This entry is in the series 20030119_Issue

பவளமணி பிரகாசம்


புதிய தாள் ஒன்று கையிலே
பூரித்தெழும் வகையிலே-
புள்ளி வைத்து கோடிழுத்து,
கோலமொன்று போட்டிடவே,
வண்ணங்களை குழைத்தெடுத்து
கண்கவர் சித்திரம் வரைந்திடவே,
மின்னலாய் தோன்றும் கற்பனையை
பின்னலாய் கவிதையில் தொடுத்திடவே,
காலத்தால் அழியாத கருத்துக்களை
முத்தாய் கோர்த்து பதித்திடவே,
நலம் நாடும் நண்பர்க்கு
நன்மடல் ஒன்று வரைந்திடவே,
அரிதான தகவல்களை
அழகாக குறித்திடவே-
என்னென்ன செய்யலாம்!
எண்ணம் எல்லாம் செதுக்கலாம்!
புதிய நாள் ஒன்று இன்று என்பது
புதிய ஒளியுடன் புலர்ந்திருப்பது,
துளித்துளியாய் மணித்துளியை
திட்டமிட்டு நடத்திடவே,
நெடுநோக்குடன் சிந்தித்து
நேர்வழியில் நடந்திடவே,
மனம் சுணங்காமல், முகம் சுருங்காமல்
மகிழ்வாய், நிறைவாய் கடமையாற்றவே,
வருந்தும் உயிர்கட்கு விரும்பி மருந்திட்டு
விருந்தாய் சேவைதனை அருந்திடவே,
வெறுப்பானதையும், விடுபட்டதையும்
குறையின்றி முடித்திடவே,
சோதனைகளை சாதனைகளாக்கி
சோதனைக்கோர் சோதனையாகிடவே,
இன்று போல் நாளையும் இருக்க வேண்டுமென
இறைவனை வேண்டி இமை மூட வேண்டுமன்றோ!
***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation