விடிவெள்ளி

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

யெஸ்.பாலபாரதி


ஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார் குமரேசன். ஏதோவொரு எண்.. அதுவும் லேண்ட் லைனில் இருந்து அழைப்பது மாதிரி இருந்தது.
‘ஹலோ..’
‘அப்பா.. நான் தான் ரேவதி பேசறேம்ப்பா..’
குமரேசனின் மூத்த மகள். பத்தாவதோடு படிப்பை நிறுத்தியவள். திருவாடானையில் கட்டிக் கொடுத்திருந்தார். மூன்று வயதில் ஒரு குழந்தையும் இருந்தது. மாப்பிள்ளை பெயின்ட்டர் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் குழந்தைக்கு முடியவில்லை என்று போன் செய்திருந்தாள். இவரால் போக முடியாததால் பாண்டியம்மாளை மட்டும் அனுப்பி வைத்திருந்தார். இன்றைக்கு திடீரென திரும்பவும் போன் பண்ணி இருக்கிறாள். அவரசமாக கால்களைக் கீழே இறக்கி, கழட்டிப் போட்ட செருப்பின் மீது வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்தார்.
‘சொல்லும்மா.. பாப்பா எப்படி இருக்கு..’
‘இப்போ தேவலாம்ப்பா.. ஆனா.. இருமல் மட்டும் வறட்டு இருமலா இருக்கு..’
‘ஓ.. அது சரியாகிடும்மா.. கவலப்படாத..’
‘— —’
‘என்னம்மா என்னத்துக்கு இப்ப போன் பண்ண..’ எதிர்-முனையில் இருந்து ஒரு பதிலையும் காணோம். ஆனாலும் அந்தப் பக்கம் அவள் விசும்புவதை குமரேசனால் உணரமுடிந்தது.
‘என்னம்மா.. திரும்பவும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கு-றாங்களா?’
பதிலில்லை. பீப்.. பீப் என்று பஸ்ஸர் கத்தும் சத்தமும் அதனைத்தொடர்ந்து, காசு போடும் சத்தமும் தெளிவாகக் கேட்டது.
‘இப்படியே அமைதியா இருந்தா என்னன்னு புரியும். சொல்லுத்தா.. என்ன பிரச்சனை..’
‘ஆமாம்பா.. நீங்க சொன்னது தான். அவருக்கு வெளிநாடு போகணுமாம். அதுக்கு மூணுலட்சம் கட்டணும்னு கேட்டாங்களாம். அதுக்கு ஒங்க அப்பன் வீட்டுல இருந்து வாங்கிட்டுவாடீன்னு நேத்து பூரா ஒரே சண்டைப்பா. நா முடியாதுன்னு சொன்னதுக்கு பச்சப்புள்ளன்னு கூட பாக்காம, கொளந்தையையும் போட்டு அடிச்சுட்டு போட்டார்ப்பா’
‘சம்பந்தியம்மா ஒண்ணும் கண்டுகிறதில்லையாம்மா..’
‘அவங்களும் சேந்து தான் பணம் வாங்கியான்னு சொல்லு-றாங்க.. ஓன்னோட புருசன் சிங்கப்பூரு போய் சம்பாதிச்சா ஒனக்கும் தானடி பெருமைன்னு கேக்குறாங்கப்பா.. இப்படி ஒரு பரதேசி குடும்பத்துல பொண்ணு எடுத்தேம்பாருன்னு வையுறாங்க.. எவ்வளவுதான் கொடுக்குறது, நாம என்ன ரூவா மிசினா வச்சு அடிச்சிகிட்டு இருக்கோம்..இந்த நாலு வருசத்துல நாப்பது வாட்டி வந்து பணம் வாங்கியாந்து கொடுத்துட்டேன்.’
இவருக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அமைதியாய் இருந்தார். அவள் சொல்லுவதிலும் உண்மையிருந்தது. கட்டிக்கொடுத்த இந்த நான்கு வருடத்தில் எத்தனை முறை கண்ணீரோடு வந்து நின்றிருக்கிறாள். அவனுக்கு எவ்வளவோ செய்தாகி விட்டது. கல்யாணமான புதிதில் தொழில் தொடங்கவேண்டும் என்றான்.. சொந்தமாய் ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவை விற்று, அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார் குமரேசன். கொஞ்ச நாளிலேயே நஷ்டம் என திரும்பி வந்துவிட்டான். அப்புறம் ஒர் இடத்தில் வேலை வாங்கிக்-கொடுத்தார், அங்கேயும் சாராயத்தை குடித்துவிட்டு தகராறு. என்ன செய்வது இவனை என்று யோசிப்பதற்குள் குழந்தையுமாகி, அதற்கும் இப்போது மூன்று வயதாகிவிட்டது.
எதிரில்.. பஸ்ஸர் சத்தம் கேட்டது.
‘அப்பா.. என்ன பண்ணுற-துன்னே தெரியல.. நீங்க தான் ஏதாவது செய்யனும். மொள-கொட்டுக்கு ஊருக்கு போகும் போது கேளுன்னு சொல்லி இருக்காங்க.. அதுக்குள்ளாற சொல்லிடுவோமேன்னு தான் போன் பண்ணிணேன். கையில காசு வேற கம்மியா இருக்-குப்பா.. நான் வைக்கி..’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அவ்வளவுதான் படபடவென சொல்ல வந்ததைச் சொல்லி விட்டாள். இப்போது அவளின் பிரச்சனைகள் தன் தோளில் ஏறிக்கொண்டது போல இருந்து. ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்வதென்று தான் புலப்படவில்லை.
கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பின் ஆட்டோ-விலிருந்து இறங்கி உடம்பை நெட்டி முறித்து சோம்பல் போக்கினார் குமரேசன். பக்கத்திலிருந்த தேனீர் கடை வாசலில் இருந்த குடத்தில் இருந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து முகத்தை கழுவினார். கொஞ்சம் தண்ணிரில் வாய் கொப்பளித்து துப்பினார்.
‘சீனி.. ஒரு டீ போடுப்பா..’ ஆடர் கொடுத்துவிட்டு, திரும்பவும் ஆட்டோவுக்கே வந்து உட்கார்ந்தார்.
காலையில் இருந்து சவாரியும் சரியாக இல்லை. வண்டிக்-காரருக்கு தின வாடகை கொடுக்க மட்டுமே கலெக்ஷன் ஆகி-யிருந்தது. இன்னும் ஒரு நாலு சவாரி வந்தால் தான்.. கையில் கொஞ்சம் காசு மிஞ்சும். ஆனால்.. ஒன்றும் வரலை. வெறும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் சுற்ற முடியும். பெட்ரோல் விக்கிற விலையில் இப்படி சுத்தவா முடியும். அதனால் தான் வண்டியை ஸ்டாண்டில் கொண்டுவந்து போட்டார்.
இந்த ஷேர் ஆட்டோ வந்த பிறகு, தனி ஆட்டோ தொழில் ஆட்டம் கண்டுவிட்டது. நாளை அவர்கள் தொழிலும் ஆட்டம் காணும்படி வேறு ஒன்று புதிதாக வரலாம். அதற்குள்… சின்னவளுக்கும் ஒரு கல்யாணத்தை நல்ல படியாக முடித்து விட வேண்டும் என்று நேற்றுதான் பேசிக் கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது.
மூத்தவள் போலில்லாமல் எப்படியோ ஒரு டிகிரியை முடித்து, உள்ளூரில் நர்சரி பள்ளியில் வேலைக்குப் போய் வருகிறாள். ஏதோ அவளது வருமானத்தை வைத்து, அவளுக்கு வேண்டிய துணிமணிகளை எடுத்துக்கொள்கிறாள். அவ்வப்போது குடும்பச்செலவுக்கும் சேர்த்து காசு கொடுத்து வருகிறாள். அவளின் கல்யாணத்தை பற்றி பேச ஆரம்பித்து இன்னும் இருபத்தி நாலு மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக மூத்தவள் போன் பண்ணிவிட்டாள்.
சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரை ‘அண்ணே டீ’ என்ற கடைப்பையனின் குரல் கலைத்தது. சூடாக இருந்த தேனீரை வாங்கி, ஊதி ஊதிக் குடித்தார். பசிக்கு இதமாக உள்ளே இறங்கியது. காசை கொடுத்துவிட்டு திரும்பவும் ஆட்டோவில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
போன் வந்தது பற்றி பாண்டிக்கு ஏதும் சொல்லக்கூடாது. அவளுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் ஒரு பாட்டம் அழுது ஒப்பாரி வைத்துவிடுவாள். ஆனால், எத்தனை நாட்களுக்கு சொல்லாமல் மறைக்க முடியும். மொளக்கொட்டுக்கு இங்கே வராமல் அவள் சமாளித்துக் கொண்டாலும் கூட, அடுத்த மாதமோ, அடுத்த வாரமோ ஏன் நாளையோ, நாளை மறுநாளோ கூட கையில் பெட்டியுடன் வீட்டுவாசலில் வந்து ரேவதி நின்றுவிட்டால்.. என்ன செய்ய முடியும்.
ஏதாவது செய்தாகவேண்டும். என்ன செய்வது.. எப்படிச் செய்வது உடனடியாக இது எப்படி முடியும் என்பதும் புரியவில்லை. நினைக்க நினைக்கத் தெளிவற்ற சிந்தனைகள் தான் அடுக்கடுக்காக வந்து போயின. அதனாலேயே சோர்வு ஏற்பட்டது. மனச்சோர்வு சீக்கிரத்தில் உடல்சோர்வாகவும் மாறிவிடுகிறது.
சோதனை போல மணி மாலை ஐந்தாகியும் பெரிதாக ஏதும் சவாரி வரவில்லை. சரி, வீட்டுக்குப் போவோம் என்று ஆட்டோவை வீடு நோக்கி கிளப்பினார்.
வாசலை ஒட்டி ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்துகொண்டார். மகளின் தொலைபேசிக்குரல் மீண்டும் ரீங்காரமிட்டது. தலையை கவிழ்த்து யோசனையில் இருந்த போது வாசலில் நிழலாடியது, நிமிர்ந்து பார்த்தார். பக்கத்துவீட்டு சரசு.
‘அக்கா இல்லீங்களா மாமா?’ அவளது கேள்வில் ஒருவித பரபரப்பை காணமுடிந்தது.
‘உள்ளாற இருக்காம்மா.. போ.. உள்ள போய் பார்த்துக்கோ..’
அவள் உள்ளே போன சில நிமிடங்களிலேயே பாண்டியம்மா-ளுடன் வெளியே வந்தாள்.
‘என்னங்க.. நம்ம நம்புத்தாய் மேல ஆத்தா.. வந்திருக்குதாம். எல்லாருக்கும் குறிசொல்லிகிட்டு இருக்குதாம்.. நானும் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடுறேங்க”
‘எந்த நம்புத்தாயி..?’
‘அது தாங்க.. பாஸ்கரன் பொஞ்சாதி..’
‘அவன் சரியான குடிகாரப்பயலாச்சே..’
“அவன் குடிகாரனா இருந்தா என்னங்க.. இவளா குடிச்சிட்டு அலையுறா.. குடிகாரன் பொஞ்சாதி மேல ஆத்தா வரக்கூடாதுன்னு ஏதாவது சட்டமா என்ன..? ஒங்க வில்லங்க புத்தியை கொஞ்சம் ஒளிஞ்சு வையுங்க.. எப்பப்பாரு.. எல்லாத்ததையும் கிண்டல் பன்றது..”
‘ஏண்டி இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு குதிக்கிற?’
“சின்னவளை கெடுத்தது பத்தாதா.. என்னையும் கெடுக்கணுமா.. செத்த சும்மா கெடங்க.. நா போய் பார்த்துட்டு வாரேன்” வேறு எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் சரசுவுடன் கிளம்பிப்போனாள் பாண்டியம்மாள்.
குமரேசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலில்லை. ஆனால் தேவையற்ற சடங்குகளை விமர்சனம் செய்வார். ஆட்டோ தொழிற்சங்கத்தில் வேறு இருப்பதால்.. இவரின் பேச்சுக்கு நாத்திகர் பட்டம் எளிமையாக ஒட்டிக்கொண்டது.
நம்புத்தாய் தெருவின் கடைக்கோடியில் இட்லிக்கடை வைத்-திருப்பவள். ஒருவகையில் பாண்டியம்மாவுக்கு தூரத்து உறவும் கூட. அவளது கணவன் பாஸ்கரன் கூட்டுறவு சொஸைட்டியில் கூலி வேலை செய்பவன். லாரிகளில் நிரப்பப்பட்டிருக்கும் அரிசி, கோதுமை, சக்கரை மூட்டைகளை ஒவ்வொரு ரேசன் கடையாக கொண்டு போய் இறக்குவது அவன் வேலை. வேலைக்கு உத்திரவாதமில்லாவிட்டாலும்.. தினப்படி சம்பள-மாக அறுபது ரூபாய் கிடைத்து வந்தது. தள்ளாடியபடி அவன் இரவு வீட்டுக்கு வந்து சேரும் போது பத்துரூபாய் மிஞ்சினால் கூட அது அவள் அதிர்ஷ்டம். ஏதாவது கேட்டால் அடி உதை தான். சில நாட்களில் வேலை இல்லாத பொழுதுகளில் நம்புத்தாய் ஒளித்து வைத்திருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வருவான். அவனை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் உயிர்வாழ்வது சிரமம் என்றுணர்ந்தவள் வீட்டு வாசலியேயே இட்லிக்கடையை திறந்துவிட்டாள்.
அவளுக்குத்தான் சாமி வந்திருக்கிறது என்று பாண்டியம்மாள் போய் இருக்கிறாள். சின்னவளும் இப்போது பள்ளியில் இருப்பாள். எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க முடியும். நாமும் ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்தால் என்ன.. பக்கத்தில் தானே அவள் வீடும் என்ற எண்ணம் வலுக்க இவரும், வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டுப் போனார்.
நம்புத்தாய் வீட்டு வாசலிலேயே கூட்டம் கூடி இருந்தது. தெருவிலிருக்கும் பெண்கள் எல்லோரும் அங்கே வந்து விட்டார்களோ என்று தோன்றுமளவிற்குப் பெண்கள் கூடி இருந்தனர். கூட்டத்தை விலக்கி மெதுவாக உள்ளே முன்னேறினார் குமரேசன்.
தலைவிரி கோலமாய் நின்றபடியே முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தாள் நம்புத்தாய். குமரேசனுக்கு அவளின் பின்பக்கம் மட்டுமே பார்க்க முடிந்தது. ப்ரவுன் வண்ணத்தில் புடவை கட்டி இருந்தாள். இடுப்பை சுற்றி இருந்த சேலை நைந்து கொஞ்சம் வரி,வரியாக இளகி, உள்ளே கட்டியிருந்த மஞ்சள் வண்ண உள்பாவாடை தெரிந்தது. அவளை இரண்டு பெண்கள் பிடித்திருந்தார்கள். ஆனால், எவருடைய கைக்குள்ளும் அவள் அடங்குவதாய் தெரியவில்லை. மார்ப்புச்சேலை வேறு நழுவி விழுந்த வண்ணமிருந்தது. சுற்றியிருந்த கூட்டத்தினரை வேடிக்கை பார்த்தார் குமரேசன். இவரைப்போல சில ஆண்களையும் அங்கு காணமுடிந்தது கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது.
அவளை பிடித்திருந்த பெண்களில் ஒருத்தி, நம்புத்தாயின் சேலை பின்பக்கம் நழுவி வருவதை அப்போது தான் கவனித்தாள். “யாராச்சும் ஒரு துண்டு கொடுங்களேன்’னு அவள் சத்தம் போட, பெரிய சைசில் ஒரு துண்டு அவள் கையை அடைந்தது. அதை பட்டையாக விரித்து, முன்பக்கம் கொடுத்து, இரண்டு கைகளுக்குள் விட்டு பின்னால் எடுத்தாள். மார்போடு சேர்த்து அதை முறுக்கி அருகில் இருந்தவளிடம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, இடுப்பில் நழுவிக்கொண்டிருந்த சேலை அப்படியே சுருட்டி, பாவாடையின் உள்ளே தள்ளிவிட்டாள்.
நம்புத்தாய்க்கு தன் ஆடை நழுயது கூட தெரியவில்லை. ‘டேய்ய்ய்ய்ய்’ என்று திடீரென உரக்க குரலெழுப்பி, அவள் குதித்த குதியில் வீட்டின் தளம் அதிர்ந்தது. கண்களை உருட்டி, நாக்கை கீழாக மடித்து ‘ர்ம்ர்ர்ர்ர்ம்ம்ர்ம்ம்ம்ம்” என்று உறுமியபடி நாலாபக்கமும் பார்வையை செலுத்தினாள். ‘லுலுலுலுலுலுலு’ என்று சுத்தி நின்ற பெண்கள் எல்லாம் குலவை போட, குமரேசனுக்கு காது அடைத்தது போலிருந்தது.
‘பூசாரிக்கு சொல்லி அனுப்பியிருக்கா?’
‘ஆளு போய் இருக்கு..’
கூட்டத்தில் யாரோ கேட்க, எவரோ பதில் சொன்னார்கள். அருளாசி சொல்லிக்கொண்டிருந்த ஆத்தா, அப்படியே ஒரு சுற்று சுற்றி எல்லோரையும் பார்த்தாள். ‘டேய்ய்ய்ய்.. பாஸ்கரா.. ’ என்று ஆத்தா குரல் கொடுக்க எல்லோரும் பாஸ்கரனைத் தேடினார்கள். மூலையில் பதுங்கி இருந்தவன் கலவர முகத்தோடு, கூட்டத்தை விலக்கி முன்னுக்கு வந்தான். கையில் இருந்த வேப்பிலை கொத்தை அவன் தலையில் வைத்தாள் ஆத்தா. அவனோ பவ்யமாய் கைகட்டி, வாய்பொத்தி நின்றான். கொஞ்ச நேரம் அவனையே உற்றுப் பார்த்தாள் ஆத்தா. அவளின் பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாதவனாய், தலைகுனிந்துகொண்டான் பாஸ்கரன்.
‘டேய்ய்ய்ய்.. ரொம்ப நாளா எனக்கு ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கேடா.. எப்ப முடிக்கப்போற..?’
‘அது வந்து ஆத்தா..’ என்று அவன் ஆரம்பிக்கும் முன்னாடியே, ‘வர்ற புரட்டாசி அம்மாவச அன்னிக்கு நேர்ச்சியை முடிச்சுடுடா.. அடுத்து வர்ற நவராத்திரி ஒம்பொண்ஞ்சாதியை வெரதம் இருக்கச்சொல்லு. அதோட எல்லா கொட்ட பளக்கத்தையும் விட்டு ஒளி, அப்போதான் ஒங் குடும்பம் தளைக்கும்டா.. என்ன செய்வியா..?’என்று ஆத்தா கேட்டது. மவுனமாய் தலைகவிழ்ந்து நின்றான் பாஸ்கரன்.
‘என்னடா பேசாம நிக்கிற..செய்வியா மாட்டியா சொல்லு..’ என்று வேப்பிலையால் அவன் தலையில் அடிக்கத் தொடங்கியது. சடார்..சடார் என்று விழும் அடியை தலை குனிந்த படி வாங்கிக்கொண்டான்.
‘சொல்லுடா..’ என்று உரத்த குரலில் அவள் கேட்டதும், ‘செய்றேன் ஆத்தா.. செய்றேன்’ ஈனஸ்வரத்தில் பதில் வந்தது. ‘ம்.. கோடாங்கி மணியாபிள்ள கிட்ட போய் நாளக்கி மந்திரிச்சு.., கயிறு வாங்கி கட்டிக்க.. வாக்கு மீறின.. ரத்தம் கக்குவ.. நாபகம் வச்சுக்க.. ஆத்தா என்னிக்கும் ஒங் கூடத்தான் இருப்பேன்ண்டா.. சொன்னபடி செய்யி.. போ..’ என்று கூறிவிட்டு, அடுத்தவர் பக்கம் திரும்பியது ஆத்தா.
ஒவ்வொருவராய் தங்கள் குறைகளை ஆத்தாவிடம் சொல்ல, எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது சிலரை ஆத்தாவே பெயர் சொல்லி அழைத்து, பிரச்சனையை சொல்லி, பரிகாரமும் சொல்லியது. இலை உதிர்ந்து போன வேப்பிலை கொத்தை ஆத்தாவின் கையில் இருந்து வாங்கி, புதிய வேப்பிலை கொத்தை கொண்டுவந்து அழுத்தினார்கள். அதை கையில் வாங்கியதும், முறுக்கலும், ஆட்டமும் அதிகமானது. எங்கிருந்தோ ஒரு எலுமிச்சம் பழம் கைமாறி மாறி, ஆத்தாவின் இன்னொரு கையில் திணிக்கப்பட்டது. அதை அப்படியே முழுசாக வாயில் போட்டு மெல்லத் தொடங்கினாள் ஆத்தாவாக ஆடிக்கொண்டிருக்கும் நம்புத்தாய்.
‘ஒதுங்கு..ஒதுங்கு.. பூசாரி வந்துட்டாரு’ சத்தம் கேட்டு எல்லோ-ரும் ஒதுங்கி வழிவிட்டனர். ‘ஆத்தா..’ என்று தலைக்கு மேல் கையெடுத்து ஒரு கும்பிடு போட்டார். ‘ஏய்ய்ய்ய்ய்..’ என்று சத்தம் போட்டபடி, ஆவேசம் கொண்டவள் மாதிரி ஆத்தா ஆடத்தொடங்கினாள். கொஞ்ச நேரம் அவளை ஆடவிட்டு, கூடவே பூசாரியும் முன்னும் பின்னுமாய் போய் வந்தார். இடுப்பிலிருந்து திருநீறு பையை எடுத்து நம்புத்தாயை ஒரு நிமிடம் பார்த்தார். கை நிறைய திருநீற்றை வலது கையில் எடுத்து, நெற்றிக்கு அருகில் வைத்து, ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பின் அந்தக் கையை அப்படியே அவள் தலையில் ஓங்கி அடித்தார் பூசாரி.
நம்புத்தாயின் தலை, நெற்றி, முகமெல்லாம் திருநீறு படர்ந்தது. கொஞ்ச நேரம் கையை அப்படியே வைத்து, அமுக்கி பிடித்துக்கொண்டார். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. அப்படியே சரிந்து விழுந்தாள்.
‘சாமி மலையேறிடுச்சு.. எல்லாரும் போங்க.. போங்க.. வழிவிடுங்க.. காத்து வரட்டும்..’ என்று சொல்லியபடி பூசாரி கிளம்பிப்போனார். அப்போது தான் குமரேசன் கவனித்தார். சட்டை எல்லாம் புழுக்கத்தில் வியர்த்து ஈரமாகி இருந்தது. மனைவியைத்தேடினார். அவள் மற்ற பெண்களுடன் சேர்ந்து, மயங்கி கிடந்த நம்புத்தாய்க்கு விசிறிக் கொண்டிருந்தாள். கூட்டம் கலையத்தொடங்கியது. இவள் வீடு வர எப்படியும் இன்னும் கொஞ்ச நேரமாகும், நாம போவோம் என்று வீடு நோக்கி நடக்கலானார். போன் பேசிய மகளின் நினைவு மனதிற்குள் வந்தது.
வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தாள் சின்னவள்.
‘வீட்டை பூட்டிப்போட்டு எங்கப்பா போனீங்க..?’
“நம்ம நம்புத்தாய்க்கு சாமி வந்துச்சுன்னு போனோம்மா.. ஒங்க அம்மா பின்னாடியே வந்துகிட்டு இருக்கா..” என்றபடி கதவைத்திறந்து விட்டார். அவள் உள்ளே போனதும், வாசல் விளக்கை போட்டுவிட்டு, திண்ணையிலேயே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, யோசனையில் ஆழ்ந்தார்.
விட்டத்தில் ஒரு பல்லி நின்றுகொண்டிருந்தது. அதன் பார்வை முழுவதும் அங்கே எரிந்துகொண்டிருந்த பல்புக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த தட்டான் மீது இருந்தது. தட்டான் ஒவ்வொரு முறையும் அமரும் போதும் அதை பிடிக்க, பல்லி ஓடுவதும், அதனிடம் அகப்பட்டுவிடாமல் இறக்கைகளை படபடவெட அடித்து பறப்பதுமாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் பாண்டியம்மாளும் வந்துவிட்டாள். வீட்டினுள் போனதுமே ஆத்தாளும், மகளும் மோதிக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
‘ஏம்மா.. சாமி பூதம்னு இப்படி ஊர் சுத்த போய்கிட்டு இருக்க.., பசியில இருக்கேன்ல.. ஆக்கிவச்சுட்டு போகக்கூடாது..?’
‘ஆமாண்டீ.. நீயும் ஒங்க அப்பா மாதிரியே பேசிகிட்டு அலை.. நல்லா இருக்கும். சமையல கத்துக்கடின்னு சொன்னா கேட்டாத் தானே..’
‘கத்துக்குவோம்.. கத்துக்குவோம்.. என்னம்மா ஆச்சி.. அங்க.. அப்பா பாதி தான் சொல்லிச்சு..’
‘கத கேக்க மட்டும் வந்துடு, வெள்ளிக்கிழம தவறாம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வந்துகிட்டு இருந்தவடீ.. நம்புத்தாயி, அதனால தான் இன்னிக்கு ஆத்தாளே அவ மேல வந்து இருக்கா.. என்ன இருந்தாலும், அம்மனோட சக்தியே தனி தாண்டீ..’
‘ம்..ஆமா.. ஆத்தா வருது.. எவ்ளோ அடி வாங்கி இருப்பா புருசங்கிட்ட.. அதனால தான் இப்படி ஒரு ட்ராமாவா போட்ருப்பான்னு நினைக்கிறேன்.. இனி அடிக்க முடியுமா.. அவனால, அதான் ஆத்தாவே அவமேல வந்திருக்குதே..’
‘அப்படி எல்லாம் சொல்லாதடீ.. பாவம் வந்து சேரப்போகுது.. கஷ்டப்படுறவங்களை தெய்வம் என்னிக்குமே கை விட்டுடாதுடீ..’
தட்டானின் வாலைக் கவ்வி இருந்தது பல்லி. தட்டானோ இடமும், வலமுமாய் நெளிந்து, படபடவென இறக்கையை அடித்துக்கொண்டது. அதன் நெளிவு தாங்காமல், பிடியை விடாமல் தலையைசிலுப்பியது பல்லி.
“அடப்போம்மா.. நேர்ல சரிக்குச்சரியா மோத கையாலாகாதவங்கதான், ஒன்னு அழுது, அடங்கி காரியத்த முடிச்சுக்குவாங்க.. இல்ல, பொங்கி கூப்பாடு போட்டு சாதிச்சுக்குவாங்க.. எனக்கென்னமோ இது ட்ராமான்னு தான் தோணுது”
சின்னவளின் குரல் திண்ணையில் இருந்த குமரேசனுக்கு கேட்டதும் சட்டென எழுந்து உட்கார்ந்தார்.

(நன்றி- பிப்ரவரி2011- யுகமாயினி)

Series Navigation