ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

பட்டணம் அப்பாவுக்கு அஜீரணமாய் இருந்தது. நகரத்தில் பொழுதுகளே அரிதாரம் பூசிக் கொள்கின்றன. பக்கத்து ஆட்களிடமே புன்னகைகாட்ட முடிகிறதில்லை. எஸ் ?- என்று புருவம் சுருக்குகிறார்கள். காரியவாதிகள். எதிரெதிரே ஃபிளாட்கள்… எதிர்க்கதவு திறக்க நம்கதவை சார்த்திக் கொண்டாக வேண்டும்… அவர் அந்தரங்கம் பேணவும் நம் அந்தரங்கம் காக்கவும்…

அப்படியாய் இருக்கிறது நகரம். ஊர் உயர்நிலைப் பள்ளியில் ராகவமூர்த்தி தலைமையாசிரியர். வேலையாய் இருக்கையில் கண்டிப்பும் சற்று நிமிர்வும் காட்டுகிறவர் வீடுசேர முகம் நெகிழ்வார். ஸ்ரீஹரி அதேபள்ளியில் படித்தாலும் அவர் பாடம் எடுக்க அமையவில்லை. ‘ஸச் மச் ஸோ ‘ என்ற விநோதப் பிரயோகம் அவரது பாணி என்று பையன்கள் கிண்டலடித்தார்கள்… அவன் இல்லாத சமயம்.

பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு அவன். அப்பா பணிஓய்வு பெற்றார். அவனும் விடுதிவாசம் முடித்து பெற்றோருடன் தனிவீடு எனப் பார்க்க வேண்டிவந்தது. வேலையும் இங்கேயே என பிற்பொழுதுகள் அமைந்ததில் ஊர் நினைவுகள் புழுதியடங்கி மங்கிப்போயின அவனுக்கு. ஆனால் அப்பா… நகரம் அவருக்கு ஒட்டவேயில்லை. நரகம் அவரது நகம்போல… உயிர் இருக்கிறதா இல்லையா என்று கூறவியலாத அம்சம்.

மரங்கள் அற்ற வெக்கை. அனல் காற்று. மனிதர்களே நடமாடும் மரங்கள் என ஆனார்கள். தூசிப்பேய் வழிமறிக்கிறது, விரட்டி வருகிறது… தப்பித்தல் இல்லை. ஹா, நேரில் பேசுவதைவிட தொலைபேசியில் பேசுவதை மரியாதை எனப் பேணும் நகரஜனங்கள். ஒருமுறை விநோதமான அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. பள்ளிக்கூடத்தில் அவரது சகா கணக்கு வாத்தியார் போலவே ஒருவரை எதிரில் கண்டார் அவர். ‘ஹலோ ராஜாமணி ? ‘ என்றார் உற்சாகமாய்.

‘ஸாரி ராங்நம்பர் ‘ என்றபடி அவர் கடந்து போனார்.

ஜாடைக் குழப்பம் சரி. ஃபோன் காதில் இருக்கிற பிரமையுடனேயேவா ஒருவன் நடமாடுவது, என்றிருந்தது அவருக்கு. வருத்தமாய் இருந்தது. இப்போது செல்ஃபோன்கள் வந்துவிட்டன. சட்டைப்பைக்குள் சோப்புக்கட்டிகள் போல. காதோடு ஒலியன்களை வைத்துக் கொண்டு ஜனங்கள் நடந்தபடியே பேசுகிறார்கள். நாடகக்காட்சி… சிலர் பேச்சு சுவாரஸ்யத்தில் கையாட்டி அபிநயிக்கிறதையும் பார்த்தார்… அந்தரங்கம் கொச்சைப்பட்ட கெட்டுப்போன நகரம். அவருக்கு வருத்தமாய் இருந்தது.

பெண்களோவெனில் தொலைக்காட்சிப் பெட்டியில் களவுபோகிறார்கள். அம்மா என்றால் நல்லவள். மாமியார் கெட்டவள் என விநோத இலக்கணக் கதைகள் அவற்றில் வருகின்றன. தினசரி வருகின்றன. விதவை என்றால் அவமானப் படுவாள் அல்லது அவமானப் படுத்துவாள்… சினிமா அலையில் கீழிறக்கப்பட்ட நடிக நங்கையர் இங்கே கவர்ச்சி மறந்து, இ. பூ. பா. குடிக்குமா என்கிற தினுசில், குடும்பக் குத்துவிளக்காகிப் போனார்கள் டி.வி.யில். மாமிகளுக்குப் பெரும் ஈர்ப்பு தந்தன தொடர்கள். மாமனாருக்குக் காபி தராமல் மேக்கப் போட்டுக் கொள்ளும் பெண்மேல் அவளுக்கு ஆத்திரம் வந்தது.

‘பசிக்கறது ‘ என ராகவமூர்த்தி வந்து நின்றார். விளம்பர இடைவேளை அல்லது தொடரும்… வரும்வரை அவர் காத்திருக்க வேண்டி வந்தது.

?ிண்டு பேப்பரை எவ்வளவு நேரந்தான் வாசிப்பது. கண்ணும் அத்தனை போதாது. பொடி எழுத்துக்கள். தலையங்கம் கொஞ்சம் பெரிய எழுத்தில் போடுகிறான். படிப்பார். கீழே பொன்மொழி- அதுவும் கவனிப்பார். டி.வி. எனில் கிரிக்கெட் – ஒருநாள்-ஆட்டம் என்றால் பார்க்கலாம். பெரும்பாலும் சாய்வுநாற்காலியில் கண்மூடி நினைவுகளை மேய விட்டபடி யோசனை நீளும். முளையிட்டு கயிறுகட்டிய மாடு. வட்டம்… வட்டவலயம் என்று கணக்கு சொல்லித் தந்த நாட்கள் பற்றிய நினைவுகள்.

நேரமின்றித் தவிக்கும் மகனை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அவர். வீடு ஒருபக்கம் அலுவலகம் இன்னொரு பக்கம் அவனுக்கு, பாவம். நவீனஓவியம் போல அவன் வாழ்க்கை சிதறிக்கிடக்கிறது. முடிச்சு முடிச்சாய் போக்குவரத்தில் சிக்கி சொருகி உருவிக் கொள்கிறான். ஸ்ரீஹரி கரிப்புகை பொறாமல் இருமினான். அந்தக்கால லீக்கோப்புகை ரயிலில் வந்ததுபோல உடம்பெங்கும், கண்ணோரமும் னரிப்பிசின் கண்டது. அலுவலக செயற்கைக் குளிர் ஒவ்வாமல் முதுகுத் தண்டில் வலி கண்டது. ஸ்ரீஹரி நல்ல சங்கீத ரசிகன். ஊரில் அவனும் அவருமாய் மொட்டைமாடியில் ரேடியோக்கச்சேரி இரவுகளில் ரசித்திருக்கிறார்கள். பழைய ஜியென்பி, மதுரைமணி, செம்மங்குடி… என மறுஒலிபரப்புகள். நேயர் விருப்பம். அடுக்கக நகர வாழ்க்கை எப்படித்தான் அவனுக்கு ஒத்துக் கொண்டதோ ?… பூமியும் சொந்தமில்லை இங்கே. கூரையும் சொந்தமில்லை.

‘ரேடியோவை அணைச்சிருங்கப்பா. தூங்க முடியலை. நான் காலைல சீக்கிரம் போகணும் ‘ என்றான் ஸ்ரீஹரி. சட்டென்று அவர் உள்விளக்கு அவிந்து இருட்டு சூழ்ந்தது.

பாடத்திட்டமெல்லாம் மாறி, மாடுகள் தாம்புக் கயிறை அறுத்துக் கொண்டுவிட்டன. வட்டமும் இல்லை. வட்ட வலயமும் இல்லை. கணம் என்கிறான். கணினி என்கிறான். பொழுதைக் கரைசேர்க்கிற அளவில் சில சிறுவகுப்புப் பையன்களுக்கு வீட்டில் பாடம் எடுத்தார். மாலையில் கொஞ்சம் வெளியுலா. சின்னக் கோவில். அதன் ஆகச்சிறு சந்நிதிக்குள் ஆண்டவனுக்கே வியர்த்து வழ்யும் என்றிருந்தது. காதைக் கிழிக்கும் பக்திப்பாடல்கள் கூரையில் இருந்து பீறிட்டெழுந்தன. துளசிமாலைகளைத் தின்ன பூக்காரன் அசந்தநேரத்துக்குப் பார்த்து மாடுகள் காத்திருந்தன. கோவிலில் குழல்விளக்கிலும் படிகளிலும் உள்ளே மாட்டியிருக்கிற படங்களிலும் உபயம், உபயம்… என்றிருந்தது. அழகிப்போட்டி போல எதிர்காலத்தில் விக்கிரகத்தின் பூணல்போலவும், மாலையிலும் கூட உபயம் என எழுதப் படலாம்.

அப்படியாய் இருக்கிறது நகரம். சதா இரைச்சலாய் இருக்கிறது. நள்ளிரவு வரைகூட ஒலிகள் ஓய்வதேயில்லை. அடங்குவதேயில்லை. எல்லார் வீட்டிலுமே இருசக்கர புகையூர்தி இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன…. ஞாயிறுகளிலும் அவற்றுக்கு ஒய்வு இல்லை. ஞாயிறுகளில் அவை அதிகம் வேலை செய்ய வேண்டிக்கூட இருந்தது.

நகரத்தில் மனித ஆன்மாக்களே துீசிபடிந்து கிடப்பதாக உணர்ந்தார். பெண் என்பவள் வெளியிறங்கியது சரி, பெண்ணின் அடையாளந் தொலைக்கிற அவசியம் அவருக்குப் புரியவில்லை. வேலைக்குப் போகிறார்கள். சம்பாதிக்கிறார்கள்… ஆண்களைப்போலவே இயங்குகிறார்கள் சரி. ஆனால் உடையளவிலுங்கூட ஆணுடை தரிக்கிற மாற்றங்கள், அடையாளந் தொலைத்தல் அவருக்கு லஜ்ஜையாய் இருந்தது. பால்சார்ந்த பிடிப்புகள் தளர்ந்து வருகின்றன.

‘அம்மா நீயும் நைட்டி போட்டுக்கோயேன் ‘ என்றான் ஸ்ரீ ?ரி. அவளுக்குத் துீக்கிவாரிப் போட்டது.

ஆனால் உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்தபோது யமுனா நைட்டி அணிய வேண்டி நேர்ந்தது. தலைமயிர் பராமரிப்பு சிரமம் பார்த்து அதுவும் கிராப் என ஆகிப்போனது. அவர் அறிந்த யமுனாவா இது ?… இது நகரமுகம். ஆஸ்பத்திரியில் முதல்தளத்தில் தனியறை வாசம். அவர் மற்றும் அவள். பரிபூரணமான கணங்கள். ஓரளவு ஆசுவாசமாய்க் கூட இருந்தது.

‘உன் முகமே… அடையாளமே மாறிப் போச்சுடி ‘ என்றார்.

‘நீங்களும் வேணா மீசை வெச்சிக்கலாம். யாரு வேணான்னா ? ‘ என்றாள் புன்னகையுடன்.

இதய இயக்கம் சீராக இல்லை அவளுக்கு. உடல் திசுக்களில் கொழுப்பு சேர்ந்துள்ளது என்றார்கள். அடிக்கடி வந்துபோகும் பிரச்னை. அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து போக வேண்டியிருந்தது… தனியறை. அவளுடனேயே கூட இருந்து அவர் கவனித்துக் கொண்டார். பொதுவாக டி.வி. தொடர்களில் ஆண்கள் படுத்துக் கொள்ள பெண்கள் கவனித்துக் கொள்வார்கள்.

‘உடம்பு எப்பிடி இருக்கு ? ‘ என்று கேட்டார் அவர்.

‘சுமங்கலியாப் போய்ச் சேர்ந்துட்டா நல்லது. ‘

‘டி.வி. சீரியல் நிறையப் பாக்கறே ‘ என்றார் அவர்.

அவள் சிரிக்கிறாள். ‘மிஸ்டர். இது ஆஸ்பத்திரி. நான் நோயாளி. நீங்க என் கார்டியன்… நினைப்பு என்னவோ மாப்ளை ஜோர்தான். தனிக்குடித்தன பாவனைதான்… ‘

கஷ்டம் எத்தனை வந்தாலும் புன்னகைக்கிறது அவள் சுபாவம். அவரிடம் எதையிட்டும் ஓர் அலுப்பும் சலிப்பும் இருந்தது. இழப்புகளை வலிந்து மனப்பதிவு காணும் இயல்பு. மூப்பின் நிழல்தட்டிய மனம். சில பெண்களுக்கு வயதாவதேயில்லை. வயதாவதை அவர்கள் விரும்புகிறார்களில்லை.

என் உற்சாகத்தின் ஊற்று இவள். என் மனைவி… என நினைத்துக் கொண்டார். இருண்ட அவர் உலகில் அவள் குத்துவிளக்கு. டி.வி. வசனம் போலத்தான் இருக்கிறது. பரவாயில்லை. கூடவே -தொடரும்… என நினைத்துக் கொண்டு புன்னகை செய்துகோண்டார். தொலைக்காட்சித் தொடர்கள் முடியும் சாயலின்றியே நாள்தோறும் அமைந்தன. சின்ன ஸ்டேஷனுக்கு நிற்காத ரயில்வண்டிகள் போல. ஆனால் ஸ்பான்சர்களின் தயவில் அல்லது தயவின்மையில் திடாரென முடிந்தும் போகின்றன. திடார்மழை வர மொட்டைமாடித் துணிகளை அள்ளி வருகிறாற்போல எல்லாப் பாத்திரங்களையும் திரட்டிச் சேர்த்து முடித்து விடுகிறார்கள்.

கடவுள் எனும் ஸ்பான்சர் கைவிரித்தார். ஆ- யமுனா… அவர் அருமை மனைவி… இறந்து போனாள். அவள் ஆசைப்பட்டபடி சுமங்கலி அந்தஸ்துடன்ி இறந்து போனாள். அதிகாலை. அவள் உறக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் கதவை ஓசைப்படாமல் சார்த்திக் கொண்டு அவர் கீழிறங்கிப் போனார். ?ிண்டு பேப்பர் வாங்கினார். பீகார்க் கலவரம். காஷ்மீர் வன்முறை. அயோத்திக் குழப்படி… ஒருவேளை நேற்றுப் பேப்பரோ என்கிற அளவில் செய்திகள் இழுத்தடிக்கப் பட்டிருந்தன. தலையங்கம், ‘இன்றைய சிந்தனை ‘ எல்லாம் பார்த்தார். அவ்வப்போது டா ஒரு மடக்கு அருந்தினார்… திரும்பி அறைக்கு வர, காத்திருந்தது செய்தி. /யமுனா மரணம். தூக்கத்தில் ஆவி பிரிந்தது./… பெரிதும் சலனம் காட்டாத முகம். மரணம் அண்டிய நிழல் அற்ற முகம். டாக்டர் வந்து உறுதி செய்த பின்னும் அவள் மரணத்தை அவரால் நம்ப முடியவில்லை. அடிநாக்கில் டாயின் கசப்பு.

‘ ?ரி ? ‘

‘என்னப்பா காலைல ? ‘ என்றான் செல்ஃபோனில்.

‘உங்கம்மா… ‘ என்னுமுன் குபுக்கென தவளையாய் வெளிக் குதிக்கும் அழுகை.

‘அப்பா… என்னாச்சிப்பா… ‘ என்றவன், ‘சரி, நான் உடனே வரேம்ப்பா ‘ என்றான்.

தனித்த கனத்த கணங்கள் பூதகணங்களாய் அவர்மேல் அழுந்தின. அவள் இல்லாமல் வீட்டின் சிறு சப்தங்களும் அடங்கி விட்டன. வீடு ஸ்தம்பித்துக் கிடந்தது. அன்றாடமே திண்டாடிப் போனது. சாப்பாடே பிரச்னை என உருமாறிப் போனது. பெண்ஜென்மம் இன்றி இந்த ஆணால் ஒருபோதும் வாழவியலாது போலும், எனத் திகைத்தார் அவர். சமைக்க என வெளிமாமி ஒருத்தி வந்தாள். அமங்கலி. சுமங்கலிகளின் இடத்தை அமங்கலிகள் நிரப்புகிறார்கள். அமங்கலன்கள் இவ்வண்ணம் ஆசிர்வதிக்கப் படுகிறார்கள்.

ஹிண்டுவில் home for the aged-ம், homage பத்திகளையும் கவனிக்க ஆரம்பித்திருந்தார். வாழ்க்கை பெரும் அயர்ச்சியாய் இருந்தது. திடுமெனக் கூண்டு திறந்தாலும் சிறகை மறந்த கிளி, வானம் தொலைத்த கிளி என மருண்டது மனம். சுமங்கலனாய்ப் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

உடல் தேடல் என்றில்லை. பெண்வாசனை என்பது வீட்டின் அம்சமாகவே இருந்தது. வீடுபெருக்க துணிதுவைக்க பண்டபாத்திரங்களைத் துடைத்துக் கழுவி துீய்மைப்படுத்த…

ஆ, சமையல்… வெறும் உப்பு புளி கார விவகாரம் அல்ல அது. கைப்பக்குவம், மனப்பக்குவம் சார்ந்த விஷயம். அரிசி வேக எத்தனை அளவு தண்ணீர் விட வேண்டும் என்பதே ஆணுக்கு சவால்தான்.

ஸ்ரீ ?ரிக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்திருக்கலாம் என்று தோணியது. இவள்… யமுனா இருக்கும்போதே அவர் பெண்பார்த்திருக்க வேண்டும். யமுனாவை வீட்டுநிர்வாகச் சுமையில் இருந்து சற்று தளர்த்தி யிருக்கலாம். ‘இப்ப அவசரம் ஒண்ணும் இல்லப்பா. கொஞ்சம் போகட்டுமே ‘ என்றான் ஸ்ரீஹரி. அத்தோடு அழுத்தந் தராமல் விட்டாகி விட்டது. அம்மா கூடஇருந்ததில் ஒருவேளை அவன் அப்படி அக்கறைப்படாமல் இருந்தான் என்று தோன்றுகிறது… பெண்கள் ஆண்களுக்க்ீக குத்துவிளக்குடன் காத்திருக்கிறார்கள்.

சில ஆண்களின் வீட்டில் ஏனோ இரட்டைக் குத்துவிளக்குகள்.

— அப்பாவின் உள்வாட்டம் பார்த்து ஸ்ரீ ?ரி விதவிதமாய் சங்கீதக் கேசட்கள் வாங்கி வந்தான். கதரி, மகாராஜபுரம் முதல் இன்றைய நித்யஸ்ரீ ஜெயஸ்ரீ… என்று. மழைகாணாத பூமி என அவர்மனம் வறண்டு கிடந்தது. அவரது ரயில் தண்டவாளம்-இறங்கி விட்டாற் போல உணர்ந்தார். அவர் முகத்தில் புன்னகையைப் பார்க்க ஏக்கமாய் இருந்தது அவனுக்கு.

‘அப்பா ? ‘

ம்… என்கிற பாவனையுடன் கண்ணாடி கழற்றியபடியே நிமிர்ந்து அவனைப் பார்த்தார் ராகவமூர்த்தி.

‘சரஸ்வதி பூஜையை ஒட்டி சேர்ந்தாப்போல லீவு வருதுப்பா… ‘

‘ம் ‘

‘நம்ம ஊர்ப்பக்கம் போயிட்டு வரலாமாப்பா ? ‘ என்றான் தனக்கே ஆசைபோல. அவர் கண்ணில் சட்டென ஒருமீன் துள்ளியடங்கியதை கவனித்தான். ‘ச் ‘ என்றார் ஆயாசமாய். ‘நம்ம வீட்டையே வித்தாச்சேடா… இனி அந்த ஊர்லயும் அந்த வீட்லயும் என்ன இருக்கு ? ‘

‘என்ன இருக்குன்னு போய்ப் பாத்திட்டு வரலாம்ப்பா… ‘ என்றான் புன்னகை மாறாமல்.

விரக்திபோலச் சொன்னாரே யொழிய அப்பாவுக்கு உற்சாகம் அலைபுரட்டத்தான் செய்கிறது. பஸ் முன்னோக்கிச் செல்லச் செல்ல… அவரது நினைவுகள் பின்னோக்கி வேகமெடுக்கின்றன. வயது

குறைந்துகொண்டே வருகிறது. /காலயந்திரம்/ கதைகளில் வருகிறாப்போல…. அப்பா குழந்தையாகிப் போவாரோ ?

ராஜாமணிதான் இப்போது பிரின்சிபல். பள்ளிமுகப்பே மாறியிருக்கிறது. கிராதிக்கதவில் புதுபெயிண்ட் பளபளக்கிறது. சுவர் புதிதுபோல் வெள்ளையடிக்கப் பட்டு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. புதுக் கட்டடம் எழுந்து பள்ளி நிர்வாக அலுவலகமும் பிரின்சிபல் அறையும் மாறிவிட்டது. பள்ளியின் கெளரவமும் உயர்நிலையில் இருந்து, மேல்நிலை என ஓங்கியிருக்கிறது. தானே உள்நுழைய கூச்சத் தயக்கமாய அந்நியத்தன்மையாய் வெட்கம் பூசியது.

வீட்டை விற்று வருடங்கள் ஆகின்றன. வீட்டுக்காரர் நன்முகத்துடன் ‘வாங்க வாங்க ‘ என வரவேற்கிறார். அப்பா முகத்தில் அந்திப்பொழுதின் மந்தகாசம் பார்க்க ஸ்ரீஹரிக்குத் திருப்தியாய் இருந்தது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி… என மனம் பாடியது. வீடு… என்பது ஒவ்வொரு மனிதனின் கனவுநிஜம் அல்லவா ? அதன் உள்ளறைகள் இருண்டஇரவின் சிறு வெளிச்சத்திலும் பெருநிழல்களை அடையாளங் காட்டுகின்றன. மனம் தேவதையாய் அறையைச் சுற்றிப் பறந்து வளைய வருகிறது. வீட்டின் இருளேகூட விரும்பத்தக்க மழையின் எதிர்பார்ப்பின் முன்னறிவிப்பு போலத்தான்… எதிர்பார்ப்பும் காத்திருத்தலும்… உலகம் அழகானது.

யமுனா அழகானவள்.

?ா, என் வீடு. நிலா கண்ட கணங்கள். வானம் எத்தனை அழகாகி விட்டது. இது என் வானம். என் கூரை. மாற்றங்கள்… சரி. அவையேகூட நகரமுகம் கண்ட என் யமுனாபோலத்தான். அதோ வாசல்திண்ணை. அங்கேயமர்ந்து அவர் ஹிண்டு வாசிக்கிறார். உள்முற்றத்தில் வெயில் நீள்வது அழகு. மழைதாரைகளை வேடிக்கை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். இயற்கை கச்சேரி செய்வது போலிருக்கும். வீட்டுக்குள் முற்றம்… இயற்கைக்கான நாடகமேடை அல்லவா அது ? முற்றத்து ஜலதாரை வழியே ஒருமுறை பாம்பொன்று நுழைந்துவிட்டது. நல்லபாம்பு. யமுனா எச்சில்தாலத்தைப் போட்டு கைகழுவப் போனவள் பதறிப் பின்வாங்கினாள். விளக்கு போட்டுக்கொண்டு போயிருக்கலாம் அவள். அவர் வந்துி விளக்கைப் போட்டதும் சட்டென்று எச்சரிக்கையாகி ‘ஸ் ‘ஸென்று முகம் பொங்கியது. நல்லபாம்பு. எத்தனை அழகு. ‘ஷ் ‘ என்றார். அமைதியாய் இரு பாம்பே… பாம்பு தலையிறக்கி மீண்டும் வந்தவழி காணாமல் போனது.

அவர் தோளில் சாய்ந்திருந்தாள். இரவு. அவளது சின்ன நெஞ்சின் படபடப்பை உணர்ந்தார். முகத்தைச் சிறிது உயர்த்தி சின்னதாய் ஒரு உதடுத் தடவல். என்றாலும் இதோ இந்த இதயத்தில் இந்த இடத்தில் அது பத்திரமாய் இருக்கிறது. மறக்காது.

‘அப்பா ? ‘

ம்… என்றார் கலைந்து. அடாடா, புறப்படும் வேளை வந்து விட்டதா ? அதற்குள்ளா ? அவர் உள்ளே மின்சார வயர் அறுந்து விழுந்து, இணைப்பு துண்டிக்கப் பட்டாற் போலிருந்தது. இது… ஆமாம், தேசிகனின் வீடு. அவர். அவர் மனைவி. ஒரு பெண்- புஷ்பலதா. கல்லுீரி விடுமுறை போலும். வந்திருக்கிறாள். கனவுகள் அவள் கண்ணுக்கு மையிட்டிருந்தன. கன்றுக்குட்டி. ரெட்டைச்சடை கன்றுக்குட்டி… கொம்புகள் கீழ்நோக்கி வளர்ந்துவிட்ட கன்றுக்குடடியா அவள்… தேசிகன் அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தந்திருந்தார். பாடு- என அப்பா சொல்லவும் சட்டென எடுத்தது பிடித்திருந்தது. ஸ்ரீ சக்ர ராஜ… யமுனாவின் பாடல். அடிக்கடி அவள் முணுமுணுப்பாள். திரும்பி ?ரியைப் பார்த்தார். சலனம் காட்டாத அவன் முகம். நகரத்தில் இயங்கி உணர்ச்சி மரத்துப் போனானா இவன்… வருத்தமாய் இருந்தது.

வீட்டைப் பிரிகிறேன். வெயில் உக்கிரப்பட்டாற் போல உட்புழுக்கமாய் உணர்ந்தார். ஆமாம், பிடிவாதம் பிடிக்கக் கூடாது. நான் இழப்புகளுக்குப் பழகிக் கொள்ள வேண்டும்… அந்த உள்ளறை. நானும் யமுனாவும் கனவுகளை அந்தரங்கங்களை ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட அறை… சரி அது கனவுகளின் கருவூலம். அதிர்ஷ்டசாலிகள் அந்த அறையில் அவற்றைக் கண்டு கொள்கிறார்கள்.

அந்த உள்ளறையில் ஸ்ரீஹரி தலைவாரிக் கொள்கிறான். இந்தக் குட்டி… லதா துறுதுறுப்புடன் அவனைத் தேடுவதை கவனித்தார். தற்செயலாகப் போல அவள் அந்த அறைக்குள் நுழைகிற அவளது பாவனை சிரிப்பாய் இருந்தது. காதுகள் தீட்சண்யப் பட்டன தானாகவே.

‘நல்லாப் பாடினே… ‘ என்றான் ஹரி.

‘அதுக்கென்ன ? ‘ என்கிறாள் அவள் வெடுக்கென்று. ‘அதை அங்கியே அப்பவே சொல்லக் கூடாதா ? ‘ என்கிறாள்.

‘இங்கியே இப்பவே சொல்லணும்னு நினைச்சேன்… ‘

அவள் சிறிது மெளனிக்கிறாள். ‘நான் மெட்றாஸ் பாத்ததேயில்லை… ‘ என்றாள் திடாரென்று.

‘அதுக்கென்ன ? ‘ என்றான் அவன் அலட்சியமாய். ‘அதைச் சொல்ல உற்றறைக்கு தனியே நேரம்பார்த்து வரணுமா ? ‘ என்கிறான்.

ஒரு குத்துவிளக்கு ஏற்றப் படுகிறது… என நினைத்துக் கொண்டார்.

—-

Series Navigation