வெளிப்பாடு

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

கூப்பி


‘வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்…அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்… ‘

ஏதோ யோசித்துக் கொண்டிருந்த என்னை அந்த கணீர்க் குரல் சுண்டியிழுத்தது.

கிழவருக்கு 55-60 வயது இருக்கும். பாதி முடி நரைத்து இருந்தது. சட்டையில் ஒரு கை பாதி கிழிந்து இருந்தது. முகத்தில் நாலைந்து நாள் தாடி. சோடாப் புட்டிக் கண்ணாடி அவர் கண்ணைத் தேவையில்லாமல் பூதாகாரமாக காட்டிக் கொண்டிருந்தது. கட்டணத் தொலைபேசிக்குப் பின்னால் தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். முன்னால் ஒரு கிழிந்த ப்ளாஸ்டிக் விரிப்பு. அதில் சொச்ச சில்லறை. அதற்கருகே என்னையும் அறியாமல் ஒரு பழைய ஆர்மோனியப் பெட்டியை எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வயலின் போலும் இல்லாமல், சித்தார் போலும் இல்லாமல் ஏதோ ஒரு கருவியை வாசித்தபடியே பாடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. இதுவாவது எதிர்பார்த்த தினுசில் இருந்தது. ‘சினிமாப் பாடல்களை விட்டு விட்டு பாரதியார் பாடலை பாடிக்கொண்டு இருக்கிறாரே ‘ என்ற தினுசில் என்னைப்போல் சிலர் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் தத்தம் சிந்தனைகளில் மூழ்கிப் போயினர்.

ப்ளாட்பாரத்தில் மொத்தம் நாலைந்து பேர்தான் இருந்தார்கள். மந்தமான மத்தியான வேளை. நாலைந்து நாளாக வெய்யில் தாங்கவில்லை. இன்றைக்குக் கொஞ்சம் பரவாயில்லை. எதற்குத்தான் பூனாவிலிருந்து சென்னை மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தோம் என்று இப்போதில்லாம் அடிக்கடி தோன்ற ஆரம்பித்து விட்டது. ஓராக்கிள் 9ஐ ப்ராஜெக்ட் எல்லாம் சென்னைக்குத்தான் வந்து தொலைக்க வேண்டுமா…வந்த புதிதில் இதெல்லாம் யோசிக்க நேரமே இல்லை. வேலை. காபி. சாப்பாடு. தூக்கம். வேலை. வேலை. வேலை. ஆறே மாதத்தில் கஸ்டமரை கைக்குள் போட்டு இண்டிகா கார் வாங்கியாகி விட்டது. பூனா வீட்டையும் புதிப்பித்தாயிற்று. ஆனால் இந்தக் கதை அதை பற்றியெல்லாம் இல்லை…இது கவிதாவைப் பற்றியது.

கவிதா…அந்த மூன்றடுக்கு அலுவலகத்தில் இரண்டாம் ப்ளோரில் வேலை பார்த்தாள். மாநிறம். கூந்தலை வேண்டுமென்றே முகத்தின் முன்னால் விட்டு அவ்வப்போது பின்னால் கோதிக்கொள்ளும் ரகம். அவளிடம் ஸ்டைல் என்று பார்த்தால் அது ஒன்றுதான். உடம்பை பேருக்குக் கூடப் பிடிக்காமல் லூஸாக விழும் அவள் சரவணா ஸ்டோர்ஸ் சூரிதாரை நான் சபிக்காத நாள் இல்லை. ஹை ஹீல்ஸ் ஷூ, ஜீன்ஸ், ஸ்கர்ட்…ம்ஹூம்…ஆனால் ஆபீஸில் நிறைய பேர் அவள் மேல் பைத்தியமாக இருந்தனர். ஏனென்றால் கவிதா அழகாக இருந்தாள்.

‘யேய்…செல்லி…என்னடி இன்னிக்கி இத்தினி நேரம் ஆயிரிச்சி… ‘

பாடி முடித்துவிட்டி அந்த கிழவர் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார். ரயில் தண்டவாளத்தை தாண்டி ப்ளாட்பாரத்தில் கை வைத்து எம்பிக் குதித்து ஏறி வந்தாள் அந்த சின்னப் பெண் செல்லி.

