‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

நா முத்து நிலவன்


ஜனகணமன ஜனகணமன:

எதிரிகளை வணங்கி
கிருஷ்ணனை குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்.

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்

இமயமுடிவரை வளர்ந்தும்
இந்துமாக்கடலில் கிடக்கும்
பொருளாதாரம்.

தண்ணீர் கிடைக்காது,
தண்ணீர் பாட்டில் கிடைக்கும்
வணிகம்.

தந்தை ‘டாஸ்மாக் ‘கில்,
பிள்ளை ‘பெயில்மார்க் ‘கில்
குடும்பம்.

புதியமந்திரி ஆணையிட
முன் அனுபவம் கேட்கும்
வேலைவாய்ப்பு.

இடமில்லாத பந்தியில்
இலைப்பீத்தலுக்கு சண்டை
சாதிகள்.

அன்பே தெய்வம் என,
அடுத்தவனை இடிக்கும்
மதங்கள்.

சிலுக்குப்படமும் சிருங்கேரி மடமுமாய்
இலக்கியம் வளர்க்கும்
பத்திரிகை.

அறிவியல் வளர,
பேய்பிடித்தாடும்
திரைப்படம்.

விதேசிகள் வழங்க,
சுதேசியம் வளர்க்கும்
தொலைக்காட்சி.

விளம்பரத்தில் வென்று,
விளையாட்டில் தோற்கும்
கிரிக்கெட்.

ஒருகோடியில் இந்தியா
பலகோடியில் வீரர்கள்
விளையாட்டு

உடல்மண்ணுக்கு உயிர் நடிகருக்கு,
பொற்றோர் அனாதையாக
ரசிகர்கள்

கணினியை ஜெயித்து
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை.

நோய் நாடாமல்,
நோயிலும் ‘முதல் ‘ நாடும்
காவல்.

சலுகைகளில் ஏமாந்து
உரிமைகளை இழக்கும்
சனங்கள்.

இலங்கையிலே தப்பிவந்து
இராமேஸ்வரத்தில் கற்பிழக்கும்
தமிழச்சி.

எல்லாம் நடந்துவர,
பார்த்து சிரித்து
பழசாகும் நீங்கள்.

நரகத்தின் சமாதியிலும்
புல்லாய் முளைத்தெழுதும்
நாங்கள்.

ஜனகணமன ஜனகணமன.
—-muthunilavan@yahoo.com—-
‘விண் ‘ தொலைக்காட்சியின் ‘கவிக்கோவின் கவிராத்திரி ‘ நிகழ்ச்சிக்காக, புதுக்கோட்டையில்
10.10.2004அன்று ஒளிப்பதிவு செய்யப்பட்ட கவிதை

Series Navigation