கல்லூரிக் காலம் – 8 -சைட்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

நம்பி


‘மாவு பணியாரம் ‘ சீனிவாசன் ஒரு ‘டைப்பான ‘ பயல். எல்லாரும் ‘சைட் ‘ அடிக்க அலையுறப்ப ‘சைட் ‘ கொடுக்குறதுக்காகவே போவான். பூப்போட்ட சட்டை போட்டுக்குவான். கருப்புக் கண்ணாடி. பொம்புள புள்ளங்க கூடுற இடத்துல தனியா நின்னுக்குவான். கைய கட்டிகிட்டு மேகத்த பார்ப்பான். பக்கவாட்டுல திரும்பி நின்னு சிரிச்சுக்குவான். எட்டி நின்னு பாக்குறப்போ விளம்பரத்துக்கு படம் எடுக்குறாங்களோன்னு தோணும். அவனுக்கு நுனிநாக்குல சரஸ்வதி ஜீன்ஸ் போட்டுகிட்டு டிஸ்கோ ஆடுவா. பய பாரதீய லண்டன் பார்ட்டி. யாரையும் வாடா போடான்னு சொல்லமாட்டான். வாய்யா போய்யாதான்.

ஒரு நாள் முழு அலங்காரத்தோட சைட் கொடுக்க கிளம்பி வெளியில வந்தான். எதுக்க வந்த ‘தேவாங்கு ‘ ராஜசேகரப் பார்த்து, ‘ என்னய்யா, நான் இன்னிக்கு அமிதாப் மாதிரி இருக்கனா ?. உயரந்தான் கொஞ்சம் கம்மி ‘ன்னான்.

‘ மச்சி, என்ன பேச்சு பேசுற. அமிதாப்புதாண்டா உன்னய மாதிரி. உன்னோட அளவுக்கு நீ கொள்ளங்காளி கோயில்ல நின்னு சைட் கொடுக்குறது கேவலம். நம்ம கல்லூரி பொண்ணுங்க ரசன கெட்டவளுங்க. நீ கொப்புடையம்மன் கோயில்ல போயி நின்னா ஆட்டோகிராஃப் அள்ளிகிட்டு போவும். வெள்ளிக்கிழமை சாயங்காலாமா நான் கூட்டிகிட்டு போறேன் ‘ன்னான் தேவாங்கு.

நம்மள புரிஞ்சவன் தேவாங்குதான்னு அவங்கிட்ட நெருக்கமாயிட்டான். வெள்ளிக்கிழமை கொப்புடையம்மன் கோவிலுக்கு போனானுவ. மாவு பணியாரத்த ஒரு மூலையில நிக்க வச்சி சைட் கொடுக்க சொல்லிட்டு, அஞ்சு ரூவா கடத்திகிட்டு அண்ணபூர்னாவுக்கு போனான் தேவாங்கு. குண்டான் நிறைய சாம்பாரும், தேங்காச் சட்னியும் வாங்கிகிட்டு தொட்டுக்க ரெண்டு இட்டிலிய வெட்டிட்டு வெளில வந்து தம் போட்டுட்டு நிதானமா வந்தான். அதுக்குள்ள அந்த இடத்துல கொஞ்சம் சலசலப்பு ஆகியிருந்தது. கொஞ்சம் நேரம் போனா தொந்தரவு வழக்குல உள்ள தாள்ளிடுவாங்களோன்னு பயம் வந்திடுச்சு. இது எதையும் கண்டுக்காம பல பாவனையில சைட் கொடுக்குறான் மாவு பணியாரம்.

‘ மச்சி, கிளம்புடா. அடுத்த வாரம் வரலாம் ‘.

‘ என்னய்யா அதுக்குள்ள. இன்னும் கொஞ்சம் நேரம் சைட் கொடுக்கலாமே. பாவம் எல்லாம் காஞ்சி போயி இருக்குதுங்க ‘

‘ வேணாண்டா. அதிகமா ஆசைப்படதே ‘ன்னு நகர்த்திகிட்டு வந்துட்டான்.

இப்படி நட்பு நெருக்கமாகி, தேவாங்கு பின்னாலயே அலைய ஆரம்பிச்சுட்டான் மாவுபணியாரம். BLPஆளு இப்படி தேவாங்கு பின்னால அலையுறத பாக்குற பயலுவ, ‘ நடத்து மச்சி. அப்படியே எங்களயும் கண்டுக்க ‘ன்னு ஓட்டுவானுவ. நாலு வாரத்திலேயே வெள்ளிக்கிழமையானா பீர், பிரியாணி, படம்னு ரகளகட்ட ஆரம்பிச்சிடிச்சு தேவாங்கு வாழ்க்கையில. அவனும் ஓடுற வரைக்கும் ஓட்டுவோம்னு மாவுபணியாரத்துக்கு சைட் கொடுக்க பல இடங்களுக்கு கூட்டிகிட்டு போனான். ஒரு நாள் பள்ளத்தூர் மகளிர் கல்லூரிக்கு போகலாம்னு சொல்லி வச்சிருந்தான்.

அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலமா கொப்புடையம்மன் கோயிலுக்கு சைட் கொடுக்க கிளம்பினான் மாவுபணியாரம். பூப்போட்ட சட்டையில கொஞ்சம் சுருக்கம் இருந்தது புள்ளங்க மனச சங்கடபடுத்துமோன்னு நினைச்சான். தேவாங்கு, ‘ கட்டில், மேஜையில வச்சு அயர்ன் செஞ்சா இப்படித்தான் ஏறுமாறா இருக்கும். நீ அடுத்த தடவ ‘அயர்ன்போர்டு ‘ ஜெயந்திகிட்ட கேட்டு பாரு ‘ன்னான். அவ அப்பா நீதிபதியாச்சே, சலவைக் கடைகூடவா வச்சிருக்காருன்னு சந்தேகம்.

சைட் கொடுத்து முடிஞ்சி, ஆளுக்கொரு பீர் போட்டுட்டு பலான படம் பார்த்துட்டு விடுதி மொட்ட மாடில படுத்துட்டானுவ. மாவுபணியாரம் நாலு வாரத்துல கல்யாணிக்கும், கிங் ஃபிஷ்ருக்கும் வித்தியாசம் தெரியுற அளவு தேறிட்டான். ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ்ன்னு இருந்தவன் சொப்ன சுந்தரி, அவளோட ராவுகள்னு அலைய ஆரம்பிச்சுட்டான்.

திடார்னு நடு ராத்திரில மொட்ட மாடில தடமுடான்னு சத்தம். அடிச்சிபுடிச்சி போனா நகக் கீறல். ரத்தம் வழியுது மாவு பணியாரத்துக்கும், தேவாங்குக்கும்.

தேவாங்கு, ‘ கம்முனாட்டி, படம்பார்த்த சூட்டுல கட்டி புடிக்கிறான்டா. மப்பு வேற ‘.

இதப்பார்த்த பயலுவ, ‘ அப்ப இத்தினி நாளும் பீருக்காகத்தான் அவன வச்சிருந்தியா ‘ன்னு கேட்டானுவ.

மாவுபணியாரத்துகிட்ட, ‘ கவலைய விடு மச்சி. நான் இருக்கேன். தினம் ஒரு பீருக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிடு ‘ன்னான் ‘அழுக்கு மூட்டை ‘ தனபால். அவன் பசுவுக்கு பாவடை கட்டுனாலே பார்த்து பூத்து போவான்.

மாவுபணியாரம் ஏதும் பேசல. அன்னிலேர்ந்து சைட் கொடுக்குறதயும் நிறுத்திட்டான்.

* * *

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி