எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


காலச் குயவனின் மேளமிது! கோணி

கைகள் வார்த்த கோளமிது!

நீரில் துள்ளும் கொட்டையிது! உள்

நெருப்பைத் தள்ளும் கனல் முட்டையிது!

உமர் கயாம் II

முன்னுரை: 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே முகிற்கனல் துணுக்குகள் குளிர்ந்து ஓரண்டமாய் உருண்டு திரண்டது. அண்ட வெளியில் விண்கற்கள் மோதி அடித்தாலும், எழுந்த கதிரியக்கத் தேய்வுகளாலும் அது கனற் குழம்பாய் ஆகியது. அதற்குப் பிறகும் குளிர்ந்து திணிவான பிண்டம், அடியே தங்கி அடுக்கடுக்காய் தோல்கள் கவசமாக மேவி, 8000 மைல் விட்டத்தில் நமது பூகோளம் தோன்றியது. உள்ளே இன்னும் குளிர்ந்து கொண்டு வரும் பூமி, உட்கருவைக் கலக்கி வெப்பத் திரவத்தை மேல்தளத்துக்குத் தள்ளுகிறது. இந்த வெப்பச் சுற்றோட்டமே [Convection] நிலநடுக்கங்களையும், எரிமலைகளையும் உண்டாக்கக் காரண மாகிறது! ஹவாயி தீவான கிலெளயாவில் [Kilauea] இவ்விதமே பல்லாயிரம் ஆண்டுகள் எரிமலைகள் குமுறி எழுந்து, அதன் பரப்பு விரிந்து கொண்டே வருகிறது! ஆதி காலத்தில் நாம் வாழும் புவியின் தளங்களும் கடற் குளங்களும் இவ்விதமே எரிமலைகளால் உருவாகி விரிந்தன என்று ஒருவாறு ஊகிக்கலாம்!

இயற்கைப் பழுதுகளால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிரம் மக்களை சில நாட்களுக்குள் கொன்று விடுகின்றன! கடந்த 500 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 300,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது! இருபதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியத் தீவில் உள்ள பெலீ சிகரம் [Mt Pelee, West Indies], கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர்! ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடார் எழுச்சிகள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டு வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை தாக்கவரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டியவை!

எரிமலைக் குழம்பில் ஆக்கப்பட்ட ஹவாயி தீவுகள்!

பசிபிக் கடல் மட்டத்தில் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குமுறி எழுந்த எரிமலை, கக்கிய பாறைக் குழம்புக் கற்களால் கட்டத் துவங்கப் பட்டது ஹவாயி தீவு! அடுத்து அதன் ஐந்து எரிமலைகள் தொடர்ந்து கொட்டிய எண்ணற்ற கனல் குழம்புக் கட்டிகள் சேர்ந்து கொண்டே போய், ‘பெரிய தீவு ‘ [Big Island] 13,000 அடிக்கு [4000 மீடர்] மேலாக உயர்ந்து விட்டது!

1883 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நீர்ச்சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவில் [Krakatao, Sunda Strait] ஓர் அசுர எரிமலை வெடித்து, வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இரவாக்கியது! அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தனவாம்! எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய ஆஸ்திரேலியாவில் கேட்டதாம்! உலகிலே மிகப் பெரும் உயிருள்ள எரிமலை மெளனா லோவா [Mauna Loa] ஹவாயியில் இப்போது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது! ஹவாயித் தீவுகளின் எரிமலைகள் இந்தோனேஷியன் எரிமலை போல் உயரத்தில் எழுந்து இடி முழக்கம் செய்யாமல், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாழ்வான எழுச்சியில் கனற்குழம்பை அருவிபோல் கொட்டித் தளப் பரப்புகளைப் பெருக்கியோ அல்லது புதுத் தீவுகளை ஆக்கிக் கொண்டோ வருகின்றன!

பசிபிக் கடலில் தாமரை இலைகள் போல் மிதக்கும் ஹவாயியின் கூட்டுத் தீவுகள் பல மில்லியன் ஆண்டுகளாய் எரிமலைக் குழம்புகள் நிரம்பிக் கட்டப்பட்டு உருவானவை! ஒவ்வொரு தீவும் குறைந்தது எரிமலை ஒன்று கக்கிய கனல் குழம்பால் ஆக்கப்பட்டது! ஆயினும் சில தீவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட எரிமலைகளால் படைக்கப் பட்டவை! ஹவாயியின் மிகப் பெரிய தீவு, கிலெளயா, மெளனா லோவா, மெளன கியா, ஹுவாலாலை, கோஹாலா [Kilauea, Mauna Loa, Mauna Kea, Hualalai, Kohala] என்னும் பெயர் பெற்ற ஐந்து பெரும் எரிமலைகளால் உருவானது!

முதலிரண்டு எரிமலைகள் கிலெளயா, மெளனா லோவா தற்போது உயிரோடு இயங்கி அனல் குழம்பை வெளியே தள்ளி வருகின்றன! அவற்றில் அசுர வலுவுடன் டன் கணக்கில் குழம்பைக் கொட்டிக் குவிக்கும், மெளனா லோவா தற்போது உலகிலே பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது! மட்டச் சரிவுச் சிகரம் கொண்ட, ஒவ்வொரு தீவின் பிரதம எரிமலைகள் [Primary Volcanoes with Gentle Sloping Mountains] கவச எரிமலைகள் [Shield Volcanoes] என அழைக்கப் படுகின்றன! அவற்றில் சதாகாலமும் தொடர்ந்து பல திசைகளில் கனல் குழம்பு ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன!

கிலெளயா எரிமலை எப்போதிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்து உருவாக்க ஆரம்பித்தது என்பது துல்லியமாக அறிந்து கொள்ள பூர்வீக வரலாறுகள் கிடையா! விஞ்ஞானச் சோதனைகள் மூலம் ஆராய்ந்ததில் 300,000 முதல் 600,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டு அது தோன்றி யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது! அதன் கனல்வாய் திறந்து குழம்பு வெள்ளத்தை வெளித்தள்ள ஆரம்பித்தபின், எப்போதாவது நீண்ட கால ஓய்வெடுத்ததா என்பது இதுவரை அறியப் படவில்லை! துளையிட்டுப் அடித்தளப் புவிமண்ணை ஆராய்ந்ததில், தீவிரக் குமுறலில் வெளியேறிய பாறைக் கற்கள், கொட்டிய குழம்பில் பதிந்த மடிப்பு அடுக்களே காணப் பட்டன! கடந்த 200 ஆண்டுகளில் நேரில் கண்ட நிகழ்ச்சிகளே 50,000-100,000 வருடங்களுக்கு முன்பு கிலெளயா எப்படிக் கடலில் முளைத்திருக்கலாம் என்பதை விளக்கும் காட்சியாகக் கருதலாம்.

எரிமலை வெளியேற்றும் வாயுக்களும் கருஞ்சாம்பற் குழம்பும்

பல ஆண்டுகளாக கிலெளயா சிகரம் ஒன்று, பிளவு அரங்குகள் இரண்டு ஆகிய மூன்று வாய்களின் வழியாகக் குழம்பைக் கொட்டி வந்தது. சிகர உச்சியில் செங்குத்துச் சுவர் சுற்றிய ‘மேவுகுழி ‘ [Caldera] ஒன்றைக் கிலெளயா எப்போதும் கொண்டிருந்தது சமீபத்தில் ஏற்பட்டதா அன்றி சில ஆயிர வருடங்களுக்கு முன்பு மேவிதா என்பதைச் சொல்வது கடினம். மேவுகுழிகள் கிலெளயாவின் வரலற்றில் வந்து போயிருக்கலாம். சிகர உச்சியிலேதான் குமுறல் எழுச்சிகள் மற்ற வடிகால் வழிகளை விட மிகுந்து உண்டாகும். கிலெளயாவின் குழம்பு வெள்ளம் ஓடும் கிழக்குத் திசையில் 75 மைல் [125 கி.மீடர்] நீள ஆறும், அதன் தென்மேற்கில் 20 மைல் [35 கி.மீடர்] நீள ஆறும் நிரந்தமாக ஆக்கப் பட்டுள்ளன!

ஒருசில மீடரிலிருந்து நூற்றுக் கணக்கான மீடர் உயரத்தில் எழும் பெரும்பான்மையான குமுறல்கள் மிதமாக இருந்தாலும், வலுத்த சக்தி வாய்ந்த தீவிர வெடிப்புகள் பத்து அல்லது நூறாண்டுக்கு ஒருதரம் நேருவது உண்டு. அத்தகைய பெரு வெடிப்புகள் மாந்தருக்கு விபத்துகளை விளைவிக்கும் கொடூரம் பெற்றவை!

கிலெளயா எரிமலைதான் எல்லாவற்றுக்கும் இளையது. தீவிரக் கொந்தளிப்புடன் இயங்கி வருவது. கிலையாவின் 90% தளப் பகுதிகள் 1100 ஆண்டுகளுக்குக் குறைந்த எரிமலைக் குழம்பால் ஆக்கப் பட்டவை. அதே போல் மெளனா லோவாவின் 40% தளப் பகுதிகள் 1000 வருடத்திற்கு மேற்பட்ட குழம்பால் கட்டப் பட்டவை. எரிமலைக் குழம்போட்டமே முதலாவது மக்களுக்கு அபாய விபத்துகளை ஆக்க வல்லது! இரண்டாவது கனல் குழம்பு இறுதியாகக் கடலில் விழும் நிகழ்ச்சி, தீவிர வெடிப்பு உண்டாக்கும் அபாய சக்தி கொண்டது!

எரிமலைக் குழம்பால் விளையும் பெருந் தீமைகள்

திடாரெனப் புகை மண்டலம் எழுந்து, வெடித்துக் கனல் ஆற்றைப் பெருக்கும் எரிமலை ஒரு நாட்டின் சூழ்வெளி, நீர்வளம், நிலவளம், காலநிலை, நிதிவளம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் பெருத்த அளவில் பாதிக்க வல்லமை பெற்றது! அத்துடன் எரிமலை வாயுவில் கனிசமாக வெளிவரும் ஸல்ஃபர்டையாக்சைடு, சிறு துணுக்குகளில் வீசப்படும் மெர்குரி, ஆர்ஸெனிக் நச்சுகள் உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் நீண்ட கால நோய் நொடிகளைத் திணிப்பதுடன், முடிவில் மரணத்தையும் கொடுக்கும் கொடூர முடையது!

எரிமலை வெடிப்புகள் அண்டையில் வாழும் எண்ணற்ற மக்களைப் புலம்பெயர வைக்கும்! குடியிருக்கும் எண்ணற்ற வீடுகளை எரித்தோ, சாம்பலால் மூடியோ இல்லாமல் செய்துவிடும்! எரிமலை வாயுச் சிதறல்கள் [Tephra], குழம்புக் காய்வுகள் [Lahars] நாட்டின் தொழிற்சாலைகள், போக்கு வரத்துக்கள், மின்சாரப் பரிமாற்றுக் கம்பங்கள் ஆகியவற்றை நாச மாக்கிவிடும்!

ஹவாயியின் பிரதான இயக்க எரிமலைகள் மெளன லோவா, கிலெளயா ஆகிய இரண்டும் தொடர்ந்து வெளியேற்றும் குழம்பால் அபாயம் நேர்வதுடன் நீர்ச் சிதைவு, நிலச் சிதைவு, பெருத்த பொருள் நட்டமும் ஏற்படுகின்றன! 1997 இல் அமெரிக்கப் புவியியற் பரப்புக் கண்காணிப்புத் துறையகம் [United States Geological Survey (USGS)] வெளியிட்ட எரிமலை & நிலநடுக்க அபாயங்கள் பின்வருமாறு:

1. எரிமலைக் குழம்பு ஆறோட்டங்களால் [Lava Flows] ஏற்படும் தீ விபத்துகள்.

2. காற்றில் கலக்கும் எரிமலைத் துணுக்குகளின் சிதறல்கள் [Tephra (Airborne Lava Fragments)].

3. எரிமலைகள் வெளியேற்றும் விஷ வாயுக்கள் [Volcanic Gases: Sulphurdioxide, Carbondioxide].

4. வெடிப்புக் கொப்புளிக்கும் கற்சாம்பல் [Explosive Eruptions] வீச்சுகள்.

5. பூதளப் பிளவுகள், பிளவுப் படிவுகள் [Ground Cracks & Settling] உண்டாக்கும் தீங்குகள்.

6. எரிமலைக் குழம்பு ஓடிக் கடலில் பாயும் போது [When Lava Meets the Sea] எழும் வெடிப்புகள்.

கால் பந்தாட்டத் திடல் பலவற்றைச் சேர்த்தாற் போல் எரிமலைக் குழம்புகள் உண்டாக்கும் புதிய நிலப்பரப்புகள் முறிவு எச்சரிக்கை அரவத்தை ஒலித்தோ, ஒலிக்காமலோ திடாரென நொருங்கிக் கடலில் மூழ்கிவிடலாம்! கனற் குழம்புகள் ஆறாய் ஓடி நிலத்தைத் தாண்டிக் கடல் நீரைத் தொடும் போது, தீவிர வெடிப்புகளில் மாறுதல்கள் உண்டாகி விபத்துகள் ஏற்படலாம்!

எரிமலை வாயுக் கொப்புளிப்புகளில் முக்கியமாக இருக்கும் விஷ வாயுக்கள் இரண்டு: ஸல்ஃபர்டையாக்சைடு, கார்பன்டையாக்சைடு [SO2, CO2]. கிலெளயா எரிமலை நாளொன்றுக்கு 2000 டன் SO2 மூச்சரிப்பு வாயுவை வெளியேற்றுகிறது! அதன் எடையளவைக் குறிப்பிட்டால், சுமார் 50 திமிங்கல எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம்! வாயுக்களின் சதவீத அளவைச் சுவாசிக்கும் காற்றில் காண, எரிமலைக்கு அருகில் மாதிரி எடுக்கச் செல்லும் விஞ்ஞானிகள் ‘வாயு சுவாசிப்புக் கவசம் ‘ [Gas Masks] அணியாது சென்றால் இருமலும், மூச்சடைப்பும் மிகுந்து சில நிமிடங்களில் மயக்க முற்று, அவரது மூச்சு நின்று போய்விடும்! அத்துடன் மிகச் சிறிதளவில் கொடிய நஞ்சுகளான மெர்குரி, ஆர்செனிக் [Mercury, Arsenic] உலோகங்களும் வெளியேறுகின்றன!

எரிமலைப் பண்புகளை ஆராயும் மைய நிறுவனங்கள்

இயற்கையால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிர மக்களை சில நாட்களுக்குள் கொன்று விடுகின்றன! கடந்த 300 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 260,000 மேற்பட்டு மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது! 1815 இல் இந்தோனிஷியா தம்போராவில் [Tambora] ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மட்டும் 90,000 மக்கள் மடிந்துள்ளனர்! இருபதாம் நூற்றாண்டில் பெலீ சிகரத்திலும் [Mt Pelee, West Indies], நெவாடோ டெல் ரூஸ் [Nevado del Ruiz, South America] என்னும் இரண்டு இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர்! ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடார் எழுச்சிகள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டு வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை தாக்கவரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டியவை!

உலக அரங்கில் ‘எரிமலையியல் மையங்கள் ‘ [Center for Volcanology] ஹவாயி, ஜப்பான், நியூ ஸிலண்டு, ஐஸ்லண்டு, இத்தாலி, ஆஃபிரிக்கா, சில்லி, கரிபியன் தீவுகள் ஆகியவற்றில் அமைக்கப் பட்டுள்ளன! 1992 இல் கட்டப்பட்ட ஹவாயியின் எரிமலை ஆய்வு மையத்தில் 80 விஞ்ஞானிகள் பணி செய்து வந்தார்கள்.

