This entry is in the series 20080904_Issue

புதிய மாதவி



காற்றைக் கிழித்துக் கொண்டு
பறக்கும் பட்டத்தில்
எழுதப்பட்டிருந்தது
பிரபஞ்சத்தை உள்ளங்கையில்
அடக்கி ஆளும் விரல்களின் கதை.

காற்றின் வேகத்தில்
அடிக்கடி கிழிந்துப் போகும் வலி
ம்ரக்கிளையில் மாட்டிக்கொள்ளும்
பிராண அவஸ்தை
மறைந்திருந்து
குறிபார்த்து கல்லெறியும்
சில்லறை விரல்கள்
இத்தனைக்கும் நடுவில்
அறுந்துப்போன நூல்களை
சேர்த்து சேர்த்து
இதுவரை பறந்த பட்டங்களின்
எல்லைகளைத் தாண்டி தாண்டி
புதிது புதிதாக
நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி
தனியாகப்பறந்து கொண்டிருக்கிறது
என் பட்டம்.

குட்டிக்கரணம் போடவைக்கும்
வித்தையிலோ
அடுத்தவன் பட்டத்தை அறுத்துப்போடும்
வெறியிலோ
இப்போதெல்லாம்
பறப்பதில்லை என் பட்டம்.

காற்றை வெற்றிக்கொள்ளும்
கனவுகளில்
பறந்து கொண்டிருக்கிறது

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமல்ல இது.
காற்றுக்கும் திசைக்காட்டும்
பட்டம் இது.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation