This entry is in the series 20091113_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மிரண்டுபோன தேர்ப்பாகனின்

சாட்டைக் குச்சிகளிலும்

பயம் தொற்றிக் கொண்டது.

எனதுலகம் அரைவட்டமாய்ச் சுழல

வானத்தின் துண்டொன்று

பொடிந்து விழுந்தது

பிளிறிய யானையின் தும்பிக்கையில்

நானிருந்தேன்

அது என்னை

ஒரு தேங்காயாய் உடைத்துப் போட்டது.

சிதறிக்கிடக்கும் என்னை

பொறுக்கித் தின்ன நாக்குகள் நீண்டன.

ரத்தம் உறைய அடித்த காற்று

என் சிதிலங்களை தூக்கிச் சென்றது.

நான் காணாமல் போனது மீறி

கணங்களின் மரணத்தில்

ஒவ்வொரு துகள்களிலும்

என்னுருவம் புடைத்துப்பருத்து

பலப்பல யானைகளாய் பிளிறின.

எனக்கு முளைத்த தும்பிக்கைகளால்

எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன

சொர்க்கத்தை

பலங் கொண்டமட்டும்

இடித்து தகர்க்கிறேன்.

Series Navigation