‘தாத்தா…இன்னெக்கி கணக்கு வாத்தியாரு…ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாரு…மணி அடிச்சதே தெரியல…அப்பறம்…ஆயா ஓடிப்போயி செட்டியாரு கடையிலேந்து சபீனா பவுடர் வாங்கியாரச் சொல்லிச்சு…அப்பறம்…வழீயில… ‘

கிழவர் செல்லியின் கையிலிருந்த அலுமினியக் குவளையைத் திறந்தார்…

‘நீீ சாப்டியா செல்லி… ‘

‘ஓ…நா அப்பவே சாப்டேன்…தேவி முட்டை எடுத்துட்டு வந்திச்சி…எனக்கும் குடுத்திச்சி…ஆனா அந்த முத்தப்பன் என்ன பண்ணாந் தெரியுமா தாத்தா… ‘. கிழவர் ஒரு கவளம் எடுத்து விழுங்கினார்.

கவிதாவை நான் முதலில் சந்தித்தது ஸ்வாரஸ்யமான சம்பவம். அது எங்கள் போலந்து பேங்க் ப்ராஜெக்ட் முடியும் தருவாய். திருவான்மியூர் கிளையில்தான் டெஸ்டிங்க் என்பதால் ஒரு வாரமாக அங்கு எழுந்தருளியிருந்தேன். தாங்கள் சொன்னபடி செய்யவில்லை என்று பேங்க் கம்பனி மானேஜர் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் சொன்ன நேரத்துக்கு முடித்துக் கொடுப்பது அதை விட முக்கியமானது என்று அவரே முன்னர் சொல்லியிருந்தார். அதை அவருக்கு தொலைபேசியில் கோபப்படுத்தாமல் ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்தேன். அப்போது திடாரென்று இன்ஸ்டெண்ட் மெசஞ்சர் உயிர் பெற்றது.

‘ஹாஆஆஆஆஆஆய்…இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க… ‘

‘ஏதாவது சொல்லேன்… ‘

யாரோ ‘கவிதா ‘ !! கஸ்டமர் கொஞ்சம் கோபம் தணிந்து அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி தேவையில்லாமல் மறுபடி பேசிவிட்டு வைத்தார்.

உடனே கவிதாவிடம் தாவினேன்.

‘உனக்கு என்ன வேண்டும் சொல்…சொல்கிறேன்… ‘

‘என்ன பண்ணிட்டு இருக்க இன்னும்…இத்தன மணி ஆச்சு… ‘

‘வேலை செஞ்சிட்டு இருக்கேன்… ‘

‘ஹும்…இங்க ‘காக்கா ‘ தொல்லை தாங்கல. சாயங்காலத்துக்குள்ள கோட் அடிச்சு டெஸ்ட் பண்ணி தாங்குது. பாக்க நல்லா இருந்தாலாவது போனா போகுதுன்னு பண்ணலாம். கிட்ட வந்து பேசினா பான் பராக் நாத்தம் தாங்கல ‘

கே.கே அனந்த க்ருஷ்ணன் என்ற என் சக ப்ராஜெக்ட் மானேஜரை ‘காக்கா ‘ என்று மற்றவர்கள் ‘அன்பாக ‘ கூப்பிடுவதை நேற்றுத்தான் மோகன் சொல்லி கேள்விப்பட்டேன். காக்காவின் ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் கவிதா.

‘கவிதா…ப்ராங்க் கோட இப்போதான் பேசினேன். டெட்லைன் இன்னிக்கி இல்லை. நாளைக்கித்தான். க்ருஷ்ணன் இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாருக்கும் மெய்ல் அனுப்புவான். டேக் யுவர் டைம் ‘

எதிர் முனையில் சில நொடிகள் மெளனம். நான் உரக்க சிரித்து கொண்டிருந்தேன்.

