வேத வனம் விருட்சம் -95

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

எஸ்ஸார்சிசத்தியத்தால் புவி
சூரியனால் வான்
ருதத்தால் ஆதித்யர்கள்
சோமனால் விண் விளங்கி வருகிறது
செடியைப்பிழிந்து ச்சோமம் பருகியதாய்
ஒருவன் பாவிக்கிறான்
ஆயின் பிராமணர் அறியும் சோமனை
யாரும் மெய்யாய் அறிந்ததில்லை
சூரியையை மணந்திட அசுவினிகள் ஆசைப்பட்டார்கள்
சோமனே மணமகள் சூரியையைத்தேடினான்
சவிதா சூரியையை
அவள் கணவனிடம் சேர்ப்பித்தாள்
சூரியையை இருகாளைகள் இழுத்துச்செல்லத்
தன் கணவனிடம் போய்ச் சேர்ந்தாள்
சூரியை மூன்றுச்சக்கரத்தேரிலே பயணித்தாள்
இரு சக்கரங்கள் பிராமணர்க்குத்தெரிந்தன
மர்மச்சக்கரமொன்றை அறிஞர் அறிவர்
பெண் வருண பாசத்தினின்று விடுதலை பெற்று
கணவன் வசம் இன்பம் பெறுக
உடல் கணவனோடு இணைய
மகன் பெயரன் என வமிசம் தழைக்கிறது
மணம் வரிக்கச்செல்வோர் பாதை
முள் நீங்கிச்சுகம் தருக
நல் மனம் நல் மக்கள் வளமை செல்வம்
விரும்பிக்கணவனொடு அவள் அமுதம் பெறுக
மாமனார்க்கு மேன்மை
மைத்துனர்க்கு உயர்வு
மைத்துனிகள் நடுவே பேரரசி
மாமியார்க்கு த்தலைவியும் ஆவாய் நீ
மணப்பெண் முதலில்
சோமனின் மனைவியாகிப்பின்னே
கந்தருவனுக்கு மனைவியாகி ப்பிறகு
அக்கினிக்குமனைவியாகி
அப்புறம்தான் மானிடர்க்கு மணவாட்டி யாகிறாள்
உழுத நிலம் அவள்
விதை தெளியுங்கள் நீங்கள்
வயிற்றினின்று மக்களைப்பெற்றெடுக்கும் அவள்
கணவனின் உடன் பிறந்தார்களை விரும்புவாள் ( அதர்வ வேதம் காண்டம் 14 )
கீழ்த்திசைச் செல்லும் விராதித்யன்
அலையும் ஆரியன்
நம்பிக்கையே அவன் காதலி
பாடலே புகழ்
அறிவே ஆடை
பகலே தலைப்பாகை
இரவே கூந்தல்
இந்திரக்குதிரைகளிரெண்டும் வட்ட அணிகலன்
விண்மீன்கள் ஆபரணம்
நிகழும் எதிர்காலமும் துணைவருமேவலர்
மனம் தேரோட்டி
இப்படி அறியப்பெருமை வரும்
விராதித்யன் தென்திசை ஏகினான்
சாமவேதமும் பசுக்களும் வேள்வியும் எசமானனும்
கூடவே சென்றார்கள்
இப்படி அறியப்பெருமை வரும்
விராதித்யன் மேற்திசைச் சென்றான்
வைரூபன் வைராஜன் எனும் சாமத்தோடு
தண்ணீரும் ராச வருணனும்
உடன் சென்றார்கள்
இப்படி அறியப்பெருமை வரும்
விராதித்யன் வடதிசை ச்சென்றான்
சைத்ய நவ்தச சாமங்கள் தொடர்ந்தன
ஏழு முனியும் சோம அரசனும்
பின்னே வந்தார்கள்
இப்படி அறியப்பெருமை வரும்
விராதித்யனுக்கு மஞ்சம் வந்தது
ருக்கும் யஜுரும் அதனில் குறுக்கு நெடுக்கு இழைகள்
வேதம் போர்வை பிரம்மம் தலையணை
ஆறு திசைகளிலும் திசைக்கு இரு காவலர்களாய்
மாதங்கள் பன்னிரெண்டும் நின்றன
ஆறு திசைகளிலும் ஆறு தொண்டர் நின்றனர்
துருவ திசை அவன் போனான்
பின்னே புவியொடு அக்கினியும் செடிகொடிகளும் போனார்கள்
உச்சி திசை அவன் போனான்
சூரிய சந்திர உடுக்கள் தொடர்ந்தார்கள்
உயர் திசைக்குப்போனான்
அவனொடு ரிக் யஜுர் சாமங்கள் சென்றன
பெருந்திசை அவன் ஏக
இதிகாச புராணங்கள் தொடர்ந்தன
உத்தம திசைக்குப்போனான்
அவனொடு வேள்வி எழு அக்கினியும் பசுக்களும்
பின் சென்றார்கள்
புகல வல்லா திசைக்கு அவன் ஏக
மாத பட்ச இரவு பகல்கள் தொடர்ந்தன
வாராதிசைக்குப்போனான் அவன்
திதி இந்திராணி அதிதி மூவரும் தொடர்ந்தார்கள்
எத்திசையும் போனான்
தேவ தேவதைகள் அவனைத்தொடர்ந்தார்கள்
இடை த்திசைக்கு ஏகினான் அவன்
பிதாவும் பிதாமகனொடு பரமேட்டியும்
பின்னாலே வந்தார்கள்
நீரானான் அப்புறமாய் அவன்
இப்படி அறிவோனுக்கு உலகு உணவு வேள்வியொடு
புசித்தல் புலனாயிற்று
அரசன் தோன்றி ப்புறப்பட்டான்
சபை சமிதை சேனை சுராபான இத்யாதிகள் அணி வகுத்தன
பிரம்மனும் க்ஷ்த்திரியனும்
தோன்றி நின்றார்கள்
அதிதியாய் விராதித்யன் மனைக்கு ஏகினான்
இரவொன்று எனத்துவங்கி எத்தனை இரவுகள்
அவன் ஆராதிக்கப்பட்டானோ
அத்தனைப் புண்ணிய உலகங்கள் வசமாயின
கீழ்த்திசை மனம்
தென் திசை பலம்
மேற்திசை நீர்
வட திசை சோமன்
துருவ திசை விட்ணுவாகி ப்பின் அவனே விராசனான்
பசுவிடை சென்று செடி கொடிகளில் பிரயாணித்தான்
பிதிரிடை சென்று யமனாகி சுவதா அழைப்பை ஏற்றான்
மானிடரிடை தோன்றி சுவாஹா அழைப்பை ஏற்றான்
உச்சி திசைக்கு ஏகி வஷட் அழைப்பை ஏற்றான்
தேவரிடைசென்று ஈசனாகி கோபம் புசித்தான்
மக்களிடை சென்று பிராணனைப் புசித்தான்
எல்லா திசைகட்கும் சென்று பமேஷ்டியாகிப்
பிரம்மம் புசித்தான்
விராதித்யனுக்கு ஏழு ஏழு பிராண அபான வியானங்கள்
மூச்சின் முவ்வகை இவை
அக்கினி ஆதித்யன் சந்திரன் பவமானன் தண்ணீர் பசு மக்கள்
என்பன ஏழு உயிர்ப்பிரிவு
பூர்ணிமை அட்டமி அமாவாசை சிரத்தை தீட்சை வேள்வி தட்சிணை
என்பன ஏழு அபானப்பிரிவு
வையம் வானம் விண் உடு ருது ருதுசேர்க்கை வருடம்
என்பன ஏழு வியானப்பிரிவு
தேவரொடு ருது வருடம் இவை விராதித்யனைச்சுற்றுகின்றன
பூர்ணிமை அமாவாசையில் அவர்களே சங்கிமிக்கிறார்கள்
வலது கண் கதிரோன்
இடது கண் நிலா
வலச்செவி அக்கினி
இடச்செவி வாயு
இராப்பகல் இரு மூக்குத்துளைகள்
திதி அதிதி அவன் இரு கபாலங்கள்
வருடமே அவன் தலை
பகலில் மேற்திசை இரவில் கீழ்த்திசை
புகலிடமாய்க்கொண்ட விராதித்யனுக்கு
எம் வணக்கங்கள் உரியதாம் ( அதர்வ வேதம் காண்டம் 15 )
———————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி