முள்பாதை 27

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ஊருக்கு வந்து பதினைந்து நாட்களாகி விட்டன. ராஜிக்குக் கடிதம் எழுதணும் என்று நினைத்தேனே ஒழிய சாத்தியப்படவே இல்லை. சாரதி இருந்ததால் காலையிலும் மாலையிலும் ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருந்தது. சாரதி வேலை பார்க்கும் கம்பெனிக்காரர்கள் இங்கே பிராஞ்ச் திறப்பதற்காகத் திட்டம் போட்டிருந்தார்கள். அந்தக் கம்பெனியுடன் பார்ட்னராக சேரணும் என்று அம்மாவும், மிஸெஸ் ராமனும் முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள். இங்கே சாரதியைச் சேர்ந்த யாராவது பார்ட்னாராக சேர்ந்தால் சாரதியை டைரக்டாக போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம். எப்படியாவது சாரதி இந்த ஊரில் ஸ்திரப்படும் விதமாகச் செய்து அவனை வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் எண்ணம். இந்த வாய்ப்பு அதற்குத் தோதாக அமைந்திருந்தது.
எங்கள் வீட்டிலும், மிஸெஸ் ராமன் வீட்டிலும் எவ்வளவு நெருங்கி விட்டோம் என்றால் புதிதாக ஏதாவது உணவு தயாரித்தாலோ, ஊறுகாய் போட்டாலோ பரஸ்பரம் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தோம்.
அம்மா வந்ததுமே நான் மெலட்டூருக்குப் போய்விட்டு வந்த விஷயத்தைத் தானே சொல்லி விடுவதாக அப்பா சொல்லியிருந்தார், ஆனால் அம்மா தனியாக வராமல் சாரதியை உடன் அழைத்துக் கொண்டு வந்ததால் சாத்தியப்படவில்லை. அதோடு அம்மா வந்த இரண்டாவது நாளே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் டிரைவர் நாராயணன் விஷயமாக சண்டை ஏற்பட்டது.
“ஒருதடவை வேலையை விட்டு நீக்கிய பிறகு மறுபடியும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாவது? நாம் அவனுக்குத் தாழ்ந்து போய் விட மாட்டோமா?” என்றாள் அம்மா.
“குழந்தை குட்டியுடன் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். மனைவி பிரசவத்திற்குத் தயாராக இருக்கிறாள். கையில் காலணா இல்லை. இந்த நேரத்தில் நாம் அவனுக்கு ஆதரவு கொடுத்தால் நம்மிடம் விசுவாசமாக இருப்பான்.”
“அவனுக்குத் தலைகனம் ஜாஸ்தி. அப்படிப்பட்டவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல்.”
“தலைகனம் வேறு. சுயகௌரவம் வேறு. சுயகௌரவத்துடன் இருப்பவர்களை மதிப்புடன் நடத்த நாம் கற்றுக் கொள்ளணும்.”
“இத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து நான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமா? அவனிடம் உங்களுக்கு அவ்வளவு இரக்கம் இருந்தால் வேறு இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள். நம் வீட்டில் வேலை செய்ய நான் சம்மதிக்க மாட்டேன்.”
“நான் வாக்குக் கொடுத்து விட்டேன்.” அப்பாவின் குரல் திடமாக ஒலித்தது.
“என் பேச்சு என்றால் உங்களுக்கு லட்சியமில்லை.” அம்மா கோபமாகப் பார்த்தாள்.
“நான் சொல்ல வேண்டிய வார்த்தை அது.”
வாக்குவாதம் எல்லை மீறிக்கொண்டிருந்தது. இனி அங்கே இருப்பது சரியில்லை என்று மெதுவாக அங்கிருந்து வெளி§றிவிட்டேன்.
பாரபட்சமின்றி யோசித்துப் பார்த்தால் அப்பா சொன்னதில் நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நாராயணனுக்கு ரோஷமும், அபிமானமும் அதிகம்தான். ஆனால் மற்ற டிரைவர்களை போல் அடிக்கடி லீவு போட மாடடான். காரை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்வான். தன் பக்கம் எந்தத் தவறும் இல்லாதபடி பொறுப்பாக நடந்து கொள்வான்.
மற்ற டிரைவர்கள் அப்படி இல்லை. அம்மாவின் முன்னால் ரொம்பப் பணிவுடன் இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள். அவர்களுடைய நடிப்பில் ஏமாந்து போன அம்மா அவர்களை ஒன்றும் சொல்லமாட்டாள். அதனால் சின்னச் சின்ன நஷ்டங்களும், இடைஞ்சல்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
என்னுடைய அறையில் புத்தகத்தைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்தேன். ரொம்ப நேரம் கழித்து அம்மா வேகமாக என் அறையைக் கடந்து கொண்டே “இதெல்லாம் என் தலையெழுத்து” என்று அழுகையை அடக்கிக் கொண்ட குரலில் புலம்பியது காதில் விழுந்தது.
அன்று இரவு அம்மா அப்பா இருவருமே சாப்பிடவில்லை. இதற்கு முன்பு இப்படி நட்ந்த போதெல்லாம் “எப்போதும் ஏதாவது பிரச்னைதான்” என்று எரிச்சலுடன் என் அறைக்குப் போய் கதவைச் சாத்திக் கொள்வேன். ஆனால் இந்த முறை அப்படி நினைக்கவில்லை. கோபத்தில் இருக்கும் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தால் இன்னும் கோபம் வருமே என்று பயப்படவும் இல்லை.
என்னால் முடிந்த வரையில் அப்பா அம்மாவைச் சமாதானப்படுத்த வேண்டியது என்னுடைய கடமையாகத் தோன்றியது. அதனால் அம்மாவை சாப்பிட வரச்சொல்லி அழைப்பதற்காகப் போனேன். அறைக்கதவு வெறுமே சாத்தியிருந்தது. மெதுவாகத் திறந்து ஓசைப்படுத்தாமல் உள்ளே போனேன். அம்மா முகத்தை மறைத்தபடி முழங்கையைக் குறுக்கே வைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.
அருகில் சென்று மென்மையான குரலில் “அம்மா!” என்று அழைத்தேன்.
அம்மா சட்டென்று கையை எடுத்து கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள். சிவந்து கனன்று கொண்டிருந்த கண்களை உருட்டி விழித்து “உன் சமாதான தூது எதுவும் எனக்குத் தேவையில்லை. முதலில் வெளியே போய்விடு” என்று எரிந்து விழுந்தாள்.
“நான் சமாதான பேச்சுக்கு வரவில்லை அம்மா!”
“பின்னே எதுக்கு வந்தாய்? நான் இருக்கேனா இல்லை செத்தேனா என்று பார்ப்பதற்காக வந்தாயா?”
“அம்மா!”
“என் கோபத்தைத் தூண்டிவிடாதே. ஏற்கனவே எனக்கு எரிச்சலாக இருக்கு. வெளியே போய்விடு.” திரஸ்காரமாகச் சொல்லிவிட்டு அம்மா மறுபடியும் முழங்கையை நெற்றியின் மீது வைத்துக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அம்மாவின் உள்ளமும், உடலும் நான் வெளியேறுவதற்காக எரிச்சலுடன் காத்திருப்பது போல் தோன்றியது.
அன்பையும், பிரியத்தையும் மனதில் நிரப்பிக் கொண்டு அம்மாவை அழைக்க வந்தவள் ஈட்டியால் குத்துவதுபோல் அந்தப் பேச்சைக் கேட்டதும் சுருண்டு போய் விட்டேன். மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். தோல்வியுற்ற என் மனதில் ஏமாற்றம் பரவியது. அப்பாவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். நேராக அப்பாவின் அறைக்குச் சென்றேன்.
அப்பா ஆ·பீஸ் ரூமில் நாற்காலியில் அப்படியே அமர்ந்திருந்தார். நினைவு வேறு எங்கேயோ இருப்பது போல் சூனியத்தை வெறித்தப் பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த காலத்தில் நடந்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் அப்பாவின் மனதில் பசுமையாக இருந்திருக்க வேண்டும்.
“அப்பா!” மெதுவாக அழைத்தேன்.
திடுக்கிட்டாற்போல் திரும்பிப் பார்த்தார். சட்டென்று வயது கூடிவிட்டது போல் முகத்தில் சுருக்கங்கள் தென்பட்டன. எப்போதும் கம்பீரமாகக் காட்சி தரும் அப்பா அந்த நிமிடம் பார்க்கும் போது காட்டில் வழி தவறி விட்ட பயணியைப் போல் தத்தளித்துக் கொண்டிருந்தார். அம்மாவினால் மன அமைதியை இழந்துவிட்ட காரணத்தினால் அப்பா வயோதிகத்தின் பக்கம் வேகாமக சாய்ந்து கொண்டிருப்பது என்னால் உணர முடிந்தது.
“அப்பா!”
“என்னம்மா?”
“சாப்பிட வாங்க.”
“எனக்குப் பசியாக இல்லையம்மா.”
நான் பிடிவாதம் பிடிப்பதுபோல் “நன்றாக இருக்கு. அம்மாவுக்கும் பசியில்லை. உங்களுக்கும் பசியில்லை. எனக்கென்னவோ கொள்ளை பசி பசிக்கிறது. நீங்க இரண்டு பேரும் சாப்பிடாமல் நான் மட்டும் எப்படி சாப்பிடுவது?” என்றேன்.
அப்பா என்னை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தார். என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ. உடனே எழுந்து கொண்டு “வா போகலாம்” என்றார். இருவரும் உணவு மேஜை அருகில் வந்தோம். திருநாகம் மாமி இல்லாததால் புது சமையல்காரி எட்டுமணிக்குள் சமையலை முடித்து மேஜைமீது வைத்துவிட்டுப் போய்விட்டாள். எங்க இருவருக்கும் தட்டை வைத்துப் பரிமாறினேன். அப்பா கையை அலம்பிக் கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டார்.
“நீங்க சாப்பிடுங்க. இதோ வருகிறேன்.” ·பிரிஜ்ஜிலிருந்து இரண்டு ஆப்பிளை எடுத்து கத்தியால் நறுக்கத் தொடங்கினேன்.
“எனக்கு எதுவும் வேண்டாம்மா. சாம்பார் மட்டும் போதும்.” அப்பா ஒரு கரண்டி சாம்பார் போட்டுக் கொண்டு சாப்பிடத் தொடங்கினார்.
நான் கத்தியால் ஆப்பிளின் மேல்தோலை சீவிக் கொண்டே “அப்பா! நேற்று இரவு எனக்குக் கனவு வந்தது” என்றேன்.
“என்ன கனவு?” ஆர்வத்துடன் கேட்டார். அப்பாவின் சுபாவமே அப்படித்தான். நான் என்ன சொன்னாலும் கைவேலையை நிறுத்திவிடு சிரத்தையுடன் கேட்டுக் கொள்வார்.
“மெலட்டூர் மங்கம்மா நம் வீட்டுக்கு வந்தாங்களாம். டேய் ஆனந்தா! என்னை நினைவு இருக்காக இல்லையா என்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாளாம்.”
அப்பா சிரித்துவிட்டார். “மங்கா அசாத்திய கெட்டிக்காரி. அப்படிச் செய்தாலும் செய்வாள்.”
“ஒருக்கால் உண்மையிலேயே அந்தம்மாள் நம் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வீங்க டாடீ?”
அப்பா பதில் சொல்லவில்லை.
எனக்குக் கனவு வந்த விஷயம் பொய்தான் என்றாலும், கற்பனையாக ஜோடித்துச் சொல்லப்பட்ட விஷயம்தான் என்றாலும் அப்பாவின் முகத்தில் வேதனை கொஞ்சம் குறைந்ததைப் பார்த்தபோது திருப்தியாக இருந்தது.
“என்ன டாடீ? நெய் போட்டுக் கொள்ளாமலேயே சாப்பிடறீங்க. அப்பளமும் போட்டுக் கொள்ளவில்லை.” ஆப்பிள் துண்டங்களை தட்டில் அப்பாவின் பக்கத்தில் வைத்துவிட்டு நெய் கிண்ணத்தை எடுத்து அப்பாவுக்குப் பரிமாறினேன்.
“போதும் போதும்” என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் வாசல் அருகில் சந்தடி கேட்டது. உள்ளே வரப்போன அம்மா திடீரென்று வாசல் அருகிலேயே நின்றுவிட்டாள். கோபமும், ரோஷமும் ஒன்றாகச் சேர அம்மாவின் உடல் ஆவேசத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது. புருவங்களை உயர்த்தி “பேஷ்!” என்றாள்.
நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நெய் கிண்ணத்தைக் கீழே வைத்துவிட்டு அம்மாவின் தட்டையும் எடுத்து வைத்தேன்.
அம்மா உள்ளே வரவில்லை. நின்ற இடத்திலிருந்து ஒரு அடி கூட முன்னால் வைக்கவில்லை. கதவின் மீது சாய்ந்தபடி நின்றுகொண்டு நெருப்பை உமிழும் விழிகளால் என் பக்கம் பார்த்தாள்.
“எவ்வளவு கரிசனம் மீனா உனக்கு? அருகில் நின்று கொண்டு சுயமாக பரிமாறி உபசாரம் செய்கிறாய். நானும்தான் பட்டினி இருக்கேனே? அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போனதற்கு நான் என்ன பாவம் செய்தேன்?”
“அம்மா!”
“ஒரு பேச்சுக்காவது சாப்பிட வரச்சொல்லி என்னை அழைத்தாயா? நான் என்ன செய்து விட்டேன் என்று உனக்கு என் மீது இவ்வளவு பகை?”
“அம்மா!” இயலாமையுடன் அழைத்தேன்.
“என் மனம் எப்போதும் உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறதே? உன் சுகத்திற்காக, உன் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் உழைத்துக் கொண்டு இருக்கிறேனே? உன் வாயிலிருந்து ஒரு ஆறுதல் வார்த்தை கேட்க எனக்குக் கொடுப்பினை இல்லையா? அப்படி என்ன பாவம் செய்து விட்டேன்?”
நான் அப்பாவின் பக்கம் பார்த்தேன். அப்பா என் பக்கம் பார்க்கவில்லை. தட்டைப் பார்த்துக் கொண்டு விரல்களால் அளைந்து கொண்டிருந்தார்.
அம்மா திடீரென்று கதவின்மீது தலையால் முட்டிக்கொள்ளத் தொடங்கினாள். “எனக்கு யாருமே இல்லை. யாருக்குமே என்னுடைய தேவையில்லை. நான் உயிரோட இருந்தாலும், செத்தாலும் ஒன்றுதான்.” ஹோவென்று அழுதாள்.
“அம்மா!” சட்டென்று ஓடிப் போய் அருகில் சென்று தடுக்கப் போனேன். அம்மா வேகமாக என் கைகளைத் தள்ளிவிட்டாள்.
“என்னுடைய உயிர் நீதான் என்றும், என்னுடைய உலகமும் நீதான் என்று உங்க அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். என்னை எதுவும் செய்ய முடியாமல் உன்னை என்னிடமிருந்து பிரித்து என் மீது பகை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். மீனா! எவ்வளவு முட்டாளாக இருக்கிறாய்? என் வயிற்றெரிச்சல் உனக்கு எப்போ புரியப்போகிறது?”
“அம்மா! என்னம்மா இது?” அம்மாவை வலுக்கட்டாயமாக என் பக்கம் திருப்பிக் கொண்டேன். அம்மா என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு சிறு குழந்தையைப் போல் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.
எனக்கு எப்படியோ இருந்தது. அப்பா பாதி சாப்பாட்டிலேயே எழுந்து கை அலம்பிக் கொண்டு போய்விடார்.
அம்மா அழுதுகொண்டே சொன்னாள். “மீனா! என்னைப் போன்ற துரதிர்ஷ்டம் பகையாளிக்கும் வரக்கூடாது. கடவுள் ஒரு பெண்ணுக்கு எது கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மனதைப் புரிந்துகொள்ளும் கணவனைக் கொடுக்கணும். அப்படி இல்லை என்றால் வாழ்க்கையே நரகம்தான்.”
அம்மா சொன்னது எனக்குப் புரியவில்லை. அம்மாவுக்குத் திருமணம் முடிந்து ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. இத்தனை வருடங்கள் நெருங்கிப் பழகியும் அப்பாவின் மற்றொரு பக்கத்தை அம்மாவால் பார்க்க முடியவில்லை என்றால் வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருந்தது. இப்போ எனக்குப் புரிகிறது. இருவருக்கும் நடுவில் எப்படி வந்ததோ தெரியாது, கருத்து வேற்றுமை என்ற குறுக்குச் சுவர் ஏற்பட்டு விட்டது. இருவருமே அடுத்த நபர் சுவரை உடைத்துக் கொண்டு தன் பக்கம் வரட்டும் என்று நினைக்கிறார்கள். தான் அந்தக் காரியத்தைச் செய்தால் அடுத்தவர் தன்னை தாழ்வாக மதிக்கக் கூடும் என்ற பயம் இருவருக்குமே இருக்கிறது. அதனால் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
ஆழமாக யோசித்துப் பார்த்தால் குறை அம்மாவிடம்தான் இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது. அப்பா போன்ற நல்லிதயம் படைத்தவர், கருணை கொண்டவர் ஆயிரத்தில் ஒருத்தர் கூட இருக்க மாட்டார்கள். அம்மாவை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு இருப்பதாலோ என்னவோ உலகம் அநியாயமாக தனக்கு “பெண்டாட்டிதாசன்” என்றும் “அம்மாஞ்சி” என்றும் கொடுத்த பட்டங்களை அப்பா ஏற்றுக் கொண்டு மௌனமாக இருந்தார். உண்மையிலேயே அவர் நினைத்திருந்தால் அந்த பட்டங்களைக் காணாமல் அடித்திருக்கலாம். ஆனால் அதற்காக அம்மாவை அவர் அடக்கி, அடிமையாக நடத்த வேண்டியிருக்கும். மற்றவர்களைவிட தான் உயர்ந்தவள் என்ற அகம்பாவம் ரத்தத்திலேயே ஊறிவிட்ட அம்மாவுடன் இத்தனை வருடங்களாக அப்பா குடித்தனம் நடத்தி வருகிறார் என்றால் அது அவருடைய பொறுமைக்கு எடுத்துக்காட்டு. அகம்பாவம் அம்மாவின் கண்களை மறைத்துக் கொண்டு அப்பாவின் உண்மையான சொரூபத்தை அடையாளம் காண முடியாமல் தடுக்கிறது. இருவருக்குமிடையே இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்து வேற்றுமை என்ற தடுப்புச் சுவர் எவ்வளவு பலவீனமான அடிகல்லின் மீது எழுப்பப்பட்டு இருக்கிறதோ இபபொழுதுதான் எனக்குப் புரிகிறது.
நியாயமாகப் பார்த்தால் நாராயணன் விஷயத்தில் அம்மா இவ்வளவு ரகளை செய்வது அதிகப்படியாகத்தான் தோன்றியது. நான்கு நாட்கள் வேலைக்கு வைத்துக் கொண்டு அவனிடம் ஏதோ ஒரு குறையைச் சுட்டி காட்டி அப்பாவிடம் சொல்லிவிட்டு அனுப்பிவிட்டால் விஷயம் முடிந்து போயிருக்கும். வெளி விஷயங்களில் மிக சாமர்த்தியமாகச் செயல்படும் எத்தனையோ பேர், வீட்டு விஷயங்களில் சில சமயம் முட்டாளாக நடந்து கொள்வார்கள்.
அம்மாவின் அழுகை கொஞ்சம் குறைந்தது. நான் நயமான குரலில் சொன்னேன். “சற்று முன் நான் உன் அறைக்கு வந்தது உன்னை சாப்பிட வரச்சொல்லி அழைப்பதற்காகத்தான். உன்னுடைய மூட் சரியாக இல்லை என்று புரிந்ததும் தொந்தரவு செய்யாமல் திரும்பி விட்டேன்.”
“உன் உதட்டளவு உபசாரங்கள் எனக்குத் தேவையில்லை. தலைவலி மண்டையைப் பிளக்கிறது. காபி கலந்து குடிப்போம்னு வந்தேன். சாரிடான் போட்டுக் கொள்ளணும்.”
