வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

சரண்


ஒவ்வொரு ஏரியாவிலும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதற்கென்றே சிலர் பிறவி எடுத்திருப்பார்கள். ஆனால் வயிற்றெரிச்சல் வாஞ்சிநாதன் அப்படிப்பட்ட ஆள் இல்லை.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மட்டுல்ல… இப்போது கூட வாஞ்சிநாதன், ஆட்டோ ஓட்டுநர்களைத் தவிர வேறு யாரைப் பார்த்தும் வயிற்றெரிச்சலுடன் குமுறுவது கிடையாது.

வாஞ்சி நாதன் பொறாமைப்படும் அளவுக்கு ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை சொகுசானது அல்ல. ஆனாலும் ஃபயர் இஞ்சின் வந்து எரிச்சலை அணைக்கும் அளவுக்கு வாஞ்சி நாதன் வயிற்றில் தீ கொழுந்து விட்டு எரியக் காரணம் ஆட்டோக்காரர்களுக்கே சொந்தமான பொன்மொழிதான் என்றால் உங்களால் நம்ப முடியாதுதான்.

வியர்வை சிந்த, கால்கள் வலிக்க, சைக்கிள் மிதிப்பது சிரமமாக இருந்ததை உணர்ந்ததும்தான் பலர் மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுவார்கள். ஆனால் வாஞ்சி நாதனின் கதையே வேறு.

அவனுக்கு எட்டு வயது இருக்கும்போது திருவாரூர் பனகல் சாலையில் உள்ள பூங்கா அருகில் சாலையை கடக்க முயற்சித்தான். சாலையைக் கடக்கும்போது நடக்க வேண்டும் என்பது புரியாமல் முக்காபலா பாடலுக்கு நடுரோட்டிலேயே அவன் நடனமாட, அப்போது அங்கே சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒரு ஆட்டோ மட்டும் சடாரென்று நின்றது. ‘பிரேக் பிடிச்சதும் நின்னுடுச்சே…இது நம்ம ஆட்டோதானா’ என்று டிரைவருக்கே சந்தேகம்.

ஆனாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “டேய்…சாவுகிராக்கி…வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?…” என்று திட்டிவிட்டு கிளம்பினான்.

வாஞ்சி நாதன் மட்டும் இப்போது பெரிய ஆளாக இருந்திருந்தால் பெற்றோரையும் தெருவாசிகளையும் அழைத்துவந்து ஒரே ஒரு சாலை மறியலாவது செய்து ஊரையே ரத்தபூமியாக மாற்றியிருப்பான்.

ஆனால் பாவம்…அவன் தான் சின்ன குழந்தையாயிற்றே… அதான் விவரம் புரியலை. ‘வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா’ என்ற வார்த்தைகள் சாதாரணமானதுதான் என்று நினைத்துவிட்டான்.

அதை ஆட்டோக் காரர்கள் உச்சரித்து கொடூரமாக முறைக்கும் அழகில் ஏதோ அவமானமான வார்த்தையாகிப் போனதாக உணருவதற்கு சில காலம் பிடித்தது.

வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா என்று அவ்வப்போது யாரையாவது திட்டாத ஆட்டோ டிரைவர்கள் லைசன்ஸ் இல்லாத போலிகளாகத்தான் இருப்பார்கள் என்று தீர்மானம் செய்ய வாஞ்சி நாதனுக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

வாழ்க்கைன்னா ஏதாவது லட்சியம் வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதை மறுக்காமல் ஏற்றுக் கொண்ட அவன், தானும் ஆட்டோ அல்லது கார் ஓட்டு நராகி யாரையாவது ‘வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?’ என்று திட்டிவிட்டுதான் வேறு வேலைக்கே போக வேண்டும் என்று மனதுக்குள் உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.

மற்றவர்களுக்குத் தெரிந்தால் ச்சீ…இதெல்லாம் ஒரு லட்சியமா என்று நினைக்கலாம். ஆனால் இதை நிறைவேற்றுவது இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

முதல் பிரச்சனை, வாஞ்சி நாதனுக்கு சைக்கிளே ஓட்டத் தெரியாது. அதை தட்டுத்தடுமாறி கற்றுக் கொண்ட போது அவனுக்கு வயது பதினெட்டு.

ஆனாலும் அவனுடைய எட்டு ஆண்டு கனவு கொஞ்சமும் கலையவில்லை. ஒரு நாள் வாஞ்சி நாதன், மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான்.

அவர், அந்தக் காலத்து ரேலி சைக்கிளை இன்னமும் பாதுகாத்துப் பயன்படுத்துபவர். இப்போது மோட்டார் சைக்கிளுக்கு எங்கே போவார்?

வாஞ்சி நாதனின் லட்சியத்தை அறியாத அவர், “மோட்டார் சைக்கிள் எல்லாம் வேண்டாம்…கார் ஓட்டப் பழகிட்டு அந்த வேலைக்கே போ…” என்று உறுதியாக சொல்லி விட்டார்.

கார் ஓட்டப் பழகும் முன்பு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதை ஓட்டும் போதே யாராவது குறுக்கே வந்தால் அவர்களைத் திட்டிவிட்டு, கார் ஓட்டும் எண்ணத்தையே விட்டுவிடலாம் என்றுதான் வாஞ்சி நாதன் நினைத்தான்.

விதிதான் வலியது ஆயிற்றே… அவன் கார் ஓட்டாமல் இருக்க முடியுமா என்ன?

அவன் உறவினர்கள், நண்பர்கள் பலரும் இவன் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதை விரும்பவில்லை.

‘உன்னை வீரனாக்கிப் பார்க்கும் துணிவு இல்லடா…’ என்று சொன்னவர்கள் யாரிடமுமே இரு சக்கர மோட்டார் வாகனமே இல்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் அவன் மனம் தளராமல் முயன்றான்.

அப்போது ஆபத்பாந்தவனாக வாஞ்சி நாதனுக்கு மோட்டார் (சைக்கிள்) கொடுத்தது அவன் தாய்மாமாதான்.

“என் உயிரையே உன் கிட்ட நம்பி ஒப்படைக்கிறேன்.” என்று அவர் ஒரு கியர் வண்டியைத் தந்தார். அதை வாங்கி பத்து ஆண்டுகள்தான் ஆகிறது என்று சொன்ன பொய்யை வாஞ்சி நாதனும் நம்பி விட்டான்.

வண்டியின் பெயர் லேபிளை எடுத்துவிட்டுப் பார்த்தால், சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இந்தியாவில் முதன்முதலில் உருவான வண்டியை வாங்கி வைத்துவிட்டு பத்து ஆண்டுகள்தான் ஆகிறது என்று தவறான தகவல் தந்ததற்காக வழக்குத் தொடர்ந்து விடுவார்கள். (வண்டியை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக அதன் வயதை குறைத்து சொல்லியிருப்பாரோ?)

ஒரு சுபயோக சுப தினத்தில் திதி, நட்சத்திரம், யோகம், நேரம் பார்த்து பக்கவாட்டு ஸ்டாண்டை எடுத்து விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். இவனுடைய வீர சாகசத்தைக் காண தெருவே கூடி நின்றது.

ஏதாவது தடுமாற்றத்தில் கீழே விழுந்தால் பிறகு எப்படி தலை நிமிர்ந்து இங்கே நடப்பது? என்ற கவலை அவனுக்கு.

அப்போது வாஞ்சி நாதனின் மாமன் மகள், வீட்டுக் கண் (எவ்வளவு நாளைக்குதான் கடைக்கண் பார்வை என்று எழுதுவது?) பார்வையை வீச, துணிச்சலுடன் சாவியைத் திருகினான்.

எந்த முன்விளைவும் பின்விளைவும் இல்லை. அதாவது, நியூட்ரல் இண்டிகேட்டர் எரியவில்லை.

“மாமா…வண்டி நியூட்ரலான்னு எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன்பே அவன் மாமா, வண்டியின் பின்புறம் கை வைத்து தள்ளினார். சட்டென்று மூன்றடி தூரம் வண்டி முன்னால் செல்ல, வாஞ்சி நாதன் சமாளித்து நின்றான்.

“மாப்ள…இப்படித்தான் தெரிஞ்சுக்கணும்.” என்றார்.

சுற்றி நின்றவர்கள் சிரித்ததால் அவனும் சிரித்தான். (ஊரோடு ஒத்து வாழ்கிறானாம்.)

பிறகு கிக்கரை உதைத்தால் ஸ்டார்ட் ஆகும் வழி தெரியவில்லை.அருகில் வந்த அவன் மாமா, கிக்கரை லேசாக ம்ற்றொரு கோணத்தில் வைத்து,

“இப்படி செய்து உதைத்தால்தான் ஸ்டார்ட் ஆகும்.” என்றார்.

அதன்பிறகு ஒரே ஒரு முறை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஆனால் கிளட்சைப் பிடித்து கியர் போட்டு மீண்டும் கிளட்சை ரிலீஸ் செய்து வண்டியை நகர்த்துவதற்குள் இருபத்தாறுமுறை ஸ்டார்ட் செய்ய வேண்டியதாயிற்று.

“கொஞ்சம் அதிகமா அழுத்தினால்தான் பிரேக் பிடிக்கும்.” என்று வாஞ்சி நாதனின் பின்னால் தூரத்தில் மாமாவின் குரல் கேட்டது.

அப்படி எல்லாம் எதுவுமில்லை. வாஞ்சி நாதன் தன்னுடைய முழு பலத்தையும் ஒரே காலில் கொண்டுவந்து பிரேக் ஷூ மீதே ஏறி நின்ற பிறகுதான் மோட்டார் சைக்கிள் நின்றது.

முதல் சுற்றை அவன் வெற்றிகரமாக முடித்ததில் மாமா மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அவன் லட்சியம்தான் நிறைவேறவில்லை.

ஆமாம். அவன் வண்டி ஓட்டும்போது தெருவில் உள்ள எல்லாருமே ஒதுங்கி நின்றுதான் வேடிக்கை பார்த்தார்கள். (வாஞ்சி நாதன் மீது அவ்வளவு நம்பிக்கை.)

ஒருவருமே குறுக்கே வராத போது அவன் எப்படி ‘வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா’ என்று திட்ட முடியும்?

வாஞ்சி நாதன் அவன் மாமாவின் உயிரை (மோட்டார்சைக்கிள்தான்) வைத்தே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டு நர் உரிமம் பெற்று விட்டான்.

மோசமான வண்டியா இருந்தாலும் நம் திறமையை வெச்சு டெஸ்ட்டுல பாஸ் பண்ணிட்டேனே என்று அவன் அருகில் இருந்தவனிடம் வாஞ்சி நாதன் சொன்னதுதான் தாமதம், அவனுக்கு நெற்றிக்கண் மட்டும் இருந்திருந்தால் இவன் நிச்சயமாக சாம்பலாகி இருப்பான்.

“யோவ்…டிரைவிங் ஸ்கூல்ல வாங்குன காசுக்கு எல்லாருக்கும் உரிமம் கொடுத்தா சந்தேகம் வந்துடுமாம். அதான் உன்னைவிட மோசமா வண்டி ஓட்டுன என்னைய பெயிலாக்கிட்டாங்க. என்றதும்தான் வாஞ்சி நாதனின் திறமை (?!) அவனுக்கே புரிந்தது.

அதன் பிறகு வாஞ்சி நாதன் கார் ஓட்டப் பழகி விட்டு, மூன்றாண்டுகளாக வாடகைக்கார் ஓட்டி வருகிறான். ஆனாலும் அவன் லட்சியம் நிறைவேறுகிற வழியைக் காணோம்.

பின்பு ஒரு நாள் திருவாரூர் கடைத்தெருவில் வாஞ்சி நாதன் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தின் உள்ளே இருந்து திடீரென ஒரு புல்லட் சீறிப் பாய்ந்து வந்தது.

இவன் சட்டென்று காரை நிறுத்தி எட்டிப் பார்த்தான்.

“……………………….., வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா?” என்று வாஞ்சி நாதன் தான் திட்டு வாங்கினான். ஆம்!…கார் ஓட்ட ஆரம்பித்த பிறகு இவன் வாங்கும் முதல் திட்டு.

புல்லட் ஓட்டி வந்தது ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆசாமி என்பதால் வாஞ்சி நாதன் நல்ல பிள்ளையாக வாயை மூடிக் கொண்டான்.

நடந்து போனாலும் கார்ல போனாலும் இப்படி திட்டு வாங்குறது மட்டும் நிற்காது போலிருக்கே என்று வேதனையுடன் வண்டியை ஓட்டினான்.

அப்புறம் ஒரு நாள் பள்ளி மாணவன் ஒருவன், சைக்கிளில் வந்து வாஞ்சி நாதனின் கார் முன்னால் தடுமாறி விழுந்தான். சின்னப் பையனை சுலபமாக திட்டி விடலாம். நம்ம லட்சியமும் நிறைவேறிடும். என்று அவன் நினைத்தபோதே விதி வேறு விதமாக விளையாடியது.

“யோவ்…அவன் மேட்டுல ஏறி வர்றான். நீ சமதள ரோட்டுலதான போற?…மெதுவா கவனிச்சு வந்தா என்ன?” என்று ஒருவர் திட்ட ஆரம்பிக்க, வாஞ்சி நாதன் தலை தப்பிச்சுதுடா சாமி… என்று நினைத்தவாறு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த முறை அழகான கல்லூரி மாணவி, காருக்கு முன்னால் தடுமாறி விழ, இன்று திட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து கீழே இறங்கினான்.

“அடப்பாவி…சின்னக் குழந்தையை(?!) கார் ஏத்தி கொல்லத் துணிஞ்சுட்டியே…நீ நல்லா இருப்பியா…”என்று ஒரு குரல்…வேறு வழியின்றி இந்த முறையும் வாஞ்சி நாதன் புறமுதுகு காட்ட வேண்டியதாயிற்று.

அடுத்து ஒரு நாள் கும்பகோணத்திற்கு சவாரி சென்று விட்டு தனியாக காரில் திருவாரூருக்குத் திரும்பிக் கொண்டிருதான். எட்டு ஆண்டுகளாக சாலையை அகலப்படுத்தும் பணி போர்க்கால (?!) வேகத்தில் நடைபெற்று வந்ததால் வாஞ்சி நாதன் காரை மிதிவண்டியின் வேகத்தில்தான் இயக்கிக் கொண்டிருந்தான்.

குறிப்பிட்ட தூரத்திற்கு சாலையின் இருபுறமும் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் ஆழம் தெரியாமல் காரை விடுவதற்கு அவன் விரும்பவில்லை.

அப்போது சற்றுத் தொலைவில் ஓர் அரசுப்பேருந்து.

ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்குதான் தார்ச்சாலை. அதனால் வாஞ்சி நாதன் தன் காரின் முகப்பு விளக்கை ஒளிரச் செய்து கொண்டே வந்தான். ஆனால் அரசுப் பேருந்து பள்ளம் இல்லாத சாலை ஓரத்தில் ஒதுங்கி நிற்காமல் தொடர்ந்து வந்தது.

வாஞ்சி நாதன் அதிர்ச்சி அடைந்து சட்டென்று காரை நிறுத்தினான். உடனடியாக கியர் மாற்றி பின்னால் செல்ல முயற்சித்தபோது நேருக்கு நேராக மோதுவது போல் வந்த அரசுப்பேருந்து அப்படியே நின்றது.

இவன் தன் லட்சியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் தலையை வெளியே நீட்டி,

“வூட்டுல…” என்று ஆரம்பித்த நொடி, அந்த அரசுப்பேருந்து ஓட்டுநரும் எட்டிப் பார்த்தார்.

அந்த ஓட்டு நருக்கும் வாஞ்சி நாதனின் வயதுதான் இருக்கும்,

“அண்ணே…கோவிச்சுக்காதீங்க…நீங்க லைட்டைப் போட்டதுமே நான் பிரேக் ஷூ மேல ஏறி நின்னுட்டேன்… ஆனா அது இங்க வந்துதான் நிக்கிது…” என்று பரிதாபமாக சொல்லவும் வாஞ்சி நாதனுக்கு வழக்கம் போல் ஏமாற்றம்.

முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழியை நினைத்து மனதை தேற்றிக் கொண்டான். வேறு வழி?

Series Navigation

சரண்

சரண்