ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

மலர் மன்னன்


மனு ஸ்மிருதி குறித்து எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான திண்ணை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக என்னுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யத் தொடங்கியிருப்பது மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. பலர் மேலும் பலவாறான விளக்கங்கள் கேட்டு முந்தைய கட்டுரைக்குத் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரை எழுதுமாறும் முடிந்தால் இது பற்றி ஒரு கட்டுரைத் தொடரையே தொடங்குமாறும் எழுதியிருக்கிறார்கள்.

மனு ஸ்மிருதி பற்றித் தொடர் எல்லாம் எழுதுவதற்கு எனக்குப் பொறுமை இருக்குமா என்று தெரியாது. இப்போதைக்குச் சில அடிப்படையான சந்தேகங்களைத் தெளிவுபடுத்தக் கூடிய விவரங்களைத் தர முயற்சி செய்கிறேன்.

முதலில் மனு ஸ்மிருதி பற்றிக் கட்டுரை எழுத வேண்டும் என்கிற தூண்டுதலை எனக்குத் தந்த கனடா வாழ் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான சி. ஜயபாரதன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் அவர் திண்னையில் எழுதிய ஒரு கவிதையைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்திராவிடில் மனு ஸ்மிருதி பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணமே எனக்குத் தோன்றியிருக்காது!

அறிவியல் சார்ந்த நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக எழுதிவரும் சி. ஜயபாரதன், நிச்சயமாக விவரம் தெரிந்தவராகத்தான் இருக்க முடியும். அவரது கட்டுரைகளை சிரத்தையுடன் படிப்பதுண்டு என்றாலும் அவர் எழுதும் கவிதைகளையெல்லாம் படிக்கிற வழக்கம் இல்லை. ஆனால் நான் மனு ஸ்மிருதி பற்றி எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது போலும், வழக்கத்திற்கு மாறாக அவரது கவிதையைப் படித்தேன்.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று தொடங்கிய முதல் வரியைப் படித்ததுமே அறிவாளிகள் மத்தியிலுங்கூட மனு ஸ்மிருதி பற்றி நேரடியான புரிதல் இல்லாமலேயே, வழிவழியாகப் பிறர் சொல்லக் கேட்டு அதன் அடிப்படையில் மிகவும் உறுதியான கருத்து உருவாகி யிருப்பது கண்டு வருத்தம் ஏற்பட்டது. சரி, நமக்குத் தெரிந்ததைச் சொல்வோம் என்று மனு ஸ்மிருதி பற்றி எழுதலானேன். நானே எதிர்பாராத விதமாக ஏராளமான வாசகர்களிடமிருந்து நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு விவரங்கள் கேட்டும் அஞ்சல்கள் வரத் தொடங்கி
யிருக்கின்றன.

நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நமது தேசத்தின் தத்துவம், அறிவியல், கணிதம், கலைகள் முதலான பாடங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. தமிழ் மிகவும் இனிமையான, சமஸ்கிருதத்திற்கு இணையான தொன்மை மிக்க மொழியெனினும், அதன் சுயமான வளம் இலக்கண இலக்கியங்களில் மட்டுமே உள்ளது. அது பெற்றுள்ள மானிட வியலின் பிற அம்சங்கள் யாவும் சமஸ்கிருதத்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன. தமிழில் முன் குறிப்பிட்ட பாடங்கள் தொடர்பான விவரங்களுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் மூலம்.

திருத்தமான மொழி எனப் பொருள்படும் சமஸ்கிருதத்தை பாரத தேசம் முழுவதும் உள்ள படிப்பாளிகள் தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பொருட்டு ஒரு பொது மொழியாகத் தமிழனேதான் உருவாக்கினான் என்று நா. மகாலிங்கம் அவர்கள் கூறுவதுண்டு. இதனை ஒப்புக்கொள்வதன் மூலமாகவேனும் சமஸ்கிருதத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டுள்ள துவேஷம் மறைந்து, அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றுமானால் அது சமஸ்கிருதத்திற்கு அல்ல, அப்படி ஆர்வங்கொள்பவர்களுக்குத்தான் லாபம்.

வெளிநாடுகளிலிரு ந்து வரும் இந்தியவியல் பேராசிரியர்களும் மாணவர்களும் இங்குள்ள சிறந்த கல்வியாளர்களுக்குக் கூட சமஸ்கிருதம் தெரியாது என்பதை அறியும்போது வியப்பும் வருத்தமும் தெரிவிப்பதுண்டு. இந்தியவியலில் தமிழ் மற்றும் தென்மொழிகளைக் கற்றவர்கள்கூட சமஸ்கிருதமும் கற்றால்தான் தமது இந்தியவியல் சார்ந்த அறிவு முழுமைபெறும் என்று கூறுவார்கள்.

கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்ப் புலவர்களும் தமிழகத்து சமஸ்கிருத பண்டிதர்களும் பெரும்பாலும் இருமொழிப் புலமையுள்ளவர்களாகவே இருந்து வந்துள்ளனர். சமஸ்கிருத மொழி மீதான வெறுப்பும் துவேஷமும் கடந்த நூறாண்டுகளில்தான் சிறுகச் சிறுக ஊட்டப்பட்டு வந்துள்ளன.

இவ்வளவும் நான் சொல்லக் காரணம், மனு ஸ்மிருதியை அதன் மூல மொழியான சமஸ்கிருத்தத்தில் படித்துப் பொருள் புரிந்துகொள்ளாமலேயே, எவரோ செய்த அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, அதன் அடிப்படையில் மனு ஸ்மிருதி பற்றிக் கூசாமல் பழித்துப் பேசுவது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்குமேயன்றி, அறிவாளிகளும் அதேபோல் நட ந்துகொள்ளலாமா என யோசிக்க வேண்டும்.

ஹிந்துஸ்தானத்தில் குற்றவியல், குடிமையியல் என்கிற பாகுபாடுகளுடன் நீதி பரிபாலனம் நடைபெற்ற விதம் பற்றிய தெளிவான பதிவுகள் இல்லை. 1700க்குப் பிறகு வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்களான கிழக்கிந்திய கம்பெனியார் நமது ஒற்றுமையின்மையாலும் முன்னெச்சரிக்கையின்மையாலும் நம்மை ஆளுகின்ற பொறுப்பையும் ஏற்றுக் கொண்டபோது, குற்றவியல் குடிமையியல் ஆகியவற்றின் பிரகாரம் நீதி பரிபாலனம் செய்யும் கடமையினையும் ஏற்க வேண்டியவர்களானார்கள். குற்றவியலைப் பொருத்தவரை அவர்களுக்குப் பிரச்சினை இருக்கவில்லை. தங்கள் தேசத்துக் குற்றவியலை எளிதாக வரித்துக் கொண்டுவிட்டனர். அடிமை மக்களுக்கான குற்றவியல் என்பதால் விசாரணை, தண்டனை விதிகளை மட்டும் சிறிது கடுமையாக்கிக்கொண்டனர். சிவில் எனப்படுகிற குடிமையியலின்படி நீதி வழங்க நேர்ந்தபோதுதான் அவர்களுக்குச் சிக்கல் வந்தது.

ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள், முகமதியர், ஒரளவு கிறிஸ்தவர், பவுத்தர், சமணர், வனவாசிகள் எனப் பல பிரிவினர் இருப்பதோடு, ஹிந்துக்களிலேயே ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொருவிதமான பழக்க வழக்கங்களும், பிரிவுகளும், அவற்றுக்கு ஏற்ப நடைமுறைகளும் இருக்கக் கண்டு ஆங்கிலேயர் திகைத்தனர். முகமதியம், கிறிஸ்தவம் போல ஒரு மதத் தலைமை, ஒரு புத்தகம் என்கிற கட்டுப்பாடு ஹிந்துக்களிடையே இல்லாததும், மதத்தின் முத்திரையோடு ஒழுக்க விதிகள் நிர்ணயிக்கப் படாததாலும் எத்தகைய விதிகளின் பேரில் எவருடைய அங்கீகாரத்துடன் ஹிந்துக்களுக்கிடையிலான குடிமை வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பது என்றும் எந்த அதிகாரத்தின்கீழ் தமது தீர்ப்பிற்கு வாதிகளை ஒப்புக்கொள்ளச் செய்வது என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் இதற்கு விடை காணப் பலரிடமும் ஆலோசனை செய்தபோது, ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் மனு ஸ்மிருதி என ஒரு நீதி நூல் இருப்பதாகக் கேள்வியுற்றார். சமஸ்கிருத மொழிப்புலமையோடு, சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ச்சியும் உள்ளவர்கள் என அறியப்பட்ட சிலரைத் தேர்வு செய்து ஒரு குழு அமைத்து,
ஹிந்துக்களுக்கான குடிமைச் சட்ட விதிகளை ஒழுங்கு படுத்துமாறு அவர் கூறினார். பண்டிதர்கள் ஒன்று கூடி த் தமக்குள் விவாதித்து, மனு ஸ்மிருதியைப் புரட்டிப் புரட்டி, முக்கியமான குடிமை விவகாரங்களில் எவ்வாறு தீர்ப்பளிப்பது என முடிவு செய்வதற்கான விதிகளைத் தொகுத்து அளித்தனர். இதுதான் பின்னர் ஹிந்து குடிமைச் சட்டமாகப் பரிணாமமடைந்தது.

பொதுவாக மக்களிடையே அதிருப்தி வளர இடமளிக்கலாகாது என்பதால் கம்பெனி ஆட்சி மத சம்பந்தமான விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்து வந்தது. பாலிய விவாகம், உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், முதலிய நடைமுறைகள் சமூக வழக்கங்களாக இருந்த போதிலும் பண்டிதர் குழு சாமர்த்தியமாக அதற்கு சமயத்தின் முத்திரையைப் பதித்துவிட்டதால் கம்பெனி தர்பார் அவற்றில் தலையிடவில்லை.
சதி என்கிற உடன்கட்டை ஏறும் வழக்கம் பல சந்தர்ப்பங்களில் உடன் கட்டை ஏற்றும் சதிச் செயலாக இருந்தும் அதனைத் தடுக்க கம்பெனி ஆட்சி விரும்பவில்லை. ராஜா
ராம்மோஹன் ராய் இடைவி டாது முயற்சி செய்ததன் பயனாகவே இறுதியில் அந்தக் கொடிய வழக்கத்தைத் தடை செய்ய கம்பெனி ஆட்சி முன் வந்தது. உடன்கட்டை ஏறுதல் ஒரு சமூகப் பழக்கம், சமய நம்பிக்கைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று ராம்மோஹன் ராய் வாதாடித் தமது கோரிக்கையை அத ஏற்கச் செய்தார்.

பண்டிதர்கள் மனு ஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து குடிமைச் சட்ட விதிகளை ஒழுங்கு செய்ததாகக் கூறியபோதிலும் அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
பொதுவாகக் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள முற்படும்வதற்கு முன் கிராம அளவிலான பஞ்சாயத்துகள் மூலமாகவே குடிமையியலிலும், குற்றவியலில் சிறு குற்றங்களுக்கும் தீர்ப்ப்புகள் வழங்கப் பட்டு வந்தன. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டுதான் பண்டிதர்கள் ஹிந்துக்களுக்கான குடிமையியல் விதிகளை ஒழுங்கு படுத்தினார்கள்.

புதிதாக நிறுவப்பட்ட குடிமையியல் நீதி மன்றங்களில் ஹிந்துக்களிடையிலான வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது ஆங்கிலேய நீதிபதிகளுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கான ஆலோசனை வழங்கப் பண்டிதர் குழு நியமிக்கப்பட்டது. ஒரே மாதிரியான வழக்குகளில் கூட, பண்டிதர்கள் தம் மனம் போன போக்கில் விளக்கம் சொல்லி ஆலோசனை அளிக்கத் தொடங்கிவிட்டதால் கம்பெனி ஆட்சியாளர்களுக்குப் பண்டிதர்கள் அளிக்கும் ஆலோசனையில் சந்தேகம் வரலாயிற்று.

வில்லியச்ம் ஜோன்ஸ் என்பவர் ஹிந்துக்களுக்கு அவர்களின் தர்ம சாஸ்திரப்படித் தீர்ப்பு வழங்குவதுதான் முறை என்று கருதி, மனு ஸ்மிருதியைப் பற்றி அறிந்திருந்தமையால் அதனைப் படித்து மொழிபெயர்க்கலானார்.

பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான இடைச் செருகல்களுடன், முன்னுக்குப்பின் முரணான விதிகளுடன் ஏராளமான பாட பேதங்களோடு பல்வேறு வேறு பிரதிகளாகக் கிடைத்த மனு ஸ்மிருதியை வைத்துக் கொண்டு ஒட்டு வேகைல செய்யத் தொடங்கிய ஜோன்ஸ், இயற்கை நீதிக்கு முரணான பல விதிகளும் அதில் காணப்பட்டதும் ஹிந்து சமயத்தை இழிவு செய்து, கிறிஸ்தவம்தான் சமூக நீதியைப் போற்றும் சமயம் என்று பிரசாரம் செய்ய மனு ஸ்மிருதி சரியான ஆயுதம் எனக் கண்டுகொண்டார். அவரைத் தொடர்ந்து பிற ஆங்கிலேயக் கல்வியாளரும் , இறையியலாளரும் ஹிந்து சமயத்தைத் தாக்குவதற்கு மனு ஸ்மிருதியை வலுவாக பற்றிக் கொண்டார்கள். ஆங்கிலேயக் கல்வித் திட்டப்படிக் கற்றுத் தேர்ந்த நம்மவர்களும், சமஸ்கிருதம் தெரியாமல், மூல நூல் என்ன சொல்கிறது எனத் தெரிந்துகொள்ளவும் அக்கரை கொள்ளாமல், ஆங்கிலேயரின் மொழி பெயர்ப்பு என்ன சொல்கிறதோ அதையே திருப்பிச் சொல்லும் வெறும் கற்றுச் சொல்லிகளாக வலம் வரத் தொடங்கிவிட்டார்கள்.

வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் முதலான இதிகாசங்களில் கூட பாட பேதங்களுடன் வெவ்வேறு வட்டாரங்களில் வித்தியாசப்படுகின்ற பிரதிகள் படிக்கபட்டு வந்துள்ளன. இதுதான் முழுக்க முழுக்கச் சரியான மூல நூல் என்று சாதிக்க முடிவதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, ஒழுக்க விதிகளை விவரிக்கும் சாஸ்திரமான மனு ஸ்மிருதி அவற்றைக் காட்டிலும் கூடுதலான பாட பேதங்களைப் பெறுவது சாத்தியம்தான். இது ஹிந்து மத துவேஷிகளுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது! மத மாற்ற முயற்சிகளுக்கும் இது வசதியயாகப் போயிற்று!

மனு ஸ்மிருதியை மெல்லிய இழையாகக் கொண்டுதான் ஹிந்துக்களுக்கான முதல் குடிமைச் சட்டம் பின்னப்பட்டது. அந்த இழையின் பலத்தினால்தான் காலத்திற்கேற்ப ஹிந்து குடிமையியலில் சமூக சீர்திருத்தச் சட்டங்களையும் சேர்த்துக்கொள்வது சாத்தியமாயிற்று. உடன் கட்டை ஏறுதல், பல தார மணம், தீண்டாமை போன்ற சுய நலம் சார்ந்த சமூக அடிப்படையிலான பொருந்தா வழக்கங்களைக் குற்றவியலுக்குரிய முறை கேடுகள் எனத் தடை செய்வதும், பெண்களுக்குச் சொத்தில் பங்கு, எனப் பல விதிகளைத் தங்கு தடையின்றி அதில் இணைத்துக்கொண்டே வரவும் முடிகிறது என்றால் இதற்கான பெருமை மனு ஸ்மிருதியைத்தான் சாரும்.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்