வேத வனம் கவிதை விருட்சம் 1.

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

எஸ்ஸார்சி


நீவிர் தண்ணீரின்
தேவதைகள்
நிறைந்த சுகம்
வழங்கும் சூக்குமக்காரிகள்
ஆகச்சிறந்த
அகநோக்கமும்
குன்றா ஆற்றலும்
அருளுவீர் எமக்கு. – ரிக் வேதம் 10.9.1

நிறைவளம்
தரு நீர்த்திரு நும்மோடு.
நிலவுலகில்
அன்பு ப்பெருக்கெடுக்கும்
அன்னையர்
அனையராய்
எம்மையும் ஆக்கிடுக. – “ 10.9.2

இனிமை நல்கும்
இனிய நீர்க்கடவுளரே
எமக்கும் இன்னருள்:
வேண்டி நும்மையே
நாடுகிறோம் நாங்கள். “ 10.9.3

நீரின் மீது
புலரும் பூவினை
அறிந்தவனெவனோ
மலர்கள்
மிருகங்கள்
மக்களென
அத்தனையும்
அவன் தனதாக்குகிறான். ( யஜுர்-தைத்திரீய ஆரண்யகம் 1..22 )

நிலா அது
நீர் பெற்ற மலர்
அறிந்தவனெவனோ
மக்களொடு
மிருகங்களென
அத்தனையும்
அவன் தனதாக்குகிறான். 1

புனலுக்கு மூலம்
அனல்
அனலுக்கு ஆதாரம்
புனல்
அறிந்தவனெவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான். 2

தண்ணீரின் ஆதாரம்
தெரிவாயோ
வளி
வளிக்கு மூலம் புனல்
அறிந்தவனெவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான். 3

தண்ணீரின் ஆதாரம்
தகிக்கும் கதிர்
கதிரவனை அறிந்தவனெவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான் 4

நிலவே நீரின் மூலம்
நிலவை அறிவாயோ
அறிந்தவன் எவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான். 5

வானத்து உடுக்களே
தண்ணீ£ரின் மூலம்
உடுக்களை அறிந்தவன் எவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான் 6

கார்மேகங்களே
தண்ணீரின் ஆதாரம்
மேகங்களைப்
புரிந்தவன் எவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான் 7

மழை பொழியும்
காலமே தண்ணீரின் ஆதாரம்
மழை வரும் காலம்
அறிந்தவன் எவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான் 8

தண்ணீரின் மீது
பயணிக்கும் நாவாய்
நாவாயை அறிந்தவன் எவனோ
அவனே தெளிந்து நிலைக்கிறான். 9

விருட்சம் 2
மனத்தால்
கருத்தால்
வாக்கால்
செயற்பாட்டால்
கட்டுங்கள் ஒற்றுமை ரிக் 10.191

கூடு
சிந்தி
கோறு
மனங்கள் ஒன்றாகட்டும். “

நோக்கம் ஒன்றாகி
உனர்வுத்தளமதனில்
சிந்தனை சந்திக்க
எட்டட்டும்
இயைபு நிலை. “

மெய்யாகச்சொல்
பகிர்ந்துன்ணா உண்டி
நஞ்சென்று,
படைத்தவனை மறந்து
பக்கத்துப் பசித்தவனை
புறமாக்கி
தானே உண்பவன்
மாபாவி. ரிக் 10.11.7

விவசாயிக்கு
அன்னமிடுகிறது கலப்பை
பயணங்கள்
செய்பவனே பணம் பண்ணுகிறான்
சும்மா இருப்பவனுக்கு
ஒருபடி
மேல் அந்த நூலறிவாளன்
கொடுக்க முடிந்தவன்
மட்டுமே
என்றும் ஏழைக்குத்தோழன் . ( 7 )

இரண்டுபணம்
உள்லவன் விரைந்து செல்கிறான்
ஒரு பணம்
உள்ளவன் அவன் பின்னே
தொடர்கிறான்
மூன்று பணம் உள்ளவன்
எல்லார்க்கும் முன்னோடி
நான்கு பணம் உள்ளவனோ
மூவரையும்
தாண்டிவிடுகிறான். (8)

கடிவாளம் ஏழுடன்
ஆயிரம் கண்கள்
கொண்ட புரவி
கால ரதத்தை இழுத்துச்செல்கிறது.
மண்ணும்
மனிதனும்
பிறவும்
அதன் சக்கரங்கள்
மகாத்மாக்கள் மட்டும்
அதனில் பயணிக்கின்றனர். அதர்வண 19 53 54

விண்ணில் அமைதி
மண்ணில் அமைதி
வான் வழி
வழிந்தோடும் நதி
செடி கொடி
புல் பூண்டெதென்
மீதும் தவழ்கிறது அமைதி. “ 19.9.1


essarci@yahoo.com

Series Navigation