உள்வெளிப்பயணங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ப.மதியழகன்,


வான்வெளியில் மேகங்களின்
அணிவகுப்பைப் போன்றது
மனதில் நினைவலைகள்
உற்றுப் பார்த்தால்
வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்
அம்முகில் கூட்டங்களில்

கடிவாளமில்லாத புரவியென
ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்
மானிடனை இழுத்துச் சென்று
சகதியில் அவனை விழவைத்து
சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்
மனப்பரப்பில் எரியும்
ஆசையெனும் வேள்வித்தீயில்
ஆகுதியாகும்
விட்டில் பூச்சியைப் போல்
மனித உடல்கள்

காலைக் கதிரொளி
பனிப்போர்வையை விலக்கியது
பறவைகள் ‘கீச்’சென்று சத்தமிட்டு
சிறகடித்துப் பறந்தன
மாலையில வாடிப்போய்விடுமோமென்று
வருத்தம் கொள்ளாமல்
மலர்கள் மலர்ந்து நின்றன
தென்றலின் பாடலை
மரங்கள் தலையசைத்து
ரசித்தன
தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை
வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண
கடலலை காத்திருந்தது
வைகறை மெளனத்தில் கீதம் பாட
தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது
கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல
தோகை விரித்தாடியது மயில்
வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக
தேனை சுவைத்தது போன்று
ரீங்காரமிட்டன
புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்
பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது

இன்றைய பொழுது
நமக்கு இறைவன் அளித்தது
இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது
மனித மனம் ஆதியிலிருந்தே அதனை
மறந்து வந்துள்ளது.

தொலைந்து போன நிழலைத் தேடி…

பால்யத்திலிருந்து
எனைத் தொடர்ந்து வந்த நிழல்
இன்று தொலைந்து போய்விட்டது!

எனது பாதத்தடங்கள்
கடந்துவந்த பாதையை உளவறிந்து
எங்கு போய்ச் சொன்னதோ?

உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட
ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்
நிழலின்றி இருக்கமுடியுமா?

மற்றவர்களின்
நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்
விசாரிக்கிறேன்
எனது நிழலின் நலத்தைப் பற்றி!

mathi2k9@gmail.com

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்