விமானப் பயணங்கள்.

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

ஸ்ரீமங்கை


விமானங்கள் விரும்பப்பட்டாலும்,
அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன.

யாரோ தந்த அனுமதியில்
எவர் எவரோ சோதித்து,
சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து,
தேடித் திண்டாடி, அயலார் அறிவித்த எண் கொண்ட
அமிழ்த்தும் இருக்கையில் அமர்ந்தபின்..

தொப்பூளோடு வயிற்றைச் சுற்றி
இருக்கையோடு சேர்த்துக் கட்டும்
பாசப் பட்டையை அணிந்துகொண்டதாய்ப்
பயணம் தொடங்க…

விமானம், பயணிக்காதவர்
சுட்டிய பாதையில்
மூச்சிரைக்க ஓடியோடி
எரிபொருள் கரித்து,
உள் உதைத்து,
பாதையில்லாப் பாதையொன்றில்
சீறிப்பாயும்வரையில்…
அழுத்தம் அதிகம்தான்.

வியர்வைச் சாட்சியாக
இறக்கைகளில் ஈரப் படலம்…

ஆயத்தங்கள் பறப்பதற்கா ?
அன்றிப் பறப்பது, இறங்கும் ஆயத்தங்களுக்கா ?வென
தெரியாமலேயே பயணம் முடித்து
வேறு வெளியில்
இறங்கிச் சென்றாலும்,

மீண்டும் விமானங்களெனில்,
விருப்பம்தான்…
இருக்கைப்பட்டைகளுடன் காத்திருக்கும்
அதன் ஆயத்தங்களை அஞ்சியபோதும்..
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை