பள்ளத்தாக்கு

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஜேம்ஸ் லாஸ்டன் (இங்கிலாந்து) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்


அப்பா பார்க்கரும் மகன் பார்க்கரும் அறிமுகம் செய்துகொள்ள உள்ளே வந்தார்கள். அது ஐந்து வருடம் முன்பு. நாங்கள் புதிதாக அந்தப் பகுதிக்குக் குடி வந்திருந்தோம். அப்பா பெயர் தீன். பேசவே திக்கினான், மெல்லமாய் அவன் பேசுவது கண்றாவிக் காட்சியாய் இருந்தது. ஆனால் ரிக் அரட்டைக்காரன். அவன் கண்கள் எங்களையும் நாங்கள் இறக்கியிருந்த சாமான் செட்டுகளையும் மேய்ந்த வண்ணம் இருந்தன. கூர்த்த நாசி. உருட்டை மண்டைமேல் சிவப்பாய் உருமா.. மிருதுவான வழுக்கலான உற்சாகக் குரல். சிறு இசைத்துள்ளல் அதில் இருந்தாப் போலிருந்தது. இன்ன வேலைன்னு இல்லாமல் தோட்ட வேலை, புல்வெளி பராமரித்தல், சித்தாள் வேலை என அவன் பாடு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் லயித்துச் செய்வது மரம் சம்பந்தப்பட்ட வேலை. எத்தனை சிரமமானவேலைன்னாலும் சலிக்காமல் செய்வான். கொக்கியும் சொரசொரப்பான பூட்சும் போட்டுக்கொண்டே மரமேறி, வீட்டுக் கூரையை உரசிக் கொண்டிருக்கும் கிளைகளைத் தரித்துப் போடுவான். புயல் ஆடி அடங்கிய தோப்பில், ஒன்றில் ஒன்று தோளிடித்துச் சாய்ந்து கிடக்கும், இலையும் கொப்பும் இழந்து பரிதாபமாக நிற்கும் மரங்களைப் பிரித்து வெட்டி பாரலாரியில் எடுத்துப் போய் விறகாக வகிர்ந்து தருவான். இந்த மாதிரி வேலை, என்ன வேலையின்னாலும் கூப்டுங்க எசமான், நான் இருக்கேன். என் வேலைதான் அது.

நானும் என் பெண்டாட்டியும் வான்டர்பெக் பள்ளத்தாக்கின் ஏற்றத்தில் காரில் போகிறோம். அந்த வழியே ரெண்டு குழந்தைகள் அழுதபடி போய்க் கொண்டிருந்தன. என்ன ஏது என்று விசாரித்தோம். ரெண்டும் சண்டை போட்டபடி வந்ததால் அவர்கள் அம்மா அவர்களைக் காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு வீடுவரை நடந்தேவர தண்டனை தந்திருந்தாள்.

அவர்கள் வீடு, அது ரிக்கின் இல்லம். அவர்கள் அம்மா ஃபயியை ரிக் ரெண்டுமூணு வாரம் முந்திதான் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் பட்டாளத்தின் தெருக்கும்மாளத்தில் பார்த்தான். அவள் தனது ரெண்டு குழந்தைகளை கூடக்கூட்டிக் கொண்டு இவனுடன் வந்தாள். அவன் அப்பா அதற்குமுன்னாலேயே அங்கேயிருந்து தனி வீடு பார்த்துப் போயிருந்தார். நாங்கள் குழந்தைகளை அவர்கள்வீட்டில் இறக்கி விட்டபோது அவள் மட்டுந்தான் இருந்தாள். அவள் அளித்த தண்டனையில் நாங்கள் குறுக்கிட்டதைப் பற்றி அவள் கண்டுகொள்ளவில்லை. கருமையான நீள நீள முடிகள் அவளுக்கு. அம்மித் தோல்.. பளீரென்ற நீலக் கண்கள். மேல் உதட்டில் வியர்வை முத்து. அவள் ரொம்பப் பேசவும் இல்லை எங்களுடன்.

அடுத்த வருடம் அவர்களுக்கு முதல் குழந்தை, ஒரு பெண் பிறந்தது. வேட்டைத் தூளியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு ரிக் வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருப்பான். வண்டியைச் சீரமைக்கும் வேலையோ, ரம்பத்தைக் கூராக்கும் காரியமோ, ஏதாவது. நல்ல அப்பாவாக இருக்கவே அவன் விரும்பினான், ஃபயியின் இரு குழந்தைகளிடமும் அவன் முதல் நாளில் இருந்தே வேத்துமுகம் காட்டவில்லை. மூணு குழந்தைகளின் அப்பா என்பதற்கான பாடுகள் அதிகம் என அவன் உணர்ந்தான். ஆண்டர்சன்வில் மலையுடைக்கிற வேலைகளிலும், நகரத்தில் எதும் கம்பி வெட்டும் கட்டுமான வேலைகளிலும் சிரமப்பட்டுவிட்டு அவன் வீடு வருவான். சாப்பிடுவான். பளீரென்று ஒளி பாய்ச்சும் வாசல் விளக்கைப் போடுவான். மரத்துண்டுகளை விறகாக விடிய விடிய வெட்டிப்போடுவான், இப்படியாய் மேலும் பணம் ஈட்ட வேண்டியிருந்தது. ஒரு சுமை எழுபது டாலர் என விற்றான், அப்ப அது ரொம்ப மலிவுதான். ஒரு கட்டு ரெண்டு கட்டு என்று பொதுவாக நான் அவனிடம் வாங்குவேன், எங்கள் கணப்புக்கு. ”சாமியோட பாடெல்லாம் எப்டிக் கழியுது?” என்று என்னிடம் ஒருநாள் அவன் விசாரித்தான். ”எப்டியோ வண்டி ஓடிட்டிருக்கு…” என்றேன் சிறு புன்னகையுடன். ”நல்லாத்தான் ஓட்டறீங்க நீங்க” என்றான் எங்கள் புதிய காரைப் பார்த்தபடியே.

ஃபயிக்காக அவன் ஒரு கார் வாங்கினான். அந்தக் கடனை அடைப்பதற்காக இராத்திரி வெகு நேரம் படாதபாடு பட வேண்டியிருந்தது. விறகைப் பிளக்கிற மிஷின் ஒன்றையும் வாடகைக்கு எடுத்து, வீட்டையே மறிக்கிற அளவு விறகை வெட்டிக் குவித்தான். அவன் பேச்சில் ச், என ஒரு அலுப்பு வந்திருந்தது. குடும்ப லகானை இழுத்துப் பிடிக்கவே திணறியது. பயமாய் இருந்தது. அடடா, ஒரு இளமைத் துடிப்பான வாலிபன், தன் ஆசைகளையெல்லாம் ஓரங் கட்டிவிட்டான். குடும்பம் என்று தன்னைக் காத்து, மனைவியை, தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றி, பசியில் வாடாமல் பார்த்துக்கொள்ள தினம் தினம் போராடினான் அவன். வக்ரமும் வசைச் சொற்களுமாய் அவன் காறித் துப்பியபடி இருந்தான். தன்னை அவமானப்படுத்திய சிறுமைப்படுத்திய முதலாளிகளையும் பண்ணையாட்களையும் நினைத்து அவன் எதாவது வைது தீர்ப்பான். யார்ட்ட, என்ட்டயா, பளார்னு பதில் குடுத்துற மாட்டேன்… எனப் பினாத்துவான் தனக்குள். ஹான்னாஃபோர்டில் அவளுக்கு இரவுப் பணி கிடைத்தது. அவள் வீடு திரும்பத் தாமதமானால் கடை மேனேஜரை ஃபோனில் கண்டபடி பேசினான். ”எலேய் லவ்டகபால், என் பெண்டாட்டியை சோலிநேரம் முடிஞ்சா கரீட்டா வீட்டுக்கு அனுப்பிறணும்.” இப்படியே சொன்னதாக என்னிடம் அவன் ஒரு வக்ரத் திருப்தியுடன் சொன்னான். கொஞ்ச நாளில் அவளுக்கு அந்த வேலையும் போச்சு.

குன்றில் மேடேறியும் இறங்கியுமாக அவன் பாரலாரியை எடுத்துப்போகையில் கல்துருத்திய தரையிலிருந்து மேகம்போல புழுதி எழும்பியது. கடும் உழைப்புக்குப் பின் ஆசுவாசம் வேண்டியிருந்தது அவனுக்கு. ஆறு டப்பி பீர் பொதிந்த பெரிய பொட்டலமாய் எடுத்துக்கொண்டு எதும் மேட்டுப் பக்கமாய்ப்போய், ஓக் மரத்தடியிலோ, சருகுகளில் அமர்ந்தோ மொந்தையாய்க் குடித்துக்கொண்டிருப்பான். மோல்சன் காலி டப்பாக்களை அவன் விட்டெறிந்திருப்பதை கற்பாறைகளுக்கிடையே பார்க்கலாம். மறு பக்கத்தில் சின்னதாய் மரக்குடில் ஒன்று தான் செய்து கொண்டிருப்பதாக ஒருநாள் சொன்னான். புறம்போக்கு நிலம். யார் கண்டுக்கப் போறா, என்று அவனுக்கு அலட்சியம். எதுக்கு அங்க கட்டறே, என நான் அவனைக் கேட்டேன். தோளைக் குலுக்கிக்கொண்டான். ”சும்மாதான். நான் அடிக்கடி போக வர எனக்குன்னு ஓரு ஜாகை…”

அந்தப் பக்கமாய் ஒரு நாள் ஒரு சிங்கத்தைப் பார்த்ததாக அவன் சொன்னான்.

”இந்தப் பக்கம் ஏதுடா அதெல்லாம்?” நாங்கள் கேள்விப் பட்டிருந்தோமே யழிய யாருமே பார்த்தது இல்லை. யாராவது அதைப் பார்த்தாகச் சொல்கிறதுதான், கட்டுக்கதைகள் அவை. இந்தப் பக்கம் சிங்கங்கள் கிடையாது.

நான் நம்பவில்லை என அவனுக்குப் புரிந்தது. ”நிசந்தான். வேணா என் அறை வரை வந்து பாருங்க. அந்த மூதேவி என் வாசல்ல வந்து நின்னது, நல்ல பெரிய எருமை கணக்கா! சேத்துல அது விட்டுப்போன கால்தடத்தை அப்டியே எடுத்து பாடம் பண்ணி வெச்சிருக்கேன். காயட்டும், பிறகு ஒருநாள் காட்டறேன்.”

தெருவின் கட்டக் கடைசி வீடு அவனுடையது. சின்ன வயசில் இருந்தே வான்டர்பெக் பள்ளத்தாக்கை முழுசுமாக பாத்யதை கொண்டவன் அவன். மான்களை, நெருப்புக் கோழிகளை அங்கே அவன் வேட்டையாடினான். ஸ்புரூஸ் குகைக்கும் டோனல் குன்றுகளுக்கும் இடைப்பட்ட நதிப்படுகையில் அங்கங்கே பாறைச்சுனைகள். அந்தப் பக்கத்தில் தூண்டில்போட்டு மீன்களை, தவளை தேரைகளை தேடித் திரிந்தான். பீர் போத்தலும், எண்ணெய் கசிகிற பாடாவதி ஜீப்பும் அவனுடையவை. சுற்றுச்சூழல் அக்கறையே கிடையாது. வெட்டி வீழ்த்தப்பட்ட மரப்பகுதிகளை அதில்தான் போட்டு லாரிக்கு எடுத்து வருவான். அதன் நாராசச் சத்தம், புகைத் துப்பல். பனிவண்டியோடியதின் கீறல் தடங்கள்… இதையெல்லாம் விடுங்கள். அந்த மரங்களைப் பற்றி அவன் நிறையத் தெரிந்து வைத்திருந்தான். அவற்றை அவன் நேசித்துப் பிரியம் காட்டிவந்தான். ரொம்ப காலமாக அங்கே இருக்கிற ஒரு கல்உடைக்கும் களத்துக்கு அவனோடு நான் ஒருநாள் போய்க் கெண்டிருந்தபோது, அவன் அந்த மரங்களைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் சொன்னான். நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன், அவனோடு கூடப்பேசும் அளவு எனக்கு அந்த மரங்களைத் தெரியாது. எனக்கு எல்லா மரங்களும் பழுப்பும் பச்சையுமான உருவங்களாகத்தான் இருந்தன. அவன் ஆர்வமாய் ஒண்ணொண்ணைப் பற்றியும் பேசப் பேச என்னைச் சுற்றி புதுசு புதுசாய் நட்சத்திரங்கள் பளிச் பளிச்சென்று முளைத்தன. சட்டென்று என்னைச் சுற்றிலும் நட்சத்திர அணிவகுப்பு. ”பார்த்தீங்களா இது ட்ரௌட் லிலி!” குபுக்கென்று ஒரு தனிப்பாறையிலிருந்து ஒரு கொத்து மஞ்சள் மலர்கள் தலைநீட்டின. ”இது ஆட்டுப் பாளை.” நாலடி தள்ளி ஒரு வெள்ளி மினுங்கலில் நீளும் தாவரத் தண்டு. ”கிரீடச் செடி பாத்தீங்களா? இதை ராஜா சரிகைத் தொப்பில குத்திக்குவார்…” கடும்பச்சையான ஒரு குற்றுமரத்தைக் காட்டி உற்சாகமாய்ச் சொன்னான். ”இளவேனில் முடிகிற சமயம் இவை ஜோராய்ப் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும். ஒரு மாசம் ஒண்ணரை மாசம்தான் அதுவும்… இப்படி நெருக்கமா அவை வளரும்போது வழுக்குத் தாவரம்னு சொல்லுவாங்க இதை. சில இன்னுங் குட்டையாய் மணி மணியாப் பூத்துத் தொங்குவதும் பார்க்கலாம். கடும் விஷமாக்கும். இதன் பூலேர்ந்து எடுக்கிற தேன் கூட விஷத் தன்மை கொண்டதுதான். இங்க பாருங்க முடிச்சாட்டம். இதை வெட்டி, புகைக்க குழாய் செய்துக்கலாம். எங்கய்யா கூட ஒண்ணு வெச்சிருக்காரு…”

அவன் காலத்திலேயே தெரு அவன் வீட்டின் எல்லைதாண்டி ஒரு மைல் ஒண்ணரை மைல் மேடேறி விட்டது. நிலம் இருபது இருபது ஏக்கராக்களாக விற்கப்பட்டன. மரத்தட்டிகள், உள்ளே நீச்சல் குளங்கள். வேலிகள். ”வேட்டையாடக் கூடாது” பலகைகள் வருடாவருடம் மலையேற்றப் பாதையில் அதிகரித்த வண்ணமிருந்தன. எல்லாவற்றையும் அவன் வெறுத்தான். ஒரு விடியலில் அவனுடன் நான் தெருப்பக்கமாய் நின்று பேசிக்கொண்டிருந்தேன். அவன் கடுப்பாக இருந்தான். தனக்கு அடுத்த தாழ்தரையில் கோரா சாஸ்டைனின் நிலத்தில் அஸ்திவாரம் போட வந்திறங்கிய மண்கொத்தும் யந்திரம். கோரா, அவளே ஓட்டைக் குதிரையில் தடக் புடக்கென்று அப்போது அந்தப் பக்கமாக வந்தாள். ராத்திரி அவளது விருந்தாளியின் கார் பள்ளத்தில் மாட்டிக் கொண்டபோது தூக்கி வெளியெடுத்து அவன் மீட்டதற்கு அவள் அவனிடம் நன்றி சொன்னாள். பரந்த ஒரு புன்னகையுடன் அதெல்லாம் பரவாயில்லை என்றும், அந்த ராத்திரில அவள் அவனைக் கூப்பிட்டதைப் பத்தி ஒண்ணுமில்லை, என்றும் அடக்கமாய்ச் சொன்னான். ”நல்ல பொம்பளை.” அவள் தாண்டிப் போவதைப் பார்த்தபடி அவன் சொன்னான். அப்போது அவன் மனசில் அதுவரை இருந்த ஆற்றாமை கரைந்திருந்தது.

அவனுக்கும் ஃபயியிக்கும் அடுத்த குழந்தை, இதுவும் பெண்தான் பிறந்தது. அந்த வருடம் ஒரு புயல் – அந்தப் பகுதிகளில் சூறாவளி அபூர்வமானதுதான். அந்த வருடம் வந்தது. நாள்க்கணக்காக விடாத நிற்காத காற்றும் மழையும். மண் குளிர்ந்து நெகிழ்ந்து மரத்தின் வேர்கள் பிடி விட்டன. பெருஞ் சத்தத்துடன் மரங்கள் மண்ணில் கோரமாய்ச் சாய்ந்தன. காற்றின் அதிர்வில் அவை அறுபது அடி ‘சொக்கப்பனை’ போல சரசரவெனச் சரிந்தன. கொப்பும் கிளையுமாக பூமிக் குழியில் அமுங்கின. படுகொலைக் களத்தில் வெட்டி வீசப்பட்ட கைகளாக ஒடிந்த கிளைகள். வேர் பிடுங்கிக் கொண்ட பெரும் பள்ளங்கள் குண்டு விழுந்த சிதிலங்கள் போல. பெரும் சூறாவளி தவிர சின்னச் சின்ன காத்து ஆவேசங்கள். மலைநடுப் பள்ளம் என்பதால் அவற்றின் சீற்றமும் சேர்ந்து கொண்டது. எங்கள் தோப்பிலும் நெடுக மரங்களின் அழிவுக் கோலம். தோட்டத்தின் இடிபாடுகளை அகற்றி நேர்செய்ய ரிக் வந்தான். சில தரமான மரங்களை அவன் காட்டினான், இவற்றை வீடு கட்ட என்று நல்ல விலைக்குக் கொடுக்கலாம். எல்லாம் சரிசெய்ய ஒரு வருஷங் கூட எடுக்கும், நானே செஞ்சி தர்றேன், என்றான் அவன். பெரிய எந்திரங்களை உள்ள எடுத்துப் போனால் தரையைக் கீறி நாசம் பண்ணிரும். மச்சான் குதிரைகள் இருக்கு, அதுங்களை வெச்சி மரங்களை வெளிய எடுக்கலாம். ஒரு கைராட்டினம் மூலம் (வா ராசா வா, என அதற்கு அவன் பேர் வைத்திருந்தான்.) அப்டியே வண்டில ஏத்திறலாம். விறகுக்காகிற மரத்தைத் தலையை வெட்டி தண்டு எல்லாத்தையும் ஊருக்குள்ள விறகுக்கொட்டில்ல போட்டுருவம்.

அவனிடம் எந்த இன்சூரன்ஸ் பாலிசியும் கிடையாது. எதும் வில்லங்கமாயிட்டா என்ன செய்ய என்று நான் தயங்கினேன். என் வக்கீலும் வேணவே வேணாம்னுட்டார். ஆக முழு காப்பீடும் பெற்ற ஒரு வேலைக்குழுவை அமர்த்தினோம் அந்த வேலைக்கு. ஒரு படகு அளவு பெரிய நிலச்சறுக்குக் கட்டைகள், புல்டோசர், ரெண்டு டிராக்டர்கள், கொக்கிபொருத்திய பிடி எந்திரம் எல்லாம் கொண்டு வந்திருந்தார்கள். அது ஒருகஜ பருமனுள்ள மரத்தண்டையே பற்றி இழுக்க வல்லது. மரத்தை அந்தாக்ல முப்பதடி தூக்கி நிறுத்தியது. வார வாரமாக அந்த யந்திரங்கள் என் காட்டைக் கிழித்து துவம்சம் செய்தன. பாறைகளைத் தகர்த்தன. கிளைகளையும் கொப்புகளையும் வெட்டி பெருங் குவியலாய்க் குவித்தன. தரையில் சிவப்பாய் அவை கீறி தெருவரை பாசியும் புல்லுமான தரையை நாசப் படுத்தின. ரெண்டுமடங்கு நீளமான லாரியில் கிளையில்லாப் பெருமரங்கள் ஏறி மரக் கொட்டிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வேலையின் நடுநடுவே வழியில் ரிக் தட்டுப்பட்டான்.. வேலை தன் கைவிட்டுப் போனதையிட்டு அவன் சொல்லிக்காட்டவோ முகம்சுளிக்கவோ இல்லை. வாஸ்தவத்தில் மரத்தை விலைபேசவும் நாங்கள் ஏமாறாதிருக்கவும் பல யோசனைகள் அவன் சொல்லித் தந்தான். எனக்குத்தான் அவநுடன் சகஜமாய்ப் பேச லஜ்ஜையாய் இருந்தது.

வந்த கோடைகாலத்தில் அவனும், ஃபயியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். எங்கள் எல்லாருக்கும் பன்றியடித்து தீமூட்டி விருந்து. பெரிய விருந்துதான். தெரு நெடுக பாரலாரிகள் ஒரு ஓரம் அடைத்து நின்றிருந்தன. நிறைய மோட்டார்சைக்கிள்கள். சில அண்டை அயலார் தவிர எல்லாருமே அவனது, அவளது சிநேகிதப் பட்டாளம், தோல் உடைகள், ராட்சஸ கைக்குட்டைகளைத் தலையில் கட்டியிருந்திருந்தார்கள். முன் வளாகத்தை ஒழுங்கு பண்ணி அதில் கல்மேடை, நாட்டியமாட என்று, பக்கத்துக் காட்டின் கல் உடைக்கும் களத்தில் இருந்து ரிக் இழுத்து வந்திருக்கலாம். அதன் பின்தளத்தில் ஒரு இசைக்குழு, அதிரும் இசையை வழங்கிக்கொண்டிருந்தது. ரெண்டு ஃபிடில், ஒரு கிதார், ஒரு மாண்டலின், இசைக்கருவிகளை அவர்கள் உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.

நல்லாதான் இருந்தது அந்த பிராந்திய-இசை. ஓரிரு வருடங்கள் முன்பிருந்தே நான் கேட்டு வருகிறேன், உணர்வை மேலே கீழே என அதிரச் செய்கிற வசிய இசை. இங்கே மலைக்கு நாங்கள் குடி வந்தபிறகு இதைக் கேட்கும்போதெல்லாம் இசை இந்த மண்ணிலிருந்து பீரிட்டு எழுவதாகத் தோன்றியது. துன்பமும் இன்பமும் கலந்த, தொடர்ந்து ஒன்று மாறி அடுத்தது என்ற வேகச் சுழல். மனப்புழுக்கமும் ஆசுவாசமுமான இரட்டைக் கலவை நிலை. பஞ்சமும் அபார வளமையுமான கலப்படம். நெருக்கமான இந்தக் காடு, இருளும் ஒளிக்கசிவுமான தனி உலகம், சிகரத்தினூடே பயணித்து வரும் காற்று… எல்லாவற்றிலும் இருந்து வந்தது அந்த இசை. அந்த ஊடுபாதை வழியே ஒரு மணி நேர அளவில் நான் வேலைக்கு என்று வெளியே கிளம்பும்போது அந்த இசையைக் கேட்கிறேன். காசு, லாபம் என இத்தனை நாள் அலைந்து திரிந்து ஒரு நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன், இத்தனை நாள் தூங்கியிருக்கிறேன், அட உயிரையே தொலைத்திருக்கிறேன்… ‘மலைப் பையன்கள்’ குழுவின் ஒலித்தகடை உரக்க வைத்தபடி வீடு திரும்புகையில், அவர்களது சக்திபூர்வமான உச்சஸ்தாயி முழுக் குரல்கள் என்னை புளகாங்கிதமடையச் செய்தன. என் நெஞ்சு பரவசத்தில் விம்மியது. ராகமில்லை ஆனாலும் தாளக்கட்டுக்குக் குறைவில்லை அதில். நானே யாரோ போல உணர்கிற அளவில் ஒரு ஆனந்தம் எனக்குள். பிரியமும், உக்ரமும், வீசர்யமுமான இன்னொரு நான்!

நாங்கள் போய்ச்சேர்ந்த கொஞ்சநேரத்தில் வேன் ஒன்று வந்து நின்றது. உள்ளே ஒரு பன்றி. அவனது சகாக்கள் தரும் பரிசு. இறைச்சியை அல்ல, பன்றியையே உயிரோடு கொடுத்தார்கள் அவனிடம். ரெண்டுபேர் கசாப்புக்காரனுடன் அந்தப் பன்றியை வெளியே இறக்கினார்கள். அதன் வாய் கழுத்து பின்புறம் எல்லாம் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. ரிக் முன் நிறுத்தினார்கள் அதை. ஒருவன் ரிக்கிடம் பளபளவென்று கத்தி ஒன்றைக் கொடுத்தான்.

”என்னப்பா இது?” முடிச்சுகளுக்குள் பதறித் துடித்துக் கொண்டிருக்கும் பன்றியைப் பார்த்தபடியே ரிக் கேட்டான்.

ஃபயி வெளியே வந்தாள். காடாத்துணிக் குட்டைப்பாவாடை. காலில் குதிரையேற்ற செந்நிற பூட்ஸ். மையமாய் ஆனால் கவனிக்கிற பார்வை அவள் பார்த்தாள்.

”ஏய் நீதான் திறப்பு விழா எடுக்கணும் சகா…” ஒருத்தன் சொன்னான். ”இது மாப்ளைச் சடங்கு!” எல்லாரும் ஹோ ஹோவென்று இரைச்சலிட்டார்கள். ”போ போ. அந்தப் பன்னியோட கழுத்தை வெட்டு… சர்ரக்…”

”உன் கழுத்தை வெட்டுவேன்” என முணுமுணுத்தான் ரிக். சட்டென வீட்டுக்குள் போனான். சுற்றிலும் அபத்தமான நிசப்தம். குழப்பம். வேட்டைத் துப்பாக்கியுடன் அவன் திரும்பி வந்தபோது, ஃபயி முகம் திருப்பிக் கொண்டாள்.

”ஏய் அதெல்லாங் கிடையாது. பன்னி ரத்தங்கக்கி துடித்துச் சாகணும் டோய்!” வந்தாளில் ஒருத்தன் சொல்லிவிட்டு கசாப்புக்காரனைப் பார்த்தான். அவன் சரி தப்பு என்றில்லாமல் தோளைக் குலுக்கினான்.

அவர்களைக் கண்டுக்காமல் துப்பாக்கியில் ரவை அடைத்தான் ரிக். பன்றியின் தலைக்கு நேராய், டுமீல்! அவன்மேலும் பக்கத்து சகாக்கள் மேலும் ரத்தமும் மூளையுமாய்ச் சிதறியது. மீண்டும் ஹோ ஹோவென சந்தோஷ ஊளை. ரிக்கும் இளித்தான். ”என் ‘வா ராசா வா’வை எடுத்தாறேன்…” அது பாடாவதி ராட்டினவண்டி, கம்பிகளும் பல்சக்கரங்களும் மர உருளைகளுமாய்ச் சேர்த்து வடிவமைத்தது, அதன் பின்னங் கால்களில் மரமுட்டு கொடுத்திருந்தது… கசாப்புக்காரன் பன்றியைக் கிழித்து உள்பகுதிகளை சுத்தம் செய்தான். ஒரு எண்ணெய் பாரலில் பாதியை அடுப்பாக்கி யிருந்தார்கள். பன்றியைக் குத்தி அதன்மேல் தொங்க விட்டபோது, அதுவரை கப்சிப்பென்றிருந்த வாத்திய இசை திரும்ப உயிர்த்து முழங்க, மூணு உச்சஸ்தாயி குரல்கள் வெடித்துக் கிளம்பின. ”வீஈஈஈஈஈ… ஏய், என்னை விட்டுருவாயா ஆஆஆ …” சட்டென அதிர்வுகள் நின்று தாடிக்காரனின் அடங்கிய துக்ககரமான ஒற்றைக் குரல். ”நான் போயிவிட்டால் மறந்துருவாயா…”

அவர்கள் வீட்டுப் பின்பக்கம் தாத்தா வைத்த தோட்டம், யாருக்கும் அதில் அனுமதி இல்லை. அதன் ஆப்பிள் பழங்களில் இருந்து பிரத்யேகமாக ரிக்கே தயாரித்த ஒயினை எங்களுக்கு அவன் பரிமாறினான். ஒரே மடக்கு அடிச்சுப் பாருங்க… ஹா! அக்னித் திரவம். அப்படியே கல்தளத்தில் நடனமாடப் போனான் பெண்டாட்டியுடன். உல்லாசமாக ஒரு கையில் குப்பியைக் குலுக்கியபடி மறுகையைத் தன் இடுப்பில் வைத்து அவன் ஆடினான்.. அவள் பார்வை டோனல் குன்றின் வெள்ளிப் பரப்பை வெறித்தவாறிருந்ததை கவனித்தேன். அவள் முகத்தில் சிறு கவலை. வெளியே கனக் குளிராய்க் கிடந்தது. அதையும் மீறி என்னால் அதை கவனிக்க முடிந்தது.

அநத் வருடம் முழுதும் அதன்பிறகு எனக்கு அவர்களைச் சந்திக்க வாய்க்கவேயில்லை. பின்வந்த இலையுதிர் காலத்தில் வேறொரு பார்ட்டியில் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்களுக்கு விருந்தளித்தவர்கள் அர்ஷினும் லீனும், மருந்தாளர்கள், புத்தமதக்காரர்கள், குறிப்பாக தியானம் போன்ற வைத்திய முறைகள் பேணுகிறவர்கள். லீன் திபெத்திய மதகுருபோல மொட்டை. அர்ஷின் ஆள் கருப்பு, வத்தக்காய்ச்சி. அவன் கையில் எப்பவும் ஜெபமாலை உருண்டு கொண்டிருக்கும். அவர்களின் நட்பு வட்டமும் அக்குபன்ச்சர் அல்லது ‘குய்காங்’ எனும் சீனமுறை மூச்சுப் பயிற்சிக் காரர்களாக இருந்தார்கள். அதோ ரிக்கும், ஃபயியும் ஒரு ஓரத்தில். கூட ஒரு உயரமான ஆள் பீர் அருந்திக் கொண்டிருந்தான். காலில் முழங்கால் வரையிலான சகதிபடிந்த பூட்ஸ். உடலையே இறுக மூடிய தோல்ஜாக்கெட். அங்கே எல்லாரும், ஷ§வைக் கழற்றிவிட்டு ஆசுவாசமாய் டீ அருந்திக்கொண்டிருந்தார்கள். நடுவே இவர்கள் விசித்திரமாய். ஹலோ. தன் நண்பன் சூய்லர், என எனக்கு அறிமுகம் செய்தான் ரிக். நான் கவனித்தேன், சூய்லரின் பின்கழுத்தில் வரிசையாய் நிறைய எண்கள் ‘பச்சை குத்தியிருந்தன. வெறுமே அவன் தலையாட்டினாலும் மனசெல்லாம் வேறெங்கோ மிதப்பாய் இருந்தான் அவன். சும்மா பேச்சுக் கொடுக்கிறதாக நான் ரிக்கிடம் இந்த சீசனிலும் அவன் விறகு வெட்டி விற்கிறாப்லயா என்று கேட்டு வைத்தேன்.

”பாப்பம்…”

”ஒரு தூக்கு தள்ளிவிடு…”

”ம்.”

(அடுத்த பக்கத்தில்)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்