விடுதலை

0 minutes, 34 seconds Read
This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

வாஸந்தி


அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன் புரிந்துக்கொண்டிருந்தான்.அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்கிற யத்தனத்திலேயே தனது வாழ்வின் இறுதிக் காலம் கழிய நேறும் என்று அவனுக்குப் பீதி எற்பட்டது.

பஞ்சாமியை மிதமிஞ்சிய சோர்வு ஆட்கொண்டது. அவனுடைய நாவிலிருந்து வரவிருந்த வார்தைகளுக்காக ஆயுள் முழுவதும் காத்திருக்க தயாரானவன் போல் எதிரில் அமர்திருந்த சடகோபனிடம் கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. ‘என்னை விட்டுடுங்கோ, ப்ளீஸ். ‘

உடம்பு பூராவும் ஜ்வாலையா தகிக்கிறது.மூச்சு முட்டறது.

எப்படி சொல்லட்டும் இதை ?

நா சாமனியன். இந்த பிசாசுகள் வந்ததிலேர்ந்து அவஸ்தை படஇற்ன்.உஙகளுக்குப் புரியாது.இல்லே.இது எனக்கு வரப்பிரசாதமில்லே.பாரம்.

நரக வேதனை. ஓய், நா சொல்றது எது சத்யமோ இல்லையோ இது சத்தியம்.

நிழலாடிக்கொண்டிருந்தவை இப்பொழுது நிஜமாக ஆர்பரித்தன. அவனது இயலாமயைக் கண்டு கை கொட்டிச் சிரித்தன.அவனுக்கு மண்டைப் பிளந்துவிடும்போல் பயமேற்பட்டது.என்னை விட்டுடுங்கோ! எனக்கு வேண்டாம் இந்தப் பவிசு. இந்த மரியாதை. இந்தப் பேர். இந்தப் புகழ்.

அட! நிஜம்மாவா ? அடே, யோசிச்சுச் சொல்லு. இதெல்லாம் இல்லென்னா செத்துரமாட்டே ? பூதங்கள் கெக்கிலி பிக்கிலி என்று

கைக்கொட்டிச் சிரித்தன.

பஞசாமி சுய நினைவுக்கு வந்தான். எதிரே உட்கார்ந்திருந்த சடகோபனைக்கண்டு மெல்லிய பரிதாபம் எற்பட்டது.

உன்னைவிட பாவப்பட்ட ஜன்மம் நான்னு இவன்கிட்ட சொல்லமுடியாது.

‘சொல்லுங்கோ பஞ்சாமி, எனக்கு புத்ர பாக்கியம் உண்டா ? ‘

பஞ்சாமி ஒரு வினாடி கன்களை மூடினான்.கரிய உருவஙகள் மண்டையை ஆட்டின.அவனை ஆட்கொண்டன.கன்களைத் திறக்காமல் பஞ்சாமி விசை முடுக்கப்பட்டவன் போல் சொன்னான்:

‘ உண்டு.அடுத்த பங்குனியிலே தூளி கட்டுவே. மீனாட்சி சுந்தரேசுவரன்னு பேர் வை.தீர்காயுசா இருப்பான். ‘

ஏதோ ஸ்பர்சத்தை உனர்ந்து அவன் கண் திறந்த போது சடகோபன் நெடுன்சாண்கிடையாக அவனது பாதத்தை ஒட்டி நிலத்தில் படர்ந்திருந்தான்.

‘போறும். இது போறும். இந்த வார்தைக்காகத்தான் காத்திண்டிருந்தேன். ‘

கிளம்புவதற்குமுன் ஒரு தாம்பாளத்தில் பழம் புஷ்பம் வெற்றிலை பாக்குடன் ஐம்பது ரூபாய் வைத்து விட்டுப் போனான்.

ஐம்பது ரூபய்க்கு ஏற்பட்ட ஆயாசம் அடங்க அவகாசம் தேவைப்பட்டது. அறையில் இன்னும் நான்கு பேர்களாவது இருக்க

வேண்டும்.அவர்கள் காத்திருப்பார்கள் யாசிக்க வந்தவர்கள் போல.ஒரு வியாபாரி,ஒரு கம்பெனி முதலாளி,சினிமா டைரெக்டர். அவர்களது அந்தப் பொறுமை அவனை அத்துறுத்துவது. ஈச்வரா…

ஒருயுகாந்தர மெளனத்துக்குப் பிறகு அவன் கன்ணைத் திறக்காமலே சைகை காட்டியதில் அடுத்தவர் வந்து அமர ,

பஞ்சாமி ஆயத்தமானான்.

‘சாமி, பொண்ணுக்குக் கல்யாணமாகுமா ? ‘

‘சாமி, வேலை எப்ப கெடைக்கும் ? ‘

‘ என் தீராத தலை வலி எப்ப தீரும் ? ‘

‘எனக்கு வீரியம் குறைஞ்சுண்டே வருது .என்ன வழி ? ‘

மருத்தவரிடம் கூச்சமில்லாதமாதிரி இங்கு யாருக்கும் கூச்சம் கிடையாது.இது உடனடியாக பதிலை,நிவர்த்தியைச் சொல்லும் சாமி.வெளிப்படையாக இருக்கவேண்டியது அவசியம்.தான் ஒரு பால் இன அடையாளமில்லாத ஸ்தூலமாகிப்போனது போல அவனுக்கே பிரமை ஏற்பட்டு வெகு காலமாயிற்று.

எல்லார் கையிலும் ஒரு சிட்டிகை வீபூதி . அது அவர்களது பிணியை தீர்க்குமா என்று அவனுக்குத் தெரியாது.

ஒரு நாள் அவனை அறியாமல் என் வலிகளை போக்க யார் விபூதி கொடுப்பா ? என்று அவன் கேட்டதை விளக்கமுடியாத தத்துவ

வாக்காகக் கொள்ளப்பட்டது.

அறையில் ஆள் குறைந்து வந்தது மெல்ல மெல்ல படர்ந்து வரும் நிசப்தத்தில் தெரிந்தது. நிதானமான ஒரு சுகந்த நிசப்தம். அவன் ஆழமாக மூச்சிழுத்துக்கொண்டான். நாடி நரம்பையெல்லம் ஊடுறுவி ஒரு மெய்யான ஆசுவாசத்தை அளித்தது.யாரோ ஏற்றிவிட்டுப்போன ஊதுபத்தியாக இருக்கவேண்டும்.தாம்பாளங்களில் ஆப்பிளிலிருந்து, எளிய பூவன் பழம் வரை நிரம்பியிருந்தன.வெற்ற்றிலை மடிப்புக்கிடையே ரூபாய் நோட்டுக்கள்.அவற்றை எடுத்து எண்ணாமலே அலமாரியில் வைத்தான். அலமாரியை பூட்டும் வழக்கம் இல்லை.யாரு வரப்போறா ? வேலைக்காரப் பெண்ணுக்கு அவன் புழங்கும் பூஜை அறையும் சமையல்கட்டும் அனுமதிக்கப்படாத இடங்கள்.அலமாரியில் இருக்கும் பனம் எவ்வளவு என்று தெரியாது. அதில் பனம் இருக்கிறது என்ற உணர்வு தெம்பைத் தருவது.ஆனால் அவனுக்குத் தேவை என்பதே இல்லாமல் போனது விந்தை.கட்ட வேஷ்டியும் துண்டும் சம்பாவனையாகவே வந்து கொடியில் இடம் கொள்ளாமல் கோயில் குருக்களுக்குக் கொடுத்துவிட வேண்டிவருகிறது.மதியத்துக்கு ஒரு கவளம் சாதமும் ஏதாவது காயைப் போட்டுக் குழம்புமே அவனுக்குத் தேவை.சமயலை காலைக் குளித்த உடனேயே செய்துவிடுவான். இரவு அனேகமாக பாலும் பழமும் எதேஷ்டம்.சாப்பிடுவது எதுவுமே உடம்பில் ஒட்டுவதில்லை என்பது வேறு விஷயம்.இந்த இரு அறைகள் கொண்ட வீட்டை அவனுக்குகிட்டத்தட்ட இலவசமாகக்கொடுத்திருப்பவரும் ஒரு அபிமானி.

அபிமானிகள்.பக்தர்கள் என்று சொல்வது அவனுக்குக் கூச்சத்தை ஏற்படுத்துவது. உண்மையில் திகிலை ஏற்படுத்துவது. எனக்கு என்ன அருகதை இருக்கிறது ? ஆனால் இந்தக் கேள்வியை அவனுள் சதா கேட்க வைப்பது அந்தக் கரிய உருவஙகள் என்று தோன்றிற்று.அவனுக்கு வருத்தமேற்பட்டது. இந்த அபிமானிகளால் அவனுக்குக் கொம்பு முளைத்துவிடும் என்று அவை நினைக்கின்றன.உண்மையிலிந்தச் சுமையை எப்படிக் களைவது ,விடுபட்டு ஓடுவது என்பதிலேயே தூங்கவேண்டிய நேரமெல்லம் கழிந்துவிடுகிறது. இது ஒரு உடலுருக்கி.பால்யத்தில் இருந்த திடத்தில் இருபது சதவிகிதம் கூட இப்போது இல்லை.ஐம்பது

வயது கூட நிரம்பாத நிலையில் வயதுக்குப் பொருந்தாத மூப்பும் சோர்வுமேற்படும் என்று நிச்சயம் நினைத்திருக்கவில்லை.இது சாபம் என்று நினைப்பது பாவம் என்று அவன் உணர்வான். அவனுக்கு விதிக்கப்பட்ட தெய்வீகக் கட்டளையாக இருக்கவேண்டும். தினம் தினம் அவனிடம் நீட்டப்படும் வேண்டுதல்கள், அவற்றுள் மறைந்திருந்த ஏக்கங்கள், தாபங்கள், வெறுப்புக்கள், கோபங்கள்,பேராசைகள் அனைத்துக்கும் அவனே சுமைதாங்கி அல்லது வடிகால் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்று அவன் உணர்ந்தான். இல்லாவிட்டால் இத்தனைப் பெரிய மனிதர்கள் வேலைமெனக்கெட்டு இங்கு வந்து அவன் சொல்லுக்காகக் காத்திருக்க மாட்டார்கள்.

‘ நீங்க ஒண்ணுமே சொல்லவேண்டாம் – உங்க பூஜை அறையிலே பத்து நிமிஷம் உட்கார்ந்தாலே நிம்மதி வந்துடறது சாமீ ‘

அது எப்படி என்று அவனுக்குப் புரியாத மர்மமாக இருந்தது. தன் மனசு மட்டும் ஏன் இப்படி பிசாசு மாதிரி அலையறது ?

‘ என்னை விட்டுடுங்கோ ‘ என்று சொல்ல முயன்ற போது அவன் ஏதோ அவர்களை ஏமாற்றி விட்டுக் கம்பிநீட்டத் துணிந்த மாதிரி அர்த்தம் கொள்ளப்பட்டதை அவன் பிறகு பலமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

சூப்பர் சிமெண்ட் அதிபர் ராமகிருஷ்ணனுக்கு கம்பெனியில் என்ன விஷயமானாலும் இங்கே ஓடி வருவது வழக்கமாகி

விட்டது. கோப்புக்களையெல்லாம் காட்டி அவன் அபிப்பிராயம் கேட்பார். சதாசர்வ நேரமும் அந்தக் கரிய பிசாசுகளுடன் மாரடிக்க வேண்டியதாகிப்போனதில் ஆயாசம் தாளமுடியாமல் அவன் சொன்னான்.

‘ராமு சார், என்னை விட்டுடுங்கோ. நா சாமான்யன். எங்கிட்டே எந்த சக்தியும் இல்லே நம்புங்கோ! ‘

ராமுவின் தாடை விழுந்தது.

‘ என்ன சொல்றேள் நீங்க ? நீங்க சொல்றது எதுக்குமே அர்த்தமில்லேன்னு என்னை நினைக்கச்சொல்றேளா ? ‘

ராமுவின் குரலிலிருந்த உத்வேகம் நிலைகுலையச்செய்தது.

‘ என்ன சொல்ல வரேன்னா, எல்லாம் ஈசனுடைய செயல் – நா வெறும் கருவி. ‘

‘ இதப் பாருங்கோ பஞ்சாமி. நீங்க சாதாரண கருவி இல்லே. ஈசனுடைய ஏஜெண்ட். நீங்க சொன்ன தெல்லாம்

பலிச்சிருக்கு – உம்மைத்தான் நா மலை போல நம்பியிருக்கேன். திடார்னு பின் வாங்கிட முடியாது நீங்க. ‘

தனக்கு ஏதொ கையெழுத்திட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மீறத்துணிந்தது போல ராமு பேசுவதில் கொஞ்சமும் நியாயமில்லை என்று தோன்றினாலும் வசமாக மாட்டிக்கொண்டது போல தனக்குள் ஏன் ஒரு பலவீனம் படர்கிறது என்று பஞ்சாமிக்குப் புரியவில்லை.

தாம்பாளத்தில் ராமகிருஷ்னன் ஆயிரம் ரூபாய் வைத்தார். சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

அன்று இரவு அப்பா கனவில் வந்தார்.

‘ உனக்கே நன்னாயிருக்காடா நீ பண்றது ‘ என்று அதட்டினார். நா எழுதித்தரேன். நீ உருப்படமாட்டே..

அவன் சிலிர்த்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். பானையிலிருந்த நீரைக்குடித்து எல்லாருக்கும் கொடுக்கும் வீபூதியை

ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு, நெற்றியில் இட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தபோது கண்களிலிருந்து அப்பா நகர மறுத்தார்.

கரிய உருவங்களைப் பின்னுக்கு நகர்த்தி நின்று ஏளனமாகச் சிரித்தார். அவனுக்கு துக்கம் குமுறிக்கொண்டு வந்தது.

பக பக வென்று கேவல் எழுந்தது. இது நிஜ அழுகையா, கனவில் அழுகிறோமா என்று தெரியவில்லை. இடையில் அம்மா

சொன்னாள். ‘கல்யாணமானா சரியாயிடுவன். ‘

‘ ஏண்டி, உனக்கு புத்தி இருக்கா ? இவனுக்கு என்ன யோக்யதை இருக்கு கல்யாணம் பண்ணிக்க ? ப்யூன் வேலை கூடக்

கிடைக்காது, எழுதித்தரேன் ‘

அப்பாவின் வார்த்தைகளைக் கேட்கும் போதெல்லாம் ஏற்படும் ஆத்திரம் இப்பவும் ஏற்பட்டது.

அந்த ராமகிருஷ்னன் என்ன சொன்னார் ?

‘ உங்களுக்கே உங்க சக்தி புரியல்லே சுவாமி. உங்களால அருள் கிடைச்சிருக்குப்பாருங்கோ, நாங்க புரிஞ்சுண்டுட்டோம் உங்க பெருமையை. ‘

பஞ்சாமி சம்புடத்திருந்து ஒரு பிடி வீபூதியை எடுத்து ா பூ ா என்று அப்பாவைப் பார்த்து ஊதினான்.அப்பா மறைந்து

போனார்.

விடியும் போதே இன்று வெள்ளிக்கிழமை என்று ஞாபகம் வந்தது. 9 மணியிலிருந்தே கூட்டம் வரத்துவங்கி விடும். மதியம் ஒன்றிலிருந்து நான்கு வரை அவனாக விதித்துக்கொண்ட் கட்டாய ஓய்வு. எழுந்து கொல்லையிலிருந்த கிணற்றடிக்குச் செல்லும் போது உடம்பை ஒரேயடியாய் அசத்திற்று. ஈசுவரா என்று வாய் அரற்றிற்று.பல்துலக்கி முகம் கழுவி காபிப் போட்டுக் குடித்து குளித்துவிட்டு வந்து,பகல் உணவைத் தயாரித்து இடையே பூஜையை முடிப்பதற்குள் ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.ஜன சந்தடியைக் கண்டால்,கரிய உருவங்களுக்கு அதிகக் கொண்டாட்டம்.பூஜையில் மனசு லயிக்காமல் நழுவி நழுவி ஓடிற்று.கனவில் வரும் அப்பா மறித்து நின்றார்.பின்னால் அம்மா.ாகோபமாயிருக்கார்டாா என்று எச்சரிப்பதுபோல.கோபமில்லாத அப்பாவை அவனுக்கு நினைவில்லை.அவனை அவரிடமிருந்து விடுவிக்கும் வகையில்தான் அந்தக் கரிய பிசாசுகள் வளைத்துக் கொண்டதாக,அவனுக்குத் தோன்றிற்று.இப்போது அவற்றிலிருந்து விடுபட அப்பாவை நாட முடியாது.அவன் அவரிடமிருந்து விலகி வெகுதூரம் பயணித்தாகிவிட்டது.

பூதங்கள் அவனைத் தம் வசமாக்கிக்கொண்டது எப்போது என்று அவனுக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை.பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆனதும் அப்பா போட்ட சத்தத்தில் மனசு வெறுத்து ஊர் கோடியில் பாழ் மண்டபத்தில் அமர்ந்திருந்த ஒரு சாமியாரிடம் போய் ஒட்டிக்கொண்டது,வாழ்வின் மகத்தான திருப்பம்,தியானம் கற்றது அவரிடம்தான்.ஆனால் பாதிப் பயிற்சியிலேயே சாமியார் திடாரென்றுகாணாமற் போய்விடவே அவன் மனசுடைந்துகோவில்ப்ராகாரத்தில் தூணில் சாய்ந்தபடி ஒரு நாள் தியானத்தில் அமர்ந்திருந்தபோது தான் அது நடந்தது. அவனுடன் படித்த மார்த்தாண்டம் வந்து சேர்ந்தான்.ாதம்பிக்கு ரொம்பநாளா காச்சல்.செத்துருவான் போல இருக்குா என்று அழுதான்.

பஞ்சாமி கண்களை மூடிக்கொண்டான்.இமைகளுக்குள் கரிய உருவங்கள் தெரிந்தன.உதடுகள் தன்னிச்சையாக மந்திரங்களை

உச்சரித்தன.தன் எதிரில் ஒரு தாளில் வைத்திருந்த விபூதியை எடுத்து மார்தாண்டத்திடம் கொடுத்தான்.ாஉன் தம்பி நெத்தியிலே இதைப் பூசு.ஜ ‘ரம் இறங்கிடும்ா என்றான்.மறு நாள் காலை மார்த்தாண்டம் அவனைக் காண ஓடோடி வந்தான்.ாதம்பிக்கு குணமாயிடுத்து.ஜ ‘ரம் வந்த சுவடு கூட இல்லோ என்றான். செய்தி காட்டுத் தீயைப்போல பரவிற்று.கரிய பூதங்கள் அவனுடன் நிரந்தரமாக வாசம் செய்ய வந்தன என்று உணராமலேஅவன் ஆற்றில் மிதக்கும் சருகாய் மிதந்தான்.உருப்பட மாட்டே என்று தொடர்து சொன்ன அப்பாவின் நிழல் படாத ஜாகைக்கு மாறினான்.அப்பாவுக்கு உடம்பு சரியயில்லை என்று அம்மா வந்து அழுதபோது அவன் அனுப்பிய மந்திரித்த விபூதியை ஏற்க அவர் மறுத்து விட்டர் என்று பின்னால் வந்து அம்மா சொன்னள். ‘ஊரெல்லாம் உன் புகழ் பாடறது.அவர் கடைசிவரைக்கும் உன்னை ஏத்துக்கல்லே ‘ என்று கண்ணீர் விட்டாள்.அதற்கு ஈடு செய்வது போல தன் காலம் முடியும்வரை அவனுக்குசமைத்துப்போட்டுத் தேவைகளை கவனித்துக்கொண்டாள். ‘கல்யாணம் பண்ணிக்கோ ‘ என்று சொல்வதை நிறுத்தினாள்.,அவன் சாமன்ய வாழ்வு வாழப் பிறந்தவனில்லை என்று நினத்தவள் போல.

‘ஈச்வரா! ‘ என்றான் பஞ்சாமி வாய் விட்டு.உடம்பு இன்று பூட்டுக்குப் பூட்டு வலித்தது..அப்பா சபித்த அந்த பியூன் வேலை செய்வதுகூட அதிக நிம்மதியை கொடுத்திருக்கும் என்று தோன்றிற்று. இரண்டு வாழைப் பழங்களையும் ஒரு டம்ப்ளர் பாலையும் குடித்துவிட்டு அவன் மீண்டும் பூஜை அறைக்குச்சென்றுஅமர்ந்தபோது பஞ்சாமி என்ற சாமான்ய மனிதன் காணாமல் போயிருந்தான். ஏதோ ஒரு அன்னிய சக்தியின் ஆட்டுவித்தலுக்குக் கட்டுப்பட்டு சுயத்தை இழந்தவன் போல.உடம்பு சிலிர்து மின்னும் பின்னும் ஆட, வந்தவர்களின் ஏக்கங்கள் பிரலாபஙள், துக்கங்கள்,ஆசைகள்,எதிர்பார்ப்புகள், அத்தனையும் ஒட்டுமொத்த பாரமாய் அவனது முதுகில் அமர ,அதை இழுத்து இழுத்து முன்னேறுகையில் மூச்சு திணறிற்று. மதிய இடைவேளையில் படுத்து களைப்பு விலகுவதற்குள் மாலைக்கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இரவுவரை நீண்டு ஒருவழியாக எல்லாரும் கிளம்பிப்போனதும், அப்பாடா என்று காலை நீட்டி உட்கார்ந்தான்.

‘மாமா! ‘

அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

ராஜ கோபாலனுடைய பெண். நான்கு வீடு தள்ளி இருப்பவள். லட்சணமான பெண்..

காரணம் புரியாமல் ஒரு சந்தொஷம் ஏற்பட்டது. இளைஞர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் சந்தோஷம்.

சாதாரணமாக சிறுசுகள் பரீட்சைக் காலங்களில் மட்டுமே தலைக் காட்டுவது வழக்கம்.

‘ஓ, வாம்மா சுதா. என்ன விஷயம், இந்த வேளயிலே ? ‘

இரவு ஒன்பதுக்குமேலெ ஆகல்லியோ ?

‘இப்பத்தான் வர்ற முடியும். டிவியிலெ சீரியல் பார்த்துண்டிருக்கா எல்லாரும். ‘

‘ சொல்லும்மா ‘

‘ மாமா எனக்கு நீஙக ஒரு ஹெல்ப் பண்ணணும் . ‘

‘ ெ ?ல்ப் பண்ணத்தானேம்மா நா இருக்கேன் ?

சுதா சற்று நேரம் எதுவும் பேசாமல் சாமி படஙகள் நிறைந்த சுவர்களைப் பார்த்தபடி இருந்தாள்.

பிறகு காணிக்கை வைக்கப்பட்ட தட்டுக்களை ஆராய்ந்தாள்.

‘என்ன விஷயம் சொல்லு சுதா, தயங்காமெ சொல்லு ‘

சுதா அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.

‘மாமா, உஙளை ஒரு ஃபிரண்டு மாதிரி நினெச்சுண்டு உதவி கேக்க வந்திருக்கேன். எஙக அப்பா நாளைக்கு ஒரு ஜாதகத்தைத் தூக்கிண்டு வரலாம். பொருந்தல்லேன்னு சொல்லிடுங்கோ ‘

‘ஏம்மா ? ‘

‘எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம். எனக்குப் படிக்கணும். ‘

‘அப்பாவண்டெ சொல்லிடவேண்டியதுதானே ? ‘

‘அப்பா ஒரு முசுடு. கேக்க மாட்டார் ‘

‘சேசே,அவர் மஹா சாதுன்னா ? ‘

‘எல்லாரும் உங்ககிட்டெ காட்டற மூஞ்சிதான் உண்மையின்னு நினைக்கிறேளா ? ‘

யாரோ முகத்தில் அறைந்தது போல் இருந்தது.அதாவது,இதுகூடத் தெரியல்லேன்னா எதுக்குக் கூட்டம் போடறேள் என்கிறா.

பதுஙகி விட்டன என்று நினைத்திருந்த கரிய உருவஙகள் மீண்டும் எதிரில் நின்றன.

‘கல்யாண ஏற்பாடு பண்ணார்னா நா தூக்கு போட்டுக்கணும் ‘

பஞ்சாமிக்கு லேசாகத் தடுமாறிற்று. ‘சேச்சே,என்னம்மா இது ?சினிமா டயலாக் மாதிரி! ‘

‘சினிமா இது இல்லே வாழ்கை எங்கிறதுனாலேதான் சொல்றேன். ஹெல்ப் பண்ணுங்கோ மாமா! ‘

திடாரென்று பஞ்சாமிக்கு மிகச் சோர்வாக இருந்தது.

நா சொல்ற வார்தைஎல்லாம் என் வசத்திலெ இல்லேன்னு சொன்னா இந்தப்பெண்ணுக்குப் புரியாது.

‘சரிம்மா நீ போ நாழியாச்சு பாரு ‘

சுதா விருக்கென்றூ எழுந்தாள். ாதாங்க்ஸ் மாமாா என்றூ பளீரென்று சிரித்து விட்டு வெளியேறினாள்.

இரவு அப்பாவுக்கு பதில் கனவில் சுதா வந்தாள்.மிருதுவாய், பூவாய் மென்மையாய்..காலையில் கண்விழித்த போது படுக்கை ஈரமாகியிருந்தது.இதுவும் அந்த பூதங்களின் வேலையாகத்தான் இருக்கமுடியும் என்று அவன் சோர்ந்தான். அவமானத்துடன் எல்லாவற்றையும் நனைத்து நீரை இறைத்து குளித்தான். ஆனாலும் இன்று உடம்பும் மனசும் தன் வசத்தில் இல்லாததுபோல் அவனுக்கு பீதி ஏற்பட்டது.யார் வந்தார்கள் என்று புரியவில்லை.என்ன சொன்னோம் என்று பதியவில்லை,.அவனுக்கும் பேசும் அந்த வாய்க்கும் சம்பந்தமில்லததுபோல் இருந்தது.கரிய பிசாசுகளின் ஆக்கிரமப்பில் அவன் பூரனமாய் சரணடைந்து விட்டதாகத் தோன்றிற்று.

எதிரில் உட்கார்ந்திருந்தவரின் முகமே தெரியவில்லை. எங்கும் புகை மூட்டம்.

‘இந்த ஜாதகத்தைப் பாரு பஞ்சாமி. சுதா ஜாதகதோடெ பொருந்தறதா பாரு. ‘

அந்தப் பெயர் காரணம்புரியாத சந்தோசத்தைக் கொடுத்தது.

அவன் அந்த் தாள்களில் இருந்த கட்டஙகளை மாறி மாறி பார்த்தான்.

மெல்லிய புன்னகையுடன், ‘பேஷாப் பொருந்தறது ‘ என்றான்.

பிறகு யார் வந்தார்கள் யார் போனார்கள் என்று சுத்தமாகத் தெரியாது. கடைசியில் அவன் பதிலே சொல்லாமல் வெறிக்க ஆரம்பித்ததும்

‘சாமிக்கு இன்னிக்கு சொல்ல விருப்பமில்லே ,நாளைக்கு வருவோம் ‘ என்று கதவை சத்தமில்லாமல் சாத்திவிட்டு காத்திருந்தவர்கள் போனார்கள்.

மறு நாள் வேலைக்காரி தகவல் தெரிவித்து வந்து பார்த்த டாக்டர் , சர்க்கரை குறைந்து ஏற்பட்ட மயக்கம் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.இரண்டுநாள் நினைவில்லாமல் இருந்த சமயத்தில் ‘சாமி என்னன்னவோ பினாத்து ‘ வதாக நர்ஸ் தனம் சொன்னாள். தினமும் ஒரு சிறிய கூட்டம் அவனைப் பார்க்க வந்தது. நான்காம் நாள் நினைவு தெளிந்ததும் மண்டை ஒரேயடியாய் கனத்தது.

‘நீங்களே படுத்துண்டா அப்புறம் நாங்க என்ன பண்ணுவோம் ‘ என்று படுக்கை அருகில் இருந்த சடகோபன் விம்மினான்.

ஈசுவரா என்று அவன் கண்ணை மூடிக்கொண்டான்.

‘என்னாலே முடியல்லே சடகோபன்.எல்லார் பாரமும் எம்மேலே உக்காந்துக்கறது.எல்லாத்தையும் நிறுத்திட்டு நிம்மதியா இருக்கணும் இனிமே. ‘

‘எனக்குப் பிள்ளை பிறக்கும்னேள்.நீங்கதான் நாமகரணம் செய்யணும். ‘

பக்கென்று புதிதாய் பீதி கவ்வியது. ‘எனக்குத் தோணினதை சொல்றேன்.நடக்கல்லேன்னா அதுக்கு நா பொறுப்பில்லே ‘.

‘நீங்க சொன்னா போறும் பஞ்சாமி.நடந்துடும். ‘ என்றான் சடகோபன்.ாகேக்காததை நீங்க சொல்லமுடியாது. இப்ப žதா பண்ணினத்துக்கு நீங்க பொறுப்பாக முடியுமா ? ‘

‘என்ன பண்ணா சுதா ? ‘

‘கண்றாவி போங்கோ.ராஜகோபாலன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாரோல்லியோ ,இது தூக்குப் போட்டுண்டுடுத்து.! ‘

பஞ்சாமி சற்று நேரம் அசையாமல் சடகோபனைப் பார்த்தான்.பிறகு மெல்ல மெல்ல விழிப்பவன் போல விழிகள்விரியப் பார்த்தான்.

‘ஐய்யோ, ஐயய்யோ! ‘என்று பெரிய குரலில் அலற ஆரம்பிதான். தன் தலையை இரு கைகளாலும் விடாமல் மடேர் மடேர் என்று அரைந்து கொண்ட அவனை தடுக்கமுடியாமல் டாக்டரைக் கூப்பிட சடகோபன் விரைந்தான்.

ஆஸ்பத்ரியிலிருந்து திரும்பிய பஞ்சாமி பழைய பஞ்சாமி இல்லை என்றார்கள்.சித்தம் கலங்கிவிட்டது பாவம் என்றார்கள்.குறி கேட்க வந்தவர்களையெல்லாம் அடித்து விரட்டாத குறையாக அவன் திருப்பியதில் அவனது அபிமானிகள் அரண்டுபோனார்கள். ‘என்னை விட்டுடுங்கோ ‘ என்று அவன் எப்பவும் பிரலாபிப்பதாக வேலைக்காரி சொன்னாள்.பஞ்சாமிக்கு எந்த வகையில் உதவுவது என்று அபிமானிகள் யோசனையில் ஆழ்ந்தபோது, மிகத் தீவிர த்துடன் கடலை வெறித்தபடி பஞ்சாமி நின்றிருந்தான். ‘உங்கிட்டேந்து விடுபட இதுதான் வழி ‘ என்றான் ஒரு நல்ல முடிவு கிடைத்த த்ருப்தியுடன். ‘சே,இது முன்னாலேயே தோணாமெ போச்சே ‘என்று வருத்தப்பட்டான்.உதடுகளில் மெல்லிய புன்னகை விரிய, ‘ஓ ‘வென்று ஆர்ப்பரித்தக் கடலுக்குள் அவன் நிதானமாக முன்னேறி அதன் மையத்துச் சுழலில் இழுபட்டு மூழ்கும்போது அந்தக் கரிய உருவங்களும் அவனுடன் சேர்ந்து மூழ்குவதைக்கண்டு ஏற்பட்ட அதிர்ச்சி மட்டுமே அவனது கடைசி உணர்வாக இருந்தது.

முற்றும்.

Series Navigation

விடுதலை

This entry is part [part not set] of 5 in the series 20000911_Issue

-முடவன் குட்டி.


சலூனுக்குப்போய் ஒன்பது மாதங்கள்ஆகிவிட்டன. முடி வெட்டிக் கொள்ள வேண்டும். மனைவி தினமும் தொணதொணக்கிறாள். ஆபிஸில் ராவ், ‘ஏ முண்டம்..இது என்ன ஆபிஸா.. சந்தை மடமா.. ?ஒழுங்கா ஹேர் பண்ணிட்டு லட்சணமா வா.. திருப்பியும் மொட்டைபோட்டுட்டு வந்தியோ கொண்ணுடுவேன் ‘-னு கத்துகிறார். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் ராவ், சேல்ஸ் மானேஜர். ஆபிசில், நாலு பெண்கள் மத்தியில் சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார்.

அது என்னவோ, சலூனுக்குப்போய் ‘கிராப் ‘ வெட்டிக் கொள்வதை நினைத்தாலே மனம் பதறுகிறது. ஏன், எதற்காக என்ற காரணம் தெரியாத பயம். பதட்டமும், பொறியில் மாட்டிக் கொண்ட திணறலும் மனதைக்கவ்வ அடுத்த வாரம் முடிவெட்டிக் கொண்டால் போயிற்று- எனடக் கெனஒத்தி போட்டு விடுகிறேன். அடுத்தவாரம் அடுத்தமாதமாகி, மாதம் மாதங்களாகி, கடைசியில் ஒருவைராக்கியத்திில், சலூனுக்குப்போனாலும், மொட்டைபோட்டு வந்துவிடுவேன். முடியை அளவாக வெட்டி ‘கிராப் ‘ வைத்துக் கொள்வது- என்பதே கிடையாது. சலூன் கடை முருகேசன் சொல்வான், ‘ கிராப் தான் வெட்ட ஆரம்பிக்கிறேன் சார். ஆனா இடையிலே என்ன ஆகுமோ உங்களுக்கு.. முகமெல்லாம் சிவந்து பல்லைக்கடிச்சுக்கிட்டு ‘முருகேசா..மொட்டை போட்ருப்பா ‘-னு சொல்லிடுவீங்க. அப்படிச்சொல்றப்போ பயந்திடுவேன் சார்.. ரொம்பக் கோவமா அடிக்கிறாப்ல சொல்வீங்க… ‘. முருகேசன் சொல்லியதை மனைவியிடம் சொன்னேன். ஒரு மாதிரியாக என்னைப்பார்த்துச் சிரித்தாள். அவள் சிரித்த விதத்தை இப்போது நிினைத்தாலும் குலை நடுங்குகிறது.

என்ன இருந்தாலும், ஆபீஸில் எல்லார் முன்னாலும் ‘முண்டம் அது இது… ‘எனவெல்லாம், ராவ் என்னை அவமானப் படுத்தியிருக்கக்கூடாது. டைபிஸ்ட் சுமதி கூட, குனிந்து எளக்காரமாகச் சிரித்தாள். இன்று கட்டாயம் முடிவெட்டியே தீருவது என சங்கல்பம் செய்து கொண்டேன். ஆபீஸ் முடிந்து வெளியே வரும் போது சுமதியின் கண்களில் கேலி தெரிந்தது. அவளை செவிட்டில் ஒரு அறை விடலாம் போலிருந்தது.

வீட்டிற்குப்போகும் வழியில்தான் வழக்கமாய் முடி வெட்டிக்கொள்ளும் முருகேசனின் சலூன் இருக்கிறது. முருகேசன் பழக்கமானவன். பழக்கமான எல்லாவற்றிலுமே, ஒரு ‘நிச்சயம் ‘ ‘பாதுகாப்பு ‘ இருக்கிறது. என்னவோ ஏதோ என்ற தயக்கம், சந்தேகம் ஏதுமில்லையல்லவா.. ?

சலூனை ஒட்டிய சந்தில், சைக்கிளை நிறுத்துகிறேன். அதனைப்பூட்டி நிமிற்கையில், எதிரே பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் பெண்ணின் பார்வை ‘சுரீர் ‘ என சாட்டையாய் விளாசுகிறது. நான் அவளைப் பார்த்தபோது, சட்டென வேறுபக்கம் பார்க்கிறாள். ‘சைக்கிளில் வரும் நீ எனக்கு அல்பம் ‘ என்கிறாளா.. ? பின் எதற்காகப்பார்க்க வேண்டுமாம்.. ? தன்னை இவன் கவனிக்கிறானா என்ற நோட்டம். கவனிக்க வேண்டுமே என்ற கவலை. கவனித்தால், ‘பார்க்கும்படி இருக்கிறேனாக்கும் ‘ என்கிற நிமிர்வு. கூடவே ‘அட நீ எம்மாத்திரம் ‘ என்கிற அலட்சியம். சைக்கிளில் வருவதாலா இந்த அலட்சியம்.. ? அடுத்த வருடம் ஒருமோப்பட் வாங்கிவிட வேண்டியது தான்.

‘வாங்க சார்.. வாங்க.. வாங்க.. ‘ அன்புடன் வரவேற்றான் முருகேசன்.அவன் காட்டிய மரியாதையும், பணிவும் முக்கியமானவானாக, என்னை உணரச் செய்கிறது. அலட்சியப்படுத்திய பெண்ணினால் பட்ட காயம், சற்றே ஆறிப் போகிறது. ‘உக்காரும்ங்க சார் ‘ -நாற்காலியைக் காட்டினான். நாற்காலியில் அமர்கிறேன். பயம்…பயம் அடிவயிற்றில் பந்தாய்ச் சுழல ஆரம்பிக்கிறது. மூச்சை ஆழமாய் உள் இழுத்து-நிறுத்தி-வெளியே விடுகிறேன். கால்களை நீட்டி வசதியாய்ச் சாய்ந்து கொள்கிறேன். எதிரே, கண்ணாடியில், முகம் இருண்டு, இறுகித் தெரிகிறது. கண்ணாடிக்குச் சற்றுமேலே, ஜவகர்லால் நேருவின், போட்டோ தொங்குகிறது. அதில், நேருவின் தொப்பியையே கண்கள் வெறித்தவாறிருக்கிறது………

வாப்பாவும் நேரு தொப்பிதான் போடுவார்.அப்போது நான் ஒண்ணாம் வகுப்போ..ரண்டாம் வகுப்போ. சலவைசெய்த துணிகளை, ஒவ்வொன்றாக வாப்பாவின் முன்னால் எடுத்து வைக்கிறான்-வண்ணான் பழனி. அவரின் தொப்பிகளை மட்டும் தனியே, தள்ளி வைக்கிறான். ஒரு தொப்பியை எடுத்து, அதனை மேலும் கீழும் உற்றுஉற்றுப் பார்க்கிறார் வாப்பா. அதில் லேசான சுரிப்பு தெரிய, அதனை அவன் மூஞ்சியில் விசிறியடிக்கிற்றார். ‘ஏல..மானங்கெட்ட மூதி..என்னல வெளுக்கிற.. ? மயிர்ல வச்ச வெளுப்பு..இந்தா நீயே பாரு..நீ வெளுத்த லட்சணத்தை ‘-ஆடி இறங்கிவிட்டார். வாப்பாவிடம் 10,15 தொப்பிகள் உண்டு. வாரா வாரம் வெள்ளிக்கிழமை தோறும், தொப்பியை மாத்துவார். எல்லாத் தொப்பிகளும் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். இருந்தாலும், இது போன வாரம் போட்டது: இது அதுக்கு முந்தின வாரம்: இந்தத்தொப்பி, இந்த வாரத்துக்கு: இது அடுத்த வாரத்துக்கு என கரெக்டாக எடுத்து வைப்பார். அது எப்படி.. ? தொப்பிக்கு உள்ளே நம்பர் கிம்பர் போட்டு வச்சிருப்பாரோ.. ? இபுராகிமிடம் கேட்டால் சிரிப்பான். அவன் எனக்கு மூத்தவன். களவாணிப் பயல். வாப்பாவுக்கு, அவனைத் தான் ரொம்பப் புடிக்கும். நல்லாப் படிக்கிறானாம்.. ரொம்ப ஒழுங்குப்புள்ளையாம். வாப்பா ஓயாமசொல்லிக்கிட்டு இருக்கிற வார்த்தைகள் இரண்டு. 1)சுத்தம் 2)ஒழுங்கு. முதல் வார்த்தைக்கு அர்த்தம் தெரியும். ரண்டாவதுக்கு, கரெக்ட் அர்த்தம், கொஞ்சம் குழம்பும். தமிழ்ப் பாடத்தில், ‘ஒழுக்கம் உயர்வு தரும் ‘-னு வந்தது. சார் வந்தா எழுந்து நிக்கணும்- சார் சேர்ல உக்காரக் கூடாது -காம்பவுண்டு சுவத்தில ஒண்ணுக்கு அடிக்கக் கூடாது-பாடம் நடத்துறபோது, பக்கத்ல இருக்கிற மசூது கிட்ட பேசக் கூடாது- இதெல்லாம் ‘ஒழுக்கம் ‘-னார்- தமிழ்சார். வாப்பா அடிக்கடி சொல்ற ‘ஒழுங்கும் ‘-பாடத்ல வர்ற ‘ஒழுக்கமும் ஒண்ணு தானா-ன்னு சந்தேகம் வரவே, சாரிடம் கேட்டேன். ‘வாயை மூடுல வெளக்குமாறு ‘-ன்னு,புஸ்தகத்தை என்மூஞ்சியில விசிறியடித்தார் தமிழ்சார். இது மட்டும் நல்ல ஒழுக்கமா.. ? வாப்பாவும் இப்படித்தான். உப்பு ஜாஸ்தி-ன்னு, கொதிக்கிற கொழம்பை அம்மா முகத்ல வீசியதில், அவ முகம் வெந்து போயிட்டுது. போன வாரம் மூணு காக்கா முட்டைகளை உடையாம எடுத்து வர்ற போட்டியில,மரத்து மேல ஏறியதுக்கு,என்னை பெல்டா-ல விளாசிிஎடுத்திட்டார் வாப்பா. ஒழுங்கு,சுத்தம்-னு ஒங்கி ஓங்கிப் பேசுறவரு, இப்பிடியெல்லாம் அடிக்கலாமா.. ?நீ திருந்தணும்-னு தான்: உன் நன்மைக்குத்தான்-அடிக்கிறேன்-என்பார். எனக்கு, கண்லஅழுகை பொங்கும்: மூச்சு அடைக்கும்: ‘வேய், உம்மை, உங்க வாப்பா இப்படித்தான் அடிச்சாரா.. ?அப்படி அடிச்சும் நீரு ஏன் திருந்தலே.. ?கோபத்தை அடக்க உம்மால ஏன் முடியல்லே.. ?அம்மாவை மாட்டை அடிக்கிற மாதிரி ஏன் அடிக்கீரு.. ?-ன்னு, தொண்டைக்குள்ளேயே கேள்வி ஒண்ணு கெடந்து தெவங்கும்.

வாப்பா வீட்டில் இருக்கையில், எனக்கு மூச்சு முட்டினாற்போல இருக்கும். சொகமா, ராகத்தா இருக்கவே முடியாது. ‘…ஆடாம அசையாம இருந்து படிச்சா என்னல மூதி.. ? அங்க என்னல சத்தம்.. ? வாயை மூடிக்கிட்டு இருக்க முடியலியால.. ?ஏம்ல நெளிஞ்சுக்கிட்டே இருக்கே.. ?கொட்டாவி விடும்போது ஏம்ல சத்தம்.. ?எடுத்த பொருளை எடுத்தஇடத்தில வைக்கத் துப்புக்கெட்ட கழுதை… கண்ட கண்ட இடத்ல ஒண்ணுக்குப்போக நீ என்ன நாயா-ல.. ?கக்கூசுல ஒண்ணுக்குப் போ-ன்னு எத்தனை தடவை சொல்றது… ? தெருவுல தறுதலைப் பசங்களோட சேந்தன்னா, உன்னைதொலச்சுக் கட்டிடுவேன்.. ‘ வாப்பா இல்லாத போதும் அவரின் உறுமல்கள்,டிடும் டிடும்-னு பாறை உருள்றாப்ல, தலைக்குள்ள கேக்குது. சாயங்கலம் ஆறு மணிக்கு, டாண்-னு படிக்க உக்காரணும். மஃரிப் தொழுகை முடிச்சு, சரக் சரக்-னு வாப்பா தெருவுல நடந்துவர்ற செருப்புச் சத்தத்தை,நாங்க படிக்கிற சத்தம் அமுக்கணும்.எனக்குஆழமான தொண்டை. சத்தம் போட்டு, ராகம் இழுத்துப் படிப்பேன். இபுராகீம் ஓரக்கண் சிமிட்டி, நமுட்டுச் சிரிப்பாணி சிரிப்பான். அல்லாஹ்-ன்னு, திண்ணையில உக்காருவார் வாப்பா. டக்-னு, நாங்க படிக்கிற சத்தம் நிண்ணுடும்: நிக்கணும்: (வாப்பா இருக்கையில் சத்தம் வரக்கூடாதே..). நேத்து வாப்பா வர்ற சத்தம் காதில விழல. புஸ்தகத்ல ஒரு எறும்பைப் பார்த்தவாறு இருந்திட்டேன். அந்த எறும்பு, ஒரு ஈசல் இறகை, முக்கி முனகி இழுத்துக்கிட்டு போனது. நான் முட்டி போட்டவாறு, அதன் பின்னாலேயேபோனேன். பளார்-னு முதுகில அடி விழ, துள்ளித்துடித்து குப்புற விழுந்தேன். வயத்ல,கன்னத்ல, முதுவுல மாறி மாறி அறைஞ்சார் வாப்பா. ‘ஒரேயடியா தொடர்ந்து அடிக்காதீங்கப்பா..மூச்சு முட்டுது. என்னால் அழ முடியல.. கொஞ்சம் நிறுத்தி நிப்பாட்டி அடிங்கப்பா..பெரியவங்க நீங்க.. தீராத விவாகாரங்க ஆயிரம், உங்க தலைக்குள்ள கெடக்கும். அந்த வெறி அடங்கும் வரை,என்னையஅடிச்சுக்கொண்ணுடா- தப்பா.. ‘என,மனசுக்குள்ளேயே,வாப்பாவிடம் அழுது மன்றாடு- வேன். அவர் ரொம்ப ரொம்பக் கொடுமையா நடந்துக்கிறது, மொட்டை போடுற சமயத்தில தான். என் தலை எல்லாரையும் போல, உருண்டையாக இராது.மாங்காக்கொட்டைபோல,லேசா சப்புன மாதிரி இருக்கும். மொட்டை போட்டால் ரொம்ப அசிங்கமாத் தெரியும். ‘ஊசி மண்டை ‘ ‘மாங்கா மண்டை ‘-என, தெருவில் என்னை கேலி பண்ணுவாங்க.எனக்கு இந்த பட்டப் பெயரை வைத்து, அதனை, தெருவிலும், பள்ளிக்கூடத்திலும் பரப்பினவனே, இந்தப்படுவா ராஸ்கல் இபுராகீம் தான். அவன் மொட்டைபோட்டால் நிலாப்போலஅழகா இருக்குமாம்-அக்கா சொல்வாள். எனக்கு வெறி கொப்புளிக்கும். அதுக்காகவே திருப்பியும் சொல்வள். வாப்பா,அக்கா, அண்ணன்மார்-மிருக உலகில், எனக்கே எனக்கான ஒரே ஆதரவு அம்மாதான். ‘இதுக்குப் போயி யாராவது அழுவாங்களா.. ? சரியான பயந்தாங்கொள்ளியா இருக்கியே ராசா.. இப்படி கோழையா இருந்தா,ஊர்உலகம் உன்னைய வுட்டுட்டு தூரமாப் போயிடும்-ல. தைரியமா இரு தங்கம்… தைரியமா நிமிந்து நிக்கணும்.. அழாதல ராசா.. அழாத ‘-மாற்றாந்தாய் கொடுமையில வதை பட்டு,அதில இருந்து தப்பிச்சோம் பொழச்சோம்-னு கல்யாணம் பண்ணி,வாப்பாவைக் கை புடிச்ச நாள்-ல இருந்து,மாமியார்க் காரியிடமும்,வாப்பாவிடமும் நொந்து,நோவுபட்டு அழுவதற்கும் உயிர் இற்றுப்போனஅம்மாவின் இதயத்திலிருந்து இரண்டு சொட்டுக்கண்ணீர், அவள் மடியில்குப்புறக்கிடக்கும், இவன் புறங்கழுத்தில் விழும். ‘அம்மா.. வாப்பாவிடம் சொல்லும்மா.. எனக்கு மொட்டை போட வேண்டாம்-னு.சொல்லுவியாம்மா… சொல்லுவியா.. ? ‘

‘தலை அரிக்குதுப்பா..மொட்டை போடணும்-னு ‘, அவ்வப்போது வாப்பாவை, ‘ச்சூ ‘ க்காட்டியவாறே இருப்பான்-இபுராகீம். முந்தின நாள் இரவே, ‘புள்ளைங்களுக்கு முடி வெட்டணும்..நாளைக்கு வா ‘-வென, நாவிதன் மம்மதுஷாவிடம் சொல்லிவிடுவார் வாப்பா. காலையில் மம்மதுஷா வருவதை நினைத்தாலே குலை நடுங்கும்.கை கால் பதறும். சாப்பாடு இறங்காது. ஷெய்கனா தர்கா, மசூது நாயகம் தர்காக்களுக்- கெல்லாம் போய், ‘ இறைவா..மம்மதுஷா வரவே கூடாது.. அவன் செத்துப்போகணும். வாப்பாவும் செத்துச் சுண்ணாம்பாப் போவணும் ‘-னு அழுது மன்றாடுவேன். தூக்கத்தில், பயங்கரமான,கோரமான கனவுகளெல்லாம் வரும். காலையில் மூணு நாலு மணிகெல்லாம் முழிப்பு வந்துவிடும். தக் தக் தக்.. அடிவயிற்றில் பீதி உருளும். காலை ஆறு மணிக்கே டாண்-னு வந்துநிற்பான்,மம்மதுஷா.வாப்பாவைப் பார்த்ததும்,தோள் துண்டை வெடுக் கென இழுத்து,இடுப்பில் கட்டிக்கொண்டு, குனிந்துசலாம்சொல்வான். இதனை ‘பணிவு ‘-ன்னு நினைத்துக் கொள்கிறார் வாப்பா. ‘மம்மதுஷா மரியாதை தெரிஞ்ச பய ‘-ன்னு,சொல்லவும் செய்வார். மம்மதுஷாவின் பணிவு மரியாதை எல்லாம் வழக்கமாக அவனுக்குத் தரும், வருஷத்துக்கு நாலு மரக்கா நெல், ஹஜ்ஜ்ப்பெருநாள் கடாத்தலை, வெள்ளிக்கிழமை ராச்சோறு-போக,ஷேவ் செய்ய, வாப்பா, அவனுக்குத் தரும் துட்டுக்காக-ஸ்பெஷல் துட்டுக்காக. இது எப்படி வாப்பாவுக்குத் தெரியாமல் போனது.. ? அல்லது தெரிஞ்சும், அவனோட கள்ள மரியாதையை ஏத்துக்கிற மாதிரி,பொய்யாட்டம் போடுறாரா.. ? இந்தப் பெரியவங்களே இப்படித்தான். எதிலையுமே நேரா இல்லே. பொய், கள்ளாட்டம்,கோணா-மாணா. ஆனா, சின்னப் பசங்க மட்டும், நெட்ட நெடுகா, நேரா,சீரா இருக்கணும். வாப்பா ஷேவ் செய்துகொள்வதைப் பலி ஆடு மாதிரி பார்த்துக் கொண்டிருப் பேன். அங்கிருந்து, தப்பிக்கவே முடியாது. ஒண்ணுக்குப் போனாலும், பின்னாலே வருவான் இபுராகீம். வாப்பா ஷெவ் செய்து முடித்ததும், மம்மதுஷா முன்னால், ஜம்-மென அமர்வான் இபுராகீம். அவன் முகத்தில் குளுமை: உதட்டில் எம்.ஜி.ஆர்.பாட்டு. நாயிக்குப் பொறந்த பய.என்ரத்தம் கொதிக்கும்.மம்மதுஷா கையிலிடுந்து கத்தியைப் புடுங்கி, அவன் கண்களைக் குத்திக் குதறும் வெறி வரும். அடுத்து மொட்டை போட வேண்டியது நான். சடா-ரென எழுந்து ஓடுவேன்.இபுராகீமும், பெரியண்ணனும் தாவிப் பிடிப்பார்கள். ‘முடியாது..மொட்டை போடமாட்டேன்..மாட்டவே மாட்டேன்..கிணத்தில உழுந்து செத்துப்போயிடுவேன்… ‘- வீடே கிடுகிடுக்கும்படி அலறுவேன். கதவில் சாய்ந்து, என்னையே பார்த்தவாறு நிற்பார்-வாப்பா.அவர் முகம்,பார்வை,அசைவு எல்லாம், ரொம்ப அமைதியா, ஆதரவா, அன்பா ‘உனக்கு இந்தத் தடவை மொட்டை இல்லை ‘ என்கிற மாதிரி இருக்கும். ஆசையா அவர் அருகே போவேன்.பளார்-னு, செவிட்டில் அறைந்து, ‘போ.. போய் மொட்டை போட்டுக்கோ ‘-உறுமுவார். அவர் கண்முழி,கன்னச்சதை,உதடு,வாய்-என்னை வெறி நாயாய்க் குதறவரும். ‘போ..மொட்டை போடு ‘-அவர் குரல், கூரிய நகங்கள்கொண்ட, முடிமுளைத்த, கரிய கையாய் நீண்டு கண்களைத்தோண்டவரும். ‘ஐயோ..வாப்பா..நீங்க சொல்றதைக் கேக்கிறம்பா..என்னைஅடிக்காதீங்க..வலி தாங்கமுடியலேப்பா.. ஒரேயடியா கொண்ணுடுப்பா..அப்புறம் வலிக்கவே வலிக்காது.. ஐயோ.. வேண்டாம்பா..அடிக்காதப்பா..சரிப்பா..மொட்டை போட்டுக்கிறேம்பா..மொட்டை போட்டுக்கிறேன் ‘

‘சார் சார் என்ன ஆச்சு சார்.. ?ஏன்சார் அழுவுறீங்க.. தூங்கிட்டாங்களா.. ?ஏதாச்சும் கெட்ட கனவா.. ? ‘ -தோளைத்தட்டி உசுப்பினான் முருகேசன். சுய நினைவுக்கு வர கொஞ்ச நேரம் பிடித்தது. இதுநாள் வரை நினைவின் மேற்பரப்பிற்கே வராது, உள்ளேயே அழுந்திக் கிடந்த சிறிய வயது நினைவுகள், முதல்முறையாக வெளிப்பட்டு,சித்திரம் சித்திரமாய் ஒருசினிமா- வைப் போல கண்முன் ஓடிய அனுபவத்தை அசைபோட்ட- வாறு, நாற்காலியை விட்டு எழுந்தேன்.கண்ணாடியில்,பள- பளப்பாக மின்னி மினுங்கிற்று மொட்டைத்தலை. ‘ஏன் சார் அப்படிப் பார்க்கிறீங்க.. திருப்பித் திருப்பிக் கேட்டேன் சார். நீங்க தான் மொட்டை போடு-ன்னு சொன்னீங்க ‘ -என்றான் முருகேசன். வழக்கமாய்த் தரும் கட்டணத்தை விட, எக்ஸ்ட்ரா ஐந்து ரூபாயை, அவன் கையில் வைத்துஅழுத்தினேன்.அவன் வினோதமாய் என்னைப் பார்த்தான்.

சலூனை விட்டு வெளியே வந்தேன். குளிர்ந்த காற்று மொட்டைத் தலையை வருடிற்று.சுமை நீங்கிய விடுதலையை மனம் உணர, சைக்கிளை எடுத்து நிதானமாய் மிதித்தேன்.

 

 

  Thinnai 2000 September 11

திண்ணை

Series Navigation

author

முடவன் குட்டி

முடவன் குட்டி

Similar Posts