உடலில் மாற்றம்.

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

நளாயினி தாமரைச்செல்வன்.


ஐம் புலன்களையும்
நான் அடக்கிக் கொண்டாலும்
உன் வருகையின் முன் மொழிதலை
என் தோல்கள்
உணர்த்தி விடுகின்றன.
அதன் பின்னர்
அடுக்கடுக்காய்
உடலில் மாற்றம்.
உமிழ்நீர் சுரக்க மறுத்து
நா அண்ணத்தில்
ஒட்டிக் கொள்ளும்.
பின் தொடர்ந்து வருகிறான்
வருகிறான் என
இதயம் பிரசவிப்பது
செவிவரை கேட்கும்.
காதல் உணர்வை
பயம் மேய
கால்கள் நடை தளரும்.
நீ அருகில் வந்து விட்டால்
உடல் உரோமம் கூச் செறியும்.
அப்பப்பா!
விழிகளா இவை!
ஒவ்வோர் முகங்களையும்
வேவு பார்க்கும்
தெரியா முகங்கள் என்றால்
மனசோ ஆனந்தம் கொள்ளும்.
முகமொன்று தெரிந்து விட்டால்
உடலும்,உணர்வும்
உசார் பெறும்.
அப்போ
நீ ஓர் வழிப்போக்கனாய்
என்னை முந்திச்செல்பவனாய்,
இல்லை என்றால்
நான் ஒரு பாதசாரியாய்
உன்னை முந்திச்செல்பவளாய்.
நான் ஒரு பாதசாரியாய்
உன்னை விலத்தி வந்ததால்
இப்போ என் மனசு
இங்கே
புரண்டு அழுகிறது.
நித்திரை துறந்து
துடிக்கிறது.
அடுத்த சந்திப்பில்
நிச்சயமாய்
தெரிந்த முகம்
வந்தால் என்ன ?
உன்னுடன்
கைகோர்த்து
நடைபயில்வேன்.
விசர் மனசு,
இப்படித்தான்
எத்தனை முறை
சபதமெடுக்கும்.
நான் ஒரு மக்கு,
இது கூட
உன் மீதான காதலை
இன்னும் அதிகமாய்
உசுப்பி விடுகிறது
என்பதை
அறியாதவளாய் இருக்கிறேன்.
————————————–
thamarachselvan@hotmail.com

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.