வேத வனம் விருட்சம் 31

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

எஸ்ஸார்சி


புவியே நீ எங்களுக்கு
இசைவாய்ப் பரவுக
சுகம் தருக
செளகர்யம் கொணர்க
புவியின் எந்த இடம்
தொடங்கி விட்ணு
மும்முறை தன் தூக்கிய
திருவடி வைத்தானோ
அவ்விடம் தொட்டு
தேவர்கள் எம்மைக்காக்க

விட்ணுவின் பாததூளியே
பிரபஞ்சமாய்க் விரிவுதருகிறது
அவன் வைத்த மூன்று அடி
தருமத்தின் அரண்
ஞானிகள்தாமே விட்ணுவின்
பரமபதத்தை
விண்ணெங்கும் காண்கிறார்கள்
அவ்விட்ணுவோ
இந்திரனுக்குத்தோழன். ( ரிக் 1:1.22)

ஒடும் நீர் ஒரு தேவதை
கால்நடைகள் தாகம் தீர்ப்பன
நதிகள் வணக்கத்திற்குரியன
நீர் அமிருதம்
அதுவே ஒளஷதம்
கடவுள் நீரை வாழ்த்துக
கதிரவனை யான் நெடுநாள்
கண்டுய்ய அம்மருந்துகள்
என் உடல் பேணட்டும்

எந்த பாவமோ
எந்தத் தீமையோ
உரைத்த பொய்மையோ
தவறான சூளுரையோ
நீர்த்தேவதை ப்புறந்தள்ளி
என்னை காக்கட்டும் ( ரிக் 1.1.23)

வருணக்கடவுள்
வான் பறவைத் தடம்
கப்பல் செல் வழி தெரிந்தோன்
மாதங்கள் பன்னிரெண்டும்
நீட்டித்த அம்மாதமும்தறிந்தோன்
வளியின் வழி புரிந்தோன்
தினம் தினம் எம்மை
நன்னெறிப்படுத்துக. (ரிக்-1.1.25)

அக்கினிக்கடவுளே
அருகிருந்தோ
தொலைவிலிருந்தோ
எங்களை அழிக்க
நினைப்போரிடமிருந்து
காக்க எம்மை. (ரிக்-1.1.27)

இந்திரனே
சோமம் பருகியே
நாங்கள் தகுதியற்றவர்களாயினும்
ஆயிரமாயிரம்
அற்புதப்பசுக்களும்
அழகுக்குதிரைகளும்
தந்து வளப்படுத்துவீர் எம்மை.
எங்கள் பகைவர்கள் உறங்கட்டும்
எமக்கு ஈயும் குணம்படைத்தோர்
விழித்திருக்கட்டும் எப்போதும் (ரிக்-1.1.29)


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி