வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

மத்தளராயன்


சதா மழை பெய்யும் யார்க்ஷயரை விட்டு ஊரைப் பார்க்கக் கிளம்பலாம் என்று முடிவெடுத்த அடுத்த நாள் பயணம் வைக்க வேண்டிப் போனது.

வழக்கம்போல் மேன்செஸ்டரில் இருந்து கிளம்பி நடுவில் துபையில் பத்து நிமிடம் தங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டு எட்டு மணி நேரத்தில் சென்னையை எட்டிப் பார்க்காமல், தலையைச் சுற்றிக் கொண்டு மூக்கைத் தொட்டேன்.

அதாவது மான்செஸ்டர் – லண்டன் – மாலத்தீவு – கொழும்பு – சென்னை.

கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரப் பயணம். நடுவில் அங்கங்கே சிறிது இளைப்பாறுங்கள் – ஒரு (ஒண்ணு என்ன, ஒன்பது பெட்டி) சார்மினார் பற்ற வையுங்கள் என்பது போல் மணிக்கணக்காகக் காத்திருத்தல்.

எலிசபெத் மகாராணியின் விசுவாசம் மிக்கத் தாற்காலிகக் குடிமகனாக வரி கட்டிய (VAT) தொகையை ஹீத்ரு விமானத் தளத்தில் படிவம் பூர்த்தி செய்து கொடுத்து வாங்கும்போது அங்கே இருந்த துரைசானி முத்திரை குத்தி, முகத்தில் புன்முறுவலும், கையில் அறுபது பவுண்டுமாகச் சொன்னது :

இந்தியர்கள் காசின் அருமை தெரிந்தவர்கள். ஒரு பென்ஸ் பாக்கி இருந்தால் கூடக் கேட்டு வாங்கிப் போய்விடுவார்கள்.

பின்னே சும்மாவா ? அவள் கொடுத்த அறுபது பவுண்டுக்கு அகிரா குரசோவாவின் படங்களின் குறுந்தகடு மூன்று வாங்க முடிந்தது.

மன்னர், மன்னி, டோனி ப்ளேர், கார்டன் ப்ரவுன், ஜியார்ஜ் காலவே, ராபின் குக், இயன் டங்கன் ஸ்மித் எல்லோரும் வாழ்க.

———————————————————

கொஞ்சம் காலை அகல வைத்து நடந்தாலே கடலில் பாதம் நனையும் மாலத்தீவில் எப்படி விமானத்தை இறக்கி ஏற்றிப் போக்குவரத்துக்கு வழி செய்கிறார்கள் என்று புரியவில்லை.

இலங்கை விமானத்தில் தட்டுத் தடுமாறிக் சிங்கள உச்சரிப்பில் ஈழத் தமிழ் பேசி அறிவிப்பு – உங்கள் ஆசனப் பட்டியைக் கட்டிக் கொள்ளுங்கள்.

கழிப்பறையில் தமிழ் மணக்கிறது – ‘இந்தக் களிப்பறையைச் சுத்தமாக வைத்திருங்கள் ‘. (ஆமாம், களிப்பறை தான்).

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான உபசரிணிப் பெண்களுக்கு எல்லா சவுகரியங்களும் செய்து கொடுத்திருக்கிறது என்றாலும் அவர்களுக்கு மேல் உடுப்புத் தரும்போது மட்டும் கையைப் பின்னால் இழுத்துக் கொண்ட காரணம் எதுவென்று அர்த்தமாகவில்லை. கிட்டத்தட்ட முழு முதுகும் தெரிய அந்த ரவிக்கையை எப்படி உடுத்திக் கொண்டார்கள் ? ஏன் உடுத்திக் கொண்டார்கள் ?

—————————————————–

வெய்யில் தலையைப் பிளக்கும் உச்சிப் பொழுதில் கொழும்பு பண்டாரநாயக்கே விமான நிலையம்.

மதுரை விமான நிலையத்தில் கூட இன்னும் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.

ஏழெட்டுக் கடை. என்னைப் போல் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து கொண்டு பத்துப் பேர். அதில் இரண்டு பேர் சிங்கப்பூரில் இருந்து வந்து இறங்கி சார்ஸ் பயத்தில் முகமூடி போட்டு உலவிக் கொண்டிருந்தார்கள்.

முகமூடி போடாமலே பண்டாரநாயக்கே விமானதளத்தில் குளிர்பானம் விற்கிற கடையில் கொள்ளை அடிக்கிறார்கள். ஒரு தகர டப்பா கழிச்சலில் போகிற பன்னாட்டு நிறுவனம் உண்டாக்கிய அதியற்புதமான கருப்பு வஸ்து – விலை ஒரு பிரிட்டிஷ் பவுண்டாம். தாகத்துக்கு வேறு தண்ணீர் அகப்படாமல் அந்த இழவைத்தான் குடிக்க வேண்டி வந்தது.

தொலைபேசி சேவைக்கான கடையில் தமிழில் அறிவிப்புப் பலகை – ‘இங்கே தொழைதூர அழைப்பு வசதி உண்டு ‘ (களிப்பறைக்குச் சரியான போட்டி).

——————————————————

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது கத்தரி வெய்யிலும் அப்புறம் வாஜ்பாயும் வந்து சேர்ந்திருந்தார்கள்.

விமான நிலையத்தில் புதுக்கிய டெர்மினலுக்குப் பெயர் வைப்பதில் பிரச்சனை என்று கேள்விப்பட்டேன்.

பேசாமல், நாமகரணம் செய்ய ஆராய்ச்சி எல்லாம் செய்து பொருத்தமான பெயரைக் கண்டுபிடித்துத் தரும் பிரிட்டிஷ் நிறுவனங்களிடம் இந்த விவகாரத்தை விட்டிருக்கலாம்.

ஒரு முப்பதாயிரம் பவுண்ட் கட்டணம் வசூலித்து விட்டு, ஒரு மாதம் ராப்பகலாக மாய்ந்து மாய்ந்து மண்டையைக் குடைந்து ஆராய்ச்சி நடத்தி, யார்க்ஷயரில் பிராட்ஃபோர்ட் நகரத்தில் அமையும் பல்கலைக் கழகத்துக்குப் பெயர் வைக்க அறிக்கை சமர்ப்பித்தார்கள் இப்படி ஒரு நிறுவனத்தினர்.

ஒன்றல்ல, மொத்தம் மூன்று பெயர்களைச் சிபாரிசு செய்திருக்கிறார்கள். அவை – 1) பிராட்ஃபோர்ட் யூனிவர்சிற்றி 2) தி பிராட்ஃபோர்ட் யூனிவர்சிற்றி 3) யூனிவர்சிற்றி ஓஃப் ப்ராட்ஃபோர்ட்.

மத்தளராயன்

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்