வேத வனம் விருட்சம் – 41

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

எஸ்ஸார்சி


எமது செயலை
எமது புத்தியை
எமது அறிவை
எழுப்பித் தந்து
எம்மை ஊக்கப்படுத்தும்
அது எதுவோ
அச்சோதியைப் போற்றித்தியானிப்போம் ( ரிக் 3/62- காயத்ரி )

அக்கினியே காவ்யங்களின் ஊற்று
அக்கினியே சிந்தனையின் மூலம்
அக்கினியே தனம் பொழியும் பா
வீரப்புதல் வரரொடு அழகுறு செல்வம் வழங்கி ( ரிக் 4/11 )

இந்திரனே நீ மேகம் பிளந்து
நீர் தந்தாய்
கவி குத்சனுக்கு வளம் தந்தவன் நீ
கபடன் அத் தச்யு
பிரம்மம் அறியாது
நின்னால் அழிந்துபோனான்

குத்சன் இல்லம் வந்தாய் நீ
குத்சனும் நீயுமோ உருவில் ஒன்றாகிட
குத்சன் மனையாள் சத்யவதிக்கு க்குழம்பம்

ஆயிரம் ஆயிரம் தச்யுக்களை
சூரியனின் தேர்ச்சக்கரத்தில் கட்டி த்துணித்தவன் நீ

நிறம்கருத்தோர் ஆயிரமாயிரம்
பொடிந்தே போயினர்
நினது வச்சிராயுத சேவை அது ( ரிக் 4/16)

வேள்வியின் எசமானர் ரிபுக்கள்
பெற்றோர்க்குச்சேவை செய்து
தெய்வத்தன்மை பெற்றோர்
மனம் பெரியோர்க்கு
வலிமை சேர்ப்பர் சான்றோர்
மூப்பும் நோயும்
அண்டிய பெற்றோரை
இளமை ஆக்கினாரொடு
சோமம் பருகிட
வாஜனும் விபவன் ரிபுவும்
எழுந்தருள்க

பசுவைக்காத்தோர் ரிபுக்கள்
ஆண்டொன்று சேவையில்
அழகுரு பெற்றவை ஆவினம்

மூத்தவன் வட்டில்கள்
இரண்டு ஆக்கச்சொன்னான்
இளையோன் மூன்று என்றான்
எல்லார்க்கும் இளையோன்
தேவை வட்டில்கள் நான்கு என்றான்

பிரகாசிக்கும் வட்டில்கள் நான்கு வந்தன
தரிசித்த துவஷ்டா மகிழ்ந்தே போனான்
சத்தியம் பேசிய ரிபுக்கள்
அமிருதம் பகிர்ந்துண்டனர்

நிலம் வளமாகிட
நதிநீர் பிரவாகித்தது
செடி கொடிகள் படர்ந்தன
தேர் செய்யக்கற்பித்துப்
பசுவையும் செய்தனர்
திறமைபெற்ற ரிபுக்கள் ( ரிக் 4/33 )

ஆவும் அன்னமும்
மக்கட்பேரும்
மனை வளமும் பெற்ற ரிபுக்களே
சோமம் முதலில் பருகுங்கள் ( ரிக் 4/34 )

வாஜன் விபவன் ரிபு
வல்லமை அளிப்போர்
முனியாதல் முனைவோர்
வீரம் விளைவிப்போர்
உத்தமம் சமைப்போர்
வளமை வழங்குவோர்

மக்கட்பேறு எமக்கு அருள்க
பொருள் மலிக
புகழ் பொலிக
அன்னியர்மாட்டு உபரியாய்க்காணும்
நல் உணவு எதுவும்
எமக்களியும் ரிபுக்களே ( ரிக் 4/36 )
———————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி