அறிவியலில் மொழியின் தேவை – நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ‘ முன்வைத்து.

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

வெங்கட்ரமணன்


நாகூர் ரூமியின் கட்டுரை கருத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அனுமார் பற்றிய எள்ளலுடன் துவங்குகிறது. பல சமயங்களில் சொல்ல வருவதற்கு முற்றிலும் தேவையுடையதாக/தவிர்க்க முடியாததாக இருந்தாலும் படிப்பவரில் யாராவது ஒருவருடைய மனது புண்படுமா என்று இது போன்ற உணர்ச்சியெழுப்பும் வாசகங்களை எழுதையில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திப்பது சான்றோர் மரபு. ஆனால் இப்படி எழுதினால் வாசகன் நிமிர்ந்து உட்காருவான் என்பதற்காக எழுதப்பட்டது போல இருக்கிறது. இதே கட்டுரையில் நபிகள் பெருமானைப்பற்றிய வாசங்கள் கவனத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன.

* * *

கட்டுரையில் அறிவியல்/தொழில்நுட்ப வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தித்தான் தீரவேண்டுமா என்று ஆண்டாடுகலமாக விவாதிக்கப்படும் விஷயத்தைக் கேட்டுப் புளித்துப்போன அதே வாதங்களுடன் (புதியதாக ஒரு தரவும் இதில் இல்லை என்பது உறுதி) எழுதியிருக்கிறார். ஆண்டாண்டு காலமாக பதில் சொல்லி அலுத்துபோன அதே விஷயம்தான் என்றாலும், இதுபோன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட வாதங்களை எதிர்கொள்வது நம் மொழியில் அதுபற்றிய கவனத்தை அதிகரிக்கும் என்ற வகையில், நாலுபேர் அறிவியலைப் பற்றி நம்மூரில் பேசலாமே என்ற ஆதங்கத்தில்தான் எதிர்வினை என்று எழுத வேண்டியிருக்கிறது.

மொழித்தூய்மை குறித்த அவரது வரையறைபற்றி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை. இதுபற்றி என்னுடைய கருத்து இந்தக் கட்டுரையைப் படித்தால் விளங்கும். ‘மொழி என்பது ஒரு பண்பாட்டின் குறியீடாக உள்ளது ‘ என்று சொல்கிறார் ரூமி. இந்த நூற்றாண்டு அறிவியலின் காலம், அந்த அறிவியலைக் குறித்த சொற்களைத் தமிழில் படைக்காதவரை தமிழ் தேங்கிப்போகும். ரூமியின் கூற்றுப்படி அது பண்பாட்டுத் தேக்கமாகத்தான் இருக்கமுடியும்.

தொடர்ந்து ‘எந்த தமிழனாவது, ‘இன்று நான் பேருந்தில் வந்தேன் ‘ என்று சொல்கிறானா ? ‘ கேட்கிறார். அவருடைய வாதத்தின்படி பேருந்து, கணினி, போன்ற எவையுமே தமிழன் கண்டுபிடித்ததில்லை எனவே இவைகளுக்கு ஏன் தமிழ்ப் பெயரிடவேண்டும் ? கிட்டத்தட்ட அவருடைய முழுக்கட்டுரையின் சாராம்சமும் இதுதான். ஏன் என்பதற்கு விளக்கம் சொல்வதற்கு முன்னால், இந்த மையக்கருத்துக்கு அவர் துணைக்கு அழைத்திருக்கும் சில வாதங்களின் அபத்தங்களைப் பார்க்கலாம்.

‘ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. ‘ அதாவது ரோசா என்று சொன்னால் ரோஜாப்பூவிலிருந்து அது வேறாகிவிடுமாம். அப்படிப் பார்த்தால் ரோஸ் என்று சொல்லும் ஆங்கிலேயருக்கும் அது வாசமில்லா மலர்தான் என்கிறாரா ? இல்லை ரோஸ் என்ற வார்த்தையில் எப்படியாவது ஒரு தமிழ் ஒலியற்ற எழுத்து வந்திருக்கிறது அதனால் அதில் கட்டாயம் வாசனை உண்டு என்று வாதிடப்போகிறாரா ? பார்க்கப்போனால் உலகில் மூன்றில் இரண்டு பேர் அதை ரோசா என்றுதான் சொல்கிறார்கள். லத்தீன் வழித்தோன்றல் மொழிகளில் அது Rosa-தான். உம்பர்த்தோ ஈக்கோ ‘Il nome della rosa ‘ என்று அவருடைய தாய்மொழியில் எழுதினால் இலக்கியமாகாதா ? ரோசா-வில் வாசனை மட்டும்தான் குறைவா, அல்லது இலக்கியதரம் இன்னபிறவுமா ? ஒரு வார்த்தையின் உச்சரிப்பில் இருக்கும் இனிமை அல்லது எளிமை போன்றவற்றை அறிவியல் விஷயங்களுடன் சம்பந்தப்படுத்துவது வியப்பளிக்கிறது.

இந்த இடத்தில் வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். பரந்துபட்ட சமூகங்களுடன் தமிழன் ஊடாடும் இன்றைய நாட்களில் தனிப்பெயர்களையும், இடங்களையும் தெளிவாகச் சொல்ல தமிழில் போதுமான ஒசைகள் இல்லை என்பது நிச்சயம். உதாரணமாக, ‘ஜெர்மனியின் வேந்தர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் ‘ என்று (கிட்டத்தட்ட) மூலத்தை ஒட்டினார்ப்போலத்தான் நான் எழுதுவேன். இந்த இடத்தில் ‘செர்மனியின் வேந்தர் கெர்கார்ட் சுரோடர் ‘ ரீதியில் எழுதுவது அபத்தத்தின் உச்சம். எனவே தமிழில் நூறாண்டுகளாகப் புழங்கிவரும் வடமொழி எழுத்துக்களின் வரிவடிவங்களை நான் இயல்பாக சுவீகரித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் ஸ்வீகாரம் என்று எழுதுவது எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம். கூடுமானவரை நம்மொழியின் ஒலிவடிவத்தை ஒட்டியிருப்பதுதான் நல்லது. வடமொழியை இயல்பில் தமிழாக்கி எடுத்தாள இலக்கணங்கள் இருக்கின்றன.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 401)

ரோஜா என்பதை எப்படி இலக்கணப்படுத்தலாம் என்று பல நூறாண்டுகளாக கையாண்டுவரும் வழிகள் இருக்கையில் ‘(என்) காதுக்கு இனிமையில்லை ‘ என்று சொல்வது சான்றாண்மையில்லை. ரூமியின் வாதத்தை நீட்டினால் ‘எனவே தமிழில் ஸதவருஷ ப்ரயோகமான சமஸ்க்ருத அக்ஷரங்களை ஸ்வீகாரம் பண்ணிக்கொள்ள வேண்டும் ‘ என்றுதான் என்னுடைய முந்தைய வாக்கியத்தை எழுதவேண்டும். இதுவும் அவருடைய காதுக்கு இனிமைதானா என்று தெரியவில்லை.

ட்ரங்கால் (முண்டக்கூவி), காபி (கொட்டைவடிநீர்) போன்ற புராதண எடுத்துக்காட்டுகள் அவருடைய வாதங்களுக்கு எந்த விதத்திலும் உதவிக்கு வரப்போவதில்லை. இதே போலத்தான் ‘சில ஆண்டுகளுக்கு முன் The govt. has a big role to play என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது என்று ‘தமிழாக்கி ‘ இருந்ததாகத் துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது! ‘. Trunk call-ஐ முண்டக்கூவியாக்கியதும் Role-ஐ உருளையாக்கியதும், ‘I saw a good snake taking pictures ‘ வகையறாக்களும் திறமையில்லாத மொழிபெயர்ப்பாளரின் வேலை, அவற்றை ஆதாரங்களாக வைத்துக்கொண்டு தமிழில் அறிவியல்/தொழில்நுட்ப வார்த்தைகளே கூடாது என்று வாதிடுவது சிறுபிள்ளைத்தனம்.

‘நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு ‘பேன்ட் ‘ போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன ? ‘ – என்று வினவும் ரூமி; ‘கரண்டு ஆபீஸ டெலிவிஷன் பார்க்கும்போது டெலிபோன்ல சப்தம், வெளியில் போர்-விலர், எரோபிளேன் போவது, கம்ப்யூட்டர்ல அனிமேஷன் மியூஸிக் சத்தம், ஒரே இரைச்சல் ‘ – எழுத ஒன்றரை வரியில் இந்த எல்லா வார்த்தைகளையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் மகிழ்ந்துபோவார் என்று நம்புகிறேன். ஊர் முழுவதும் பஸ் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள் என்று சொல்கிறார். கடைசியாக நான் சென்னை போயிருந்தபோது நடந்த உரையாடல் இது;

சார், எப்படிப் போவணும் ?

முன்னால போப்பா இன்னும் தூரம் போகணும்

ஸ்டெரெய்ட்டாவா சார் ?

ஆமாம்பா

வலது பக்கம் திரும்புப்பா!

எங்க சார் ?

வலது பக்கம்.

ரைட்லயா சார் ?

ஆமாம்பா, இங்கதான். இடதுபக்கம் திரும்பினா கடைசீ வீடு.

என்ன சார் ? ட்டேர்ன் பண்ணனுமா ?

கடைசி வீடு

லாஸ்ட் ஹவுசா சார்.

இந்த ரீதியில்தான் நம்மூரில் இப்பொழுது ஆட்டோக்காரர்கள் பேசுகிறார்கள். இதனால், முன்னால், இடது, வலது, திரும்பி, கடைசி இதெல்லாவற்றையும் தமிழிலிருந்து ஒழித்துவிட்டு ஸ்ட்ரெய்ட், லெப்ட், ரைட், ட்டேர்ன், லாஸ்ட் என்பவைதான் இன்றைய தமிழ் என்று சொல்லிவிடலாமா ? அனு, அக்கா, ஆண்டி, லைட்ஸ் ஆன், ஸ்பாட் லைட் என்று போடும் குமுதங்கள் வேண்டுமானால் இதற்குத் துணைபோகலாம், நல்ல இலக்கியவாதியான ரூமியுமா ?

ஒரு வருடம் பிரிட்டனில் வசித்திருக்கிறேன். லண்டனில் காக்னியில் பேசுவார்கள், ஆனால் அதுதான் ஆங்கிலம் என்று ஒரளவிற்காவது படித்த யாரும் வரிந்துகட்டிக்கொண்டு கொடியேந்திக் கண்டதில்லை. அங்கே என்னுடைய ஆசிரியர் அவருடைய தூயமையான ஆங்கிலத்தில்தான் அவர்களுக்கு வழி சொல்லிக் கேட்டிருக்கிறேன். நம்மூரில் இப்பொழுது தமிழ் எழுத்தாளர்கள் உட்பட அணைவரும் தமிழைப் புதிதாக வரையறைப்படுத்த முற்படும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. ‘லீவுல பஸ்பிடிச்சு ஆஸ்பத்ரி போயி மெடிசின் வாங்கி வா ‘ என்பதுதான் தமிழ் என்று பாமரர்கள் சொல்லலாம், படித்தவர்கள் ?

சன் டாவி என்பது அவர்களாக உவந்து எடுத்துக்கொண்ட வர்த்தக்ப் பெயர். இதன் பொருத்தம்/மின்மை குறித்து விவாதிக்க எனக்கு அதிகமாக ஒன்றும் இல்லை (மனதில் நிற்கும்படியான ஒரு தமிழ் வார்த்தையைக் கண்டுபிடிக்கத் தெரியாத ‘தமிழனக் காவல் ‘ குடும்பம் என்பதைத் தவிர). அதைச் சூரியத் தொலைக்காட்சியாக்குபவர்கள் மடையர்கள். வர்த்தப் பெயருக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை. அது ஸ்வாகிலி மொழியில் எழுதினாலும் சன் டாவியாகத்தான் இருக்கவேண்டும். எனவே, அதை மொழிபெயர்ப்பது மடத்தனம். அந்த மடத்தனத்தை முன்னிருத்தி அது சூரிய ஒளியில் இயங்குவதாகப் பொருள்படுகிறது என்று சொல்வதில் என்ன இருக்கிறது ?

நமக்கு எந்த இடத்தில் தமிழ்ப்படுத்த வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவில்லை. சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா லினக்ஸில் குதித்திருக்கிறார். உலகம் முழுவதும் இருக்கும் தன்னார்வலர்களின் உழைப்பில் கிட்டத்தட்ட 70% முடிவடையும் நிலையில் இருக்கும் அதைப் புதிதாகத் தமிழ்ப்படுத்துவது போலத் தோற்றமளிக்க விகடனில் எழுதினார். அந்தக் கட்டுரையில் அவர் செய்த முதல் காரியம் அவருக்குப் பொருளுதவி செய்த ரெட்ஹாட் லினக்ஸ் நிறுவனத்தின் பெயரை செந்தொப்பியாக்கியது. (தமிழ் லினக்ஸைக் கையகப்படுத்த அவரே தொடங்கிய திட்டத்திற்கு அவர் இட்ட பெயர் ‘தமிழ் பிசி திட்டம் ‘).

* * *

அறிவியல்/தொழில்நுட்ப விஷயங்களை ஏன் தமிழில் சொல்ல வேண்டும் ? மனிதனின் சிந்தனை அவனது தாய்மொழியிலேயே அமைந்திருக்கிறது என்பது இன்றைக்கு அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. நாம் பெரும்பாலும் அறிவியலைக் கற்றுக் கொள்ளும் விஷயமாகவே பார்க்கிறோம் (இன்னொருவர் கண்டுபிடித்து நமக்குக் காட்டிவிடுவது). மாறாக அது சிந்தனை வழி. அதற்கு நெருடும் சொற்கள் தடையாகத்தான் இருக்கும். உதாரணமாக, வானொலியைப் பற்றிப் படிக்கையில் superhetrodyne ‘ என்ற முறையைப் பற்றிப் படித்திருக்கிறேன். இது எத்தனை முறைபடித்தாலும் புரியவில்லை, அதையே ‘கலக்கிப்பிரித்தல் ‘ என்ற வார்த்தையைப் படித்துவிட்டு மீண்டும் வரைபடத்தைப் பார்த்தவுடனேயே ‘இதில் நமக்கு வேண்டிய ஒலியலைகளுடன் வேறு அலையும் முதலில் கலக்கப்பட்டு பின்னர் பிரிக்கப்படுகிறது ‘ என்பது தெளிவானது. இதை எத்தனை வருடம் ஸ்உப்பர்ஹெட்ரோடைன் என்று ‘கம்பீரமாகச் ‘ சொல்லிக் கொடுத்தாலும் புரியப்போவதில்லை. நாளமில்லாச் சுரப்பிகளை நம் குழந்தைகளுக்கு அப்படித்தான் சொல்லித்தர வேண்டும், அது வெள்ளைக்காரன் கண்டுபிடித்தான் என்று ‘டக்ட்லெஸ் க்ளான்ட் ‘ என்று தமிழ் புத்தகங்களில் எழுதினால் அறிவியல் ஒரடிகூட எடுத்து வைக்காது.

அறிவியலில் மாத்திரமல்ல எல்லா அறிவுத்துறைகளுக்கும் இது முக்கியம். இன்ஃப்ளேஷன் என்பது நம்முடைய கருத்தாக்கம் இல்லை என்றாலும் அதைப் பணவீக்கம் என்று அடையாளம் காணவேண்டும். பார்லிமெண்ட்டை வெள்ளைக்காரன் நமக்குக் கற்றுக் கொடுத்தாலும், அதைப் பாராளுமன்றமாக்கி அந்தச் சிந்தனையை வளர்த்தெடுப்பதில்தான் முன்னேற்றத்தின் ஊற்றுக்கண் இருக்கிறது.

எந்த இடத்தில் தமிழ்ப்படுத்த வேண்டும் ? ஒரு அறிவியல், தொழில்நுட்பக் (பொதுவில் சிந்தனையியல்) கருத்து என்றால் கட்டாயம் மொழியாக்கம் செய்யவேண்டும். உதாரணமாக, Analytical Geometry – பகுமுறை வடிவகணிதம். Open Source – என்பதை ஓப்பன் சோர்ஸ் என்று எழுதிச் சொல்லிக் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை. அதைத் திறந்த ஆணைமூலம் என்று சொல்ல வேண்டும். பிளாப்பி டிஸ்க் என்பதை நெகிழ்வட்டு என்றும், ஹார்ட் டிஸ்கை கடினவட்டு என்றும் சொன்னால் மூன்றாவதாக சிடி குறுவட்டாக எளிதில் புரிந்துபோகும். இதைத் தொடர்ந்து மினி டிஸ்க் சிறுவட்டு என்றும், மாக்னெடோஆப்டிக் டிஸ்க் காந்தஒளி வட்டு என்றும் இயல்பாக வரும். அப்படி வரும்போது, அதில் காந்தத்தில் பதிவு செய்யப்பட்டு ஒளியால் படிக்கப்படுகிறது என்ற தொழில்நுட்பம் எளிதாகப் புரியத்தொடங்கும். கூடவே, வருங்காலத்தில் வரக்கூடிய எந்த டிஸ்க்-க்கும் தமிழுக்கு அந்நியப்பட்டுப் போகாமல் எளிதாக உள்ளே வரும்.

எப்படிச் செய்ய வேண்டும் ? Free Software என்ற சொல்லில் இலவசம் முக்கியமல்ல, Free as in speech என்று ஆங்கிலத்திலேயே உபதலைப்பு போட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ‘தளையறு மென்கலன் ‘ என்று சொல்வதுதான் சரி. இந்தக் கட்டுரையில் எல்லாவற்றையும் விளக்க வேண்டியதில்லை. கட்டாயம் ‘பொருளாதாரம் சமூகத்தின்மீது ஒரு பெரிய உருளையை விளையாடுகிறது ‘ என்பதெல்லாம் அறிவாளிகளுக்கு ஒரு பொருட்டாக வேண்டியதில்லை.

எடுத்தாளக் கூடாதா ? கட்டாயமாக எடுத்தாளலாம், அதற்கு முன்னால் நம்மிடம் சரக்கு தீர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மானிட்டர் என்று வந்த உடனேயே அதை வாரிச் சுருட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் சிந்தித்தால் விழியம் என்ற எளிதான சொல்கிடைக்கும். முடியாத நிலையில், அப்படி எடுத்தாளும் பொழுது ஒரு நெறியில் நின்று நிதானமாகச் செய்ய வேண்டும். லட்சணம், லட்சியம் என்ற வடமொழிச் சொற்களை உள்வாங்கும் பொழுது அவற்றை அழகாகத் தமிழ்ப்படுத்தி இலக்கணம், இலக்கியமாக்கியது நம் மரபு. எனவே, தமிழுடன் ஒலிப்பொருத்தம் கொண்டு வரும் சொற்களை இயல்பாக நமதாக்கிக் கொள்ளவேண்டும். இதை ஜப்பானியர்கள் திறம்படச் செய்வதைக் கண்டிருக்கிறேன். டெலிவிஷன் > {தெரேபிஷன் ஜப்பானிய உச்சரிப்பு} > தெரேபி; ரிமோட் கண்ட்ரோல் > ரிமோக்கான்; ஏர்க்கண்டிஷனர் > ஏயர்கா(ண்) என்று ஜப்பானிய மொழிக்கு இயல்பாக்குவார்கள் (ஜப்பானிய மொழியில் பெரும்பாலான வார்த்தைகள் உயிரெழுத்தில்தான் முடியும்).

சுருக்கமாக, அழகாக இருக்கும்போது எளிமை கருதி நேரடியாகக் கையாளலாம். உதாரணம்; கார். இதை சொகுசு உந்தி, சிற்றூர்தி என்றெல்லாம் நீட்டி முழக்குவது வறட்டுத்தனம். கார் தமிழ் ஒலிக்கு நேரடியான சொல். ‘கார்ல போனா வேகமா போலாம், தேர்லன்னா அசஞ்சு அசஞ்சுதான் ‘ – என்பது போல தமிழுக்குரிய ‘எகன மொகன ‘ இருக்கும்பொழுது அதைக் கண்டுகொள்ள மறுப்பது வீம்பு.

