ஹே, ஷைத்தான்!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

ஆபிதீன்


‘பக்வான் ‘ டி.வியில் மாட்டிக் கொண்ட ஒரு எழுத்தாளனின் பரிதாப நிலையைப் படித்தபோது இதேபோல் மாட்டிய என் காஞ்சூர் நண்பனின் கதைதையும் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இது வேறு டி.வி. ஷைத்தான் டி.வி! அவர்கள் Saturn T.V என்று அழகாய் தமிழில் பெயர் வைக்க தமிழக ஜனங்கள் ஏனோ ‘ஷைத்தான் டி.வி ‘ என்று செல்லமாக அழைக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். சனிபகவானுக்கும் ஷைத்தானுக்கும் என்ன தொடர்பு என்று டி.விக்காரர்களும் கவலைப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. ‘மலம் டி.வி ‘ என்று வைத்தால் கூட மாலை போட்டு வணங்க மகா ஜனங்கள் ரெடியாக இருப்பார்கள் என்று அவர்களுக்கும் தெரியும்.

ஷைத்தான் டி.வி, உலகத்தில் தெரியாத இடமே இல்லை. ஷைத்தான் இல்லாத உலகமும் இல்லை அல்லவா ? ‘ஈமான் கொண்டவர்களே ! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ‘ என்று பயான் செய்யும் ஒரு காஞ்சூர் மெளலவி கூட பார்ப்பதெல்லாம் ஷைத்தான் டி.வி. ஷைத்தானின் சகோதரனான இன்னொரு டி.வி நாள் முழுக்க சினிமாக்களை காட்டிக் கொண்டிருப்பதால் நோன்பு காலத்தில் கூட இப்போதெல்லாம் களைப்பே தெரிவதில்லையாம் அவருக்கு.

ஷைத்தான் டி.வியின் பெரும் சாதனையாக , பச்சை வண்ன சால்வையையே எப்போதும் அணியும் பகுத்தறிவுத் தலைவரின் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதைச் சொல்லலாம். சிவப்பு வண்ண சேலையே எப்போதும் அணியும் அக்கா (68 வயது)வை ஒரு ஜக்கம்மா டிவி, சாட்சாத் பார்வதி தேவியாகக் காட்டும்போது தாத்தாவின் மூளையைக் காட்டுவதில் தவறுமில்லைதான். ஆனால் அவரைக் காட்டியது போக மீதி நேரங்களில் எல்லாம் பாவாடையை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு பின்பக்கத்தை குலுக்கி ஆட்டியபடியே பின் நகரும் வினோத நடனங்களை காட்டிக் கொண்டிருக்க வேண்டுமா ? ‘நாங்கள் எங்கே அய்யா காட்டுகிறோம் ? சினிமால வர்றதைதானே போடுறோம்.. ‘ என்கிறார்கள். நம்மால் பதில் சொல்ல முடியாது. போடட்டும்! மீதி நேரங்களில் எல்லாம் என்றா சொன்னேன் ? தப்பு. இடையில் மங்காக்கா வழங்கும் மாலைப்பாட்டு இருக்கிறது. நேயர் விருப்பம். ‘அன்புள்ள மங்காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்..! ‘ என்று அரபுநாட்டு தமிழ் ஜனங்கள் எல்லாரையும் மடல் எழுத வைத்திட்ட மகோன்னத நிகழ்ச்சி. அப்புறம் குறட்டை அரங்கம் , சட்டி ஒலி என்று நான்காயிரம் வாரமாக தொடரும் பத்து நிமிட நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

ஷைத்தான் டி.வியில் நான் விரும்பும் ஒரே நிகழ்ச்சி ‘காலேயே வா! ‘ தான். காலைக்கடன் முடிக்காமலேயே வரும் அறிஞர்களை பேட்டி காண்பார்கள் அதில். பேட்டி கண்ட பிறகு அவர்களாலேயே மறுபடியும் பேட்டி காண இயலாது! பே.மு , பே.பி என்ற ஒன்று இருக்கிறது.

பேட்டிக்குப் போனவர்கள் பேயறைந்த மாதிரி திரும்புவதற்கு பேட்டி எடுத்தவர்களின் கேள்விகள்தான் காரணம் என்று பேச்சு நிலவுகிறது. பேட்டி கொடுப்பவர்களின் சாதனைகள் பற்றி முன்பே தெரியவில்லை ஷைத்தான் டி.விக்காரர்களுக்கு என்பது இன்னொரு குற்றச் சாட்டு. தெரிந்ததினாலும் மதிக்காமல் இருக்கலாம் அல்லவா ? போகிறவர்களை இருக்கிறவர்களை முதலில் மதிக்க வேண்டும். இருப்பவர்களை சாதாரணமாக நினைக்கலாமா ? நான் பார்த்த பேட்டி ஒன்றில் ‘கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்று சின்ன வயதில் நடத்தியதுண்டு ‘ என்று ஒரு எழுத்தாளர் வானத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னபோது ‘அப்படியாங்க..எவ்வளவு காப்பி பிரிண்டிங் பண்ணுனீங்க ? ‘ என்று நிதானமாகக் கேட்டது ஒரு அம்மணி! கூட இருந்த இஞ்சிமுரபாவோ , offsetலெ எவ்வளவு, screen printingலெ எவ்வளவுண்டு சொல்லிடுங்க சார். நேயர்களுக்கு உதவியா இருக்கும் ‘ என்றார்.

‘அங்கே அப்படித்தான் கேள்வி கேப்பாங்கண்டு தெரியாதா ? ஏன் போனே ? நான்லாம் போவ மாட்டேன். முகம் பூரா பவுடரும் ஒதட்டுக்கு சாயமும் பூசிக்கிட்டு என்னாலெ நடிக்க முடியாது ‘ என்று வீராவேசமாகப் பேசிய எழுத்தாளர் பரதேசி (பர என்றால் கடந்த, தாண்டிய என்று அர்த்தம்) பின்னர் அத்தோடு கண்ணுக்கு மையும் சேர்த்து விட்டுக் கொண்டு பேட்டி கொடுத்தார். ஆசை காட்டியே ஆட்சியைப் பிடிக்கும் ஷைத்தானுக்கு தெரியும் சைக்காலஜி! எல்லோரையும் தள்ளிக் கொண்டு மேலே வந்து காட்சி தருவதற்கு பல வித்தைகள் தெரிய வேண்டியதிருக்க பரதேசியோ தானாகவே ஷைத்தான் டி.வி தன்னைக் கூப்பிட்டதாகவும், தன் கருத்துக்களை எடுத்து வைக்க ஒரு வாய்ப்பாக எண்ணியே ஒத்துக் கொண்டதாகவும் சொல்கிறார். Roman Polanski பற்றி பேசிக் கொண்டு சிங்கத்திற்கு மதம் பிடிக்க வைக்கிற திரைப்படங்களை அளிக்கும் சினிமா கள்ளர்களும் அப்படித்தான். பார்த்தாகிவிட்டது எல்லாப் பாசாங்குகளையும்…

‘அசையும்போது உணர்ந்து அசைய வேண்டும் ‘ என்று ஆன்மீகம் பேசும் நண்பனும் ஆசையில் இப்போது மாட்டியதெப்படி ?

எப்படியோ, எனக்கு மட்டுமல்ல. ஊர்க்காரர்களுக்கும் அவன் அசைவில் கொஞ்சம் பெருமிதம்தான் என்று ஒத்துக் கொள்ளவே வேண்டும். தவிர வளர்ந்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏதாவதொன்று இருக்கவே செய்யும். இதற்கு முன் இவனை விட 10 செ.மீ வளர்ந்திருந்த இவனது பெரிய தந்தை ஹலீம் மரைக்காயர் இதே நிகழ்ச்சியில் தன் முகத்தை அசைத்துக் காட்டினார். காட்ட வேண்டிய முகம். ஒரு எழவும் தெரியாத கவிஞர்களே உலகத்தை நெம்புகோலால் நிமிர்த்து விட்டதாகச் சொல்லும்போது பெருமழையாகக் கொட்டும் இவரது சாரலில் அனைவரும் நனைவது அவசியம். ‘ஜூட்டு போலே கவ்வா காட்டே ‘ என்று நாம் பாடிய மறு நொடியில் ‘சாப்ப்ட்டு பாரு ரவா தோசை.. ‘ என்று அம்பு புறப்பட்டு வரும்!

குலாம் அலியின் ஒரு பஞ்சாபி நாட்டுப் புறப் பாடலுக்கு ஹலீம் மரைக்காயர் எழுதிய எளிமையான பாடல் மனதை என்னமோ செய்யும். ஊரில் அடங்கியிருக்கும் இறைநேசரை – வழக்கம்போல – கெஞ்சுவார்.

‘ஒரே நம்பிக்கையில் ஓடி வந்தேன் நாதா

ஒதுங்க ஒரு இடமில்லையா உதவி தர மனமில்லையா

இன்னும் எத்தனை நாள் இந்தநிலை – மீரா

எதற்கும் ஒரு முடிவில்லயா எனக்கும் ஒரு விடிவில்லையா ? ‘

விடிவு வந்து, இவர் ‘காலையே வா! ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை கேள்விப்பட்டேனேயொழிய பார்க்க முடியவில்லை. அந்த சமயத்தில் அபுதாபி எல்லையில் உள்ள ஒரு பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு , 160 செல்லப்பெயர்களில் அரேபியர்களால் அழைக்கப்படும் ஒட்டகம் பற்றி பல உண்மைகள் புரிந்திருந்தேன். (ஒட்டகத்தின் மலத்தை அது போட்ட ஒரு மணி நேரத்திற்குள் பற்ற வைத்து விடலாம். அத்தனை சக்கை. etc..) அந்த இடத்திலிருந்து தப்பித்து வேறு துபாய் கம்பெனியில் சேர்ந்து , விசா மாற்றவும் (அப்படியே ‘டி.வி ‘ பார்க்கவும்தான்!) ஊர் போயிருக்கும்போதுதான் மறக்காமல் அவர் வீட்டுக்குப் போய் பதிவு செய்த நிகழ்ச்சியை சற்றுப் போடச் சொன்னேன். ‘இறைவனை யாருக்குத் தெரியும் நபி இரசூல் இல்லையென்றால் ‘ என்ற அவரின் பாடல் இஸ்லாமிய உலகில் ஒரு புயலையே கிளப்பியதாயிற்றே (அந்த உலகு சும்மாவே புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் !). இது சம்பந்தமாக ஏதும் சொல்கிறாரா என்று கேட்கத்தான். என் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது ? நேரில் உட்கார்ந்திருந்தவர்ிடம் கேட்கவில்லை பாருங்கள்! அவர் எங்கே உட்கார்ந்தார் ? கேசட்டைப் போட்ட மருமகனின் முகத்தைப் பார்த்ததுமே தலைதெறிக்க வெளுயே ஓடிவிட்டார்!

எனக்கு ஆச்சரியாக இருந்தது. உலகப் புகழ் பெற்ற ஷைத்தான் டி.வியில் தன் மாமனார் வந்திருக்க இந்த மருமகனின் முகத்தில் ஏன் இப்படி வெறுப்பு – கொத்துப் புறாட்டா போடும் ‘தவ்வா ‘ மாதிரி!

அவனிடமே கேட்டேன்.

‘வந்து கேக்குற தெரிஞ்சவங்க அறிஞ்சவங்களுக்குல்லாம் போடுறேன். இதோட முன்னூத்தி எழுபதாவது தடவை! எப்படி நானா இவரை பாக்குறது! ? ‘

ஹலீம் மரைக்காயர் , பார்க்க சாபுவீட்டு ஆள் மாதிரி இருப்பார். அவருக்கே இப்படி என்றால் வந்து போகும் சில கவர்ச்சித் திலகங்களைப் பார்த்து எப்படிக் கதறுவானோ, தெரியவில்லையே!

நண்பன் நல்லவேளையாக அப்படி முகம் கொண்டவனல்ல. அழகன். நிஜமாகவே சாதனை செய்தவன். பட்டினி போட்ட காஞ்சூரிலிருந்து இப்போது திருவண்ணாமலையில் ஏறியிருக்கிறான். பெரிய துணிக்கடை முதலாளி இப்போது. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான். கண்ணை மூடிக்கொண்டு, முன்னே உள்ள முன்னூறு படிகளை சுயமாக ஏறிக்கடந்தவனின் எழுத்து ஈர்க்கவே செய்யும். ‘காந்தக் கண்கள் ‘ என்ற அந்த புத்தகம் இப்போது விற்பனையில் போடு போடென்று போடுகிறது. நடந்து முடிந்த பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சியில் கூட கண்ணைக் கட்டிக் கொண்டு அந்த புத்தகம் வாங்க வந்தார்கள் கூட்டம் கூட்டமாக.

எனக்கு அவனைப் பிடித்துப் போனது அவன் எழுத்தால் அல்ல. என் மேல் அவன் காட்டும் அநியாய பாசம்…..இவனைப் புகழ ஆயிரம் பேர் இருக்க இவன் என் எழுத்தை புகழ்கிறானே! நான் எழுதிக் கிழித்தவைகளை என் பெயரிலேயே வெளுயிட்டவன். நிறுத்தற்புள்ளிகளே இல்லாமல் ஒரு புண்நவீனத்துவ தொகுதியாக மாறிவிட்டிருந்த அதில் வரும் அநியாய அச்சுப் பிழைகள் சம்பந்தமாக மறு புத்தகமும் – அவனது சொந்தச் செலவில் – வெளுயிடப்போகிறான். இந்த காலத்தில் நண்பர்கள் செய்யும் வேலையா இது ?

‘புதன் கிழமை ஷைத்தான் டி.வியில் வருகிறேன் ‘ என்று அவனிடமிருந்து என் கைத்தொலைபேசிக்கு தகவல் வந்ததுமே மனம் உற்சாகத்தில் பறந்தது. சற்று நேரத்தில் இதே தகவலை என் ஊர்க்காரர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எரிச்சலாக இருந்தது. ஒரே செய்தியை ஒன்பதாயிரம் பேருக்கு ஒரு நொடியில் அனுப்பும் உயர்சேவைகள் ஒழிக!

‘கூட்டாளி வர்றாஹா போலக்கிதே ‘ என்ற ஊர்க்காரர்கள் அதோடு விட்டு விடவில்லை. விட்டால் காஞ்சூர் பட்டியலிலிருந்தே நீக்கப்பட்டு விடுவார்கள் இல்லையா ?

‘ஏன் நானா, நீங்க எப்போ ஷைத்தான்லெ வரப்போறீங்க ? ‘

‘உலகத் தொலைக்காட்சிகளிலே முதன்முறையாக ‘ , ஷைத்தானை பேட்டி காணும்போது வேண்டுமானால் என்னைக் கூப்பிடலாம். இதுவரை என்ன சாதித்திருக்கிறேன் ? ஒரு 6X8 அடி அறையில் , தனிமையின் துயர் தீர்க்க நாலுலட்சம் தடவை குறுக்கும் நெடுக்குமாக நடந்திருக்கிறேன். இதைச் சொல்லலாமென்றால் இதற்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்கிறார்கள். ‘காலையே வா ‘ அல்லவா காண்போருக்கு அறிவு தருவது!

முன்பெல்லாம் முப்பதுபேருடன் ஒரு அறையில் வசித்தபோது அந்த கட்டிடத்தின் மேலிருந்த ஒரு பெரிய analog டிஷ்ஷில் ஷைத்தான் வந்து கொண்டிருக்கும். நான் மட்டும் பிரேதம் டி.விக்கு திருப்பச் சொன்னால் என்னைக் கொன்றே போட்டு விடுவார்கள். முக்கியமாக மலையாளிகள்! ஒரு மணற்புயலில் நல்லவேளையாக அந்த டிஷ் தூக்கியெறியப்பட்டதும் எனக்கென்று ஒரு தனி ரூம் கிடைத்ததும் அதிர்ஷ்டம். அந்த தனிஅறைக்குப் பக்கத்தில்தான் டிஜிடல் டிஷ் பொருத்த எண்ணினேன்.சின்ன முதலாளி ஷஹீன் மாலிக் என்னிடம் பிரியமாக இருப்பான். கெஞ்சியபடி கேட்டேன்.

‘உண்மையை ஒத்துக் கொள். 24 மணி நேரமும் தெரியும் ‘ஜிக்ஜிக் ‘ சேனல்களைப் பார்க்கத்தானே வேண்டும் என்கிறாய் ? ‘ என்று தன் வலது கையை மடக்கி பக்கவாட்டில் வேகமாக அசைத்துக் கொண்டே குறும்பாகக் கேட்டான்.

‘அதுவும்தான் அப்புறம் இசை சம்…. ‘

‘அது மட்டும்தான் என்று சொல் என் மலபாரி இதயமே ‘

‘மதறாஸி யா அஹூக் ‘

‘கனீஸ்! எல்லாருமே வீணாப்போனவர்கள்தான். சொல் ‘

‘அது மட்டும்தான் ‘

‘யல்லா! உஸ்கோ ஏக் டிஷ் தியோ ‘ என்று மேலாளரிடம் சொல்லிவிட்டுப் போனான். எனக்கு ‘ச்சோட்டா ‘ டிஷ் கிடைத்தது (receiverஉடன்தான்). உலகம் அற்புதமான ஒன்றாக மாறிப் போனது. அற்புதத்திற்கு காரணம் அதில் ஷைத்தான் வராததுதான். autoscan செய்தால், டி.வி சேனல்கள் தவிர உலகம் முழுக்க உள்ள FM ரேடியோ அலைகளும் முன்னூறுக்கு மேல் கிடைத்ததில் எனக்குப் பிடித்த இசையைக் கேட்க முடிந்தது. அதைக் கணினியுடன் இணைத்து , zetaudio அல்லது soundforge உதவியுடன் mp3யாக மாற்றிக் கொண்டிருந்ததில் (Tips : ‘creative live gold ‘ sound card , ‘ஸ்ஸ்ஸ் ‘சைக் குறைக்கும்) கொஞ்சம் குடும்பச் சண்டைகளை மறக்க முடிந்தது.

மனிதன் சந்தோஷமாக இருப்பதாவது ? அப்புறம் இறைவன் எதற்கு இருக்கிறான் ?

ஷைத்தான் வந்து விட்டது!

இப்போது அதில் நண்பனும் வருகிறான்.

நான் என் பங்குக்கு இணைய நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். ஜெர்மனியானாலும் கனடாவானாலும் கிழமைகள் சரியாகவே வருகின்றன! துபாயில் தெரியும் ஷைத்தானின் கால் தற்போது UKயில் இருப்பதால் ஒளுபரப்பில் நேரக் குழப்பம் இருந்தது. ஷைத்தானின் அடிமைகள் இதை வைத்து ஒரே நிகழ்ச்சியை இருமுறை பார்த்தார்கள்! எல்லாம் வானிலிருந்து வரும் அலைகளுக்கே வெளுச்சம்! என்னிடம் ‘evision ‘ கிடையாது.

அலுவலக நேரம் உதைத்தாலும் மேலாளரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, புதன் கிழமை சரியாக துபாய் நேரம் 9.30க்கு ஷைத்தான் முன் உட்கார்ந்தேன். இந்த நிகழ்ச்சியை இதற்கு முன்பே நண்பனும், அவனது தகவலால் பரபரப்பான ஊரும் பார்த்திருக்கும் என்ற விஷயம் என் நேரம் சரியில்லை என்று உணர்த்தியது.

வரப் போகும் நண்பன் , என்னைப் பற்றியும் ஒரு வரி சொல்லக் கூடுமென்று மனதில் ஒரு நப்பாசை. ‘உன்னெட்ட உள்ள ஒரே குறை வள வளண்டு எழுதுறது ‘ என்றதற்கு பதிலாக நான் ஐயன் கோட்டத்து ஆதிமூலமாய் மாறி ‘அ ‘ என்று மட்டும் எழுதி ஒரு கதை அனுப்பியதில் அவன் கோபமாகியிருந்தான். இதைப் பற்றி சொல்வானா ? வளர்ந்தவனின் வசையும் ஒரு இசையே! அல்லது ‘கோத்ரா ‘ நிகழ்ச்சியை கோமாளித்தனமாக சித்தரித்துக் காட்டிய ஷைத்தானைக்கு சூடு வைப்பானா ? ஷைத்தானுக்கு சூடு வைக்க மனிதனால் முடியுமா ? பார்ப்போம்.

வந்தான் பிரதான விருந்தாளி -cum -அறிஞனாக நண்….., இல்லை, வந்தாள் நைஜீரியாவின் பிரபல தமிழ் எழுத்தாளினி திருமதி. மங்களா சந்திரன்!

ஐயோ, பருப்பு ரசமும் கீரை மசியலும் தவிர வேறென்ன தெரியும் உனக்கு ? முகவை மோகனா போல மூர்க்கமாக எழுத முன்னூறு வருடமாகுமே மாமி உனக்கு!

எப்படியாவது தொலையட்டும், நண்பன் எங்கே ?

ஒருவேளை அவன்தான் ஆன்மீகப் பயிற்சியின் உச்சத்தில் மங்களாவாக மாறிப் போனானோ ? சகோதர மதத்தைச் சார்ந்த சில சாதுக்களுக்குத்தான் அவர்கள் தங்களை பெண் தெய்வமாக நினைக்கும்போது ஸ்தனங்களும் முளைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவனுக்குமா ? அநியாய பயிற்சி எடுத்திருப்பான் போலிருக்கிறதே!

நான் சொன்னதற்காக அந்த நேரத்தில் உட்கார்ந்த சில நண்பர்களுக்கும் குழப்பம் இருந்திருக்க வேண்டும். கத்தினார்கள். அவர்கள் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல.

எனக்கு குழப்பமும் எரிச்சலும். டி.வியை அடக்கிப் போட்டுவிட்டு ஃபோன் போட்டேன். அவனது மூத்த மகள் ஹசீனா எடுத்தாள்.

‘வாப்பா கோவமா இக்கிறாஹா. எங்கேயோ வெளுலே போனாஹா ‘ என்றாள்

ஊர் மாறினாலும் அவள் பேச்சு இன்னும் மாறாதது சந்தோசத்தை அளித்தது ( ஊர் பாஷையில் சொன்னால் ‘ஹல்புலாம் குளுந்து போச்சு! ‘)

‘ஏங்கண்ணு ‘ என்று கேட்டேன் தெரியாதது மாதிரி

‘அஹ ப்ரொக்ராம் நேத்தே வந்திடிச்சாம். இங்கேயும் நாங்க யாரும் பாக்கலே அங்கிள் ‘ ‘

‘இபுலீஸ்ட்டேர்ந்து தப்பிச்சிட்டொம்ங்குறே! ‘

‘வாப்பாட்டெ சொல்லிக் கொடுத்துடுவேன்! ‘

‘ஏ வாலு, கலாட்டா பண்ணி வுட்டுடாதே..! வாப்பாவை திட்டுறதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன். சரி , வெளிளிக் கிழமை காலைல உங்க ஊரு டைம் பதினொன்றரை மணிக்கு ஃபோன் பன்றேன். வாப்பாவை இருக்கச் சொல்லு ‘

வெளிளிக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் ஃபோன் ரேட் , நிமிடத்துக்கு 2.69 திர்ஹம்தான். சேமித்து பங்களா கட்டலாம்!. சரியாக துபாய் டைம் காலை பத்துக்கு ஃபோன் செய்தேன். ஊரில் யாராவது அவனது நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தால் அதில் ஒரு பிரதி எடுத்து எனக்கும் அனுப்புமாறு சொல்லவும்தான்.

ஹசீனாதான் போனை எடுத்தாள்.

‘நேத்து காலைல நீங்க சொன்ன டயத்துக்கு கரெட்க்டா வாப்பா காத்துக்கிட்டிருந்திச்சி அங்கிள்! ‘

அருஞ்சொற்பொருள்

————————–

அஹூக் – சகோதரன்

கனீஸ் – ஆபாசமான திட்டு

யல்லா – ‘ஆகட்டும் ‘ என்று சொல்வது

ஹல்பு – இதயம்

இபுலீஸ் – ஷைத்தான்

abedheen@yahoo.com mailto:abedheen@yahoo.com

http://abedheen.tripod.com

Series Navigation