விடியும்! நாவல் – (16)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


கோட்டைச் சுவர் தெரியாமல் நீளத்துக்கு புதிதாக வளர்த்திருந்த சவுக்கு மரம் மணந்தது. கோட்டை வாசல் பிள்ளையாரடியில் ஏகே 47ன் மினுக்கம். சைக்கிள் ரோதைக்குள் கொழுவிய வேட்டித் தலைப்பை எடுத்து விட்டுக் கொண்டு நூறு யாருக்கு முன்னரே இறங்கி விட்டான் செல்வம். பாஸ்போட்டைக் காட்டினான்

ஆமிக்காரன் செல்வத்தை உச்சி பொறுக்கப் பார்த்தான். ஒரு ஜீப் உள்ளிருந்து வந்தது. விறைத்து நின்று சலூட் அடித்தவன் கிட்டப் போய் பாஸ்போட்டைக் காட்டினான்.

ஜீப்பிலிருந்தவனின் தோள்பட்டையில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்னின. இந்த இடத்தில் ஆளைச் சுட்டுப் போட்டு கடலில் தூக்கியெறிஞ்சாலும் ஒரு குஞ்சுக்கும் தெரியாது. தனியாக வந்தது மடைத்தனம். ஜீப்பில் வந்தவன் தலையாட்ட செல்வம் நகர்ந்தான்.

கோட்டை வாசலோடு கடலைப் பார்த்தபடி பிள்ளையார் கோயில். முந்தியெல்லாம் அவரை மூன்று சுற்றுச் சுற்றி தலைக்குட்டுகள் வழங்கிவிட்டு கோட்டைக்குள் நுழைவதுதான் வழக்கம். இருந்த பதற்றத்தில் பிள்ளையாரைப் பார்க்காமலே போவது நல்லது போலத் தெரிந்தது.

ஆகலும் பயந்து காட்டக் கூடாது. செல்வம் சைக்கிளை ஓரமாக நிற்பாட்டினான். பிள்ளையாரை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். கண்களை மூடி காதை மாறிப் பிடித்து தலையில் குட்டினான். மனம் லயிக்கவில்லை. எப்போதென்று சரியாக ஞாபகமில்லை. திருகோணமலையில் முறைக்கு முறை வந்து போன இனக் கலவர காலத்தில் ஒருமுறை நாலைந்து மாதமாக பிள்ளையார் சிலையைக் காணவில்லை. அவர் கடலில் குளிக்கப் போயிருக்கிறார் என்ற கேலிச்சித்திர வாசகம் சிங்களத்தில் கிறுக்கியிருந்தது. பிள்ளையாருக்கே அந்தக் கதி!

ஏதோ பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட பதற்றம். இனி கோயிலுக்குப் போகாமல் வந்தவழி திரும்பவும் முடியாது. கைக்குள்ளிருக்கிற முத்துக்குமாரசுவாமி கோயிலுக்குப் போயிருக்கலாம். கோணேசரிடந்தான் வரவேண்டும் என்று என்ன கட்டாயம்!

கோட்டைக்குள் புகுந்து நிமிர்ந்த போது மலையில் உயர்ந்து நின்ற புத்தர் சிலை நெற்றியில் அடித்தது. அண்மையில் இரானுவத்தினால் கட்டியெழுப்பப்பட்ட பிரம்மாண்ட சிலை. அவர் கண்ணில் முழிக்காமல் கோணேசரிடம் போக முடியாது. போகிற போக்கைப் பார்த்தால் அங்கு புத்தர் மட்டுமே நிற்கக் கூடும். எழுதப்படும் புதிய சரித்திரத்தில் கோணேசர் இருந்த இடம் தெரியாமல் போகலாம்.

கோணேசர் தீர்த்தமாட வரும் பாபநாச தீர்த்தத்திற்கருகிலேயே ஆமி குவார்ட்டர்ஸ். நாலைந்து பேர் பல் தீட்டிக் கொண்டிருந்தார்கள். பின்புலத்தில் திறந்திருந்த ஜன்னல்கள் ஊடாக முடிச்சுப் போட்ட வெள்ளை நுளம்பு வலைகள் தெரிந்தன. திறந்தவெளி சவரில் தலை கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனின் பைலா முணுமுணுப்பு கேட்டது.

உச்சிக்கு வந்து இறக்கத்தில் நடந்தால் ஒரு சந்தி கழித்து கோயில். இரண்டு பக்கமும் பாதை ஓரங்களை மூடி வளர்ந்த பற்றைகள். கல்லும் முள்ளும் காலைப் பதம் பார்த்தன. கோயில் போய்ச் சேரும் வரைக்கும் குடைகளாய் படர்ந்து வெய்யிலை நிலத்தில் விழ விடாத இலந்தைக்காடு. கானகத்து அமைதி. காதை நிறைக்கிற சூசூசூ இரைச்சல்.

“டேய் அந்தா அந்த மூலையில ஆ அங்க தான்.”

ஒருவன் மரத்தில் ஏறிக் கிளைகளை ஆட்டி விடுவான். காய்ந்த சருகுகளில் பழங்கள் விழும் சத்தம் சடசடவெனக் கேட்கும். இருட்டுவது தெரியாது. மற்ற மரங்களில் வேறு தெருப் பொடியன்கள் கற்கள் எறிந்து பழம் பொறுக்கும் கலாட்டா கேட்கும்.

“அம்மா தேடப் போறா இருட்ட முதல் வரச் சொன்னவ. ”

பல மரத்துப் பழங்கள் வகை சுவையாக தொண்டையில் மதுரமாய் இறங்கும். கோணேச கோயிலுக்கு இலட்சணமாய் அமைந்துவிட்ட மானும் மயிலும் குரங்கும் ஏதோ வீட்டில் வளரும் நாய் பூனை போல பயமின்றி பக்கத்தில் நடமாடும். கிட்டப் போய் கொம்பைத் தொட்டுப் பார்த்தாலும் அசையாமல் நிற்கும் அழகான புள்ளிமான்கள்!

அவனைக் கண்டதும் காணக்கூடாததை கண்டது போல மான்கள் மிரண்டு பற்றைக்குள் ஓடி மறைந்தன. முற்றிப் பழுத்து ஆருக்கும் பயனில்லாமல் விழுந்திருக்கும் பழங்களைப் பார்க்க பாவமாயிருந்தது. பறிக்க ஆளில்லாமல் தொங்கிய பழங்களைப் பார்க்க ஏக்கமாயிருந்தது.

எல்லாமே மாறிவிட்டது!

அடுத்த சந்திக்கு வந்து கீழே இறங்க கோயில் கோபுரம் தெரிந்தது. காலைக் கழுவிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான். சாத்துப்படி அலங்காரமின்றி வீட்டுடுப்பில் அப்போதுதான் நித்திரை விட்டு எழுந்தவரைப் போல இருந்தார் கோணேசர். தனித்த ஐயரும் கணக்கப்பிள்ளையும் அவனிடம் முழுக்கரிசனை காட்டினார்கள். சின்னம்மா கொடுத்த அர்ச்சனைத் துண்டையும் பூமாலையையும் கொடுக்க முழு மரியாதையோடு வாங்கிக் கொண்டார்கள். கோயிலில் மருந்துக்கும் வேறு மனுசரில்லை. மலையடிவாரத்தில் இறங்கி மரத்தடியில் விழுந்து கும்பிட்டான் செல்வம்.

இங்க என்னய்யா நடக்குது. ஏனய்யா இந்த அவலம். அவன் நெஞ்சு கரைந்துருகி கண்ணீர் வடித்தான்.

அர்ச்சனை போக அவர்களுக்கு கைநிறைய காணிக்கை கொடுத்தான். அர்ச்சனைக்கட்டு தேங்காய்பாதி பழத்தோடு திரும்பிய போது சற்று ஆறுதலாக இருந்தது. ஆமி குவார்ட்டர்ஸ் அருகில் அலை மோதிய காலை ஆரவாரம் கண்ட போது மீண்டும் அவன் குழம்பிப் போனான். மூச்சு முட்டிப் போன மாதிரி நடந்தான். கோட்டை வாசலில் இரானுவத்தைக் கடந்து சந்திக்கு வந்து சைக்கிளில் ஏறியதும் பிராணாவஸ்தையிலிருந்து தப்பி சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது போல் உணர்ந்தான்.

.. .. ..

என்னனை கோணேசரை நல்லா கும்பிட்டியா என்று சின்னம்மா கேட்டாள்

“சாமியைப் பார்க்க பாவமாயிருக்கு சின்னம்மா”

சின்னம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“சாமியை கோட்டைச் சிறையில அடைச்சு வைச்ச மாதிரியிருக்கு. ஐயரையும் கணக்கப்பிள்ளையையும் விட்டா அவருக்கு வேற துணையில்லை”

சாப்பாடு முடிந்ததும் கூடையை சைக்கிளில் கொழுவிக் கொண்டு மார்க்கட்டுக்குக் கிளம்பினான் செல்வம். வழியில் சில பழைய முகங்கள் விசாரித்தன. ஒரே பதிலை திரும்பத் திரும்பச் சொல்வதில் அலுப்புத் தட்டினாலும் மனம் கோணாமல் சிரித்த முகத்தோடு அவன் பதில் சொன்னான். கனடாவில் மழை தண்ணி எல்லாம் எப்பிடி என்று ஒருவர் கேட்டார். அங்கத்தைய மழை பற்றித் தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்று திருப்பிக் கேட்கத் தோன்றினாலும் அவன் பொறுப்போடு மழை பற்றி விபரித்தான்.

பனிக்காலத்து வெய்யில் தலையில் சுட்டது. தூரத்தில் மணிக்கூண்டு கோபுரத்தை அண்டிய கடற்கரைத் தெரு நிறைய கடை கண்ணிகள் புதிதாய் முளைத்திருந்தன. முன்னர் அங்கிருந்து பார்த்தால் நீலநிறக் கடல் நீளத்திற்கும் தெரியும். அந்தக் கடலில்தான் காளியாச்சி தீர்த்தமாடப் போவது வழக்கம். தீர்த்தக்கரையைக் காண கண்கள் பத்தாது. அப்படியொரு மனம் கொள்ளாத காட்சி.

கரை முழுக்க சனம் நிரம்பி வழியும். மண் போட்டால் ஆரின் தலையில்தான் விழும். பெண்கள் உடுத்த சேலையோடு இடுப்பளவு ஆழத்தில் நின்று முக்கி முக்கி எழுவதைப் பார்க்க தாங்கள் எப்போதுமே ஆண்களை விடவும் எச்சரிக்கையானவர்கள் என சொல்லாமல் சொல்வது போலிருக்கும். தங்கள் மேலாண்மையைப் பகிரங்கத்தில் காட்டக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கழுத்தளவு ஆழத்தில் நீச்சலடிப்பார்கள் ஆண்கள்.

பொடிசுகளைக் கேட்கவே வேண்டாம். கால் எட்டாத நீருக்கடியில் சுழியோடி நண்பர்களின் காலைப் பிடித்து இழுப்பதும் நீர் எற்றுவதும் சிரிப்பதும் கெக்கலிப்பதுமாய் பிரதாபம் காட்டுவார்கள். பாவாடை தாவணிக் கன்னிகள் கரையிலிருந்து அள்ளி அள்ளி தலையை நனைத்துக் கொள்வார்கள். அவர்களின் பல வர்ணப் பட்டுகள் அங்குமிங்கும் அசைந்தாடி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.

செல்வம் திடுக்கிட்டுப் போனான். சைக்கிளை முற்றவெளிக்குள்ளால் இறக்கி உழக்கினான். கிட்ட வர வர கடற்கரை நிறைய கடைகண்ணிகள் அதன் பின்னால் குச்சு குச்சாய் குடிசைகள். பரந்த வெளியாய் இருந்த இடம் ஒரு இஞ்சி கூட விடாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

நிர்மலமாயிருந்த ஆற்றுப்படுகையை சல்வீனியாப் பச்சைக் கொடிகள் கன கெதியில் ஆக்கிரமித்தது போல ஒரு முற்றுகை. சின்ன வயதில் ஓடியாடித் திரிந்த உரிமை நிலம் ஐந்தே ஐந்து வருச இடைவெளியில் அந்நியமாகிப் போய் விட்ட திகைப்பு.

மணிக்கூண்டு கோபுரத்தில் கம்பீரமான சிங்கக்கொடி!

அந்தச் சின்ன ஊரில் இனி ஆக்கிரமிப்பதற்கு எந்த பொதுஇடமும் இல்லை. எங்கெல்லாம் முடியுமோ அங்கு அரசமரமும் புத்தர் சிலையும் குடியேறி விட்டன. கடற்கரை ஒன்றுதான் கொஞ்சம் காலாறி நிற்கும் இடமாயிருந்தது. அதுவும் பறி போய் விட்டது. இடுப்பு வேட்டி நழுவிய கூச்சத்தில் ஒடுங்கிப் போய் ஊர்ந்தான் செல்வம்.

“என்னடாப்பா செல்வம் கன நாளா ஆளைக் காணேல்லை”

எதிர்பாராமல் தோள் தொட்டு பின்னாலிருந்து கதைத்தவனைத் திரும்பிப் பார்த்தான்.

அவன்! கூடித் திரிந்த சிநேகிதமென்றில்லை. எட்டாந் தரத்திலிருந்து எஸ்எஸ்சீ வரை ஒன்றாய்ப் படித்தவன். அவன் பின்வாங்கு செல்வம் முன்வாங்கு. அடிக்கடி வாத்தியாரிடம் பிரம்படி வாங்குவான். பெயர் டக்கென்று நினைவிற்கு வரவில்லை. நண்பனுடைய பெயர் அதற்குள் எப்படி மறந்து போயிற்று!

“என்ன மச்சான் முழிக்கிறாய். அது சரி எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கப் போகுதா ? ”

எப்படி பச்சையாய் சொல்வது. என்ன நினைப்பான். காசு மெத்திப் போனதால் கண்கடை தெரியாமல் போச்சு என்று வாய் கூசாமல் சொன்னாலும் சொல்வான்.

“பிறகு என்ன பாடுகள். எப்ப வந்தனி ? ”

“நேத்தைக்கு. உன்ர பாடுகள் எப்படி ? ”

“அதையேன் கேட்கிறாய் மச்சான். நீ ஏதோ குடுத்து வைச்சனி ஓடித் தப்பீற்றாய். நாங்க எங்க போறது. அப்பா மண்டையைப் போட்டுட்டார். குடும்ப பாரம் தலையில, மேல படிக்க முடியேல்லை. அப்பா பார்த்த பெயின்றர் வேலையை வைச்சு வயித்தைக் கழுவுறன். ”

“சனீஸ்வரன் கோயில் காணீல தானே இப்பவும் ?

“தொண்ணூற்றைஞ்சு கலவரத்தோட இருக்கப் பயத்தில மனையாவெளிக்குப் போயிற்றம். பக்கத்துக் காணிகளை சிங்களாக்கள் பிடிச்சிற்றாங்கள். ”

“எம்பீட்டைச் சொல்லேல்லையா ? ”

“எம்பீயா! அவையள் இருந்தும் ஒன்டுதான் இல்லாததும் ஒன்டுதான். இப்பவே முக்காவாசி இடம் பறிபோயிற்றுது. பரம்பரை பரம்பரையா சீவிச்ச கிராமங்களை விட்டு தமிழ்ச்சனம் எல்லாம் பயத்தில டவுனுக்கு ஓடி வந்திற்றுது. யாழ்ப்பாணத்துக்கு கப்பலில போக வந்து போற சனம் இருக்க இடமில்லாம அலை மோதுது. இந்த லட்சணத்தில எங்கட அரசியல்வாதிகளுக்குள்ள நீயா நானா போட்டி. நீ இருந்து பார் அடுத்த எலக்சனில எம்பீ பதவி எங்களுக்கில்லை”

“அது நடக்காது. ”

“எது நடக்காது ? நீ கனடாவில ஒசிலா இருந்திட்டு வந்து கதைக்கிறாய். திருகோணமலை இப்ப ஒரு பொறிக் கிடங்கு மாதிரி. கலவரம் மூண்டுதோ தப்ப வழியில்லை. கடலிலதான் குதிக்க வேனும் ”

“இந்த நெருக்குவாரத்தில சீவியம் எப்பிடிராப்பா போகுது ? ”

“எல்லாம் பழகிப் போச்சு மச்சான் ”

.. .. ..

ஊருக்குள் காலையிலிருந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தவைகள் கேட்டவைகள் மனசுக்குள் விரிந்து கொண்டு போகப் போக பெருமூச்சு விட்டான். நெஞ்சில் கடல்க்கூதல் அடித்தது. காதுகள் குளிர்ந்தன. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. கடல் நீலம் மங்கத் தொடங்கிற்று. ஓயாத அலைகளின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. குதிக்கால்களும் குளிரத் தொடங்கவே இனியும் கடற்கரையில் நிற்க முடியாதென்பதை உணர்ந்தான் செல்வம். மாலைப் பூசைக்கு மாதா கோயில் மணி அடித்தது. இப்ப போனால் குணாளனைப் பிடிக்கலாம்.

அவன் சைக்கிளை உழக்கினான். இரண்டு முறை குணாளனைத் தேடி பெருந்தெருப் பக்கம் போய்ப் பார்த்து விட்டான். தெருவாசலில் நின்று கேட்டதற்கு ஆள் இல்லை என்று உள்ளிருந்து வந்த பதிலோடு அவன் திரும்பி விட்டான். எப்படியும் குணாளனைத் தனியாகச் சந்திக்க வேண்டும்.

பெருந்தெருவிற்குள் திரும்ப வர நன்றாக இருட்டி சனமும் அடங்கி விட்டது. வாசலில் சைக்கிளை பூட்டிச் சாத்தி விட்டு கதவைத் தட்டினான்.

பதிலில்லை. ஆரென்று கூடப் பார்க்க மாட்டார்களா! சினத்தோடு கொஞ்சம் பலமாகத் தட்டினான்.

“ஆரது ? ”

“குணாளன் இருக்கிறரா ? ”

இல்லை என்று எடுத்தெறிந்த மாதிரி ஒரு வயதான பெண்ணின் பதில் வந்தது.

தாயாக இருக்க வேண்டும். இதென்ன எந்த நேரம் வந்தாலும் இல்லை என்கிற மழுப்பல். எல்லாம் திட்டமிட்ட நாடகம். இன்றைக்கு சந்திக்காமல் போவதில்லை.

சும்மா சாத்தியிருந்த கதவைத் திறந்தான். திறந்த சத்தத்தில் நாய் குரைத்தது. இருட்டில் எந்தப் பக்கத்திலிருந்து நாய் குரைத்தது என்று விளங்கவில்லை. கட்டியிருக்கா சும்மா நிக்குதா என்றும் தெரியவில்லை. அவனுக்கு நாயென்றால் பயம். சின்ன வயதில் துடையில் கடி வாங்கி நாலு தையல் போட்டுக் கொண்ட அனுபவப்பயம். ஊரில் நாய் வளர்க்காத வீடு இல்லையென்றே சொல்லலாம். கட்டி வளர்ப்பதுமுண்டு. கட்டாமல் வளர்ப்பதுமுண்டு. பல குடும்பங்கள் வாடகைக்கு வாழும் வளவுகளில் அநேகமாகக் கட்ட மாட்டார்கள். அங்கயிங்க சுதந்திரமாகத் திரியும் வசதியினால் புது ஆளைக் கண்டு குரைத்தாலும் கடிக்கிற அளவுக்குப் போகாது. கட்டில் இருக்கும் நாய் அப்படியல்ல. பகல் முழுக்க இருந்த இடத்தை விட்டு அசையேலாது. ராத்திரி தெருக்கதவு பூட்டிய பின்னரே கழுத்துச் சங்கிலி அவிழ்க்கப்படும். பகல் சுதந்திரம் மறுக்கப்பட்டதால் சேகரித்த கோபத்தை இரவில்தான் காட்ட முடியும். ஆயினும் அதனைக் காட்டுவதற்கு இரவிலும் இப்போது சந்தர்ப்பமில்லை. ஏழு மணிக்கே ஊர் அடங்கி விடுகிறது. பிறகு யாரிடம் காட்டுவது!

நாய் விடாமல் குரைத்தது. சத்தம் ஒரு பக்கத்திலிருந்தே வந்ததால் இன்னும் அவிழ்த்து விடப்படவில்லை என்பது புரிந்து செல்வம் பயம் தணிந்து நின்றான். வீட்டுக்குள்ளிருந்து ஒருவன் தலை நீட்டினான்.

“ஆர் வேனும்.”. .. .. .. திறந்த மார்போடு முற்றத்தில் இறங்கியவன் கேட்டான்.

“முதல்ல நாயைப் பிடியுங்க”

“டேய் சீசர் சும்மாயிரு. ஆரைப் பாக்கிறீங்க ? ”

“குணாளன் ”

“அவர் இல்லை”

“எங்க ? ”

“நீங்க ஆர் ? ”

“நான் ஜெயத்தோட அண்ணன்”

உடனேயே கூட்டிக் கழித்துப் பார்த்து விடையைக் கண்டு கொண்டவன் போல் நின்றவன் நீங்க செல்வநாயகமா ? இங்க அக்ரிகல்சரில பிளானிங் ஒப்பீசரா இருந்தனீங்கதானே.. .. .. என்று கேட்டான்.

“ஓம் ”

“நீங்க போறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் நான் டிபார்ட்மென்டில சேந்தனான். உங்களைப் பற்றி அடிக்கடி கதைப்பாங்கள். உள்ள வாங்கோ. நான் குணாளனின்ரை அண்ணன் விசுவநாதன் ”

அவன் விறாந்தைக்குள் போய் கதிரையை இழுத்துப் போட்டான். குசினிக்குள் போய் ஏதோ சொல்லிவிட்டு அறைக்குள் போய் சட்டை மாட்டிக் கொண்டு வந்தான்.

“சொல்லுங்க”

“தம்பியின் விசயம் கேள்விப்பட்டிருப்பீங்க”

“அது”.. .. .. பொந்திலிருந்து தலைநீட்டிய நண்டுக்குஞ்சு உடனேயே உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது போல் திடாரென மெளனமானான் விசுவநாதன்.

“தயவு செய்து சொல்லுங்க தம்பி. எங்க வீட்டில நிம்மதியில்லை. உங்க தம்பியோட நான் கட்டாயம் கதைக்கவேனும்”

“தம்பி இப்ப இங்க இல்லை”

“ஆளை வைச்சுக் கொண்டு நாடகம் ஆடாதீங்க. உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா ? ”

“பதறாம நான் சொல்றதைக் கேளுங்க”

“என்னத்தைக் கேக்கிறது ? ”

“தம்பி கடிதம் எழுதி வைச்சிற்றுப் போய் ரெண்டு நாளாச்சு”

“எங்க போயிற்றான் ? ”

“விடுதலைப் புலிகளோடு சேர”

“அவனுமா! ”

“இந்தப் பிள்ளைகளுக்கு என்ன கோதாரி பிடிச்சதென்றே தெரியேல்லைத் தம்பி”.

தேநீர் கொண்டு வந்த தாய் சொன்னாள். சின்னம்மாவின் அதே சோகம் அந்தத் தாயின் முகத்தில் அப்பியிருந்ததைக் கண்டு வந்த வேகம் அடங்கிப் போனான் செல்வம்.

***

(தொடரும்)

***

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்