இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.
ஹெச்.ஜி.ரசூல்

கடல்முழுவதையும் விழுங்கிய
பிரபஞ்சத்தின் வாய்க்குள்
அகால பேரண்டம்
மண்ணின் இருளறையில்
விந்தை தெறித்தபோது
தன் இருப்பைப் பிளந்து
துளிர்த்தது செடி.
இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.
உயிரமுதை கடைந்தெடுக்கும்
பிறப்பொன்றும் எளிதல்ல
தொட்டுத் தடவிப் பார்த்து
அதீதமும் தீவிரமும் கலந்து
அந்தரங்க புதையல்களில் கண்டெடுத்த
ஆதியின் வன்ணத்துளி
தன் வாழ்தல் பற்றிய
அறிவிப்பை வெளியிடுகிறது,
மரங்களையும்
மனிதர்களையும் துளைத்த
அம்புக் குறிகளினூடே
ஆதிவிலங்கின் வார்த்தைகள்
கற்கோட்டைகளிலும்
குகைசுவர்களிலும் உடைபட்டு சிதறின.
காலமற்ற பெருவெளியிலின்று
கிரீடங்கள் பற்றிய கனவேதுமின்றி
தலைகள் உறுமிக் கிடக்கின்றன.