இப்போது அது புதுப்பிக்கப் பட்டு முற்போக்காகி யுள்ளது. ஆராய்ச்சிகள் ஹவாயி பல்கலைக் கழகத்தின் [UH] இரண்டு தளங்களிலும் [மனோவா (Manoa), ஹிலோ (Hilo)], ஹவாயி பெரிய தீவிலும் நடத்தப் படுகின்றன.

1. மனோவா UH இல் உள்ள கடல்-பூமி விஞ்ஞானப் பொறிநுணுக்கப் பள்ளி [School of Ocean & Earth Science & Technology (SOEST)]

2. பெரிய தீவில் உள்ள USGS இன் கீழ்ப்பணி செய்யும் ஹவாயி எரிமலை நோக்காய்வுகம் [United States Geological Survey Hawaiian Volcano Observatory (USGS HVO)]

3. ஹிலோ UH, மனோவா UH இரண்டிலும் உள்ள [Center for the Study of Active Volcanoes (CSAV)].

ஹவாயி எரிமலை நோக்காய்வகம் நிலநடுக்க வாயுச் சோதிப்பு [Seismic Gas], பூதளப் பெயர்ப்பு [Ground Deformation], குழம்பின் உஷ்ணம், குழைவு [Viscosity] அளப்பு, அடித்தளக் கனல் குழம்பு நகர்ச்சி [Magma Movement] ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

ஆராய்ச்சிக் கூடங்கள் எரிமலையை எவ்விதம் கண்காணிக்கின்றன ?

மாக்மா தள மட்டத்தை நெருங்கும் போது, எரிமலை அதிர்வுகள் காட்டிக் குமுறுகிறது! அப்போது 24 மணி நேரமும் விஞ்ஞானிகள் தூரத்தில் தங்கி, எரிமலை நடத்தையைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். கரடு முரடான காட்டுவெளிப் புறங்களில் கண்காணிப்புக் கருவிகளை அமைத்து, அவை அறிவிக்கும் தகவல்கள் யாவற்றையும் ஒருங்கே ஓரிணைப்பு மையத்தில் [Network Monitoring Centre] புகுத்திப் பதிவாகி ஆராய்ந்து வரப் படுகின்றன.

அப்போது விஞ்ஞானிகளுக்கு எழுகின்ற கேள்விகள்: எரிமலை கொந்தளிப்பாட்டம் அறியப் பட்டால், அது மாக்மா நகர்ச்சியைக் குறிப்பிடுகிறதா ? அது உண்மை என்றால், எரிமலை எப்போது குமுறி எழும் ? அப்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய எவ்வளவு மணி நேரம் உள்ளது ? எப்போது குழம்பு வெளியேற்றம் ஆரம்பமாகும் ? எப்போது குழம்பு ஆறோட்டம் நிற்கும் ? இந்த விபரங்கள் யாவும் தொடர்ந்து திரட்டப்பட வேண்டும்.

விஞ்ஞானிகளின் கருவிகள் பின்வரும் விளக்கங்களைப் பதிவு செய்யும்.

1. மாக்மா கனல் குழம்புக் கிணற்றின் [Magma Reservoir] இயல்புகள் [உஷ்ணம், அழுத்தம், வேகம், கொள்ளளவு, குழைவு (Viscosity)] என்ன ?

2. எரிமலை நிலநடுக்க நிகழ்ச்சிகளுக்குக் காரணங்கள் யாவை ?

3. எரிமலைக் குமுறி மேலே எழும்போது உண்டாகும் கீழ்நிலைக் காற்று, எரிமலைக் கொப்புளிப்பு வாயுத் துணுக்குகளை எவ்விதம் சிதறடிக்கிறது ?

4. எரிமலை இடுப்புச் சாம்பல் அடுக்குகள் திடாரெனச் சரிந்து, பெரும் நிலச்சாய்வுகளை ஏற்படுத்தும் வலுவற்ற வாய்ப்புகள் இருக்கின்றனவா ?

விஞ்ஞானிகள் கண்காணிக்கும் எரிமலைச் சரிவு இயல்புகள்

1. நில நகர்ச்சியைக் கணித்தல்: எரிமலை உறங்கும் போது, எரிமலைச் சிகரத்தின் கீழே அடிமட்டத்தில் ஓய்வு நிலையில் உள்ள கிணற்றில் மாக்மாவின் அழுத்தம், மேலே தங்கி நிற்கும் பாறை எடைக்குச் சமமாக இருப்பதால், ‘சரிவு அளவில் ‘ [Tilt Measurement] எந்த மாறுதலும் காண முடியாது. பூமியின் உட்கருக் கவசத்தில் [Mantle] மாறுபாடுகள் ஏற்பட்டு, மாக்மா வெளியே தள்ளப்படும் போது, கிணறு உப்பிப் பெருக்கிறது. அப்போது மேல் நிற்கும் பாறைகள் நகர்ச்சி அடைந்து, சிகரத்தின் வாய் விரிகிறது.

அவ்விரிவுகளைச் சரிவு நோக்கும் கருவிகள் மட்ட அளவில் வேறுபாட்டைக் காட்டும். அவ்வாறு கண்ட சரிவுகளின் மட்ட அளவு மாறுபாடுகள், மாக்மா கனல் குழம்பு சேமிப்பைக் காட்டப் பயன்படும்.

2. அகில இடப்பெயர்ச்சி நோக்கும் ஏற்பாடு [Global Positioning System (GPS)] அண்ட வெளியில் துணைக் கோள் ஒன்றில் அமைப்பாகி யுள்ளது. எரிமலைக் கருகில் வைக்கப் பட்டுள்ள இடக்குறிகள் [Receivers] அனுப்பும் சமிக்கைகளை GPS தொடர்ந்து பதிவு செய்து வரும். மாக்மா கனல் குழம்பு சேமிப்பாகி, மேலே எழும் போது எரிமலையின் வாய் அகண்டு விரிகிறது. செங்குத்து, மட்டக் கணிப்புகளில் இரண்டு இடக்குறிகள் அனுப்பும் அளவுகளில் 1 செ.மீடர் வேறுபாட்டைக் கூடப் பதிவு செய்ய வல்லது GPS!

எரிமலை குமுறி எழுவதற்குப் பூமியின் அடித்தளத்தில் கொந்தளிக்கும் மாக்மா கனல் குழம்பின் [Magma] நகர்ச்சியே முக்கிய காரணமாகிறது! எரிமலைக் கண்காணிப்பு முறைகள் யாவும், எரிமலைக் கடியில் நிலவிய மாக்மாவின் பெருக்கம், குறுக்கம், மாக்மாவின் நகர்ச்சி ஆகிய மாறுதல்களைக் கருவிகள் மூலம் அறிந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றன!

1. கொந்தளித்து விரியும் மாக்மா உண்டாக்கும் பூகம்பப் புற்றுகளின் எழுச்சி [Swarms of Earthquakes].

2. எரிமலைச் சிகரக் குழி வீங்குதல் அல்லது குறுகுதல்; எரிமலை இடுப்பு ஏறுதல் அல்லது சரிதல் [Swelling or Subsidence of Volcano ‘s Summit or Flanks].

3. எரிமலையின் திறந்த வாய் அல்லது சரிவுத் துளைகளில் எரிமலை வாயுக்கள் வெளியேற்றம் [Release of Volcanic Gases from Ground or Vents].

இவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து நோக்கி வருவதால், எரிமலை எதிர்பார்ப்பைப் பல நாட்கள் அல்லது பல வாரங்கள் முன்பாகவே மக்களுக்கு எச்சரிக்க முடிகிறது.

தகவல்கள்:

1. Inside the Volcano, National Geographic [November 2000].

2. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].

3. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].

4. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].

5. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]

6. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.

7. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].

8. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]

9. The Hawaii Center for Volcanology [HCV-1992]

**************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா