விதிகளின் மீறுகை

This entry is part of 45 in the series 20060120_Issue

சாரங்கா தயாநந்தன்


உயிரிலிருந்து ஊறி
ஒருவருக்காய் வழியும்
அன்பெல்லாம்
விழிகளிலே ஆரம்பிக்கிற
விதிமீறி
என்மன விழுகை
உன் கால்களில்
நிகழ்ந்தது.
முறித்து ஆடுகிற உன்
இசைப்பாதங்களில்
தெறித்து விழுந்தது என்மனம்
ஒரு தாளமாக.
பின்னொருநாள்
என் குரல் அழகில்
நீ இசைந்தாய்,
ஆடல் ஆடலையே
வாழ்வின் துணையாய்
விரும்பித் தேரும்
எனும் விதி மீறி.
‘ஏழு ஸ்வரங்களின்
ஆனந்தக் குதிப்பே
எதிர்கால வாழ்வு ‘ எனும்
கனவுத் தேக்கம் நமது.
புரியப்படாத வெளியில்
புரிதலின் நிழற்றல்
இருவர் நெருக்கமுறும் போது
இலகுவாய் நிகழும்
எனும் விதிகருதியும்
பல மகிழ்வுச்சங்களை
மனதிருத்தியும்
மணவாழ்வு நோக்கி நகர்ந்தோம்.
எனினும்
உனது இருப்பை
எனது நெற்றியில் நான்
வரையத் தொடங்கியதும்
ஆபரண வேலிகள் விரும்பாத
என் கழுத்தை நீ
மஞ்சள் கொடியாய்
சுற்றிக் கொண்டதுமான
பொழுதுகளின் ஆரம்பத்தில்
நாம் எண்ணி மகிழ்ந்திருந்த
புரிதல் விதியும் மீறப்பட்டிருந்தது
எம்மிருவர் மனங்களிலும்.
இப்போதும் கூட
எமது இசையும் நடனமும்
வியக்கப்படுகின்றன
பிற புருஷர்களாலும்
பிறன் மனைவிகளாலும்.
—-
nanthasaranga@gmail.com

Series Navigation