இவை எல்லாவற்றையும் சொல்லி, கூடவே இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். எப்பொழுது தமிழில் சொல்ல வேண்டும் ? இந்த இடத்தில்தான் நாகூர் ரூமி சொன்ன ஒளியின் வேகம் வருகிறது. எவ்வளவு விரைவாக வேண்டுமோ அப்படிச் செய்ய வேண்டும். ஒரு காலத்தில் இணையத்தைப் பற்றி எழுத போர்னோகிராபி என்ற சொல்லுக்குத் தமிழ் தேவைப்பட்டது. நான் நல்ல அறிஞர்கள் இருக்கும் இணையக் குழுக்களில் கேட்டேன். இதற்கு இரண்டு தெரிவுகளும், இருபத்தந்து மடல்களும் வந்தன. சங்ககாலத்தில் போர்னோகிராபி தொடங்கி, போர்னோகிராபியில் பார்ப்பனர்கள் வரை தமிழர்களுக்குத் தவிர்க்க முடியாத அனைத்துத் தலைப்புகளிலும் கருத்துக்கள் பொங்கியெழுந்தன. எதுவுமே அடுத்த வாரா திண்ணை மின்னிதழுக்குள் முடியாது என்ற நிலையில், பாலுணர்வுப் படம் என்று அவசரத்தில் எழுதிவிட்டேன். இன்னும் கொஞ்சம் சிந்தித்திருந்தால் இழிகாமப் படம் என்று தோன்றியிருக்கும். ஆனால் போர்னோகிராபி என்பதைக் கருத்தியல் ரீதியில் ஒத்துக்கொள்ள முடியாது. இப்படித் தனிநபர்கள் தங்களுக்குத் தோன்றியவழியில் உரத்துச் சிந்தித்தால் ஒளியின் வேகத்தில் பல சொற்கள் தோன்றும்.

எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்னும் வாதத்தை மறுக்க ஒரு எளிய எடுத்துக்காட்டு போதும். Blogging என்ற ஒரு புதிய இணைய வருகைக்குத் தமிழ்ப் பெயர் தேவைப்பட்டது. இதற்குப் பலரும் பல பெயர்களைச் சொன்னார்கள். வலைப்பூ என்ற பெயர் முதலில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது கவித்துவமாக இருக்கிறது என்று ஆசைப்பட்டார்கள். தொழில்நுட்பத்தை நேரடியாகச் சுட்டும் வலைக்குறிப்பு, வலைப்பதிவு போன்ற பெயர்கள்தான் இன்றைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று மட்டும் நிச்சயம் கிட்டத்தட்ட நூறு பேர்களின் தமிழ்த் தளங்களில் எங்கும் பிளாகிங் என்று எழுதுவதில்லை. இனித் தமிழில் பிளாகிங் என்ற வார்த்தையின் அத்தியாவசியத்தைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். இப்படி விஷயம் தெரிந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லும்போது குமுதம் போன்ற பத்திரிக்கைகள் கூட இணையம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

ஒரு கட்டத்தில் ‘என்ன வார்த்தை இல்லை எங்கள் தமிழில் ? ‘ என்று மார்த்தட்டி தமிழை வளரவிடாமல் தடுத்தனர் பண்டிதர்கள், பின்னர் அதுவே அரசியல் ஆதாயங்களுக்குத் துணைபோயிற்று. இன்றைக்கு அறிவாளிகளாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள், ஏன் தமிழில் செய்ய வேண்டும், என்கிறார்கள். இவர்கள் அரசுத்துறை பண்டிதர்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். ‘ஸாப்ட்வேர் என்றாலே போதும் மென்கலன் என்றால் மார்பங்களைத்தான் நினைவூட்டும் ‘ என்று சொல்லும் நிலையில் இவர்களும் தமிழைக் கட்டிப்போடுவதுடன், வரும்தலைமுறையின் சுயசிந்தனையையும் பொசுக்க முயற்சிக்கிறார்கள். மென்கலன் என்றால் பஞ்சும், நெஞ்சும்தான் நினைவுக்கு வரும் என்பது அபத்தத்தின் உச்சம். அதே கருத்தியலில் சாப்ட்வேர் என்றால் ‘மெல்லிய ஆடை ‘யில் தொடங்கி அதை ‘உண்டுவிட்டு உடுத்தச் ‘ சொல்வதெல்லாமும் கற்பனையில் வரலாம். குதர்க்கம் போதவில்லை என்றால் சாப்பிடும் வேரையும், அதை உண்டால் வியர்ப்பதையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.

காம்பாக்ட் டிஸ்க் என்று சொல்லிக் கொடுத்தால் இனிவரும் எல்லா தலைமுறையும் அடிமைப்பட்டுக் கிடக்கும். கருத்தியல்ரீதியாக நமது சந்ததியை நாமே வெள்ளைக்காரனுக்கு அடிமைப்படுத்தித் தருவதன் சிறப்பு என்னவாக இருக்கமுடியும் ? கண்டுபிடித்தவனுக்கு நன்றி சொல்ல அவன் பெயரைச் சொல்லிக்கொடுப்பதும், சுரண்டல் இல்லாதபட்சத்தில் அவனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமையை மதிப்பதும் மாத்திரமே போதும். தமிழனுடைய நன்றிக்குணத்தை இப்படியெல்லாம் வழிநெடுகத் தளும்பவிட வேண்டியதில்லை.

* * *

நூற்றாண்டு அடிமைத்தனம் இன்னும் இந்தியர்களை விட்டு அகலவில்லை. இதற்கு நம் ஆங்கில வழிக்கல்வியும் ஒரு முக்கியமான காரணம். இதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஆங்கில வழிக்கல்வியின் ஆதாயமாகக் காட்டப்படும் உலகளாவிய வேலை வாய்ப்பு வசதி ஒரு கிட்டப்பார்வை. ஆங்கிலவழிக் கல்வி பெற்றதால்தான் இந்தியர்கள் கணினி விற்பன்னர்களாக சிலிக்கன் பள்ளத்தாக்கில் கொடிகட்டுகிறார்கள் என்று சொல்வது அபத்தம். சொல்லப்போனால் இந்தியர்களில் கணினி விற்பன்னர்கள் மிகக் குறைவு ‘கணினி வேலைக்காரர்கள்தான் ‘ அதிகம். இத்தனை வருட மென்கலன் முயற்சிக்குப் பின்னாலும் நம் நாட்டில் அதிகமாகிவரும் கணினி அறிவின்மை ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. உலகச் சந்தையில் சொல்லிக்கொள்ளும்படியாக இந்தியப் பெயரைத்தாங்கி வரும் தயாரிப்பு ஒன்றுகூட இல்லை. ஏன், இந்தியர்கள் சிறு தயாரிப்பாக பகிர்கலன்கள், இலவசச் செயலிகளைக் கூட முழுவதும் சுயசிந்தனையில் தயாரிப்பது மிக, மிகக் குறைவு. இதற்குக் காரணம், சுயமாக சிந்திக்க வழியின்றி நம் மூளைகள் ஒருவனுக்குப் பின்னே செல்லப் பழக்கப்பட்டிருப்பது. பிரேசில், ஸ்லாவேனியா, தாய்லாந்து, மெக்ஸிகோ என்று பல நாட்டவர்கள் தங்கள் பெயர் சொல்லுமளவிற்கு மென்கலன்களைப் படைத்திருக்க, இந்தியர்கள் மாத்திரம் அழைத்தால் அமெரிக்கா ஓடுவது, துரத்திவிட்டால் அழுவதும் வாடிக்கையாக நடந்துகொண்டிருக்கிறது.

இயல்பாக ஆங்கிலத்தில் உரையாட முடிவதை அறிவின் உச்சமாகக் கருதுபவர்களுக்கு, ஆங்கிலம் பேசத்தெரியாத சீனர்களும் ஜப்பானியர்களும் உடனடி அர்த்தம் கண்டுபிடிக்க கையில் எடுத்துச் செல்லத்தக்கதாக அவர்கள் சுயமாக வடிவமைத்துக் கொண்ட மொழிபெயர்ப்புக் கருவிகளின் உன்னதம் பிடிபடவில்லை.

இந்த நூற்றாண்டின் அறிவியல்/தொழில்நுட்ப அறிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. என்றாலும் இவர்கள் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கிறார்கள் என்ற அபத்தம் நம்மிடையே வேரூன்றியிருக்கிறது. சிந்தனையும், கருத்துப்பறிமாறலையும் அடையாளம்காண முடியாமைக்கு நம்மின் நூற்றாண்டு அடிமைத்தனம்தான் காரணம். ஒப்பற்ற அறிவியல் சிந்தனைகள் ஜெர்மன், ரஷ்யன், ஜப்பான், சீன, இன்னும் பல மொழிகளில் தோன்றியிருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அறிவியல் கருத்துக்களையும், தொழில்நுட்பத்தின் பெயர்களையும் தத்தம் மொழிகளில் கூடியவரை மொழிமாற்றித்தான் கற்றுக் கொள்கிறார்கள்/கொடுக்கிறார்கள். இந்தத் தெளிவு நமக்கு ஏற்படாதவரை நாம் மேய்ப்பவனின் பின் செல்லும் ஆடுகளாகத்தான் இருப்போம்.

:-:-:-:

வெங்கட்ரமணனின் வலைக்குறிப்பு

Series Navigation

வெங்கட்ரமணன்

வெங்கட்ரமணன்