ஹாங்காங்கின் நாட்டிய சிகரா பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

சித்ரா சிவகுமார்


மார்ச் 26ஆம் தேதி, ஹாங்காங்கில் திருமதி சந்தியா கோபால் நடத்தி வரும் நாட்டிய சிகரா பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 7 வயது முதல் 18 வயது வரையிலான 27 மாணவியர்களில் பலருக்குத் தாங்கள் கற்றுக் கொண்ட நாட்டியத் திறமையைக் காட்டும் முதல் வாய்ப்பாக அமைந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
முதல் நிகழ்வில் தங்களது உடற்கட்டினையும் கால் அடி வைத்து ஆடும் பாங்கிணையும் 27 பேரும் ஒரு சேர செய்து காட்டினர். கணேஷ கௌத்துவம், அலாரிபூ, புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், சப்தம் என்று மாணவியர் பல்வேறு நாட்டியங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். மயில் அலாரிபூ செய்து காட்டி, நாட்டியத்தில் அதிக சுவாரசியத்தைப் புகுத்தினர்.
மூத்த மாணவியரான சாக்ஷி கௌசிக், வைஷ்ணவி கௌசிக், ரேணுகா சந்தானம் மூவரும் தனித்தனியே பதம் எனும் நாட்டியத்தை ஆடி, அசத்தினர்.
இறுதியில் ஹாங்காங்கின் இந்திய சேர்ந்திசைக் குழு தரங்கிணியினரின் பாடலுக்கு ராதை, கிருஷ்ணர்களாக மாறி, இணைந்து நடனமாடி பார்வையாளர்களை கோகுலத்திற்கே அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஹாங்காங்கில், அன்று பரதக் கலை முழுவதுமாக முகம் மலர்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது. மூத்த மாணவியர் மூவரும் தங்களது குருவுக்கு அனைத்து மாணவியர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.












Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்