அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

க்ரெக் பாலாஸ்ட்


அர்ஜெண்டினாவிற்கு ‘உதவி உத்திகள் பற்றிய அறிக்கை ‘ உலக வங்கி- அகில நிதி அமைப்பு(International Monetary Fund) என்ற பொயரில் தயாரித்த ‘ரகசிய ‘ அறிக்கையின் வாக்கியங்களை அப்படியே சிரமேற்கொண்டு அர்ஜெண்டினா மற்றும் தாஞானியா, ஈக்வேடார், சியரா லியான் போன்ற நாடுகள் சட்டம் இயற்றி பின்பற்றி வருகின்றன. கடனுக்கான நிபந்தனைகள், வளர்ர்சிக்கான ஆலோசனைகள் என்றெல்லாம் அழைக்கப் பட்டாலும் இவற்றின் நோக்கம் இந்த நாடுகளுக்கு உதவுவதாக இல்லை.

அர்ஜெண்டினாவிற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை சூன் 2001-ல் வெளிவந்தது. ஒரு வருடம் முன்பு, அதாவது சூன் 2000-ல் அர்ஜெண்டினாவின் வேலையின்மை சதவீதம் 15-ஆக இருந்தது. 1998 முதல் அர்ஜெண்டினா பெரும் பொருளாதாரப் பின்னடைவு கொண்டிருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பத்து சதவீதம் குறைந்து விட்டது. இப்படிப் பட்ட நிலையில் அரசு உதவிகளை நிறுத்துவது என்பது, பறக்கும் விமானத்தில் என்ஜினை நிறுத்துவது போலப் பேராபத்தான விஷயம். ஆனால் உலக வங்கி செப்டம்பர் 2000-ல் சிபாரிசு செய்தது : அர்ஜெண்டினாவின் பட்ஜெட் பற்றாக்குறை 5.3 பில்லியன் டாலரிலிருந்து 4.1 பில்லியன் டாலராகக் குறைக்க வேண்டும் என்று. இந்தச் சிபாரிசினால் 2001-ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 2.6 சதவீதம் முன் வருடத்தை விட வீழ்ச்சி பெற்றது.

அகில நிதி அமைப்பின் சிபாரிசை அமல் படுத்த வேண்டி அர்ஜெண்டினா அரசு செலவை 3 பில்லியன் குறைக்கலாயிற்று. எதற்காக அவர்கள் குறைக்க வேண்டும் ? வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்கத்தான். யாரிடன் கடன் வாங்கப் பட்டது ? உலக வங்கி, அகில நிதி அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் தான். 1994-ம் ஆண்டிலிருந்து அர்ஜெண்டினாவின் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறை முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டி கொடுக்கத் தான் பயன்பட்டது. அந்தச் செலவைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அரசு செலவினங்கள் மொத்த செலவினங்களில் 19 சதவீதமாய்த் தான் இருந்தது. இப்படி அரசு செலவினங்களைக் குறைப்பது பிரசினையை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தாலும் உலக வங்கி மேலும் இந்தச் செலவினங்களைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. டிசம்பர் 2001-ல் அர்ெ ?ண்டினாவின் மத்திய தரவர்க்கமும் மற்ற ஏழைகளுடன் ஏழ்மையடைந்து தெருக்களில் நின்றது.

எப்படி வந்தது இந்த நிலைமை ? 1990-களில் உலகமயமாதல் தரும் நன்மைக்கு உதாரண நாடு என்று அர்ஜெண்டினா கொண்டாடப்பட்டது. உலக வங்கி சிபாரிசு செய்த ‘சீர்திருத்தம் ‘ நான்கு படி நிலைகளைக் கொண்டது. ஒன்று : ‘ மூலதனச் சந்தையை தாராளமயமாக்குதல் ‘( Capital Market Liberalisation ) அர்ஜெண்டினாவின் பெசோ நாணயம் நேரடியாக டாலருக்கு மாற்றுமாறு இணைக்கப் பட்டது. இதனால் பண வீக்கம் குறையும், பட்ஜெட் பற்றாக்குறையும் குறையும், வெளி நாட்டு மூலதனம் வரும் என்று சொல்லப் பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் சிறிது ஆட்டம் கண்டவுடனேயே, மூலதனம் வெளியேற ஆரம்பித்து விட்டது. உதாரணமாக சூலை 2001-ல் நாட்டின் வங்கிகளின் இருப்பில் ஆறு சதவீதம் வெளியேறியது. இதனால் பீதியடைந்த மக்கள் வங்கிகளை முற்றுகையிட்டு பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். பணத்தை எடுக்கும் போது டாலர்களாய் எடுத்தனர். டாலர்-பெசோ இணைவைத் தக்க வைக்க வேண்டி 20 சதவீதம் வட்டி விகிதம் கொடுத்து டாலரை அர்ஜெண்டினாவின் மத்திய வங்கி திரும்பப் பெற வேண்டியதாயிற்று. இந்த சமச்சீரற்ற நாணய மாற்று ஏற்பாட்டினால் அரசின் ஊழியர்களுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கும் வெட்டு விழுந்தது. கிட்டத்தட்ட 13 சதவீதம் இதில் வெட்டு விழுந்தது. ஈக்வேடர் நாடு தன் நாணயத்தையே விட்டு விட்டு டாலரையே தன் நானயமாய்க் கொண்டது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி சரிபாதியாய்க் குறைந்தது.

உலக வங்கியின் இரண்டாவது படி நிலை : தனியார் மயமாக்கல். 90-களில் உலக வங்கியின் கிடுக்கிப் பிடியில் , அரசுக்குச் சொந்தமான எண்ணெய், வாயு, தண்ணீர், மின்சாரக் கம்பெனிகளையும் , அரசு வங்கிகளையும் தனியாருக்கு அர்ஜெண்டினா விற்றது. ஃபிரான்ஸ் நாட்டின் விவெண்டி குழுமம் அர்ஜெண்டினாவின் தண்ணீர்க் கம்பெனியை வாங்கியது. அமெரிக்கக் கம்பெனி என்ரான் மின்சாரக் கம்பெனியை வாங்கியது. அமெரிக்காவின் ஃப்லீட் வங்கி , அரசு வங்கிகளை வாங்கியது. 2001-ல் நடந்த கலவரத்தின் போது விற்பதற்கு ஒன்றும் அர்ஜெண்டினாவிடம் இல்லை. விவெண்டி தண்ணீர் விலையை இரு மடங்காக்கியது. என்ரானுன் விலையேற்றத்துக்கு முயன்றது. உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தனியார் மயம் பெரும் ஊழல் மயம் என்றார். 1988-ல் அர்ெ ?ண்டினாவின் பொதுத் துறை அமைச்சர் என்ரான் மீது குற்றம் சாட்டினார். என்ரானுக்கு வாயு கம்பெனியை ஐந்தில் ஒரு பங்கு விலைக்கு விற்றால் அமைச்சரைத் தக்கபடி கவனித்துக் கொள்வதாக என்ரான் உறுதியளித்ததாம்.

சமூக நலச் சேமிப்பையும் 1994-ல் அர்ஜெண்டினா ஓரளவு தனியார் மயமாக்கியது. இதில் ஏற்பட்ட நட்டம் ஏற்படாமல் இருந்த்திருந்தால் அந்தத் தொகையைக் கொண்டே அந்தக் காலத்தில் ஏற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளித்திருக்க முடியும் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.

உலக வங்கி சிபாரிசின் மூன்றாவது படி நிலை : சந்தை நிலவரத்தால் விலை நிர்ணயம். இந்தக் கொள்கைக்கு பலியானது முதன் முதலில் தொழிலாளர்கள் தான். பாதுகாப்பான வேலை பார்த்தவர்கள் நீக்கப் பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாய் ஆயினர். சம்பளம் வெட்டப்பட்டது. பாதுகாப்பும் இல்லை. தான்ஜானியாவில் எய்ட்ஸ் பெரிதும் பரவிக் கொண்டிருந்த சமயம் , ஏழைகள் பொது மருத்துவமனைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஒரு சிபாரிசு. இப்படி கட்டணம் நியமிக்கப் பட்ட பின்னர் தார்-எஸ்-ச்லாமின் மருத்துவ மனைகளுக்கு வருபவர் எண்ணிக்கை சரிபாதியாய்க் குறைந்தது. உலக வங்கி இந்த கட்டணத்திற்கு எழுந்த எதிர்ப்புக்குப் பின்னால், இது பற்றி வலியுறுத்துவதை நிறுத்தியுள்ளது.

உலக வங்கி தன் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்தினால் வேலையின்மை பத்து சதவீதத்துக்குள் வரும் என்று சொன்னது. ஆனால் ப்யூனோ ஏர்ஸில் 17 சதவீதத்திலிருந்து , வேலையின்மை 22 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் உலக வங்கியின் முன்னாள் தலைவர் சொல்வது : ‘ ஒரு நாடு வீழ்ந்து கிடக்கும்போது , அதை மேலும் மேலும் கசக்கிப் பிழிந்து சிதறச் செய்வதே உலக வங்கியின் வேலையாய் உள்ளது. ‘ 1998-ல் இந்தோனேசியாவில் உணவு மானியத்தைக் குறைக்குமாறு உலக வங்கி அமல் செய்த போது கலவரங்கள் வெடித்தன. ஈக்வேடாரில் சமையல் வாயுவின் விலையை 80 சதவீதம் உயர்த்துமாறு உலக வங்கி சிபாரிசு செய்தது. கலவரங்கள் வெடித்தன.

உலக வங்கி சிபாரிசில் நான்காவது படிநிலை : சுதந்திர வர்த்தகம். இந்த ‘திறந்த வர்த்தக ‘க் கொள்கையும், டாலருடன் இணைந்த பெசோவும் சேர்ந்த போது, அர்ஜெண்டினாவின் ஏற்றுமதியாளர்கள் விலை அதிகமாய் இருந்ததால் போட்டி போட முடியவில்லை. பிரேசிலின் நாணயமாற்றுக் குறைப்புக்குப் பின்பு பிரேசிலின் பொருட்கள் விலை குறைவாய் இருந்ததால், அர்ஜெண்டினாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப் பட்டது. அர்ஜெண்டினாவில் விளையும் அரிசிக்கு பிரேசிலில் நல்ல சந்தை உண்டு ஆனால், விலை அதிகம் என்பதால் பிரேசிலில் மக்கள் பட்டினி கிடந்த போதிலும் அவர்களால் அர்ஜெண்டினாவின் அரிசியை வாங்க முடியவில்லை. உலக வங்கி கானாவில் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு அளித்து வந்த மானியத்தை நிறுத்துமாறு நிபந்தனை விதித்தது. 2002-மே மாதம் உலக வங்கி அளித்த அறிக்கையில் இந்த நிபந்தனையினால் கானாவின் பருத்துச் சாகுபடி பாழ்பட்டது என்று ஒப்புக் கொள்ளப் பட்டது. இதே அறிக்கையில் அமெரிக்க அரசு தன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு 45சதவீதம் மானியத்தை உயர்த்தியது என்றும் கூறப்பட்டது. ?டிக்லிட் ? , மேநாடுகளின் இந்த இரட்டை வேடத்தை சீனாவில் மேநாடுகள் நடத்திய ‘அபின் போருடன் ‘ ஒப்பிடுகிறார். ‘அதுவும் கூட சந்தையைத் திறந்த முயற்சி தான். ‘ என்கிறார்.

உலக வங்கி, அகில நிதி அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் நிபந்தனைகளை விதிக்கின்றன. இந்த நிபந்தனைகள் மேற்கு நாடுகளுக்குச் சாதகமாய் அமைவதில் எந்த வியப்பும் இல்லை. ஈக்வேடாரில் கடன் வழங்குமுன்பு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியின் வாயு குழாய்கள் நியமிக்க அனுமதி அளித்த பின்பு கடன் வழங்கப் பட்டது. சியரா லியானில் வெளிநாட்டு சிகரெட்டுகள் தாராளமாகப் புழங்க அனுமதி பெற்றுப் பின்பு தான் கடன் வழங்கப் பட்டது.

1980-க்கு முன்னால் உலக வங்கியும், அகில நிதி அமைப்பும் கீன்ஸ் அல்லது சோஷலிசப் பாதையில் நிபந்தனைகள் விதித்தனர். ‘இறக்குமதிக் குறைப்பும் ‘ , ‘உள்நாட்டு உற்பத்திப் ‘ பெருக்கமும் , அரசு தொழிற்சாலைகளுக்கு ஆதரவும் என்று பாதுகாப்பான சூழல் பரிந்துரைக்கப்பட்டது. 1960-லிருந்து 1980-வரையில் லத்தீன் அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 73 சதவீதம் உயர்ந்தது. ஆப்பிரிக்காவில் 34 சதவீதம் உயர்ந்தது. ஆனால் 1980-க்குப் பிறகு லத்தீன் அமெரிக்க வருமானம் வளரவில்லை , அல்லது சொற்பமே வளர்ந்தது. ஆப்பிரிக்காவின் வருமானம் 23 சதவீதம் சரிந்தது. அகில நிதி அமைப்பின் அறிக்கையிலேயே இது குறிப்பிடப் படுகிறது. ‘ உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் ஏழ்மையை அடைந்துள்ளனர். ‘

**********

Series Navigation

க்ரெக் பாலாஸ்ட்

க்ரெக் பாலாஸ்ட்