சில நிகழ்வுகள், சில பார்வைகள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

வெளி ரெங்கராஜன்


(ஓடும் ரயிலிலும், மதுபான வளாகத்திலும் நடந்த சில இலக்கியச் சந்திப்புகள் பற்றி வணிகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஆதாரமாக வைத்து குடியும், கூத்துமாக சிற்றிலக்கிய வட்டாரம் ஏன் இவ்வளவு ஒழுங்கீனமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்து இந்தியா டுடே(மார்ச் 26, 2003) இலக்கியப் பேட்டையில் கலாட்டா என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் தொனிக்கும், அணுகுமுறைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ் படைப்பாளிகள் 26 பேர் ஒரு கண்டனக் கடிதத்தை இந்தியா டுடே தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் ஆசிரியப் பொறுப்பில் இருப்பவர் அந்தக் கட்டுரையின் தவறான தகவல்களுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர். அதுவரை அந்தப் பத்திரிகையில் எழுதப்போவதில்லை என்பதையும் தெரிவித்தனர். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு இலக்கிய கூட்டத்தில் எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்னன் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. எழுத்தாளர்கள் மீதான இவ்வாறான தொடர்ந்த வன்முறை குறித்து எழுத்தாள நண்பர்களால் ஒரு சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியில் குறிப்பிட்ட அந்த இலக்கிய சந்திப்புகளில் பங்கேற்ற வெளி ரெங்கராஜன் பன்முகம் (ஏப்ரல் – ஜஉன் 2003) இலக்கிய இதழில் எழுதிய ஒரு கட்டுரை.)

அண்மையில் சென்னையில் ஓடும் ரயிலில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா பற்றியும், மது பானக்கடை வளாகத்தில் நடைபெற்ற பிரமிள் இலக்கியம் குறித்த கூட்டம் பற்றியும் சில பத்திரிகைகள் தங்கள் சுவைக்கேற்றபடி செய்திகளை வெளியிட்டன. இந்தியா டுடே பத்திரிகை ஒருபடி மேலே போய் சிற்றிலக்கிய வட்டாரம் ஏன் இவ்வளவு ஒழுங்கீனமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டது (மார்ச் 26, 2003). சில இலக்கியக் காவலர்களும், தங்களுடைய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் இந்த ஒழுங்கீனர்களை அடித்து நொறுக்கி இலக்கியப் புனிதத்தை காப்பாற்ற முனைந்தார்கள். ஆனால் இந்தப் பத்திரிகைகளில் எழுதியவர்களோ கருத்து தெரிவித்தவர்களோ இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களோ, நேரில் பார்த்தவர்களோ அல்ல. தங்களுடைய தவறான கற்பிதங்களுக்கு முகாந்திரமாக வணிகப் பத்திரிகைகளில் இந்த நிகழ்வுகள் பற்றி வெளியான திரிபுச் செய்திகளை பயன்படுத்திக் கொண்டவர்கள். இந்த நிகழ்வுகளின் பின்புலத்தில் செயல்படும் மனநிலைகளைப் பரிசீலிக்கும் அக்கறை அற்றவர்கள். இந்த நிகழ்வுகளில் பங்கேற்று அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவன் என்கிற முறையில் இந்த வெளிப்பாடுகளில் மறைக்கப்பட்ட சில பார்வைகளை முன் வைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்ச் சூழலில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகளால் வெவ்வேறு வடிவங்களில் இலக்கிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூடிய அறைகளின் இறுக்கங்களை கடந்து அதிகபட்ச சுதந்திரத்தையும், நெருக்கத்தையும் வேண்டி பல சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளை நாட வேண்டியிருக்கிறது. இந்த சந்திப்புகள் எல்லாம் மிகவும் சாதாரணமாக இயல்பாக நடப்பவை. இவைகளுக்கென்று தனியான முக்கியத்துவத்தை யாரும் கோருவதில்லை. ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் ஏதாவது ஒரு மனநிறைவற்ற தன்மையையே உருவாக்குவதாக முடிகிறது. ஏனென்றால் நம்முடைய மன ஓட்டத்துக்கும் வெளிப்பாட்டுக்குமான இடைவெளி பெரும்பாலும் நம்முடைய வசத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த நிகழ்வுக்கான எதிர்பார்ப்பையே உருவாக்குகிறது. வெற்றிகள் என்பவை தற்காலிகமானவைகளாகவும், தோல்விகள் என்பவை நிரந்தரமானவைகளாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனநிலைப் பின்புலத்தில் ஒரு நகுலன் குறித்த உரையாடல் தோல்விகளின் பிரும்மாண்டத்தை வசப்படுத்திய அவரது எழுத்துலகை அண்மைப்படுத்தியது.

கோணங்கியின் ‘பாழி ‘ நாவல் குறித்த விவாதத்தை இலக்கிய நண்பர்கள் மதுரைக்கும் போடிநாயக்கனூருக்கும் இடைப்பட்ட ரயில் பயணத்தில் மேற்கொண்டபோது அந்த விவாதம் குமுதம் இணைய இதழின் தீராநதி பகுதியில் வெளிவந்தது. அதை நான் சூரத்தில் இருந்துகொண்டு இணையதளத்தில் வைத்து படித்தபோது ஒரு தீவிரமான வாசிப்பையும் மன ஓட்டங்களையும் அது உருவாக்கியது. என்னுடைய சில கனவுகளில் கூட அந்த உரையாடல் தொடர்பான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நான் பல சந்தர்ப்பங்களில் சில புத்தகங்களைப் படிப்பதற்காக பாலக்காட்டிற்கும், பொள்ளாச்சிக்கும் இடைப்பட்ட ரயில் பயணங்களை நாடியிருக்கிறேன். பல பதட்டமான சந்தர்ப்பங்களில் மனம் லேசாகக் கூடிய தருணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அஜயன் பாலாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவை சந்தடியற்ற பறக்கும் ரயிலில் நிகழ்த்தலாம் என்று இலக்கிய நண்பர்கள் முன்வந்தபோது மயிலாப்பூர் ரயில் நிலையத்தின் பிரும்மாண்ட வெளியின் பின்புலத்தில் நிகழும் அந்த சந்திப்பு ஈர்ப்பு கொண்டதாக தோன்றியது. வேலையின்மை, சரியான சாப்பாடு இன்மை, சுலபத்தில் நிகழ்ந்து விடும் மனித உறவுகளின் விரிசல்கள் ஆகிய பல பதட்டங்களுக்கு நடுவே நண்பர்களுக்கும் கொஞ்சம் கொண்டாட்டம் தேவையானதாக இருந்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட எந்திரரீதியான சூழல்களில் மன உளைச்சல்கள் தீவிரப்படுத்தும் போது நேரிடுகின்ற விலகல்கள் இவ்விதமாக கொஞ்சம் ஈடுகட்டப்படும் சாத்தியங்கள் உண்டு தானே ? அன்று அந்த நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் தங்கள் ஈடுபாட்டிற்கான அந்தரங்கமான ஒரு சுய காரணம் ஒன்று இருந்தது.

அஜயன் பாலா தன்னுடைய புத்தகத்தை இயற்கைக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பினார். போய்ச் சேரும் இடம்பற்றிய இலக்கின்றி, ஒரு வெளிக்கு, ஒரு முகம்தெரியாத வாசகருக்கு சமர்ப்பணம் செய்யும் நோக்கில்தான் அது வெளியே வீசப்பட்டது. பின்னர் புத்தகம் தொடர்பான பேச்சுக்கள், கொஞ்சம் பாட்டு, கொஞ்சம் ஒட்கா என்று எல்லோரும் லேசாகிப் போனதையே உணரமுடிந்தது. ஒட்காவின் நடுவே யவனிகா ஸ்ரீராம் தன்னுடைய கவிதையை வாசித்தார். அப்போதிருந்த மனநிலையில் அந்த கவிதை அளித்த சந்தோஷத்துக்கு இணையில்லாமல் இருந்தது. இதுதான் அந்தக் கவிதை —

இந்த வருடம் மழை குறைவு

குறைந்த கூலிக்கு

முந்திரிக் கொட்டை உடைப்பவளை

எனக்குத் தெரியும்

கடல் மீன்கள்

விற்கும் சந்தைக்கு வந்தால்

புன்னகைப்பாள்

தூறல் நாட்களில் மரச்சாலை வழியே

குடைபிடித்துப் போகும் அவளை

ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்

அடிக்கும் பட்டறைக்காரன்

லாடக்காரன் என்னுடன் மதுக்குடிப்பான்

நீண்ட மழைகாலத்தின் மத்தியில்

அவளை உடலுறவிற்கென ஒருமுறை அழைத்தோம்

ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்

எருமைகளுக்கென வளர்ந்த பசும் புற்சரிவில்

கொதித்து ஈரம் பொங்க

இருவரும் சுகித்தோம்

அந்தியில் கனத்த மழைத்தடத்தின் வழியே குதிரையில்

தானியப்பொதி ஏற்றி வந்த அவள் கணவன்

ஏதோ தனக்கு மகளைப் போல்

பொறுப்பற்று திரிவதாய் அவளை ஏசினான்

அவளோ எங்களை

சகோதரர்கள் என அறிமுகப்படுத்தினாள்

அவன் சில ஆரஞ்சுப் பழங்களை எங்களுக்கு

அன்பளிப்பாக கொடுத்தான்

இந்த வருடம் மழை குறைவு என்றவாறே

அவள் கூந்தலை நீவி முடிச்சிட்டான்

அவன் தோளில் சாய்ந்து அவள்

விடைபெற்ற கணம்

எங்களை இருள் சூழ்ந்திருந்தது

கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன.

அந்த நாளின் கொண்டாட்டத்திற்கு இந்தக் கவிதை முத்தாய்ப்பு வைப்பதுபோல் அமைந்தது. சில நண்பர்கள் கடற்கரைக்குச் சென்று கடல்குளியல் செய்து கொண்டாட்டத்தை நீட்டித்தனர். தற்காலிகமாக வேனும் பலவிதமான மனப்பதட்டங்களுக்கு நடுவே ஒருகொண்டாட்ட மனநிலைக்கான முகாந்திரமாக அந்த நிகழ்வு அமைந்தது.

இந்த புத்தக வெளியீடு என்பது கூட ஒரு முகாந்திரமாகத்தான் இருந்தது. நண்பராக அழைக்கப்பட்டிருந்த புகைப்படக்காரரை விசேஷமாக பொருட்படுத்தவும், கட்டுப்படுத்தவுமான மனநிலையில் யாருமில்லை. ஆனால் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு சிதைவு பெற்றது குமுதத்தின் தவறான சித்தரிப்பினால்தான். அதில் குறிப்பிட்டது போல் புத்தகம் கூவத்தில் வீசப்படவும் இல்லை. அது போன்று ஒரு நோக்கமும் இல்லை. இலக்கிய மனோதர்மங்களை சிதைக்கும் முயற்சியில் குமுதம் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. குமுதத்தில் இப்படிப்பட்ட திரித்தல் செய்திகள் வெளிவருவது ஆச்சரியமில்லை. ஆனால் அதைப் படித்து விட்டு விமர்சனம் செய்கின்ற இலக்கியவாதிகள் உண்மை நிலையைக் கண்டறிய முற்படாததுதான் ஆச்சர்யம்.

அதேபோல் மதுபான வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமிள் இலக்கியம் குறித்த உரையாடல் நிகழ்ச்சியும் முற்றிலும் தவறான சித்தரிப்புக்கு உள்ளானது. மதுபான வளாகத்தில் சந்தடியற்ற மதிய சூழல் இலக்கிய சந்திப்புக்கு உகந்ததாகவே தென்பட்டது. விருப்பப்பட்டவர்கள் மதுபானம் எடுத்துக் கொண்டதில் எந்தவிதமான ஒழுக்கக்குறைவும் இருப்பதாகத் தோன்றவில்லை. இவையெல்லாம் பொருட்படுத்தக்கூடிய விஷயங்களே அல்ல. நாடோடித் தன்மைக்கும், கலைக்கான மனநிலைக்கும் உள்ள தொடர்புகளை விவரிப்பது என்பது ஒரு நீண்ட வரலாறாகிவிடும். உண்மையில் வழக்கமான கூட்டங்களில் தங்கள் கருத்துக்களை சொல்ல தயங்குபவர்கள் கூட அன்று தங்களுடைய மனஓட்டங்களை உக்கிரத்துடன் வெளிப்படுத்துவதை பார்க்க முடிந்தது. சில இயல்பான அத்துமீறல்களையும், குறுக்கீடுகளையும் தவிர்த்து பிரமிள் பற்றிய சில செறிவான கவனிப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றே கூற வேண்டும். குறிப்பாக பிரமிளின் காடன் கண்டது கதை பற்றியும், ப்ரஸன்னம் குறுநாவல் பற்றியும் T. கண்ணன் மற்றும் வளர்மதி ஆகியோருடைய விளக்கங்களும், பிரமிள் கவிதைகளின் பிரத்யேக உலகம் பற்றிய சங்கரராம சுப்ரமண்யத்தின் உரையும், அவருடைய கவிதைகளின் cosmic தன்மை பற்றிய சாருநிவேதிதாவின் அவதானிப்பும், பிரமிளின் விமர்சன அடிப்படைகள் பற்றிய முத்துக்குமாரரின் ஒப்பு நோக்கலும் ஆழ்ந்த பார்வை கொண்டிருந்தன. நான் என்கிற அடையாளம், தற்காப்பின் அவலம், புறம்பானதை மாற்றி அமைக்கும் வேகம், பழி வன்மம் மற்றும் போட்டி மனநிலை, இறுதியில் அப்படியே எதிர்கொள்வதான ஒரு சமன், ஒரு விதமான கானகத்தன்மை ஆகிய கூறுகளில் பிரமிளின் கதைகள் பரிசீலிக்கப்பட்ட விதம் உற்சாகமூட்டுவதக இருந்தது. இலக்கிய கூட்டங்கள் என்ற பெயரில் நடை பெறுகிற பல கூட்டங்களில் மனம் ஈடுபட முடியாமல் ஒருவித விலகல் தன்மையே சாத்தியப்படுகிற நிலையில் இதுபோன்ற கூட்டங்களும் இலக்கின்றி எங்கோ நின்றுவிடுவதில் அதிருப்தி ஏற்பட்டாலும் அந்த அதிருப்தி கூட ஏதோ ஒரு உந்துதலாகவே இருக்கிறது. ஆனால் கூட்டம் நடந்து முடிந்த பிறகு இரவில் வேறொரு தனியிடத்தில் சில நண்பர்களுக்குள் நடந்த தனிப்பட்ட சில சச்சரவுகளுக்கும் பிரமிள் கூட்டத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கணத்தில் தற்செயலாக நடைபெற்று விடுகிற வன்முறைகள் எந்த சந்தர்ப்பத்திலும் நிகழக்கூடியவை. இருப்பின் சிக்கல்களும், அடையாளக் குழப்பங்களும், நம்பகத்தன்மையின் சிதைவுகளுமாக இன்றைய சூழலில் இலக்கிய நண்பர்களுக்குள் சச்சரவுகளும், வன்முறைகளும், மனமுறிவுகளும் நம்பகமான எந்த முகாந்திரமுமின்றி நிகழ்ந்து விடுவதை இயல்பானதாகவே கொள்ள முடியும். ஆனால் சில தனிநபர்கள் இது போன்ற கூட்டங்களை தங்கள் சுய பிராபல்யத்துக்காக பயன்படுத்திக் கொள்வதும், தற்செயலான செயல்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும்தான் ஆபத்தானது.

ஆனால் சிறு பத்திரிகைத் தளத்தில் நடந்த பல முக்கியமான இலக்கியக் கருத்தரங்குகள் பற்றியோ, கோட்பாட்டு விவாதங்கள் பற்றியோ, படைப்பாக்க செயல்பாடுகள் பற்றியோ, நாடக நிகழ்வுகள் பற்றியோ எந்த விதமான அக்கறையும், ஈடுபாடும் காட்டாத இந்தப் பத்திரிகைகள் மேலோட்டமான சில தோற்றங்களை வைத்து கூட்டத்துக்கு சம்பந்தமில்லாத செய்திகளை வெளியிடுவதும், இலக்கியத்தின் போக்கு மோசமாகி விட்டதாக கண்ணீர் வடிப்பதும் முற்றிலும் அபத்தமானது. இன்றுள்ள தகவல் பெருக்க சூழ்நிலையில் தங்களுடைய நம்பகத்தன்மையை விஸ்தரிக்க வேண்டி படைப்பிலக்கியவாதிகளை நாடிவர வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள இந்தப் பத்திரிக்கைகளுக்கு பிரமிள் இலக்கியத்தை விட அவர் சாப்பிடும் விஷயங்கள் தான் ருசிகரமானதாக இருக்கிறது. பிரமிளுடைய கவிதையை வெளியிட்டதற்காக மட்டுமே நாம் இந்த பத்திரிகைகளை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

***

rangarajan_bob@hotmail.com

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்