பலி

This entry is part of 41 in the series 20101010_Issue

ஸ்ரீதர் சதாசிவன்shridharsadasivan@gmail.com

(இந்த கதையும், கதாபாத்திரங்களும் கற்பனையே.)

செய்தி : நியூயார்க் டிசம்பர், 17 திங்கள் – குடும்பத்தைக் கவனிக்காமல், தொழில் மீது மட்டுமே கணவர் கவனம் செலுத்தி வந்ததால், அதிருப்தி அடைந்து மனதளவில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், தனது 10 மாத கைக்குழந்தையுடன் நியூயார்க், ஹட்சன் ஆற்றில் குதித்து விட்டார்.
—-
நியூயார்க் டிசம்பர், 16 ஞாயிறு : தாங்க முடியாத குளிர். உடம்பு உறைந்து போய் இருந்தது. கை கால்கள் மடக்கி, உடம்பு ஒடுக்கி, திணிக்கப்பட்டிருந்தேன். ஒவ்வொரு எலும்பும் உடைந்து விடும் போல் வலி. தொண்டை வறண்டு, மார்புக்குள் யாரோ கடப்பாறையை வைத்துக் குடைகிற மாதிரி இருந்தது. உடம்பு திராணியற்று மரத்துப் போய் இருந்தது. இமைகளை கஷ்டப்பட்டு தள்ளி, கண்களை திறந்தேன்.

பெரிய ஊறுகாய் பாட்டில், சம்படத்தில் சில்லிட்டு போய் தோசை மாவு, ஆரஞ்ச் ஜூஸ், பாதி உபயோகபடுத்தப்பட்ட தர்பூசணி, பிளாஸ்டிக் பிலிமில் மூடிய சாக்லேட்கேக் …என்ன இது? எப்படி நான் ரெப்ரிஜிறேட்டருக்குள்?
” ஐயோ ” கலவரத்துடன் முனங்கினேன், குரல் எழவில்லை.
கதவு திறந்தது. ரகு குனிந்து தர்பூசிணியை நகட்டி ஏதோ தேடினார்.
” ரகு…… என்னை வெளியில எடுங்க… ஐயோ.. நான் பிரிட்ஜ்குள்ள இருக்கேன்” முடிந்தவரை குரலை திரட்டிக் கதறினேன். ‘படார்’ காதில் விழாமல் ரகு கதவை மூடிவிட்டு நடந்தார். இரண்டு நிமிடம் கழித்து, அம்மா கதவை திறந்தாள்.
“அம்மா .. நான் இங்கே இருக்கேன், எப்படி உள்ளே மாட்டிக்கிட்டேனு தெரியல, என்னை காப்பாத்து ப்ளீஸ்”.
அம்மாவுக்கும் கேட்கவில்லை. ” லதா எங்க போனா? ஆபீஸ் முடிஞ்சு வர்ற நேரமாச்சே ” சொல்லிக்கொண்டே ஊறுகாய் பாட்டிலை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள் அம்மா .
“அம்மா, நான் இங்கே இருக்கேன்.ஐயோ!! உங்க யாருக்குமே நான் இங்கே இருக்கறது தெரியலையா? என்னை வெளிய எடுங்களேன்” வலி தாங்கமல் புலம்பினேன்.
சிறிது நேரத்தில் என் அலுவலக தோழி ரஞ்சினி, கதவை திறந்து அட்டை பெட்டி ஒன்றை உள்ளே வைத்தாள்.
” ரஞ்சனி, நான் இங்கே இருக்கேன். செத்துடுவேன் போல இருக்க.உடம்பு உறையுது ,மூச்சு முட்டுது. என்னை வெளியில எடேன்” முடிந்தவரை கை கால்களை ஆட்டி உதைத்தேன்.
” என்ன சத்தம்?” என்று உள்ளே பரவலாக தேடினாள் ரஞ்சினி.
” இங்கே, இங்கே ” நான் வீரிட்டு கத்தினேன்.
” என்னமோ தெரியலை” என்றவள் நிமிர்த்து கதவை மூடத் தொடங்கினாள்.
” ஐயோ!! போகாதே.நான் இங்கே இருக்கேன்.என்னை யாரவது காப்பாத்துங்களேன. அம்மா ஆ..”.

தூக்கி வாரி போட்டு எழுந்தேன் நான். முகம் முழுவதும் வியர்வை.
” ஹே லதா! என்ன ஆச்சு?” படுக்கை அருகே இருந்த விளக்கை போட்டார் ரகு. ” ஏதாவது கெட்ட கனவா?”
எங்கே இருக்கிறேன்? என்ன நடந்தது இப்பொழுது? புரியவில்லை. கைமுட்டி இரண்டையும் படுக்கையில் ஊன்றி, முதுகை தூக்கி எழுந்தேன். முகத்தில் படர்ந்திருந்த வியர்வையை கைகளால் துடைத்தேன். ரகு அதற்குள் கிச்சன் சென்று தண்ணீர் கொண்டு வந்தார். மெல்ல குடித்து, முகத்திலும் தெளித்துக் கொண்டேன்.
” ஆர் யூ ஓ.கே?” என்று கைகளை பிடித்தார் ரகு.
” ஹ்ம்ம் ” என்று எழுந்தேன். பாத்ரூமிற்க்குள் சென்று குழாயை திறந்து,கைகளால் தண்ணீரை அள்ளி முகம் கழுவினேன். வெளியே வந்து குளிர் ஜாக்கட்டை மாட்டிக்கொண்டேன். ” நான் கொஞ்சம் வெளிய நடந்துட்டு வரேங்க, குழந்தை அழுதா பாத்துக்கோங்க” என்றேன் ரகுவிடம்.
” குளிர் ரொம்ப இருக்கு. இப்போ அவசியம் போணுமா? ” என்றார்.
” எனக்கு மூச்சு அடைக்குது. காத்து வேணும், ப்ளீஸ்”
” சரி. நான் குழந்தையை பாத்துக்கறேன்.பத்திரம்.ரொம்ப தூரம் போகாதே” என்றார் ரகு “செல்ல எடுத்துக்கிட்டு போ”
” சரி ” என்று படுக்கையிலிருந்த செல் போனை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்தேன். கதவை அடைத்து, காதுகளை ஸ்கார்ப் கொண்டு மூடினேன். குளிர் பயங்கரமாய் தான் இருந்தது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் இது ஒன்றும் அதிசியமல்ல. நடூராத்திரி ஒரு மணி இருக்கும். ஆள் அரவம் இல்லை. அக்கம் பக்கம் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எங்கே நடக்கிறேன் என்று தெரியாமல் நடைபாதையில் நடக்கத் தொடங்கினேன். மனதில் சொல்லமுடியாத வலி. கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் கண்ணீர் கொட்டியது.

” என்ன கஷ்டம் உனக்கு? ஏன் இப்படி இருக்க?” இந்தியாவிலிருந்து அம்மா போனில் கேட்டது நியாபகம் வந்தது. ” மாப்ளே உன்ன அடிக்கறாரா? திட்டறரா? எதுவானாலும் சொல்லு லதா ”
” இல்லம்மா”
” உனக்கு வேணுங்கறத வாங்கித் தர்றதில்லையா?”
” நான் வேலை பாக்கறேம்மா. எனக்கு வேணுங்கறத நானே வாங்கிப்பேன்” என்றேன் விரக்த்தியாய்
” ஏதாவது கெட்ட பழக்கம்? சிகரட், தண்ணி?”
” நோ”
” பின்ன என்னதாம்மா உன் பிரச்சனை? நல்ல புருஷன், ஆம்பளை குழந்தை, உனக்கு என்ன குறை?”
” அவருக்கு என்னமோ என்னை பிடிக்கலயோனு தோனுதும்மா ”
” ஏன் அப்படி சொல்ற?”
” …..” அம்மாவிடம் என்ன சொல்வது? எப்படி சொல்வது?
” போ லதா. நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்காத. நல்ல வாழ்க்கை, அத கெடுத்துக்காத”
” இல்லமா, என்கிட்டே அன்பா பேசி,அன்னியோனியமா இருந்து பல மாசமாச்சு” என்றேன் நான் தயங்கி.
” அட! ஆம்பளைங்கன்ன அப்படி இப்படி தான் இருப்பாங்க. இது என்ன சினிமாவா? எப்போ பாத்தாலும் டூயட் பாட” என்றாள் அம்மா சற்று எரிச்சலாக, ” “பொம்பளை நீதான் அடக்கமா இருக்கணும் “.
“…………..”
“இதையெல்லாம் ஒரு பிரச்சனைன்னு பெரிசு படுத்தாதே “

என்ன சொல்லுகிறாள் அம்மா? அலையாதே என்கிறாளா? முகத்தில் யாரோ காரி துப்பிய மாதிரி இருந்தது. அவமானத்தால் உடல் கூசியது. அதற்கு மேல் பேச முடியவில்லை. கல்யாணம் ஆகி இரண்டு வருடம் கூட முடியவில்லை. எல்லா பெண்களையும் போல கனவுகளும், ஆசைகளும் நிறைந்த ஒரு புதுப் பெண்தான் நானும்.

அப்பா அம்மா பார்த்து செய்துவைத்த கல்யாணம். ஒரே பெண் என்பதால் சல்லடை போட்டு சலித்து ரகுவை தேர்வுசெய்தார்கள். ரகு அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார், நான் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். போட்டோவில் பார்த்து இருவரும் ஓ.கே சொல்ல, இரண்டு குடும்பமும் பேசி முடிவு செய்தார்கள். நான் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ அதற்கு மேலாகவே எல்லா விதத்திலும் பொருத்தம் ரகு என்று தோன்றியது. ” எங்கயோ மச்சம்டி உனக்கு, ஆளு சூப்பர்ஆ இருக்கார்” என்று புவனா கூட கிண்டல் செய்தாள்.

நிச்சியம் செய்து, கல்யாணம் வரை பல முறை இன்டர்நெட் வழியாக நானும் ரகுவும் சந்தித்தோம்,பேசினோம், கொஞ்சினோம். மணிரத்னம் பட ஜோடி போல காதலும், காமமும் கலந்த ஒரு ரம்மியமான வாழ்க்கை எங்களுக்காக காத்திருக்கிறது என்று நான் கனவில் மிதந்து கொண்டிருந்தேன்.

அப்பா அம்மாவிற்கு என் கல்யாணம் நெடுநாளைய கனவு.”லதா கல்யாணம் மாதிரி வருமா?” என்று எல்லோரும் அசந்து போகிற மாதிரி நடந்தது கல்யாணம். கல்யாணம் முடிந்து அமெரிக்கா வந்தபொழுது, எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ரகு நன்றாகவே கவனித்து கொள்வார். அதிர்ந்து பேசுவதில்லை, அமெரிக்காவிற்கு நான் புதுசு என்பதால் எல்லாம் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். வீட்டு வேலையில் உதவுவதிலிருந்து, கார் ஓட்டச் சொல்லிக்குடுத்தது வரை எல்லாவற்றிலும் ஒரு கனிவு, பொறுமை, நிதானம். “தங்கமான மாப்ளே” என்று அப்பா சொந்த பந்தத்திடம் பெருமையாக மெச்சிக்கொள்வார். ரகுவிடம் குறை என்று சொல்ல எதுவும் இல்லை.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. கல்யாண இரவன்றே ஏதோ குறைவது போல் தோன்றியது. என்னவென்று புரியவில்லை. இயந்திரகதியான ஒரு புணர்ச்சி. எல்லாமே புதுசு என்பதால் என்ன எதிர்பார்ப்பது, என்ன குறைகிறது ஒன்றும் விளங்கவில்லை. இதையெல்லாம் யாரிடம் பேசமுடியும்? இதுதான் போலும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.

நாட்கள் நகர, ரொம்பவே நெருட ஆரம்பித்தது. எப்படி சொல்லுவது? ரகு என்மீது காண்பிப்பது கனிவா அல்லது காதலா என்று தெரியவில்லை. ஒரு ஆசை,ஒரு வேகம்,ஒரு தேடல் என்று என்னுள் நான் உணரும் எந்த உணர்ச்சியும் அவர் உணருவதாகத் தோன்றவில்லை. படுக்கை அறையில் என்று அல்ல, சின்ன சின்ன விஷயங்கள்… ஆபிசிலிருந்து வந்தால் ஒரு சின்ன முத்தம், அடையாள ஸ்பரிசம், டி.வீ பார்த்துக் கொண்டிருக்கும் போது கைகள் பின்னுவது, கட்டியணைத்து சோபாவில் இழைவது, வாக்கிங் போகும் பொது என் தோள்களில் கைபோட்டு நடப்பது, சர்ப்ரைசாக என்னை பின்னிருந்து அணைத்து கொஞ்சுவது…இது மாதிரி சின்ன சின்ன விஷயங்கள். நேரடியாக உடலுக்கும் அதனால் என் மனதிற்கும் என்னவர் அவர் என்று உணர்த்தும் விஷயங்கள, எதுவுமே இல்லை.
ஏதோ ஒரு கடமையை செய்வது போல என்னுடன் அவர் வாழ்வது போல தோன்றுகிறது. எப்பொழுதாவது அந்த இயந்திர புணர்ச்சி. அது தவிர அவர் என்னை தொடுவதே அரிது. என்னதான் பிரச்சனை?

” என்னங்க, கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணீங்களா? என்கிட்டே சொல்லலாம் ” நேரடியாகவே கேட்டேன் ஒருமுறை.
” கிண்டல் பண்ணாத லதா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ” என்று மறுத்து விட்டார்.

அவருக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று தோன்றியது.
” நான் குண்டா இருக்கேன்ல?” என்று கேட்டபொழுது தாழ்வு மனப்பான்மையில் என் குரல் தழுதழுத்தது . “மத்த பொண்ணுங்க மாதிரி சிக்குன்னு இல்லைல?”
” அப்படியெல்லாம் இல்லை லதா ” – அதே பதில்.

நான் அவருக்கு ஏற்றார்போல் இல்லை, என்னிடம் அவருக்கு ஈர்ப்பு இல்லை என்றால் ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? என்னிடம் என்ன குறை, என்ன பிரச்சனை என்று தெரிந்தாலாவது அதற்கு ஏற்றார்போல நடந்துகொள்ளலாம். இது சம்மந்தமாக பேச்சை எடுத்தாலே, எதுவுமே நடக்காதது போல், எல்லாம் சரியாக இருப்பது போல் நடந்து கொள்வார். அதற்கு மேல் என்னால் பேச்சைத் தொடரமுடியாது. குழந்தை பிறந்தவுடன், ஏதோ கடமை முடிந்தார்போல சுத்தமாக எதுவுமே கிடையாது. படுக்கையில் அவர் பக்கத்தில் படுத்திருந்தாலும, எதோ பல கிலோமீட்டர் தொலைவில் இருப்பது போல் தோன்றும். ஒவ்வொரு இரவும் மனதுக்குள் போராட்டம். படுக்கையில் அந்த மூன்று அடி இடைவெளியை கடந்து அவரை அணைக்க தைரியம் வந்ததில்லை, நிராகரிக்கப்படுவோமோ என்ற பயம். வெட்கமும், அவமானமும் என்னை பிடுங்கித் திண்ணும். அவராக என்னை ஆசையாக அணைத்ததாக எனக்கு நியாபகம் கூட இல்லை.

எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிலும் நாட்டம் குறைந்தது. குழப்பமும், கோபமும், மனச்சோர்வும் தினசரி வழக்கங்களாயின. ஆபீசில் ரஞ்சனி கவனித்து விட்டாள். அவளிடம் பேச வேண்டியதாயிற்று.

” சொல்றேனேன்னு தப்பா நினைக்கக்கூடாது ” என்று ஆரம்பித்தாள் ரஞ்சனி, ” நீ கொஞ்சம் கர்நாடகம்”
” என்ன?” என்று அதிர்ந்தேன் நான்.
” லுக் அட் யூ , ஐ டோன்ட் திங் யூ ஆர் அட்வென்ச்சரஸ்”
” புரியல”
” ஐ மீன் இன் பெட்”
“…………”
” இந்த காலத்து பசங்க. தே நீட் பன். விதவிதமா வேணும் ” என்று நமுட்டுச் சிரிப்புடன் சில டீ.வீ.டீக்களை என் கைகளில் திணித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவற்றை பார்த்து, அந்த இரவு ரகுவை அனைத்தபோழுது, “தள்ளிப்படேன். எனக்கு தலை வலி ” என்று திரும்பிக்கொண்டார். தோல்வியும், விரக்த்தியும் ஒன்றாய் சேர்த்து அழுத்த, அழுகை முட்டிக் கொண்டு வந்தது.பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காமல் தவிப்பது வேதனை என்றால், என்ன பிரச்சனை என்றே தெரியாமல் தவிப்பது அதை விட பெரிய வேதனை. “குழந்தை ஆச்சு. இனிமே இதையெல்லாம் ஒரு விஷயம்னு பெரிசு படுத்தாதே” என்று அம்மாவின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

போன மாதம் என் கேள்விகளுக்கு கடைசியாக பதில் கிடைத்தே விட்டது. அந்த ஞாயிறு என் வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒன்று. ரகு குழந்தையை தூக்கிக் கொண்டு வாக்கிங் போய் இருந்தார். மறதியாக கம்ப்யூடரில் அவரது ஈமெயில் பக்கத்தை மூடாமல் விட்டுவிட்டு சென்றிருந்தார். எதேச்சையாக என் கண்ணில் பட்டது அவருக்கு வந்திருந்த அந்த ஈமெயில். என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு அதிர்ச்சி!

” டியர் ரகு ,
நாம் சந்தித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. உன்னை எப்பொழுது பார்ப்போம் என்று ஆவலாய் இருக்கிறது. இந்த கடிதத்திற்க்காவது பதில் அனுப்புவாய் என்று எதிர்பார்க்கிறேன். நாம் நேரில் சந்திக்கும் வரை, இதோ உனக்காக சில பிக்ச்சர்ஸ்.
முத்தங்கள்,
சீ.ஜே ”

என் கை விரல்கள் நடுங்கின. பதட்டத்தில் நெஞ்சு தாறுமாறாய் அடித்துக்கொண்டது. அவசர அவசரமாய் கடிதத்தின் கீழே கண்களை நகட்டினேன். தமிழ் சினிமா நடிகர் விஷால் போன்ற ஒரு சாயலில, சட்டையில்லாமல் வசீகரமாய் சிரித்துக்கொண்டு ஒரு ஆணின் புகைப்படம்! உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல இருந்தது, தலை சுற்றியது, கால் அடியில் பூமி நழுவியது எனக்கு.

வாக்கிங் முடிந்து வீடு திரும்பிய ரகுவை வாசலில் நிறுத்திக் கேட்டேன்.

” ஐ ஆம் சாரி லதா! ஐ அம் கே (Gay) ! எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பு இல்லை.சின்ன வயசுலேர்ந்தே எனக்கு பசங்க மேல தான் ஈர்ப்பு. நான் எவ்வளவோ எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிப் பார்த்தேன். அவங்களால சுத்தமா இத புரிஞ்சுக்க முடியலை. ‘ ஊரு, உலகம் என்ன சொல்லும்? ஒரே பையன், நீ கல்யணம் பண்ணிகிட்டாதான் ஆச்சு. நம்ம வம்சம் என்ன ஆகும்?’ அப்படினு ஒரே ரகளை. எங்க அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கலேனா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டினாங்க. பெத்தவங்கள அந்த நிலைல பார்க்க மனசு வரலை! பல வருஷம் அவங்களோட போராடி கடைசில வேற வழியே இல்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் பண்ணினதா நியாயப் படுத்தறுதுக்காக இத சொல்லல. என்ன நடந்ததோ அத சொல்றேன். உன் வாழ்க்கைய வீணடிக்கனும்னு நான் நினைக்கலை, என் நிலைமை அப்படி. ஆனா சத்தியமா சொல்றேன், உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட பிறகு நான் வேற யாரையும் சந்திக்கலை. என் வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை. சூழ்நிலை கைதி நான், ஏதோ கட்டயாத்தின் பேரில் , மத்தவங்களுக்காக ஒரு வாழக்கை” – விரக்த்தியின் விளிம்பில், தலை குனிந்து நின்றார் ரகு.

கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நரம்புகள் வெடித்து விடும் போல் இருந்தது. ஏமாற்றப்பட்ட வலி நெஞ்சை குத்தியது. கதறி கதறி அழுது தீர்த்தேன். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ” தயவுசெய்து என்கிட்டே பேசாதீங்க, நான் எதுவும் கேக்க விரும்பலை ”

ரகு சொன்னதில் பாதி விஷயம் எனக்கு புரியவேயில்லை. அவரிடம் இதை பற்றி பேச விருப்பம் இல்லை, அப்பா அம்மாவிடம் இதை பற்றி எல்லாம் பேசவே முடியாது, ரஞ்சனிதான் எனக்கு இருக்கும் ஒரே உதவி. ரஞ்சனி ஆறுதலாக இருந்தாள், அவளுக்கும் இதை பற்றி நிறைய தெரிந்திருக்கவில்லை. ஒரு கவுன்சிலரை போய் பார்க்கலாம் என்று சொன்னாள். எனக்கு ரொம்ப தர்மசங்கடமாக இருந்தது, இருந்தாலும் வேறுவழி தெரியவில்லை. நீண்ட தயக்கத்திற்கு பிறகு, ஒரு கவுன்சிலரை சந்தித்தேன்.

” பழசெல்லாம் நான் கிளறல, அவர நான் மன்னிக்கத் தயார். எங்களால ஒரு புது வாழ்க்கை அமைச்சுக்க முடியுமா?” என்று கவுன்சிலரிடம் கேட்டேன்.
” ஹ்ம்ம், யெஸ். நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ முடியும், ஆனா எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு நீங்க ரெண்டு பேரும் தான் முடிவு செய்யனும் ” என்றாள் அந்த கவுன்சிலர் பெண்மணி.
” அவருக்கு என் மேல ஈர்ப்பு வர என்ன செய்யனும்? நான் எதுவானாலும் செய்யத் தயார் ”
அவள் மெல்ல என் கைகளைத் தடவி சொன்னாள் ” உன் தவிப்பு எனக்கு புரியுது லதா, உன் மேல எந்த குறையும் இல்லை. நான் ரகுகிட்ட பேசினேன். ரகுவுக்கு பெண்கள் மேல ஈர்ப்பு இல்லைனு தெளிவா தெரியுது. இது இயற்கையான ஒரு விஷயம், உன்னால எதுவும் செய்ய முடியாது ”
” ஆனா… இது எப்படி சாத்தியம்? ” குழப்பத்துடன் கேட்டேன் நான். ” அது எப்படி அவருக்கு ஆம்பளைங்க மேல ஈர்ப்பு இருக்கும், ஆனா பொம்பளைங்க மேல ஈர்ப்பு இருக்காது?”
” சரி. உனக்கு ஏன் ஆண்கள் மேல ஈர்ப்பு இருக்கு, சொல்லு ” என்று கேட்டாள் அவள்.
என்ன அபத்தமான கேள்வி இது என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் ” நான் ஒரு பொண்ணு, அதனால”
” சரி, உனக்கு எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்? தோற்றத்த வெச்சு சொல்லு”
” உயரமா இருந்தா பிடிக்கும், ரொம்ப குண்டா இல்லாம ‘பிட்’டா இருந்தா பிடிக்கும் ”
” நீ ஒரு பெண் அதனால உனக்கு ஆண்கள பிடிக்கும்னு சொன்னயே, அப்படின்னா உனக்கு குட்டையா, குண்டா இருக்கற ஆண்கள் மேலயும் ஈர்ப்பு இருக்கணுமே, ஏன் இல்லை? ”
“……………” உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை என்னால் ” தெரியல, ஆனா அப்படித்தான். அதுதான் என் விருப்பம் ”
” எக்சாக்ட்லி! அதுமாதிரி தான். ஈர்ப்பு என்பது இயற்கையான விஷயம், நமக்கு அது மேல கட்டுப்பாடு கிடையாது. எதனால ஏற்படுதுனு துல்லியமா சொல்லமுடியாது”
” …………..”
இரண்டு மூன்று முறை கவுன்சிலரை சந்தித்து பேசப்பேச கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. புரிய புரிய, ஏன் வாழ்க்கை கை நழுவி போய்க்கொண்டிருப்பதும் கண்ணுக்கு தெரிந்தது.
” என்னால உனக்கான முடிவ எடுக்க முடியாது லதா. ஆனா நீ விரும்பினா விவாகரத்து வாங்கி, புதுசா ஒரு வாழ்க்கைய தொடங்க முடியும் ” எளிதாக கவுன்சிலர் சொல்லி விட்டாலும், என்னால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. என் கோபம் தீர ரகுவை திட்டித் தீர்த்தேன்.
” எப்படி? எப்படி உங்களுக்கு மனசு வந்தது? உங்க அப்பா அம்மாவ சந்தோஷப்படுத்த என் வாழ்க்கை தான் கிடைச்சதா? ”
” என்னை மன்னிச்சிடு லதா, ஐயம் ஸாரி ”

—-
நடைபாதை முடிந்து மையின் ரோடு வரவே, அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.

என்ன செய்வது? இத்தனை நாள் என்னில் ஏதோ குறை என்று தாழ்வு மனப்பான்மையில் கூனி குறுகியது கூட பரவாயில்லை. எதாவது வழி இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது, எப்படியாவது ரகுவுடன் ஒரு அன்பான, காதலான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற நப்பாசை இருந்தது. இந்த ஜென்மத்தில் அது முடியாது என்று இப்பொழுது நன்றாகவே தெரிகிறது.

விவாகரத்து என்று போனால், என்ன காரணம் சொல்வது ? அப்பா அம்மாவிடம் இதை பற்றி சொன்னால் இந்த வயதான காலத்தில் ஒடிந்து போய்விடுவார்கள்.
நேரடியாக இதை பற்றிச் சொல்லாமல் ரகுவுக்கும் எனக்கும் ரொம்ப பிரச்சனை, ஒத்து வரவில்லை என்று அம்மாவிடம் சொன்னதற்கு, ” ஐயோ லதா! அப்படி எல்லாம் பேசாதே, உங்க அப்பாக்கு தெரிஞ்ச உடைஞ்சு போய்டுவார். நீதான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்” என்று புலம்பினாள் அம்மா.
ரஞ்சனியும் அப்படி தான் நினைக்கிறாள். “டைவர்ஸ் பண்ணலாம் , ஆனா அதுக்கப்பறம்? நம்ம ஊர்ல குழந்தையோட தனியா, இன்னொரு கல்யாணம் , இதெல்லாம் ரொம்ப காம்ப்ளிகேடட். உனக்கு கூடப்பொறந்தவங்க யாரும் இல்லை, வயதான உங்க அப்பா அம்மா தான். நல்லா யோசிச்சு பாரு”
” புரியுது ரஞ்சினி, ஆனா எனக்கு என் வாழ்க்கை மேல எந்த ஈடுபாடும் இல்லை. இப்படியே எத்தனை காலம்? ”
” அப்படி ஏன்பா நினைக்கற? உன் குழந்தை இருக்கு, ரகு இன்னுமும் உன் மேல அக்கரையாதான் இருக்கார்”
” ஐயோ! அதுதான் இன்னும் வேதனையே. ரகுவுக்கு என் மேல இருக்க வேண்டியது வெறும் அக்கரை மட்டும் இல்லை, காதல் ” என்னால் ஆழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை ” யோசிச்சு பாரு, நீயும் கல்யாணம் ஆனவ தான். கணவன் – மனைவிக்கு இடையே இருக்கற அந்த காதலும், காமமும் கலந்த உணர்வு, அது வேற எந்த உறவாலையும் ஏற்படுத்த முடியாத ஒண்ணு. என் வாழ்க்கைல அது என்னனு கூட எனக்குத் தெரியாது. ஒரு ரூம்மேட் கூட இருக்கறதுக்கும், ரகு கூட இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்? எங்க காதலின் வெளிப்பாடா பிறக்கவேண்டிய குழந்தை கூட மத்தவங்களுக்காக , ஒரு கடமை மாதிரி உருவாக்கப்பட்டது. எல்லாமே பொய். ஒரு வேஷம். மத்தவங்களுக்காக வாழற போலியான ஒரு வாழ்க்கை”

ரஞ்சனியலோ, அம்மவாலோ, ஏன் ரகுவாலோ நான் என்ன உணர்கிறேன் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எளிதாக தீர்வு சொல்கிறார்கள். கனவின் அர்த்தம் இப்பொழுது புரிந்தது.

” பொம்பளை நீ தான் பொறுத்து போகணும் ” – அம்மா
” குழந்தைக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ லதா ” – ரஞ்சினி
” நான் கடைசி வரைக்கும் உன்னை பாத்துப்பேன் ரஞ்சினி, பின்ன ஏன் நீ கலங்கற? ” – ரகு.

இந்த யந்திர கதியான போலி வாழ்க்கையை காலம் முழுவதும் வாழ வேண்டும் என்று நினைத்த பொழுது நெஞ்சு அடைத்தது. “என் தலையெழுத்து ஏன் இப்படி இருக்கணும்? நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்?”. என் வாழ்க்கையை ஒரு இரண்டு வருடம் ‘ரீவைண்ட்’ பண்ணி நேர் செய்யமுடியாதா என்று இருந்தது. என் வாழ்க்கையே எனக்கு ஒரு சிறை. இது என்ன கொடுமை? தலை வெடித்து விடும் போல இருந்தது, ” ஐயோ ” என்று அலற வேண்டும் போல இருந்தது. கைகளால் துடைக்க துடைக்க, நிற்காமல் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.
—-
செய்தி : நியூயார்க் டிசம்பர், 17 திங்கள் – குடும்பத்தை கவனிக்காமல், தொழில் மீது மட்டுமே கணவர் கவனம் செலுத்தி வந்ததால், அதிருப்தி அடைந்து மனதளவில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், தனது 10 மாத கைக்குழந்தையுடன் நியூயார்க், ஹட்சன் ஆற்றில் குதித்து விட்டார்.

” நோ !” திடுக்கிட்டு எழுந்தேன் நான். பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அள்ளி அனைத்துக் கொண்டேன். “நோ! என் வாழ்க்கைக்கு முடிவு தற்கொலை இல்லை!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

குழந்தையை மீண்டும் படுக்க வைத்துவிட்டு, தொலைச்பெசியை எடுத்து எண்களை அழுத்தினேன்.
” ஹே லதா! என்ன இவ்ளோ சீக்கிரம்?” என்றார் அப்பா எதிர்முனையில்.
” உங்ககிட்ட பேசணும் போல இருந்ததுபா. அம்மா இருக்காளா? ஸ்பீகர்ல போடுங்க, உங்க ரெண்டு பேர் கிட்டையும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும் ” என்றேன் நான்

Series Navigation