இலக்கியப் பற்றாக்குறை

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

அ.முத்துலிங்கம்


நான் கனடாவுக்கு வந்த புதிதில் என்னுடைய நாளாந்த தேகப்பியாசத்துக்கு பிரச்சனையே இல்லை. காலையும், மாலையும் மற்றும் வேளைகளிலும் தொலைக்காட்சியின் ரிமோட்டைத் தேடுவதிலேயே எனக்கு போதுமான தேகப்பியாசம் கிடைத்துவிடும். சிலவேளைகளில் இந்த ரிமோட் நிலவறையில் கிடைக்கும், சிலவேளைகளில் சமையலறையில், மற்றும் வேளைகளில் படுக்கை அறையில். ஒரு முறை தோட்டத்து பிளாஸ்டிக் இருக்கையில் கூட அகப்பட்டது. நான் கீழ்வீட்டுக்கும், மேல்வீட்டுக்கும், நிலவறைக்குமாக ஓடியாடி எப்படியோ இதைக் கண்டுபிடித்துவிடுவேன். அன்று காலை, அது சமையலறையில் பாத்திரம் கழுவியின் மேல் உட்கார்ந்திருந்தது. யோசித்துப் பார்த்தேன். இந்த தொலை இயக்கி வருவதற்கு முதல் வாழ்ந்த ஆதி மனிதர்கள் தங்கள் அன்றாட தேகப்பியாசத்துக்கு என்ன செய்திருப்பார்கள் ? புரியவில்லை. அதன் பெயரைப் பாருங்கள்,தொலை இயக்கி. அடிக்கடி தொலைந்து விடும் என்பதை எப்படியோ முன்கூட்டியே உணர்ந்து தொலை நோக்கோடு வைத்த பெயர்.

நான் பிறகு வியர்வையை துடைத்துக்கொண்டு ரிவியை போட்டேன். இருபது நிமிட படத்துக்கு 35 நிமிட நேரம் விளம்பரம் இருக்கவேண்டும் என்பது கனடிய அரசாங்கத்தின் ஆணை. ஆகவே நான் எப்ப ரிவியை இயக்கினாலும் ஒரு விளம்பரம்தான் முதலில் வரும். ஆனால் அன்று வந்த விளம்பரம் அற்புதமாக இருந்து நான் காலை அனுபவித்த இடர்களை எல்லாம் தூக்கி எறிந்தது.

உதாரணம், காலையில் கம்புயூட்டருடன் எனக்கு நடந்த சண்டை. ஒரு நாளைப்போல இல்லாமல் அன்று காலை கம்புயூட்டரை இயக்கிவிட்டு அதன் முழு உருவமும் இறங்கும்வரை காத்திருந்தபோது சிரித்தேன். என்னுடைய அம்மாவும், சோற்றுக் கஞ்சி வடிந்துமுடிய காத்திருக்கும்போது இப்படித்தான் சிரிப்பார்.

என்றும் இல்லாத திருநாளாக கம்புயூட்டர் ‘press any key when you are ready ‘ என்றது. நான் காலை ஐந்து மணியில் இருந்து ரெடியாகவே இருந்தேன். என்றாலும் கம்புயூட்டரின் வார்த்தைக்கு மறுப்பு காட்டாமல் வீட்டு சாவியை எடுத்து அமத்தினேன். ஒன்றும் நடக்கவில்லை. அறைச் சாவியை எடுத்து அமத்தினேன். பிறகு கார் சாவியையும் அமத்திப் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. ஏதோ பெரிய பிழை நடந்துவிட்டது. கம்புயூட்டர் செய்யும் பெரிய என்ஜினியர்கள் எந்தச் சாவி என்பதை விளக்கமாகச் சொல்லலாம் அல்லவா ?

Anyway, கதைக்கு வருவோம். தொலைக்காட்சியில் தெரிந்த விளம்பரம் இதுதான். முதலில் ஒரு வாசகம் வந்தது.

‘சில வேளைகளில் அதிசயமாக சொர்க்கம் கீழே விழுந்துவிடுவதுண்டு. ஆனால் அவை திருப்பி திருப்பி எங்கள் சுற்றுலாத் தளங்களில் விழுந்துவிடுவதுதான் இன்னும் அதிசயம். ‘

இதற்கு பிறகு சில சுற்றுலாத் தளங்களின் படங்களை காண்பித்தார்கள், அவ்வளவுதான். இந்த எழுத்துக்காகவே இந்த சுற்றுலாத் தளத்தைப் பார்க்கும் ஆசை எனக்கு எக்கச்சக்கமாக கூடியது.

தமிழ் ஊடகங்களில் கணக்கிலடங்காத விளம்பரங்கள் வருவதும், போவதுமாக இருக்கின்றன. அவற்றிலே சில கலைநயம் மிகுந்து காணப்படும்; இன்னும் சில வெறுப்பூட்டும். சமீபத்தில் ரேடியோவில் கீழே வரும் விளம்பரத்தை கேட்டேன்.

‘என்ன, உங்கடை தங்கச்சி வந்து அஞ்சு வருசம்தானே. அவ எவ்வளவு பெரிய வீடு வாங்கிவிட்டா. நீங்களும் இருக்கிறியள் இருபது வருசமாக, மூன்று வேலை செய்துகொண்டு. ‘ மனைவி தன் புருசனை இடித்துரைக்கிறாள்.

வீடு வாங்குவதற்கான விளம்பரம் இது. Advertisement in bad taste என்று சொல்வார்கள். தங்கையிடம் ஒரு நல்ல வீடு இருந்தால் சந்தோசப்பட அல்லவா வேண்டும். இது பொறாமையை தூண்டுவதற்கு கொடுத்த விளம்பரமா, அல்லது வீடு வாங்குவதற்கு செய்த விளம்பரமா ?

இவர்கள் ஒரு விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள். அதைக் கொஞ்சம் கலை நயத்துடன் செய்தால் பார்ப்பவருக்கு விருந்து; செய்பவருக்கும் ஆனந்தம் அல்லவா ? இலக்கியமாக எழுதுவதற்கு படிப்பு முக்கியமில்லை. நாலாம் வகுப்பு மட்டுமே படித்து கல்வியை முடித்துக்கொண்ட என் நண்பன் ஒருவன் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு அற்புதமான கவிதை வரிகளில் தன் காதலை சொல்லியிருக்கிறான்.

எங்கள் நாட்டு வருமானவரி அலுவலகம் அதன் சுறுசுறுப்புக்கு பேர்போனது. என்னுடன் படித்த பெண் ஒருவர் அங்கே அதிகாரியாக வேலையில் சேர்ந்திருந்தார். இந்த அலுவலகத்தில் எழுந்தமானத்துக்கு வரி தீட்டி அனுப்பிவிடுவார்கள்.

ஒருவர் தொழில் செய்து நசித்துப் போயிருந்தார். அவரிடம் எக்கச்சக்கமான வரி அறவிடப்பட்டிருந்தது. அவர் வரி refund க்கு விண்ணப்பித்து, தூக்குக்குத் தண்டனைக்காரர் தூக்கு மரம் ரெடியாகும் வரைக்கும் காத்திருப்பதுபோல காத்திருந்தார். அலுவலகத்துக்கு நடையாய் நடந்தார். சிலவேளைகளில் காலையிலும், மாலையிலும்கூட போனார். அவர் தரப்பில் நிறைய நியாயம் இருந்தது என்று அதிகாரிக்கு தெரியும்.

ஆனால் நடந்தது வேறு. அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தலைமை ஊழியர் என்று ஒருவர் இருப்பார். அவரை மீறி கோப்பு ஒரு இன்ச்கூட நகரமுடியாது. அவரோ தினமும் மேசையிலே தன் கறுப்பு தோல்பையை காவலுக்கு இருத்திவிட்டு, கன்டானிலும், கழிவு விற்பனைக் கடைகளிலும் நகர்ந்து கொண்டிருப்பார்.

ஒருநாள் இந்த வரி செலுத்துநர் நடந்துவரும்போது ரோட்டிலேயே விழுந்து இறந்துவிட்டார். அப்போது இந்தப் பெண் அதிகாரி கோப்பிலே ஒரு குறிப்பு எழுதி தலைமை ஊழியருக்கு அனுப்பிவைத்தார். ‘ வருமானவரி செலுத்துநர் உம்முடைய பதிலை எதிர்பார்த்து பார்த்து காத்திருந்தார். அப்படியே இறந்துபோனார். இனிமேலாவது வரி செலுத்துபவர் இறக்குமுன்பாக முடிவை அறிவித்தால் அது பெரிய உதவியாக இருக்கும். ‘ ஏதோ அவர் இறந்தது இவர் முடிவைக் கடத்தியதால்தான் என்ற பாவனையில் அந்தக் குறிப்பு அமைந்திருந்தது.

இதே மாதிரி சம்பவம் தமிழ் நாட்டிலும் நடந்தது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் வேலைபார்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருமுறை என்னிடம் கூறினார். முதலமைச்சருக்கு வேண்டிய ஒரு விவகாரம் முடிவுக்கு வராமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. அதிகாரிகள் இழுத்தடித்தார்கள். சம்பந்தப்பட்ட கோப்பு வளர்ந்து வளர்ந்து ஒரு பன்றிக்குட்டி சைஸுக்கு வந்துவிட்டது. கலைஞருக்கு எரிச்சல். கோப்பிலே இப்படி எழுதினாராம்.

‘மெத்தை அளவுக்கு கோப்பு

நத்தை அளவுக்கு ஊர்கிறது. ‘

அந்தக் கோபத்திலும் அவரிடம் கவிதை பிறந்திருக்கிறது, பாருங்கள். அதுதான் இலக்கியம் செய்யும் வேலை.

ஒருமுறை, 1997ம் வருடம் என்று நினைக்கிறேன், பொஸ்டனில் பெரும் புயல் அடித்தது. வெள்ளத்தாலும், காற்றாலும் வீடுகளுக்கு பலத்த சேதம். இந்தப் புயலிலே அகப்பட்டுக்கொண்ட என் நண்பர் இப்படி எனக்கு கடிதம் எழுதினார்.

‘இந்த முறை அடித்த புயல் காற்றினால் அதிர்ஷ்டவசமாக என் வீட்டுக்கு பலத்த சேதம் இல்லை. செங்குத்தான சுவர்கள் மாத்திரம் சிறிது சரிந்து விட்டன. சுவரில் தரை முட்டாதபடியால் தரை தப்பிவிட்டது. முழுக்கூரையும் பறந்துவிட்டதால் அதைப் பழுது பார்க்கும் செலவு $5000 மிச்சப்பட்டது. உண்மையைச் சொன்னால் நேற்று அடித்த புயலினால் நான் கொஞ்சம் லாபம் ஈட்டியது என்னவோ உண்மைதான். ‘

இது எப்படி இருக்கிறது. போகட்டும், பத்திரிகைகளில் ஆசிரியருக்கு வரும் கடிதங்களும் சில சுவையாக இருக்கும்.

‘அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜனாதிபதி புஷ்ஷின் சமீபத்திய பிரகடனம் மெச்சத்தக்கது. அயோவா மாகாணத்தில் மாட்டுச்சாணத்தில் இருந்து மின்சாரம் எடுப்பதற்கு 400 மில்லியன் டொலர் ஒதுக்கியிருக்கிறார். உண்மையில் இதை வாஷிங்டனில் செய்தால் இன்னும் மலிவாக இருக்கும். ஏனென்றால் அங்கேதான் மாட்டுச்சாணம் (bullshit) நிறையக் கிடைக்கிறது. ‘

நான் சூடானில் வேலை செய்தபோது அங்கே அதிகாரிகள் வருடாவருடம் தங்கள் ஊழியர்களின் வேலைத்தரம் பற்றி அந்தரங்கமான மதிப்புரை எழுதி அதை மேலாளர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இது நிறுவனத்தின் சட்டம். என்னுடன் பணியாற்றிய சகஅதிகாரியிடம் ஓர் ஊழியர் வேலை பார்த்தார். எந்த ஒரு எளிய காரியத்தைக் கொடுத்தாலும் தப்பு தப்பாக செய்து சிக்கலாக்கி மேலதிகாரிகளுக்கு இன்னும் வேலையை கூட்டுவார். அருமையான மனிதர், ஆனால் ஆண்டவன் அவரை கழுத்துக்கு மேலே விருத்தி செய்யவில்லை. இவருடைய நல்ல குணத்துக்காக ஒருவரும் இவரை வருட முடிவில் கண்டுகொள்வதில்லை. கடைசியில் ஒரு நாள் நண்பர், இனிமேலும் அவர் உபத்திரவத்தை தாங்க முடியாமல் வருடாந்திர மதிப்புரையில் ஒரேயொரு வசனம் எழுதினார். ‘எங்கோ ஒரு கிராமத்து முட்டாளின் தலைமைப் பதவிக்கு இந்த ஊழியரால் அச்சுறுத்தல் இருக்கிறது. ‘ அவ்வளவுதான். அந்த ஊழியருக்கு பிறகு என்ன நடந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒருநாள் உணவகத்தில் தனியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒருவர் உணவை முடித்துவிட்டு சோகமாக உட்கார்ந்திருந்தார். அவர் பிளேட்டைப் பார்த்தேன். மிச்ச எலும்புகளை ஒன்றன்மீது ஒன்றாக ஒரு கோபுரம்போல அடுக்கி வைத்திருந்தார். இவர் ஒரு கட்டடக் கலைஞர், அல்லது இடுகாட்டில் பெரிய அதிகாரி – இப்படி நினைத்துக்கொண்டேன்.

இந்த நாடுகளில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவசரமில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது. இருந்தாலும் அவருக்கு என்ன துக்கம் என்று விசாரித்தேன். ‘உயில் எழுதும் அவசியம் வந்துவிட்டது. எனக்கு கடன் எக்கச்சக்கம். கையிருப்பில் ஒன்றும் இல்லை. மீதியை ஏழைகளுக்கு பிரித்து தரவேண்டும் ‘ என்றார். இந்த மனிதருடைய முகம் வெகுகாலமாக என் மனதிலிருந்து மறையவில்லை.

தமிழ் விளம்பரங்கள் எல்லாமே மோசமானவை என்று நான் சொல்ல வரவில்லை. சில வேளைகளில் திடுக்கிடும் விதமான சுவையுடன் அவை அற்புதமாக அமைந்துவிடுவதும் உண்டு. உதாரணத்திற்கு கனடாவில் tvi நிறுவனம் நடத்தும் வயோதிபர்களுக்கான ஒரு நிகழ்ச்சியை சொல்லலாம். அதன் தலைப்பு ‘பழமுதிர்ச்சோலை ‘. பழங்கள் உதிர்வது என்ற கருத்தில் இல்லை; பழுத்த முதியவர்கள் உதிர்க்கும் நல்லுரைகள் என்று எடுக்க வேண்டும். என்ன நுட்பமான தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

மரணத்திலும் இலக்கியம் இருக்கிறது. கனடாவில் ஒரு மரண அறிவித்தலைக்கூட ரசனையுடன் செய்வார்கள். ‘மறுமை எய்தினார் ‘ என்பதுதான் வாசகம். எவ்வளவு அழகு. வின்ஸ்டன் சேர்ச்சில் மரணத்தறுவாயில் இருக்கும்போது கூறினார். ‘தேவனுடனான பெரும் சந்திப்புக்கு நான் தயார்; அவர் தயாரா என்பது நான் சொல்வதற்கில்லை. ‘ மார்க் ட்வெய்ன் சாவதற்கு முன்பாகவே சில ஆர்வமான பத்திரிகைகள் அவர் இறந்துவிட்டாரென்று செய்தி பரப்பிவிட்டன. மார்க் ட்வெய்ன் அறிவித்தார், ‘என்னுடைய மரணம் பற்றிய செய்திகள் மிகைபடுத்தப் பட்டிருக்கின்றன. ‘

ஆனால் கனடாவில் நான் பார்த்து மிகவும் ரசித்த விளம்பர வாசகம் என்றால் அது கீழே வருவதாகத்தான் இருக்கும். புதுமையும், இலக்கியமும் கலந்தது.

‘சனி இடப்பெயர்ச்சி. கேள்விப்பட்டிருப்பீர்கள். வியாழன் இடப்பெயர்ச்சி, வெள்ளி இடப்பெயர்ச்சி எல்லாம் உங்களுக்கு பரிச்சயம். நாங்கள் ஏழு நாட்களும் இடப்பெயர்ச்சி செய்வோம். கனடாவின் சிறந்த இடப்பெயர்ச்சிக்காரர்கள் – MOVERS – நாங்கள்தான். ‘

இப்பொழுது நானும் ஓர் இடப்பெயர்ச்சி செய்வதற்காக நிறுத்தவேண்டும். எனக்கு ஒரு வேலை இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் போய் கடைசி முயற்சியாக அவருடைய சாவியை வாங்கி அமத்திப் பார்ப்பேன்.

முற்றும்

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்