இளைஞர் ஸ்டாலினின் கையில்?

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

ரவிகுமார் வீராசாமி


தி.மு.க இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, அதுவும் 25 ஆண்டுகள் கழித்து நெல்லை நகரமே திணறும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு உள்ளது. பலமுனைகளில் இருந்து பல(த்த) எதிர்பார்ப்புகள். ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்படுவாரா? கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த மாநாட்டை எப்படி கையாள்கிறார்கள் என பலவிதமான கண்(கள்)ணோட்டம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்காமல் “கமா” போட்டது போல் முதல்வரின் “காலம் நிறைய இருக்கிறது .. நீங்கள் எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்” என்ற சூசக பேச்சு. 25 ஆண்டுகள் அரசியல் அனுபவம், கட்சியின் முக்கிய பொறுப்புகள், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், போராட்டம், சிறை என அத்தனை அரசியல் அனுபவங்களும் நிறைந்த தலைவர்தான் (இளைஞர்?) இன்றைய ஸ்டாலின். தாத்தாவாகியும், இன்றும் இளமையுடன், தினமும் நடைப்பயிற்ச்சி உடற்பயிற்ச்சி என உடலை டிரிம்மாக (தொப்பையுடன் பெருத்த உடலை உடைய பல அரசியல்வாதிகள் மத்தியில்) வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வலம் வருபவர்தான் நம் ஸ்டாலின். அனத்து தகுதியும் வாய்ந்த ஒருவர் கட்சித் தலைமைக்கும், முதல்வர் பதவிக்கும் முற்றிலும் தகுதி பெற்ற ஒருவர் மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும், சொந்தங்களிடமிருந்தும் அங்கீகாரம் பெற நடத்தப்பட்ட பிரமாண்டமான கூ(த்து)ட்டம்தான் இந்த மாநாடு. இது தேவையா? இப்படித்தான் ஒருவர் தன் பலத்தை காண்பித்து அங்கீகாரம் பெற வேண்டுமா? இத்தனை தகுதி படைத்த இவருக்கே இத்தனை சிரமம் என்றால்? சாமான்யனுக்கு எப்படி?

வருடம் 2007-ல் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றம் கண்டுள்ள நாம், அரசியல் மாநாடு என்ற பெயரில், பத்து லட்சம் பேரை திரட்டி நடத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? மாநாடு காண வந்த அனைவரும் சொந்த வேலையை விட்டு வந்திருப்பார்கள். எவ்வளவு பொருளாதார நஷ்டம்? எத்தனை உற்பத்தி பாதிப்பு? அரசும், ஆளும் கட்சியும் இதை கொஞ்சமாவது யோசித்ததா? தங்களது சொந்த பலத்தைக் காண்பிக்க பொதுஜனத்தை சூரையாடும் இந்த கட்சி மாநாடுகளின் சூசகம் எத்தனை இளைஞர்களுக்கு புரியப் போகுது? சினிமாவில் ஹீரோ வந்தாலும், கட்சிக் கூட்டத்தில் தன் தலைவரை பார்த்தாலும் ஆனந்தக் கண்ணீர் விடும் எத்தனை அப்பாவி இளைஞர்கள். தன்னை அறியாமல் வாய் விட்டு தொண்டை கட்ட தலைவர் மேடை ஏறும் வரை கத்தும் கடைநிலை தொண்டன் எத்தனைப் பேர்? இவர்களுக்கு மாநாடு என்ற பெயரில் கழகங்கள் காட்டும் கண்(கட்டு)காட்சிதான் இந்த மாநாடு. இதை எல்லாம் கற்பனையாக நான் எழுதுவதாக நினக்க வேண்டாம். கரை வேட்டி மட்டும்தான் நான் கட்டியதில்லை. கலைஞர் சேலத்திற்கோ, ராசிபுரத்துக்கோ வந்த போது (எங்கள் ஊரில் இரவு பஸ் இல்லாததால், வாடகை கார் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் சென்று) மணிக்கணக்கில் காத்திருந்து தலைவரை பார்த்து கோசம் போட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட கழக கண்மணிதான் நானும். அது மட்டுமல்ல, தேர்தல் சமயங்களில் சூரியன் சின்னம் வரைந்த அனுபவும், பூத்துகளில் நின்று கொண்டு வாக்கு சேகரித்த அனுபவமும் நிறைய உண்டு. அனைத்தும் மாயை, ஏமாற்று வேலை என்று நன்கு புரிந்துதான் இதை எழுதுகிறேன்.

இந்த நிலை மாற வேண்டும், நான் சிறுவயதில் செய்த தவறுகளையே திரும்ப (இப்போது) செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை மாற்ற வேண்டும், சிந்திக்க செய்ய வேண்டும். இளைஞர்களும், மாணவர்களும் தேர்ந்த களிமண் போன்றவர்கள், அதை செம்மையாக, பதமாக வடிவெடுத்தால்தான் நல்ல பாத்திரம் கிடைக்கும்.

ஸ்டாலின் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என எனக்கு தெரியாது. அனைத்து தகுதியும் வாய்ந்த தாங்கள் முதல்வராக ஆக எந்த கேள்வியும், சந்தேகமும் இல்லை. அதே சமயத்தில்,

கழகங்களின் கண்ணாமூச்சிகளில் இருந்து இந்த இளைஞர்களை விடுத்து வேறு வழி நடத்த செல்ல முடியுமா?
மாநாடு, கட்சி என்று வேலைக்கு செல்லாமல் திரியும் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியுமா?
பேரணியில் நடந்து செல்ல தனிப்பயிற்ச்சி குடுக்கும் தங்கள் அமைப்பு அதை விட்டு தேர்ந்த விளையாட்டு துறையில் தனிப்பயிற்ச்சி குடுக்க முன் வருமா?
தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்தால் “பெப்பே …” மொழி தெரியாமல் விழி பிதுங்கும் இளைஞருக்கு பலமொழி கற்றுக் கொடுக்க உங்கள் ஆட்சி முன் வருமா?
இலவச மான்யம் என்ற பெயரில் வழங்கும் பிச்சையை நிறுத்தி நிரந்தர வருமானம் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க வருமா?
கட்சி மாநாடு, பொதுக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் சேர்க்காமல் (ஊடகங்கள் வழியாக) அவர்களை உங்களால் சென்று அடைய என்ன வழி என சிந்திப்பீரா?

……….இன்னும் பல கேள்விகள் இங்கு எழுப்பலாம். ஆனால், நான் கூற வந்ததின் அர்த்தத்தை சுருங்க சொல்லிவிட்டேன்.

மாநாட்டில், தங்கள் தலைவரும் தந்தையும் என்ன கூறினார்? தந்தை பெருமைபடும் வகையில் மகனாக, நல்ல தலைவனாக தாங்கள் இருப்பீர்கள் என நம்பிக்கை படக் கூறினார். அவர் எதை வைத்து கூறினார் என தெரியாது, ஆனால், இன்றைய இளைஞர்களை தங்களால் திருத்த முடியும், ஆரோக்கிய அரசியலை குடுக்க முடியும், ஒரு புதுமை “புரட்சியை” உருவாக்கி தங்கள் பெயருக்கேற்ப சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும், அதைத்தான் நான் (எனைப் போன்ற) மற்றவரும் விரும்புவர்.

பதில் உங்கள் கையிலல்ல, “செயலில்” ……..


rush2ravikumar@yahoo.com

Series Navigation

ரவிகுமார் வீராசாமி

ரவிகுமார் வீராசாமி