அறிவுக்கே போடப்படும் முக்காடு

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

கவிஞர் அடோனிஸ் (தமிழில்: ஆசாரகீனன்)


[தன் அரசியல் சட்ட அமைப்பின் மையமாக இருக்கும் மதச் சார்பின்மை குறித்து மறுபரிசீலனை செய்யும் பொருட்டு சில ஆயத்தங்களை பிரான்ஸ் நாடு முன்வைத்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் போன்ற பொது நிறுவனங்களில் முக்காடு அணிவது பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இது பற்றி அரபு உலகின் தலையாய கவிஞர்களுள் ஒருவரான, அடோனிஸ் என்ற பெயரில் எழுதும் ‘அலி அஹ்மத் சையத் ‘-தின் குறிப்புகள்]

அடிப்படைவாதிகள் நம்மை நம்ப வைக்க விரும்புவது போல, குரானிலோ அல்லது ஹதிஸிலோ முஸ்லிம் பெண்களுக்கு முக்காடு தேவையென விதிக்கும்படியாகத் தெளிவான ஒரு வரி கூட கிடையாது. அத்தகைய கருத்து, நூல்களை மாற்றிப் படித்துத் (தவறாகப்) புரிந்து கொள்வதின் அடிப்படையில் எழுவது. இந்த நிலையில், வெறும் ‘மாற்று வாசிப்பு ‘ மட்டுமே, மறுக்கப்பட முடியாத அடிப்படைக் கருத்தாகவும் எல்லாக் காலத்துக்குமான சட்டமாகவோ இம் மதத்தில் மாறிவிடும் அளவு தாக்கம் கொண்டதென நாம் எப்படி ஏற்கமுடியும் ?

முக்காடு என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. [தாமாகத்] தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர் தங்களது விளக்கங்களை எந்த உரிமை அல்லது அதிகாரத்தின் அடிப்படையில் மற்றவர்களிடம் திணிக்க முடிகிறது ? பெண்களுக்கு எதிராகவும், தம்முடைய கருத்துடன் மாறுபடுபவர்கள் அனைவருக்கும் எதிராகவும், இந்த உலகத்துக்கு எதிராகவும் வன்முறையைப் பயன்படுத்தும் அளவுக்கு இந்த சிலர் போகக் கூடியவர்களா ? முக்காடு என்னும் இப் பிரச்சினைக்கு முஸ்லிம் சமுதாயங்களில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது, மரபுகள் வழி ஒழுகும் அந்த பெரும் உலகில் இன்றும் உயிருள்ளதாக இருக்கிறது.

அடிப்படைவாத முஸ்லிம்கள், இந்தப் பிரச்சினையையும் [இச் சமுகத்தின்] வேறு உள் பிரச்சினைகளையும் மேற்கத்திய சமுதாயங்களுக்குள் இறக்குமதி செய்யும்போது, தமது சொந்த சமூகத்துக்கே இன்னல்களை உருவாக்குவதோடு, மனிதர் மற்றும் உலகைப் பற்றிய இஸ்லாத்தின் தொலைநோக்கைச் சீர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கி விடுகிறார்கள். புலம் பெயர்ந்த முஸ்லிம்கள், குறிப்பாக தாம் வாழும் நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள், தனிப்பட்ட வாழ்க்கைக்கும், பொது வாழ்க்கைக்கும் இடையிலான துல்லியமான வேறுபாடுகளை ஒப்புக் கொள்ளவதும், கடைபிடிப்பதும் அவசியம்.

முக்காட்டை வலியுறுத்தும் முஸ்லிம்கள், தங்களுடைய பிடிவாதம், எந்த மக்களோடு ஒரு நாட்டில் சேர்ந்து வாழ்கிறார்களோ அம் மக்களின் உணர்வுகளையும் மதிப்பீடுகளையும் மதிப்பதில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது என்பதையும், அந்த சமூகத்தின் நம்பிக்கைகளை கேள்விக்கு உரியவையாக ஆக்குகிறார்கள் என்பதையும், அம் மக்கள் பல காலம் போராடிப் பெற்ற சட்டங்களையும், உரிமைகளையும் இளப்பமாக்குகிறார்கள் என்பதையும், தங்களை வரவேற்று வேலையும், சுதந்திரமும் கொடுத்த அந்த குடியாட்சி ஜனநாயகத்தின் கோட்பாடுகளையே மறுக்கிறார்கள் என்பதையும் உணர வேண்டும்.

சிலர், மேலை நாடுகளில் இருக்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே முக்காடு அணிகிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லுவதற்கு ஒரு வேளை வாய்ப்புகள் இருக்கக் கூடும். ஆனால், உதாரணமாக, பாரிஸ் நகர வீதிகளில் நான்கு வயதேயான சிறுமியரை முக்காட்டோடு பார்க்கும் போது, இதை அச் சிறுமியர் தானாகவே முன்வந்து இப்படிச் செய்வதாக யாராவது உறுதியாகச் சொல்லத் துணிவரா ?

இதை விடத் தீவிரமான ஒன்று: மேலை நாடுகளில் குடியேறி இருக்கும் அடிப்படைவாத முஸ்லிம்கள், தங்களது புதிய தாயகத்தின் சுதந்திர வெளியைத் தங்களது குறுகிய மனப்பான்மையையும், தனிமைப் படுத்திக் கொள்ளும் போக்கையும் பறைசாற்றிக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக ஏன் பார்க்க வேண்டும் ? அவர்கள் வந்து சேர்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒரு முறை ‘புலம் பெயர ‘ ஏன் விரும்ப வேண்டும் ? இந் நாடுகளில் இவர்கள் இருக்க முடிவதே, வரவேற்று இடமளிக்கும் அச் சமூகங்களின் திறந்த மனப்பான்மையினால் தானே.

முக்காடு அணிந்து கொண்டோ அல்லது தாடி வைத்துக் கொண்டோ இவர்கள் அணி வகுத்துச் சென்று தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் போது, இஸ்லாத்தை அதன் வடிவம் பற்றிய மேம்போக்கான கேள்விகளுக்குள் குறுக்கி விடுகிறார்கள்: வெற்று கோஷங்களையும், சடங்குகளையும் மட்டுமே உலகின் பார்வைக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள். முக்காட்டை கட்டாயமாக்க வலியுறுத்துபவர்கள், மேலை நாடுகளில் மட்டுமல்ல, அரபு நாடுகளிலும் கூட ஒரு சிறுபான்மையினரே. ஒருக்கால் முக்காடு அணிவது மக்களின் தீர்ப்புக்கு விடப்பட்டால் அது உடனடியாகக் கைவிடப்படும்.

தீவிரமான இச் சிறுபான்மையினர், மக்களாட்சியையும் அதன் அடிப்படைக் கருத்துகளையும் மதிப்பதற்குப் பதிலாக, இந்த லட்சியங்களைக் கவிழ்க்க முயல்வதோடு, தமது தீவிர நம்பிக்கைகளைப் பிறர் மீது திணிக்கவும் முயல்கிறார்கள். இத்தகைய ஒரு நிலைப்பாடு எந்த அளவுக்கு ஆதரிக்கப்படக் கூடியது, இஸ்லாத்தின் லட்சியங்களுக்கு எவ்வளவு உதவுக் கூடியது அல்லது எந்த அளவுக்கு நியாயமான எதிர் வினை என்பது எனக்குச் சற்றும் விளங்கவில்லை.

இத்தகைய அடிப்படைவாத நிலைபாட்டைக் கூர்ந்து நோக்கும் எவரும், இதன் ஆதரவாளர்களை மதப் பற்றுடையவர்களாகவோ, இறையுணர்வு உள்ளவர்களாகவோ கருத முடியாது. இவர்கள், ஓர் அரசியல் குறிக்கோளை அடையப் புறப்பட்டுள்ள அரசியல்வாதிகள், அவ்வளவே. முஸ்லிம்களும் மேலை நாட்டினரும் பின் வரும் அடிப்படையிலேயே இவர்களைக் கையாள வேண்டும்: இவர்கள் ஒரு கட்சியின் பிரதிநிதிகளே, ஒரு மதத்தின் பிரதிநிதிகள் அல்ல.

ஒரு முஸ்லிம் தன் மாறுபட்ட தன்மையை உறுதியாக வெளிப்படுத்துவதற்கு உகந்த இடம் மசூதி மட்டுமே. மேலை நாடுகளில் தன்னுடைய மத அடையாளத்தை ஒருவர் சுதந்திரமாக வெளிப்படுத்த இதுதான் ஒரு பொருத்தமான இடம். இப்படி ஒரு நிலைதான் அரபு நாடுகளிலும் ஏற்பட்டிருக்க வேண்டும். மசூதிக்கு வெளியே கடைபிடிக்கப்படும் அனைத்து சமுக மற்றும் வெளிப்படையான பழக்க வழக்கங்களும், வரவேற்று வாழ விட்டிருக்கும் சமூகத்தின் விழுமியங்களுக்கு விடப்படும் ஒரு சவாலே.

பொது நிறுவன அமைப்புகள் எல்லா குடிமக்களுக்கும் சொந்தமானவை: குறிப்பாக, பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் அனைவருக்கும் திறந்து இருப்பவை. இந்த இடங்களில் வெளிப்படையாகக் குறிப்பிட்ட மதக் குழுக்களை வேறு படுத்திக் காட்டும் எந்த ஓர் அடையாளமும் தவிர்க்கப் பட வேண்டும். இத்தகைய பொதுவான இடங்களின் பட்டியலில் தெருக்கள், உணவு விடுதிகள், கூட்டங்களுக்கான அவைகள், திரைப்பட அரங்கங்கள், மாநாட்டு அறைகள் போன்றவையும் அடங்கும்.

மத அடையாளங்களையும் சின்னங்களையும் இத்தகைய இடங்களில் அணிவது அவற்றின் உள்ளடக்கத்தையும், இயக்க நியதியையுமே மீறுவதாகும். உண்மையில், பிரிந்து நிற்கும் அவாவின் வெளிப்பாடே இது: ஒருமைப்பாட்டை நாம் மறுக்கிறோம் என்பதே இதன் பொருள். வெளிப்படையாக வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை வலியுறுத்தும் இத்தகைய நாடகத்தன்மைக்கும் விளம்பரத் தேட்டை உடைய போக்குக்கும், மதத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

மத அனுபவத்தின் இதயமாக இருப்பது ஒரு நெருக்கமான உணர்தல், அனேகமாக ஒரு ரகசியம் போன்ற நிலை. புறத் தோற்றங்களை முக்கியமாகக் கருதும் ஒரு குறும் குழுப் பார்வையிலிருந்து மிகவும் விலகிப் போய், எளிமை, தன்னடக்கம், மெளனம், மற்றும் உள் நோக்கிய கவனிப்பு (தியான நிலை) ஆகியவற்றால் நிரம்பி ஊறிய நிலை அது. சில அப்பாஸித் கலிஃபாக்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் அவர்களைப் பிரித்து அடையாளம் காட்டும் புறச் சின்னங்களை அணிய வேண்டும் என்று ஆணையிட்ட போது, அந்த நாடு முழுவதும் கலக எதிர்ப்பு எழுந்தது. அந்த எதிர்ப்பு கிலேசத்தின், பின் வாங்குதலின் அறிகுறி.

சமூகத்தின் முன்னேற்றம்தான் இத்தகைய நடவடிக்கைகளை ரத்து செய்யக் கூடியது. மேலை நாடுகளைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் இத்தகைய மாறுபடுத்திக் காட்டும் சின்னங்களை வலியுறுத்துவது விசித்திரமானதும் புரிந்து கொள்ளப்பட முடியாத புதிரும் ஆகும். இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம், அவர்கள் தமது வரலாற்றை இழிவு படுத்திக் கொள்கிறார்கள், தமது பண்பாட்டையும், உலகில் தமது இருப்பையுமே கண்டனத்துக்கு உட்படுத்துகின்றனர்.

இந்த முக்காடு விவகாரத்தைக் கூர்ந்து நோக்குவோமானால், இது மற்றவரின் சட்டம், பண்பாடு ஆகியவற்றை சாதாரணமாக அத்து மீறுவது என்பது மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக, இது தன்னைத் தானே அவமதித்துக் கொள்வது என்றும் புரியும். இது வாழ்வுடன் ஒரு வேறுபட்ட உறவு கொள்வது, மேலும் சாவோடு சரசமாடுவதைப் போன்றதே.

முடிவாக, நான் சொல்ல விரும்புவது, பல காலமாக மதமும் அரசும் பிரிக்கப்பட்டு, பால்-சமத்துவம் உறுதியாக நிறுவப் பட்டிருக்கும் மதசார்பற்ற நாடுகளில், மத விளக்கங்களைப் பயன்படுத்தி முஸ்லிம் பெண்களை முக்காடு அணியச் சொல்லி வற்புறுத்தும் போக்கு, பெண்களுக்கு முக்காடு போட விரும்பும் மனப்பாங்கோடு நிற்காமல், ஆண்கள், சமுகம், ஒட்டு மொத்த வாழ்க்கை ஆகிய அனைத்திற்கும் திரை போட்டு மூடவே விரும்புகிறது – அதாவது சிந்தனைத் திறனுடைய கண்கள் மீதே கூட முக்காட்டை இழுத்து மூட முயல்கிறது.

நன்றி: www.indexonline.org

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்