“ஆகட்டும் அம்மா! நீ போய் படுத்துக் கொள். ஐந்து நிமிடங்களில் காபி கலந்து எடுத்து வருகிறேன்.”
“அவ்வளவு கஷ்டம் உனக்கு எதுக்கு?”
ஈட்டி எரிவதுபோல் அம்மா வீசிய வார்த்தைகளை மௌனமாக உள் வாங்கிக் கொண்டேன். “எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை அம்மா! உங்களுக்கும் அப்பாவுக்கும் என்னால் ஏதாவது சின்ன காரியம் செய்ய முடிந்தாலும் எனக்கு மலையளவுக்கு சந்தோஷமாக இருக்கும். சமையல்காரம்மா இருந்துவிட்டால் நான் வேண்டுமென்று கேட்டாலும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காது.”
அம்மா மேற்கொண்டு எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள்.
உணவு பாத்திரங்களை மூடி வைத்தேன். பாதி சாப்பாட்டில் எழுந்து போன அப்பாவின் தட்டை எடுத்து சிங்கில் போடும்போது என்னையும் அறியாமல் விழிகளில் நீர் சுழன்றது. சாப்பிட வரச்சொல்லி அப்பாவை வற்புறுத்தாமல் விட்டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். அம்மா அப்பா இருவரும் இப்படி சண்டை போட்டுக்கொண்டு சாப்பிடாமல் இருந்த நாட்கள் நிறையவே இருந்தன. அப்பொழுதெல்லாம் எனக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது. ஆனால் இன்று தாங்க முடியாத வேதனை ஏற்பட்டது. இந்த உலகில் ஒரு பிடிசோறு கிடைத்தால் போதும் என்று எத்தனையோ ஏழைகள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வசதிகள் இருந்தம் அவற்றை அனுபவிக்க முடியாமல் இது என்ன கொடுமை? நூற்றுக்கு எண்பது பேர் இப்படி தாமாகவே இல்லாத கஷ்டங்களை வரவழைத்துக் கொண்டு வாழ்க்கையில் திருப்தி இல்லையே என்று ஏங்குவார்களோ?
ஸ்டவ்வைப் பற்ற வைத்து அம்மாவுக்காக ஸ்ட்ராங்காக காபி கலந்தேன். இன்னும் கொஞ்சம் பாலை சுட வைத்து டம்ளரில் ஊற்றி மேடை மீது ஒரு ஓரமாக வைத்தேன்.
நான் காபி கொண்டு போனபோது அம்மா கட்டில் மீது அமர்ந்து கிளப்புக்கு சம்பந்தப்பட்ட பேப்பர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்ட போதெல்லாம் மனதை வேறு விஷயத்தில் செலுத்தி அந்த வேதனையை மறக்க முயற்சி செய்வதை இதற்கு முன் பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.
மேஜை டிராயரிலிருந்து தலைவலி மாத்திரையை எடுத்து அம்மாவிடம் தந்தேன். அதைப் போட்டுக் கொண்டு காபியைக் குடித்தாள். மேஜை விளக்கின் வெளிச்சத்தில் அம்மாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.
எப்போதும் சுறுசுறப்பாக, பிரகாசமாக இருக்கும் அம்மாவின் முகம் இப்பொழுது வெளிறி விட்டதுபோல் தென்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏர்போர்டில் சாரதியின் பக்கத்தில் பத்து வயது குறைந்தவள் போல் உற்சாகமாக தென்பட்ட நபர் இவள்தானா என்று தோன்றியது.
காபியைக் குடித்துவிட்டு கோப்பையை என்னிடம் கொடுத்த அம்மா அப்படியே சரிந்து தலையணை மீது தலையைச் சாய்த்தாள். கண்களை மூடிக் கொண்டே “அந்த பேப்பர்களை மேஜைமீது வைத்துவிட்டு விளக்கையும் அணைத்து விட்டு போய்விடு” என்றாள்.
அம்மா சொன்னது போலவே பேப்பர்களை எடுத்து வைத்துவிட்டு கொசுவலையை இறக்கிவிட்டேன். விளக்கை அணைத்துவிட்டு, கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தேன். சமையல் அறையில் டம்ளரில் பாலை வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. சட்டென்று கீழே இறங்கிச் சென்றேன்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அப்பாவைத் தேடிக் கொண்டு ஆபீஸ் ரூமுக்குப் போனேன். அப்பா அங்கே இல்லை. படுக்கை அறையின் பக்கம் போனேன். என்றும் இல்லாத விதமாக இன்று உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
கதவைத் தட்டினேன்.
“யாரு?”
“நான்தான் மீனா.”
அப்பா எழுந்து வந்து கதவைத் திறந்தார். என் கையிலிருந்த ட்ரேயை பார்த்து “என்னம்மா?” என்றார்.
“இந்த ஆப்பிள் துண்டங்களை சாப்பிட்டுவிட்டு பாலை குடித்து விடுங்கள். நான் வேறு எதுவும் கேட்கப் போவதில்லை” என்றேன்.
“நீ சாப்பிட்டாயா?”
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“ஏன்?”
“பசி இல்லை டாடீ.”
எனக்கு வழி விடுதற்காக அப்பா நகர்ந்துகொண்டார். நான் உள்ளே வந்து ட்ரேயை ஸ்டூல் மீது வைத்துக் கொண்டிருந்த போது அப்பா பெருமூச்சு விடுவதை என்னால் உணர முடிந்தது.
அப்பா ஆப்பிள் துண்டங்களை பாதிக்கு மேல் என்னிடம் கொடுத்ததோடு அல்லாமல், நான் சாப்பிடும் வரையில் விடவில்லை. பாலையும் டவராவில் தனக்காக கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீது பாலை குடிக்கச்சொல்லி வற்புறுத்தினார். நான் பாலை அருந்திக் கொண்டிருந்த போது திடீரென்று அப்பா சொன்னார்.
“மீனா! என்னுடைய விருப்பம் ஒன்று இருக்கு. நீ அதை நிறைவேற்றி வைப்பாயா?”
“சொல்லுங்க டாடீ.”
“கூடிய சீக்கிரம் நீ கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.”
வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். அப்பாவின் கண்களில் வேதனை குடிகொண்டிருந்தது.
“ஆமாம் மீனா! உன்னுடைய கல்யாணம் சிக்கிரமாக நடக்க வேண்டும்.”
“ஆனால் அம்மாவுக்கு என்னை வேறு வீட்டுக்கு அனுப்பும் எண்ணம் இல்லையே?”
“நீ ஏற்படுத்திக்கொள்.”
“எனக்குக் கணவனாக வரப் போகிறவன் வீட்டோடு மாப்பிள்ளையாக வருவதற்கு சம்மதித்தால்?”
“அப்படிப்பட்ட நபரை நீ கனவில்கூட ஏற்றுக் கொள்ளாதே.”
“என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு இருக்கும் என்று நினைக்கிறீங்களா?”
“இருக்கும் விதமாக நீ பார்த்துக் கொள்ளணும்.”
சற்று நேரம் கழித்து அப்பாவின் அறையை விட்டு வெளியேறினேன். என் மனதில் கவலையும், வருத்தமும் பரவியிருந்தன. அப்பா எனக்குக் கொடுத்த அறிவுரையை, அவருடைய விருப்பத்தை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
எனக்கு என்று ஒரு வீடு இருக்க வேண்டும். அந்த நிழலில் அப்பா அம்மா இருவரும் இளைப்பாற வேண்டும். என்னுடைய வீட்டில் நான் யாருடைய அதிகாரத்திற்கும், ஆணைகளுக்கும் தலைவணங்க வேண்டியதில்லை என்பது அப்பாவின் அபிப்பிராயம். நான் சுந்திரமாக, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று அப்பா மனப்பூர்வமாக விரும்புகிறார்.
அறைக்கு வந்து கட்டில் மீது படுத்துக் கொண்டேனே தவிர ரொம்ப நேரம் வரையில் உறக்கம் வரவில்லை. ஜன்னல் வழியாக வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ களைப்பாக இருந்தது. இந்த வீட்டில் எதற்கும் குறையில்லை. எல்லாமே இருக்கின்றன, மனஅமைதியைத் தவிர என்று தோன்றியது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்