மடியில் நெருப்பு – 19

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தண்டபாணி உற்சாகமாக இருந்தான். மும்பைக்குப் புறப்பட்டுப் போய்க் கிட்டத்தட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளை எடுத்துவர அவனால் ஒரு நம்பகமான ஆள் அனுப்பப்பட்டிருந்தான். சென்னை சென்டிரலிலிருந்து சற்று முன்னர்தான் அவனுக்கு அந்த ஆள் தான் பத்திரமாகவும் சரக்குடனும் எவ்வகை ஆபத்தும் இல்லாமல் திரும்பிவிட்டதைத் தொலைபேசியில் தெரிவித்துப் பேசினான். நாகதேவன் எந்த நிமிடமும் டாக்சியில் வந்து இறங்கக்கூடும். சென்னை சென்டிரலிலிருந்து டாக்சியில் தனது இருப்பிடத்துக்கு வந்து சேர்வதற்குள் எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அப்படி ஏற்படும் போல் தெரிந்தாலும், பரவாயில்லை. உள்ளுர்க் காவல்துறை ஆள்கள் பலர் அவன் கைக்குள் தான். தண்டபாணி என்கிற பெயரைச் சொன்னாலே போதும். ஒதுங்கிவிடுவார்கள்.

அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே டாக்சி அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது. தண்டபாணி விரைந்து போய் நாகதேவனின் கையிலிருந்த பெட்டியை ஆவலுடன் வாங்கிக்கொண்டு வீட்டினுள் விரைந்தான்.

டாக்சி ஓட்டுநரின் கையில் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களைக் கொடுத்த நாகதேவன், “நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நீங்க என்னை இறக்கிவிட்ட இடம் காமராஜர் சிலைக்குப் பக்கத்துலே.. இங்கே இல்லே! சரியா?” என்றான் டாக்சி ஓட்டுநர் இளித்துத் தலையசைத்துப் புறப்பட்டுப் போனார்.

மிக விரைந்து வீட்டினுள் ஓடிய நாகதேவன், தண்டபாணியிடம், அண்ணே! இப்ப நாம ரொம்ப ஆபத்தான நிலைமையிலே இருக்கோம். யாரோ ஒரு புது போலீஸ் ஆ·பீசர் ஸ்டேஷனுக்கு வெளியே நின்னு எல்லா வண்டிகளையும் செக் பண்ணிட்டிருந்தாரு. நான் பின் பக்கத்தால நைஸா டாக்சி புடிச்சு ஓடியாந்துட்டேன். அப்படியும் ஒரு கான்ஸ்டபிள் கண்ணுல பட வேண்டியதாயிறுச்சு. விசில் அடிச்சுக்கிட்டே மோட்டார் பைக்குலே துரத்த ஆரம்பிச்சான். நான் கண்டுக்கவே இல்லே. டாக்சி டிரைவர் ரொம்ப ஒத்துழைச்சாரு. ஒருக்கா டாக்சி நம்பரை நோட் பண்ணியிருந்து பெறகு வெசாரிச்சாங்கன்னா, காமராஜர் சிலைக்குப் பக்கத்துல இறக்கிவிட்டதாச் சொல்லச் சொல்லியிருக்கேன். இருநூறு ரூவா குடுத்தேன்.”

“யாரு அந்தப் புது போலீஸ் ஆ·பீசர்? சி.பி.ஐ. ஆளா யிருக்குமோ?” என்று முனகியவாறே, கனத்த தரைக் கம்பளத்தை விலக்கி அதனடியில் தரையில் பொருத்தப்பட்டிருந்த பலகையைத் தூக்கிவிட்டு அதன் கீழ் இருந்த சதுரமான பள்ளத்தில் அந்தப் பெட்டியை வைத்த் பின் திரும்பவும் பலகையால் மூடிக் கம்பளத்தைப் பரப்பி மறைத்தான். தண்டபாணி.

“தெரியல்லேண்ணே. ஆளைப் பார்த்தா, கண்டிப்பான ஆசாமியாத் தெரியுது.”

“நம்ம பங்களாவுக்கே வந்தாலும் கண்டுபிடிக்கிறது செரமம். அதுக்குத்தான் தரை முழுக்கப் பலகைகாளால மூடி வுட் வொர்க் பண்ணிவெச்சிருக்கேன்!”

பின்னர் இருவரும் சாப்பாட்டு மேசைக்கு முன் சிரித்தபடி அமர்ந்தார்கள். வேலையாள் மேல் நாட்டுக் குடி வகைகளையும் வறுவல், முந்திரிப் பருப்பு வகையறாவையும் கொண்டு வந்து மேசை மீது வைத்தான்.

“அந்த டாக்சி டிரைவர் காட்டிக் குடுத்துட மாட்டானே? சொல்லி வெச்சிருக்கியில்லே நம்ம கும்பலைப் பத்தி?”

“சொல்லியிருக்கேன், அண்ணே. இருந்தாலும் கொஞ்சம் ஒதறலாத்தான் இருக்கு.”

“நீ ஒண்ணு பன்ணியிருக்கலாம், நாகு. வழியிலே எங்கேயாச்சும் இறங்கிக்கிட்டு வேற ஆட்டோவோ டாக்சியோ புடிச்சு வந்திருக்கலாம்.”

“எனக்குத் தோணாம இல்லேண்ணே. அந்த டிரைவராண்டேயும் சொல்லி வெச்சிருந்தேன். ஆனா, வழியிலே ஒரு வண்டி கூடத் தென்படல்லேண்ணே.”

“சரி, வுடு. என்ன பண்றது?”

“கான்ஸ்டபிள் விசில் அடிச்சதைக் கவனிக்கவே இல்லேன்னு பொய்சொல்லச் சொல்லி யிருக்கேன். ஆனா, அவன் பேச்சை நம்பல்லைன்னா போட்டு அடி அடின்னு அடிப்பாங்க!”

“அதுக்கு நாம என்ன பண்றது? ம்..ம்.. கையிலே இருந்த மொத்தப் பணத்துக்கும் போதை மருந்து வாங்கியாச்சு.இப்ப செலவுக்குக் கையிலே ஒரு பைசா கூட கிடையாது.”

“உங்க தோஸ்து இருக்காரே – ராஜாதிராஜன் – அவரு கடன் குடுக்கமாட்டாரா வழக்கம் போல?”

“குடுப்பாரு, குடுப்பாரு. அப்புறம். நீ எனக்குக் காட்டினியே பத்து நாளுக்கு முந்தி சூர்யான்னு ஒரு அழகானபொண்ணு . . .”

“ஆமா. . .அவளுக்கு என்ன?”

“அவளை ராஜாதிராஜன் கலியாணம் கட்டப்போறானாம். . . . அதாவது சின்ன வீடு செட்-அப் பண்ணப் போறானாம்! வழக்கம் போல அந்தப் பொண்ணு எனக்குக் கிடைக்காது போல! அவன் பங்கு போட்டுக்கத் தயாரா யில்லே. என்ன ·பிகருப்பா அது! அது மாதிரி ஒரு அழகையும் அல்வாத்துண்டு மாதிரி வாளிப்பையும் நான் கண்டதே இல்ல, நாகு!”

“அப்ப விடாதீங்கண்ணே! நீங்களும் ஒரு கை பாருங்க. அப்படித்தானே பேச்சு?”

“சொல்லிப் பாத்துட்டேம்ப்பா. ஒத்துக்க மாட்டேன்றான். அதும் மேல னுக்குக் காதல் வந்திரிச்சாம்!”

“கொஞ்ச நாளுக்கு விட்டுக் குடுக்கட்டுமே! அப்பால் அந்தாளே முழுக்க முழுக்க வெச்சுக்கட்டும்! இதுக்கு நீங்க ஒத்துக்காதீங்கண்ணே!”

“நடக்காத கதை, நாகு!… அதனால அந்தப் பொண்ணுக்காக அம்பதாயிரம் நஷ்ட ஈடு மாதிரி கேட்டிருக்கேன். தர்றேன்னிருக்கான். அவன் பொன் முட்டை இடுற வாத்துப்பா. கம்பெனிப் பணத்துலேர்ந்து அப்பப்ப அவங்கப்பாவுக்குத் தெரியாம லட்சத்துல கடன் குடுக்கிறான்லே? அதைப் பாரு . . . ஆனா நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லே! விட்டுக் குடுக்கிற மாதிரி விட்டுக் குடுத்துட்டு ஒரு தோதான நேரத்துல நான் நினைச்சதைச் சாதிப்பேன். ‘உன்னைக் கெடுத்ததை ராஜாதிராஜன் கிட்ட சொன்னே, அவன் உசிரோட இருக்க் மாட்டான்’னு அவளை நல்லா பயமுறுத்தி வெச்சுடுவேன்!..அதுவும் வாயைவே தொறக்காது! எப்படி என்னோட திட்டம்?”