‘I am very sorry. I thought you were my friend from Cincinatti. You have the same name so I got confused. Really really sorry ‘

நாஸுக்காக பேச வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்க வேண்டுமானாலும் ஏன் ஆங்கிலத்துக்கு தாவுகிறோம் என்று யாராவது phD பண்ணலாம்.

‘Don ‘t worry. Your secret is safe 🙂 ‘

என்று நானும் நாஸுக்காக முடித்துக் கொண்டேன்.

அரை மணியில் இடம் கண்டு பிடித்து போனபோது மும்முரமாக பாட்டு கேட்டபடி வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். தொண்டையை செருமி ஜாவா புத்தகம் இரவல் கேட்டேன். இயல்பாக எடுத்துக் கொடுத்தாள்.

‘By the way…நான் காக்கா மாதிரி பான் பராக் போட்றதில்ல… ‘

ஒரு நிமிடம் திகைத்தாள். பிறகு சிரித்தாள். அன்று இரவு பக்கத்து ஹோட்டலுக்கு ஒன்றாகப் போனோம்.

தாத்தா அலம்பிய கையை சட்டையில் துடைத்தபடியே வந்து செல்லியின் பக்கத்தில் அமர்ந்தார். குவளையை தூணருகே கவிழ்த்தார். செல்லி கருப்பாக களையாக இருந்தாள். பெரியவளானால் நந்திதா தாஸ் போல் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘தாத்தா…சொட்டாங்காய் வெளாட வரியா… ‘

‘இல்லம்மா…தாத்தாக்கு வயசாச்சில்ல… ‘

செல்லிய தூக்கி மடியில் வைத்துக்கொண்டார்…

‘ஒனக்கு என்ன பாட்டு வேணும்மா…தாத்தா பாடறேன்…வெள்ளை நிறத்திலொறு பூனை… ‘

தாத்தா தணிந்த குரலில் பாட ஆரம்பிக்க…

‘தாத்தா..இது வேண்டாம்… ‘ஓ போடு ‘ பாடு தாத்தா… ‘

சுற்றி இருந்தவர்கள் மெலிதாக சிரித்துக் கொண்டனர்.

இதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்த வத்தலான நாய் ஒன்று செல்லியை பார்த்தவுடன் அதி வேகமாக வாலை ஆட்டிக்கொண்டு அருகே வந்தது. ‘டைகர்… ‘ என்று கூவிக்கொண்டு ஓடிப்போய் நாயைக் கட்டிக் கொண்டாள் செல்லி. அதுவும் அவளை சுற்றி சுற்றி வந்தது. தலையை ஒரு முறை விலுக் விலுக் அன்று ஆட்டி விட்டு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு குழைந்தது. செல்லி அதை பாதாதிகேசம் தடவிக் கொடுத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். இதற்குள் எங்கிருந்தோ குரைப்புச் சத்தம் கேட்க, டைகர் ஒரு காதை மட்டும் தூக்கிக் கேட்டது. செல்லியை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு ரைல்வே லைன் அருகே குதித்து ஓடியது. விரைந்து வந்த ரயில் அதற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ப்ளாட்பாரம் கொஞ்சம் காலியானது. நான் செல்லியையும் தாத்தாவையும் மும்முரமாக பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘தாத்தா…டைகர் போச்சு… ‘

‘அந்த களுதைய கட்டிட்டு அளுவாதன்னு எத்தினி தடவ சொல்றது…சரி…இன்னிக்கி ஸ்கோல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க ‘

‘தாத்தா…அடுத்த வாரம் டைகர விட பெரீய நாயி, சிங்கம், புலி ல்லாம் பாக்க ஸ்கோல்ல கூட்டிக்கிட்டு போறாங்க… ‘

ஒரே வாரத்தில் கவிதாவிடம் நான் மயங்கிப் போனேன். பரவை முனியம்மாவிலிருந்து பாரலல் ப்ராஸஸிங்க் வரை தெரிந்து வைத்திருந்தாள். தெரியாததை பொறுமையாக கேட்டுக் கொண்டாள். எப்போது பேச வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று புரிந்து வைத்திருந்தாள். அவளது வீட்டைப் பற்றி வெளிப்படையாக பேசினாள். என்னுடையதைப் பற்றி விசாரித்தாள். நான் ஒரு வாரத்தில் அவளுடன் மூன்று முறை கல்யாணம் செய்து கொண்டேன். கனவில்.

அடுத்த வாரத்தில் இருந்து என்னுடைய வேதனையை சொல்லி மாளாது. அவள் என் அறையை தாண்டிச் செல்லும் போது என்னை பார்க்கவில்லையென்றால் முன்தினம் அவளிடம் என்ன தப்பாக பேசினோம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். சாயங்காலம் காபி சாப்பிடப் போகும்போது அவள் கூட வர வேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தேன். வேறு (என்னை விட அழகான) ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தால் மீண்டும் யோசனை. எனக்கே நான் செய்வது சரி இல்லை என்று திட்டவட்டமாக தோன்றினாலும் நிறுத்த இயலவில்லை. கேபிள் டி.வி.யில் விஜய் பேசும் வசனம் எல்லாம் வேதவாக்காக தோன்றியதுதான் இதன் உச்சக்கட்டம்.

முதல் வாரம் எந்த தயக்கமும் இல்லாமல் பழகிய நான் நாளடைவில் கவிதாவை வெளியே அழைக்கத் தயங்கினேன். ‘நான் கூப்பிட்டு அவள் மறுத்து விட்டால்…அல்லது நான் அவள் கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்பதற்க்காக மறுக்க முடியாமல் வந்தால்…இது அதை விட மோசம்…இவ்வளவு அழகோடும் அறிவோடும் இருக்கும் பெண் யாரையும் மனதில் நினைக்காமலா இருப்பாள்…நமக்கு அவளோடு பழக என்ன தகுதி இருக்கிறது ? ‘

அந்த கழிவிரக்கம் கலந்த சோகமான கணங்களில் என்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் தேவையில்லாமல் உடனடியாக மறக்கடிக்கப்படும். இது போல் நிறைய யோசித்தேன். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. வேதனைக்கு வழி தெரியவில்லை. சில நாட்களில் போய் விட்டது. பழகி.

இப்படியே ஒரு 2 மாதம் ஆனது. ஒரு நாள் கவிதா இயல்பாக என் அறைக்கு வந்தாள். மனது குதியாட்டம் போட ஆரம்பித்தது.

‘என்ன கவிதா…பாத்து ரொம்ப நாளாச்சு… ‘ என்று சிரித்தேன். நேற்று மாலைதான் காபி செண்டரில் பார்த்து பேசியிருந்தோம். இது மாதிரி சம்பந்தம் இல்லாத பேச்சு இப்போதெல்லாம் நிறை பேச ஆரம்பித்து இருந்தேன்.

‘முரளி…good news…எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் ‘

எனக்குள் பெரிய transformer ஒன்று சத்தம் போடாமல் வெடித்துச் சிதறியது.

‘Congratulations ‘, என்று அஷ்ட கோணலாக சிரித்து வைத்தேன். அவளை பார்த்தால் அவ்வளவு சந்தோஷமாக இல்லை போல் இருந்தது. அப்படி நான் தான் கற்பனை செய்து கொள்கிறேன் என்று என் மனது என்னைச் சீண்டியது.

‘அப்பறம் முரளி… ‘, என்று ஆரம்பித்தவள், ‘ஒண்ணும் இல்லை…கல்யாணத்துக்கு கட்டாயம் வாங்க ‘, என்று இன்விடேஷனை டேபிளில் வைத்து விட்டு போய் விட்டாள்.

Sick leave எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக தன்மானம் இடம் கொடுக்காததால் விரக்தியுடன் எல்லா உலகச் செய்திகளையும் படித்து முடித்தேன். ஒரு வேலையும் செய்யவில்லை. அவளும் என்னை விரும்பினாளா…ஏதாவது சொல்ல நினைத்தாளா…தெரியாது. ‘இல்லை ‘ என்று திட்டவட்டமாக தெரிந்து விட்டால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாமல் இப்படி வீணடித்து விட்டேனே என்று மனது இடித்துரைக்க ஆரம்பித்தது.

கவிதாவின் கல்யாணம். எல்லாரும் கூட்டமாகச் சென்று, கூட்டமாக கல்யாணத்தைப் பற்றி ஜோக் அடித்து, கூட்டமாக சாப்பிட்டு, க்யூவில் நின்று பரிசு கொடுக்கும் போது தான் மாப்பிள்ளை மூஞ்சியை நன்றாக பார்த்தேன். அவ்வளவு மோசமில்லை என்றாலும் என்னை விட கொஞ்சம் மோசம்தான். லவ் கிவ் எதுவும் கிடையாதாம். வீட்டில் பார்த்த பையனாம். அப்பறம் ஏன் என்னை அவள்…கேள்விக்கு விடை தேடி நண்பர்களைக் களைந்து ப்ளாட்பாரத்தில் தாம்பூலப் பையுடன் நான்.

செல்லி அழுது கொண்டிருந்தாள்…

‘நாயும் வேணாம், பூனையும் வேணாம். இங்க ஒரு வேளை சோத்துக்கே வழியில்ல ‘

‘எல்லாரும் போறாங்க தாத்தா. தேவி கூட போகுது ‘

‘தேவி வீட்டுல காசு இருக்கு…நம்ம வீட்டுல காசு இல்ல ‘

உரக்க பேசிய கிழவர் உடனடியாகக் குரலை தழைத்துக் கொண்டார்.

‘செல்லி…நீ மொதல்ல நல்லா படி. இந்த தடவ நல்லா பாஸ் பண்ணீன்னா தாத்தா ஒன்னை சிங்கம் பாக்க கூட்டிட்டு போவேனாம் ‘

‘போ தாத்தா, நீ பொய் சொல்ற. போன தடவையும் இப்படித்தான் சொன்ன. ரொம்ப பொய்யி. நீ ரொம்ப மோசம் ‘

விசும்பிக் கொண்டே குவளையை எடுத்துக் கொண்டு தண்டவாளத்தை தாண்டி நடந்தாள். கிழவர் விரக்தியோடு வெற்றுப் பார்வை பார்த்தபடி இருந்தார்.

‘காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு – மாலை முழுதும் விளையாட்டு ‘

மீசைக்காரன் பாட்டு எல்லாருக்கும் பொருந்தாததை நினைகும்போது சுருக்கென்றது. இவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனம் பரபரத்தது. செல்லி என்ன தவறு செய்தாள். இன்னும் சில வருடங்களில் இந்த கிழவர் இறந்து விடலாம். அவளுக்கு வேறு யாராவது உறவினர் இருக்கிறார்களா தெரியவில்லை. செல்லியின் படிப்பு தடைபடலாம். பார்க்க லட்சணமாக இருப்பாதால் யாராவது…விரைந்தோடிய யோசனையை தடை செய்து திருப்பினேன். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும். இந்த தடவை உதவி செய்வதில் என்ன ஆகப்போகிறது. இதை வைத்து ஒரு நாளைக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அதன் பிறகு யார் இவர்களுக்கு உதவி செய்வார்கள் ? இது மாதிரி யாராவது எப்போதும் உதவி செய்வார்கள் என்று இவர்கள் சோம்பேறியாக இருந்து விட்டால்…இது அதை விட மோசம். அதற்கு நாம் காரணமாகக் கூடாது.

தடதடத்து வந்த ரயிலின் ஓசையில் யோசனை தடைபட்டது. ஓடிப்போய் ரயிலில் ஏற முனைந்தேன். எதுவோ மனதில் இடறத் திரும்பினேன். பர்ஸை திறந்து நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து கிழவன் முன் போட்டு விட்டு ஓடும் ரயிலில் தொற்றிக் கொண்டேன்.

iamkuupi@hotmail.com

Series Navigation

கூப்பி

கூப்பி