வேத வனம் விருட்சம் 17 கவிதை

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

எஸ்ஸார்சி


பிரம்மம் என்பது
இருப்பின் முதல்
அறிவின் முதல்
ஆனந்தத்தின் முதல்

பிரம்மம் என்பது
எப்போதுமுளது
கோதகன்ற
தூய்மை உடைத்து

யாவும் அறிந்து
விடுதலை யொடு
தன்னாட்சி கொண்டது
பகுத்திட மாட்டாத்
தன்மையும் உடைத்து

பிரம்மம் என்பது
தனித்திருப்பது
வினை அகன்றது
அனுபவம் தொலைத்தது
சாட்சியாய் நிற்பது
சிதைக்க முடியா அது
செயல்பாடும் அறியாதது

பிரம்மமென்பது
ஒளி யின் ஒளி
தானே ஒளிரும்
உன்னத ஒளி
அலகிலா
அது ஒளியே உருவானது

மொத்தமாய் துன்பம் தொலைத்து
இன்பம் எய்தல்
மோட்சம்
தன்னை அறிதலின்
உச்சம் அது

ஆன்மா
நுணுக்கத்தின் நுணுக்கம்
பெரிதினும் பெரிது
ஜீவன்கள் ஒவ்வொன்றின்
இதயத்துள்ளும்
கட்டாயம் உறைவது
உள்கடந்து
உணர்ந்த முனியோ
இடருரான்
எப்போதும்

பிரம்மம் மீது
ஒயாமல் சிந்தி
அதன் மீது
தொடர்க விவாதம்
ஆற்றுக பேருரை
இணைக இசைக
பூரணமாய் அதனோடு
பிரம்மத்தை
அவ்விதம் பயிலுதல்
பிரம்ம அப்யாசம். -பிரம்ம ரகசிய உபநிசத்.

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி