வெள்ளி மலையும் குமரிக் கடலும்!

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கொந்தளிக்கும் தென்கோடிக் குமரிக் கடலில்
நித்தம் நித்தம் மூழ்கி
முத்தும், பவளமும் ஒவ்வொன்றாய்
எடுத்து
கரையோரம் நீ
தொடுத்த ஆரங்கள் ஆயிரம், ஆயிரம்
அன்னையின் கழுத்தில்
பொன்னொளி
வீசும்!
முத்துக் குளித்த பின் நீ விடுகின்ற
மூச்சலைகள்
நெஞ்சின் முகிலாய்
பல கடல்கள் கடந்து எந்தன்
பனிமலையை
உருக்கிப்
பிழிகின்றன! உன்
ஆத்மாவின் கீதங்களைக் கேட்டு
எதிரொலிக்க
மேரு மலை ஒன்று
இன்னும்
வேரிட வில்லை!
வாடாமல், வதங்காமல், வனப்பு மங்காது
இன்னும்
சூடாமலர்கள்
பூங்காவில்
தொடுப்பாரற்று
பாடிக் கொண்டுள்ளன!
தடாகத்தில்
தாமரைப் பூக்கள்
தண்ணீர் ஒட்டாது
பட்டுப் பூச்சிகள்
பள்ளி கொள்ள
வீணைகளை மீட்டுகின்றன!

கரையான்கள்
கட்டிய
கண்ணாடி அறையிலிருந்து நீ
பறக்க விட்ட
தூதுப் புறாக்கள் என்
நெஞ்சிக்குள்
கூடு கட்டி யுள்ளன!
மலைபோல் உயர்ந்தவ னென்று
மடலில் எழுதினாய்!
மட்டமாயினும்
கடல் ஆழம் உடையது! அகலம் உடையது!
படைக்கும் போது
பல்லாங்குழி விளையாடும்
பரமன்
ஒருத்தி மடியில் எடுத்து
அடுத்த மடியை நிரப்பினான்!
குமரிக் கடலைத்
தோண்டி
இமயம் மேல் குவித்தான்!
பனிக் கட்டிகளை
உருக்கி
கடல் குழியை நிரப்பினான்!

சமத்துவ வாதிகள் சம்மட்டி கொண்டு
இமயத்தை
மட்டப் படுத்த
புறப்பட்டு விட்டார்கள்!
தராசின் தட்டுகள் ஆடி ஓய்ந்தபின்
சமமாக நிற்கும்
புது யுகத்துக்கு
நாமிருவரும்
காத்துக் கிடக்கிறோம்!
காலக் குயவன் ஆழியைச் சுற்றி
வெண் புறாக்களைப்
படைத்தான்!
வெள்ளைப் புடவைகளை
கட்டிக் கொண்டு
காக்கைகள்
கண்ணாடி முன் நிற்கின்றன!
வானில் பறக்க
உந்தி உந்திப் பார்க்கின்றன, ஆமைகள்!

குதிரையை வால்புறம் செலுத்தும்
கற்கால முனிவர் உன்
மூளையைக் காலி செய்து
நெஞ்சை நசுக்கி
கை, கால்களில் கட்டிய விலங்கை
உடைக்க
கையில் எப்போதும்
பேனா உளியை
வைத்திருக்கிறாய்! என்
அந்தரங்கக் கொலுவில்
உன் கை செய்த பதுமைகள்தான்
அமர்ந்துள்ளன!
நெஞ்சில் அரங்கேறும் உன் பரதக்கலை
முடியும் போதென்
கடிகாரமும் நின்று விடும்!
இதயக் கோயிலில்
எண்ணை ஊற்றி நீ எரிய விடும் விளக்கை
வாசலில் நிற்கும்
எமன் ஊதி விடுவதற்குள்
வைரக் கற்களைச்
செதுக்கி நான்
பட்டை தீட்ட வேண்டும்!

கடலோரத்தில் ஒதுங்கிய சிப்பிகளைத்
திறந்த போது உன்
முத்துகள் தான்
கண்ணில் பட்டன!
மின்வலையில் சிக்கிய மீன்
தப்பி ஓடி
எப்படி என்கண் முன் வந்தது ?
கலைச்செல்வி கழுத்தில் தொங்கும் ஆரங்களில்
ஒன்றை எடுத்து
இன்று ஏவும் புறாவின் காலில்
கட்டி விடுவாயா ?
கடல் உயரும், மலை தாழுமெனப்
பொறுத்தது போதும் தோழீ!
சூறாவளிப் புயலில்
கடல் பொங்கும் போது பேனாவுடன்
எனைத் தேடி
இங்கு வா!
பூகம்பத்தால் மலை குடைசாயும் போது
மை கொண்டு
வருவேன்
உனைத் தேடி!

**************
jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா