது. சில நேரம் மேட்டிமைத்தனம் என்ற பெயரையும் வாங்கிக் கட்டிக் கொண்டது. பின்னர், பொருளாதார சக்திகளினால் பொதுவான கலாச்சாரம் இதை உள்வாங்கி, பாப்-கலையாக மாற்றி விட்டது. இப்போது பின் நவீனத்துவம் என்ற பதத்தை உதற வேண்டியதாகிறது.

அக்டேவியோ பாஸ் தம் 1990 நோபல் பரிசு உரையில் நவீனத்துவத்தின் அர்த்தம் பற்றிப் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் மூலம் பின் நவீனத்துவத்தைப் பற்றிய எல்லா விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று தோன்றுகிறது.

நவீனத்துவம் என்பது என்ன ? முதலில், அது ஒரு தெளிவான அர்த்தமில்லாத பதம். எத்தனை சமூகங்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையான நவீனத்துவங்கள் உண்டு. ஒவ்வொரு சமூகமும் தனக்கென்று ஒன்று வைத்திருக்கும். அதற்கு முற்பட்ட ‘மத்திய யுகம் ‘ (middle ages) போலவே, நவீனத்துவம் என்பதும் நிச்சயமாக வரையறுக்கப்படாத ஒன்று. மத்திய யுகத்தோடு ஒப்பிட்டால் நாம் நவீனத்துவ யுகமென்றால், ஏதாவது ஒரு எதிர்கால யுகத்துக்கு நாமும் மத்திய யுகமா ? காலத்தோடு சேர்ந்து மாறும் ஒரு பெயர் உண்மையான பெயரா ? நவீனத்துவம் என்பது தன் அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை. அது ஒரு கருத்தா, கானல் நீரா, அல்லது வரலாற்றின் ஒரு கணமா ? யாருக்கும் உறுதியாகத் தெரியாது…..சமீபத்திய வருடங்களில் பின் நவீனத்துவத்தைப் பற்றி

பலத்த பேச்சு அடிபடுகிறது. ஆனால், இன்னும் நவீனமான நவீனத்துவம் என்பதன்றி பின் நவீனத்துவம் என்பது என்ன ?

அக்டேவியோ பாஸ் சொன்னது சரியாய் இருக்கலாம். பின் நவீனத்துவம் என்பது அடுத்து வரும், இன்னும் பெயரிடப்படாத யுகத்தின் மத்திய யுகமாக இருக்கலாம். அந்தப் புது யுகத்துக்குப் பெயரிட்டு, அதைப் பற்றி வாதித்து, விவாதித்து, விளக்கி, இறுதியில் அதுவும் மற்றுமொரு புது யுகத்தின் மத்திய யுகமாவதற்காக காத்திருக்கையில், பின் நவீனத்துவம் ஓர் உற்சாகமான தேடல் அனுபவம் என்பதை ஒப்புக் கொள்வோம். முடிவைப் பார்க்க அந்தத் தேடலில் பங்கு

பெற்ற அனைவரும் இல்லையே என்பது வருத்தத்திற்குரியது.

————————————————————

நான் இந்தக் கட்டுரையை பெக்கெட்டின் Stirrings Still மேற்கோள் ஒன்றுடன் ஆரம்பித்தேன். பின் நவீனத்துவத்தின் இறுதி மூச்சான அதிலிருந்து சில வார்த்தைகளோடு கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். இந்த மேற்கோள் பின் நவீனத்துவ எழுத்தாளனின் இன்றைய நிலைமையை நன்கு சித்தரிக்கிறது:

தலையைக் கையால் தாங்கி அவன் மீண்டும் மறைந்த போது மீண்டும் தோன்ற மாட்டான் என்ற அரை நம்பிக்கையோடும் மாட்டான் என்ற அரைப் பயத்தோடும். அல்லது வெறுமே நினைத்தபடி. அல்லது வெறுமே காத்திருந்தபடி. தோன்ற மாட்டானா இல்லையா என்பதைப்

பார்க்கக் காத்திருந்தபடி.

எனக்கு இந்தக் கட்டுரையைப் பற்றி என்ன ஆச்சரியமென்றால், பின் நவீனத்துவம் எப்படி அதன் முடிவுக்கு வந்தது என்று விளக்கும் முயற்சியில் நான் இன்னுமொரு பின் நவீனத்துவப் பிரதியை எழுதியிருக்கலாம். என்ன செய்வது. பெக்கெட்டின் Unnamable ஒருமுறை சொல்வது போல்:

இங்கு எல்லாம் தெளிவாக இருக்கிறது….இல்லை எல்லாம் தெளிவாக இல்லை….. ஆனால் சொல்லாடல் தொடர வேண்டும்….எனவே தெளிவற்றவையை உருவாக்குகிறோம்….வெற்றுச் சொல்வீச்சுகள்.

நன்றி: ரேமண்ட் ஃபெடர்மனின் ‘க்ரிட்டிஃபிக்ஷன்: போஸ்ட்-மாடர்ன் கட்டுரைகள் ‘

தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்

Series Navigation