“சூப்பர் திட்டம். அண்ணே! ஆனா, அந்த வழியில ஆபத்து இருக்கு. . . .ஆங்! இப்படிப் பண்ணலாம். திருட்டுத்தனமா அ;ந்தப் பொண்ணைக் கெடுத்துட்டு நீ சொன்னது மாதிரி அதை பயமுறுத்துறதுக்குப் பதிலா, ராஜாவுடைய சம்மதத்தோடவே நீ அவளை அடைஞ்சியானா, சூர்யாகிட்டேருந்தும் சரி, ராஜா கிட்டாருந்தும் சரி, உனக்கு ஆபத்தில்லே.”

“அப்படின்றே? ஆனா, அதை எப்படிச் சாதிக்கிறது?”

“மொதல்ல அவனை எதுலயாச்சும் மாட்டி விடணும். அப்படி மாட்டி விட்டுட்டா, அவன் குடுமி நம்ம கையிலே. அவன் அந்தப் பொண்ணை விட்டுக் குடுத்துடுவான்! நீயும் -ஒரே ஒரு தபா என்ன? – அடிக்கடியே அவன் இல்லாதப்போ அவளோட இருக்கலாம்.”

“ரொம்ப நல்ல ஐடியா. சரி, யோசிப்போம்.”

“அப்புறம் இன்னொரு விஷயம், அண்ணே. இன்னைக்குக் கொண்டுட்டு வந்த பெட்டி இங்கே இருக்க வேணாம்னு தோணுது. அந்த டாக்சி டிரைவர் போலீஸ்காரங்களோட அடி, உதை தாங்க முடியாம உண்மையைச் சொல்லிட்டான்னு வச்சுக்க, வம்பு. அதனால அந்தப் பெட்டியை வேற எங்கிட்டாச்சும் கொண்டுட்டுப் போய் வச்சுடணும். என்ன சொல்றே? சோதனைக்கு வந்தாலும் கண்டு பிடிக்க மாட்டாங்கன்னு சொல்லிட முடியாது. “

“நீ சொல்றதும் சரிதான். ஆனா இன்னைக்குப் பெட்டியை வெளியே எடுக்க வேணாம்னு தோணுது. நீ நம்ம தண்டையார்ப்பேட்டை விடுதிக்குப் போயி ஜாலியாப் பொழுதைக் கழிச்சிட்டு இரு.”

“சரி, அண்ணே!”

“அப்புறம், தங்கம்னு ஒரு பொண்ணைப் பத்திச் சொன்னேனில்ல? அந்தப் பொண்ணு கிட்ட பேச்சு வாக்கில ராஜாதிராஜனை எனக்குத் தெரியும்னு சொன்னேன். அது ராஜாவுடைய அப்பாவுக்கு வைப்பாட்;டியா யிருக்கிற லில்லியோட தங்கச்சின்றது எனக்குத் தெரியும்கிறதா நான் காட்டிக்கல்லே. அந்தப் பொண்ணும் அழகுதான். ஆனா சூர்யா அளவுக்கு எந்தப் பொண்ணுமே வரமாட்டா. லண்டன் மாப்பிள்ளைன்னு சொல்லி வெச்சிருக்குறேனே அந்தப் பிள்ளையாண்டானுக்கு அந்தத் தங்கத்தை வளைச்சுப்போட்டு, கல்யாணத்தையும் முடிச்சு ப்ளேன்ல ஏத்திட்டோம்னா, டவுன் கேஷ் ரெண்டு லட்சம் உடனே லட்டுமாதிரி நம்ம கையில விழும்! “ என்று தண்டபாணி சிரித்தான்.

“ராஜாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“தெரியாது! சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. இப்ப நாம புதுசாத் தொடங்கி யிருக்கிற பொண்ணு கடத்தல் வியாபாரத்தைப் பத்தி அவனுக்கு இன்னும் சொல்லல்லே. சொல்றதா, வேண்டாமான்னு யோசிச்சிட்டிருக்கேன். விபசார விடுதி, ப்ளு ·பில்ம், போதை மருந்து வியாபாரம் இந்த மூணும் நாம செய்யிறது அவனுக்குத் தெரியும். இந்தத் தொழில்களுக்கான மூலதனம் கணிசமான அளவுக்கு அவனோடதுன்றதால, அவனுக்குரிய பங்கும் லாபத்துலேர்ந்து போயிக்கிட்டிருக்கு.”

“இந்தப் புதுத் தொழிலை உன் கைப்படவே செய், அண்ணே. அவனுக்கு ஒண்ணும் இதுலே பங்கு தர வேணாம்.”

“அடிக்கடி ஆயிரக் கணக்குல முன்பணம் போட்றானில்ல? நாளைக்கு விஷயம் தெரிய வந்தா அசிங்கம். . .நான் ஏமாத்திட்டதா நினைப்பான். அதான் கொஞ்சம் யோசனையா யிருக்கு. அவன் கண்டே பிடிக்க முடியாதபடி ஏமாத்தணும். ஆனா அது சாத்தியமில்லே.”

“அப்ப ஏதாச்சும் சொல்லிச் சமாளிக்கலாம், அண்ணே.”

“என்ன சொல்லிச் சமாளிச்சாலும், உண்மை இன்னதுன்னு அவன் கண்டுக்குவான். பொல்லாத ஆளு அவன்!”

“பொண்ணு கடத்தல்ங்கிறது அவனை மாதிரி ஆளுக்குக் கவுரவக் குறாஇச்சல்ங்கிறதால அவனை இதிலே சேர்த்துக்கல்லேன்னு சொல்லலாமே!”

“அப்ப, மத்த மூணு தொழிலும் கவுரவமான தொழிலா! என்னடா பேத்துறே?”

:”அப்படின்னு இல்லேண்ணே. இதுல ஆபத்தும் அதிகம். அவனோட அப்பா ரொம்பவும் கவுரதைப்பட்ட மனுஷரு. மத்த மூணும் உள் நாட்டோட நிக்கிற தொழிலுங்க. இது அப்படி இல்லியே! ·பாரீனுக்கில்லே அனுப்பி விக்கிறோம்?”

“ஆனா அவன் கேப்பானே – எனக்கு இதிலே கூட்டுச்சேரச் சம்மதமா இல்லியான்னு ஒரு வார்த்தை நீ கேட்டிருக்கலாமே அப்படின்னுவானே! அதுக்கு என்ன பதில் வ்ச்சிருக்குறே?”

நாகதேவனால் பதில் சொல்ல முடியவில்லை.

தண்டபாணி தொடர்ந்தான்: “ஆனா, ஒண்ணு. அவனையும் கூட்டுச் சேர்த்துக்கிட்டா ஒரு லாபம் இருக்கு.”

“என்னண்ணே?”

“”அவங்கப்பாவும் போலீஸ் கமிஷனரும் ரொம்ப தோஸ்துங்க. எந்தப் புதுக் கமிஷனர் வந்தாலும் அவரும் இவரும் தோஸ்த் ஆயிடராங்க. அது எப்படின்னு தெரியல்லே.”

“அது எப்படியோ போகட்டும். நீ விஷயத்துக்கு வா.”

“ நாளைக்கு நமக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திச்சுன்னு வை. . . இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முந்தி வரப் பாத்திச்சில்லே? அது மாதிரி ஒரு இக்கட்டு வந்தா, நாம நைஸா ராஜாவையும் மாட்டி விட்டுட்டா, அவனைக் காப்பாத்துறப்போ நம்மையும் சேர்த்து அவங்கப்பன் காப்பாத்தியாகணும். இதைப் பத்தி நான் ஏற்கெனவே ராஜா கிட்ட சொல்லி வெச்சிருக்குறேன். இருந்தாலும் மறுபடியும் ஒரு தபா ஞாபகப் படுத்தணும். . . . ராஜாவுடைய குடுமி நம்ம கையிலே இருக்குற மாதிரி ஏதாச்சும் செஞ்சு வெச்சிறணும். யோசிக்கலாம். . . . உனக்கு ஏதாச்சும் தோணுதா?”

நாகதேவன் பதில் சொல்லுவதற்கு முன்னால், தொலைபேசி கூப்பிட்டது. தண்டபாணி ஒலிவாங்கியை எடுத்துக் காதில் பொறுத்தி, “ஹல்லோ! . . . அட! ராஜாவா! ஆச்சரியமா யிருக்குதே! இப்பதான் நாகா கிட்ட உன்னைப்பத்திப் பேசி வாய் மூடல்லே. உன்னோட ·போன்! . . . சொல்லுப்பா . . .” என்ற தண்டபாணியின் மூளையில் திடீரென்று ஒரு திட்டம் உருவானது.

அதைச் செயல்படுத்தும் நோக்கத்துடன், “டெலெ·போன் லைன்லே ஏதோ கோளாறு. கரகரன்னு சத்தம் வருது. நீ ரிசீவரை வெச்சுடு. ரெண்டே நிமிஷத்துலே நானே கூப்பிட்றேன்,” என்ற தண்டபாணி அவனிடமிருந்து பதில் வருவதற்குள் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டான்.

“நாகா!”

“சொல்லுண்ணே.”

“”மொதல்ல கதவைச் சாத்து. ஜன்னல் கதவுகளையும் நல்லா மூடிடு.”

நாகதேவன் அவ்வாறே செய்யலானான்.

jothigirija@vsnl.net – தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா