தமிழ் அமிலம்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

புதியமாதவி


மார்கழி மகளின்
மாக்கோலம்
பூசணிப் பூக்களின்
புன்னகை
இல்லாமல் போனதற்காய்
இரவுகள்
வாடுவதில்லை.

நடுங்கும் பனியில்
ஒதுங்கும் சாலையில்
வானத்தில் தொட்டில்கட்டி
வாகனத்திற்கு கைஅசைத்த
புன்னகையைக் காண்பேனா
ஏக்கத்திலேயே
என் இரவுகள்
கம்பளிப் போர்வையின்
கண்விழித்து
நடுங்கும்.

ஆலமர ஊஞ்சலேறி
ஆசைமகள்
ஆடலையே
வேலைதேடி
வந்தப்பின்னே
வேப்பமரம் காணலியே
இழந்துவிட்டேன் எத்தனயோ
ஏங்கவில்லை எம்மனசு..

புரியாத மொழிகள்
தெரியாத முகங்கள்
ஓடுகின்றேன் நெடுந்தூரம்
கேட்டது தமிழ்க்குரல்
‘அம்மா பிச்சை ‘
ஆதிமகளின் குரல்
‘தமிழ் அமுதாமே.. ‘
யார் சொன்னது ?
அமுத முட்டையில்
அமிலத்தின் வீச்சு!
எரிகின்றது தமிழ்முகம்
இழந்துவிட்டேன்
அத்தனையும்…!

————————————
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை