விதியோ ?

0 minutes, 13 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

பயணி


துச்சாதனன் துகிலுரிந்துக் கொண்டிருக்கிறான். பாஞ்சாலி ‘ஹரி, ஹரி, ஹரி ‘ என்று கம்பலையை எழுப்பவில்லை. துச்சாதனனிடமிருந்து விலகி நடக்கிறாள். எதிரே, தலை குனிந்து நின்றிருக்கும் பாண்டவர்களை நோக்கிச் செல்கிறாள். முதலில், தர்மனின் தாடையைப் பிடித்துத் தூக்கிக் கண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்: ‘விதியோ கணவரே ? ‘. பிறகு, பீமனின் முன்மயிரைப் பற்றியுயர்த்திக் கேட்கிறாள்: ‘விதியோ கணவரே ? ‘. மீண்டும் மீண்டும், அர்ஜுனனிடமும், நகுலனிடமும், சகாதேவனிடமும் அதே கேள்வி கேட்கப் படுகிறது: ‘விதியோ கணவரே ? ‘.

பாரதியின் பாஞ்சாலி சபதம், ‘விதியோ கணவரே ? ‘ என்ற தலைப்பில் ராமனாதன் இயக்கத்தில் ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் 14 டிசம்பர் 2002 அன்று நிகழ்ந்த பாரதி விழாவில் மேடையேற்றப்பட்டது. சூதாட்டத்தில் துவங்கி, பாஞ்சாலியின் சபதம் வரையிலான கதை சொல்லப்பட்டாலும், ‘நம்பி நின்னடி தொழுதேன் – நாணழியாதிங்குக் காத்தருள்வாய் ‘ எனப் பாஞ்சாலி கண்ணனை வேண்டுவதும், அவனருளால் ‘பொன்னிழை பட்டிழையும் – பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய் ‘ சேலைகள் வளர்வதும் இல்லை. அர்ஜுனன் மற்றும்

பீமனின் சபதங்களும் இல்லை. வெறுப்பும் கோபமும் திமிர்ந்த பாஞ்சாலியின் கேள்விகளே நாடக இறுதியை நிறைத்தன.

நடித்தவர்களின் தமிழ் ஒலிப்புநேர்த்தி நிறைவாக இருந்தது. ஓரிரு குத்துவிளக்குகளும், அகல்விளக்குகளும் தவிர வெற்றுமேடையே நடிப்புக்களமாகவும், தப்பட்டை போன்ற ஒலியே முக்கிய இசைக் கூறாகவும் அமைந்திருந்தன. கதைசொல்லும் உத்தியில் பாரதி தன்கூற்றாய்க் கூறியவற்றை ஒரு சூத்திரதாரி பாத்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் சொல்லியிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், ‘தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தி ‘யின் தூண்டுதலால், ‘எளிய பதங்கள், எளிய நடை ‘ கொண்டு, ‘ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி ‘ இருக்கவேண்டிச் செய்த பாஞ்சாலி சபதத்தின் தமிழ் இன்றைக்குச் செந்தமிழாகிவிட்ட நிலையில், இந்த இடைவெளியைக் குறைத்து, பாத்திரங்களை அறிமுகம் செய்யவும், கதையைச் சுருக்கி நேரடியாய்ச் சொல்லவும், சமயங்களில் விளக்கவும், இப்பாத்திரம் பயன்படுத்தப் பட்டது. கதைசொல்லும் சூத்திரதாரிக்கும், கதையை நகர்த்தும் சகுனிக்கும் மட்டும் கூத்தமைவு கொண்ட முகச்சாயங்கள் இருந்தன.

விதி என்னும் கோட்பாடு பற்றிய பாரதியின் ஊசலாடுதல் அவரது பல படைப்புகளில் காணக் கிடைக்கிறது. பாஞ்சாலி சபதத்திலும், நல்லவராலும் அல்லவராலும் விதி என்னும் கோட்பாடு அடிக்கடிக் கையாளப்படுகிறது. மிகை நாடி மிக்கக் கொண்டாலும், ‘தருமம் மறுபடி வெல்லும் ‘ என்பதைக் காட்டுவதற்காக, விதியின் செய்கையால்தான் அதர்மம் தலைதூக்குகிறது என்பதான கருத்து நிற்கிறது. ஆயினும், பாஞ்சாலியின் ‘விதியோ கணவரே ? ‘ என்னும் நிலைப்பாடு, தமது சுவீகாரத்தினால் பெற்ற அதிகாரத்தின் கண்மறைப்பில், பிறரை வைத்து ஆடுபவர்கள் விதியின்பின் ஒளிய இடம்தர மறுக்கிறது. பிணம் தின்னும் சாத்திரங்களின் கேள்விக்குற்படாத தன்மையைச் சாடும் நேரத்தில், புன்மைக்கு எதிராக வெஞ்சினம் கொள்ளாத மெத்தப்படித்தவர்களின் செயலும் வெறுக்கப்படுகிறது. ஆடும்வரை ஆடிவிட்டு, சாதகமான சூழல்களில் விதியை நொந்தபடிச் செயலற்றுப் போகிறவர்களின் முன்மயிரைப்பற்றி நிமிர்த்திக் கேட்கப்படும் கேள்வி அது. இதை முன்னிருத்தியிருந்தது நாடகம்.

நவீனநாடகப் போக்குகளின் ஒரு கூறாக, முந்தைய காலத்து நாடகப்பிரதிகளும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. ஹாங்காங்கில் மேடையேறிய பாஞ்சாலி சபதம் இந்த அவசியமான முயற்சியில் ஒரு நிகழ்வு.

* * * * *

குழு:

சூத்திரதாரி – ஸ்ரீனிவாசன்

சகுனி – வெங்கட்

தருமன் – வைத்தியனாதன்

துரியோதனன் – முரளி நாராயணன்

விதுரன் – கிருஷ்ணமூர்த்தி

தேரோட்டி – முகுந்தன்

பாஞ்சாலி – அனுராதா

துச்சாதனன் – அப்துல் காதர்

பீஷ்மன் – சிவகுமார்

அர்ஜுனன் – சங்கர்

கர்ணன் – அருள்

நகுலன் – கார்த்திக்

சகாதேவன் – பிரகாஷ்

திருதராஷ்டிரன் – காசிம் அபிதி

உடை மற்றும் ஒப்பனை – வைதேஹி

இசை – ஜெயராம்

இயக்கம் – ராமனாதன்

* * * * *

dharan@payani.com

Series Navigation

author

பயணி

பயணி

Similar Posts