வேதவனம் விருட்சம் 14 கவிதை

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

எஸ்ஸார்சி


தியானத்துக்கு
தடைகள் உன்னலிருந்து
அப்புறம் பாத்துக்கலாம்
இப்ப அதுக்கென்ன அவசரம்
என்பதுவாக.
தியானத்தின் போதே
எங்கும் இருளாய் உணர்தல்
வியர்வை யொடு வாயில்
எச்சில் ஊருதல்
பேரும் உருவும்
ஒழித்தும் பிரம்மம்
தென்படவில்லை என்பதாய் விசாரம்
பல்வகை ஒளி இடையே
வந்து வந்து போதல்
இவை வெல்க நீ
வென்றிடலே வெற்றி.

பிறப்பும் இறப்பும்
தாண்டி
பிரபஞ்சம்
உடல் மனம் மாயை
தாண்டி
அலைகள் எழா சமுத்திரமாய்
தானாக
நிர்மலமாக
முக்காலம் காணும்
உயர் பிரம்மம்
அதுவே நீயாக
தியானித்துத் தீர்மானி.

இருமை இல்லாதது
எப்போதுமுளது
அனந்தமாயது
பிரபஞ்சம் பிடித்துத்தொங்குவது
பகுக்க முடியாதது
இறப்பும் பிறப்பும் அறியாதது
அதுவே நீயாக
சீடனே தியானி
இருமையற்ற என்றுமுள பிரம்மம்
இக்கணமே
ஏற்ற தருணம்
அறிக பெறுக உடனே.

உடல் உணர்வு
மனம் புத்தி
இவை தொட முடியா
ஒன்றை அறிந்த ஞானி
சுற்றித்திரிபவன்
களிப்பு மிகுதியில்.

பிரம்மம் அறிந்து
இருமையில்லாதது உணர்ந்து
அமைதி பயில்பவனுக்கு
உடலா
உலகா
லாபமா நஷ்டமா
இன்பமா துன்பமா
எங்கே யானும் எனதும்

உறங்கி இழந்துபோக
ஏதுமில்லை
விழித்துப்பெற்றிட
ஏதுமில்லை
நன்மை தீமை
வெற்றி தோல்வி
சாதிப்பு பாதிப்பு
பெறுவது தொலைப்பது
ஒரே தொலைவாகும்
நின்னிடமிருந்து. – அத்வைத அம்ருத உபநிசத்

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி