பெண்தெய்வம்
Published August 5, 2002 • By
அனந்த்
அனந்த்

1. கவிதையென்னும் கள்ளையள்ளி உண்டு
காலமெலாம் களிக்குமிந்த வண்டு
…. தவிதவித்துத் தத்தளிக்கும்
…. தஞ்சம்என்று கைகுவிக்கும்
புவியிலதன் பே(டு)அதனைக் கண்டு!
*****
2. அன்றொருநாள் (கடந்தஆடி வெள்ளி)
அடுக்கித்தந்த வீட்டுவேலை தள்ளி
…. என்கருத்தில் தடங்கலேது
…. மின்றிக்கவி தொடங்கும்போது
நின்றனள்முன் அவள்,என்காதைக் கிள்ளி!
*****
3. கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று
…. அவியலுடன் ரசமும்வைத்து
…. அப்பளம்பா யசம்சமைத்துச்
செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!
***
ananth@mcmaster.ca