செந்தில்
ஆதர்ஷ் ராவ்

பந்தல் நட்டு
மைக்செட் கட்டி
போஸ்டர் ஒட்டி
சீரியல் லாம்ப் மாட்டி
சில்லறை சேர்த்து
பீடிக் கட்டோடு
படம் பார்ப்பான்
பத்துவயது செந்தில்
உயிர் உயிர்மெய்
எழுத்துகளில் தொடங்கும்
வசவுகள் வாயில்
சகஜமாய்ப் புழங்கும்
அன்பாய்க் கேட்டால்
முறைத்துப் பார்ப்பான்
தட்டிக் கேட்பின்
விரைந்து ஒளிவான்
காரணம் கேட்டால்
தந்தை என்பான்
மீண்டும் கேட்டால்
தாயைச் சொல்வான்
வயதேறி பதின்மூன்றில்
ப்ளாக் டிக்கெட்
விற்றான்; சகவாசம்
கொடுத்த தைரியத்தில்
நிழலான தொழிலுக்கு
முனைப்போடு ஆள்
சேர்த்தான்; நேற்று
இரவு குடித்த
விஷச்சாராயத்தால்
புள்ளிவிவரம் ஆனான்
itsaadharsh@hotmail.com