வாள்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

சத்யானந்தன்


“சாமீ…..சாமீ என்னும் கூக்குரல் அவனை எழுப்பியதா இல்லை யாரோ காலை மிதித்தது காரணமா தெரியவில்லை. வலியில் துடித்து எழுந்தவன் சாலையோரம் நின்றிருந்த வண்டிகளில் ஒன்றை நோக்கிப் பல பிச்சைக்காரர்கள் ஓடுவதைக் கண்டான்.

பகலில் எங்கே திரிந்தாலும் இரவு ஓரிருவரேனும் படுத்திருக்கும் நடைபாதை ஓரத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ தேர்ந்தெடுப்பான். முதல் நாள் இரவு அவன் ஒதுங்கிய மதில் சுவர் ஒவ்வொரு ஐந்தடிக்கும் ஒரு கொடியை சுமந்திருந்தது. ஒரு மைதானத்தைச் சுற்றியிருந்ததால் மட்டுமே அது மதில். இல்லையேல் அதன் உயரத்துக்கு அது குட்டிச் சுவர் தான். மதிலின் பின்னே மைதானத்தில் பெரிய பந்தலின் மற்றும் மேடையின் பின்புறத் தோற்றம் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் பகலாகத்தோன்றியது.

பந்தல் கண்ணில் பட்டதில் அவனுக்கு மகிழ்ச்சியே. நிறைய ஆட்கள் பல சமயம் அவர்கள் மீத்தும் தின்பண்டங்கள் என அவனுக்குப் பிடித்தமான இரு விஷயங்கள் பந்தல்களில் உண்டு.

பந்தலை வேடிக்கை பார்த்துக் கால் வலித்ததும் படுக்க எண்ணி தோளின் மேலே இருந்த கிழிந்த சாக்கு மூட்டையை கீழே இறக்கிய போது சத்தத்துடன் ஒரு நசுங்கிய தகர டப்பா வெளியே விழுந்தது.

“உன் மூட்டையிலே இருக்கிற குப்பையை படுக்கிற இடத்திலே கொட்டாதேடா நாயி” என்றான் ஒரு பிச்சைக்காரன். அவனுடைய காலை மிதித்து காரை நோக்கி ஒடியது அதே ஆள்தானா என்று தெரியவில்லை.

இப்போது நிறைய கார்கள் மற்றும் வேன்கள் வரிசையாய் நின்றிருந்தன. அத்தனை வண்டிகளின் முன்னும் பின்னுமாய் கழிகளின் மீது மாட்டிய கொடிகள் தென்பட்டன. சில வண்டிகளில் ஏதோ எழுதிய அட்டைகளும்.

பிச்சைக்காரர்கள் மொய்த்த ஒரு வண்டியை அவனும் நெருங்கினான். “டேய்.. நவுருடா நீயும் உன் மூட்டையும்” என்று விரட்டினான் ஒருவன். இன்னொருவன் அவனை நெட்டித் தள்ளி விட்டான்.

மதிலுக்கும் வண்டிகளுக்கும் நடுவே இருந்த நடைபாதையிலும் கையில் கொடியுடனும் கொடியில்லாமலும் பலர் நின்றிருந்தனர். பின்பக்கம் முழங்கையை ஊன்றி நிற்க வாட்டமாய்த்தான் அந்தச் சுவர் இருந்தது. நின்றிருப்பவர் விட்டிருந்த இடைவெளியில் புகுந்து எட்டிப் பார்த்தான். அகலம் குறைவாய் நீளமாய் பல வண்ணத் துணிப் பந்தல் பெரிய பந்தலின் தம்பி போல அதை ஒட்டி இருந்தது. காலி இடத்தில் பல இடங்களில் நாற்காலி இல்லாமல் மேசைகள் மட்டும் நின்றிருந்தன. துணிப் பந்தலின் கீழே உயரமான வெள்ளைத் தொப்பி அணிந்து பச்சை நிற பேன்ட் சட்டை போட்ட சிப்பந்திகள் சிறிய அடுப்புகள் மீது உள்ள எவர்சில்வர் வாணலிகளில் ஏதோ கிளறிக்கொண்டிருந்தனர்.

“தூத்தேரி.. ” பலத்த குரல் அவன் காலுக்கருகிலிருந்து கேட்டது. அது என்ன என்று திரும்பிய வேகத்தில் சிலர் முகம் சுளித்து நகர்ந்தனர். குரல் வந்தது ஒரு ஜோசியக்காரரிடமிருந்து. கிளி இருந்த கூண்டை நெருங்கிய பூனையை அவர் விரட்டிய சத்தம் அது.

வெய்யில் ஏறத் துவங்கி விட்டது. தாகம் நாவை வறட்டியது. முதுகிலிருந்த கிழிந்த சாக்கு மூட்டையை இறக்கி உள்ளே இருந்தவற்றை விலக்கினான். பிளாஸ்டிக் பைகள், காலி மது பாட்டில்கள், தகர டப்பாக்கள் நடுவே கொஞ்சம் தண்ணீருடன் இருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து நீரை அருந்தினான்.

பழையபடி சுவர் அருகே சென்று எட்டிப் பார்த்தான். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, கலர் சட்டை, பலவித பேன்ட் சட்டை இவர்களுடன் காக்கி பேன்ட் காக்கிச் சட்டை போட்டவர்கள் சிலரும் வரிசையாக நின்று உணவு வகைகளை வாங்கி மேசைகள் மேல் வைத்து நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

தான் காக்கிச் சட்டை எப்போதோ அணிந்திருந்ததாகத் தோன்றியது. இதே போல் போலிஸ் கலரில் இல்லாமல் சாதா கலரில். எப்போது எங்கே என்று நினைவுக்கு வரவில்லை. “சாமியோவ்.. சாமியோவ்.. ” என்று மதிலில் இருந்து மைதானம் வரை கேட்க என பிச்சைக்காரர்கள் உரத்துக் கூவினார்கள். ஓரிரு காக்கிச் சட்டைக்காரர்கள் சுவர் வரை வந்து மீந்த உணவுகளை பிளாஸ்டிக் தட்டுக்களுடன் தந்தனர். எதுவும் இவன் கைக்கு எட்டவில்லை. உணவு உண்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வாசனை தென்பட்டது,

சுவருக்குப் பத்தடி முன்னே வந்த ஒருவர் உணவுத்தட்டை தரையில் போட்டுவிட்டு நகர்ந்தார். சுவரில் எக்கி எக்கி கையை நீட்டிய அவன் உள்ளே குதித்தான்.

‘யார்ரா நீ..” ஒரு வெள்ளை சட்டை கையை ஒங்கிய படி வந்தார். அவரிடமிருந்து தப்பிக்க வேறு பக்கம் ஓடினான். ஒரு பச்சை சட்டை வெள்ளைத் தொப்பிக்காரன் விரட்டி வர இவன் தப்பிக்க வழி தேடியபடியே திரும்பிய போது சறுக்கி மூட்டியோடு விழுந்தான். யார் யாரோ எத்தும் விளைவில் வலியில் “ஐய்யோ’ என்றான்.

“நிறுத்துங்க” என்று ஒரு காக்கிச் சட்டைக்காரர் ஒரிருவரைத் தோளில் தட்டி விலக்கினார். “போங்கப்பா’ என்று ஏனையரைக் கலைந்து போகச் செய்தார்.

“சாப்பாடு வேணுமா?” என்றார். முதலில் “ஆமாம்” என்பது போல் தலையாட்டி பிறகு தலையைக் குனிந்து கொண்டான்.

“முதல்ல கீள கிடக்கற தட்டு, டம்ளரு, ஸ்பூனு எல்லாம் பொறுக்கி எடு” என்றார். உடனே அனைத்தையும் திரட்டி ஒரு நீண்ட வட்டம் அடித்துத் திரும்பி வந்து சேர்ந்தான்.

ஒரு தட்டு சோறை நீட்டிய அவர் “ஒரு ஒரமா உட்கார்ந்து சாப்பிடு. குப்பை விள விள எடுத்து மூட்டையிலே போடு. சாப்பிடறவங்க கிட்டே போகாதே. ” தலையாட்டி விட்டு உணவை உண்டான்.

சிறிது நேரங்கழித்து ‘தோழர் அனைவரும் அரங்கினுள் வரவும்” என்னும் குரல் ஒலிபெருக்கியில் கேட்டது. மறுபடி மறுபடி. இது போன்ற பந்தலுள்ளே தானும் எப்போதோ போன நினைவு வந்தது, எப்போது என்று நினைவில் வர வில்லை. சற்று நேரத்தில் உணவுத் தட்டுக் குப்பை குறைந்து நின்றது. அவன் பச்சை சட்டை ஆட்கள் கண்ணில் படாமல் சுவர் ஓரமாக உட்கார்ந்தான்.

வெய்யில் உச்ச கட்டத்தில் சுட்டது. பச்சை சட்டைகளும் காணாமற் போக தண்ணீர் கேன் இருந்த மேசை பெரிய பந்தலருகே இருப்பது தென்பட்டது. மூட்டையை ஓரங்கட்டி விட்டு தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டுக் குடித்தான்.

“நீங்க யாரு எங்களைத் தடுக்க? என்று பலமான குரலுடன் ஒரு வெள்ளைச் சட்டைக்காரர் முன்னே வர பின்னே ஒரு காக்கிச் சட்டைக்காரர். அவர் பின்னே பல காக்கிச் சட்டைக்காரர்கள்.

‘தொழிற்சங்கக் கட்டுப்பாடுகளை மதிங்க. யாரு மாலை போடணும் யாரு வாழ்த்திப் பேசணுமின்னு ஏற்கனவே முடிவாயிடிச்சு”.

‘தலைவருக்கு ஒரு வெள்ளி வாளை நாங்க கொடுக்கப்போறோம்” நீளமான பழுப்புப் பொட்டலத்தை உயர்த்தியபடி ஒரு காக்கிச் சட்டைக்காரர் கத்தினார்.

இதற்குள் பல வண்ணச் சட்டைக் காரர்களும் குழும இவன் பயந்து பழைய இடத்திற்கு ஒடினான்.

சிறிது நேரத்தில் பலரும் இங்கும் அங்கும் ஓடினர். “டேய்.. ஏய்… வாடா..” எனக் குரல்களுடன் கற்களும் பறந்தன.
அவன் ஒடுங்கி வெகு நேரம் நகரவேயில்லை.

மாலை நேரம். மைதானம் காலியாயிருந்தது. எழுந்து நோட்டம் விட்டான். பொறுக்கக் குப்பைகள் இல்லை. நிறைய கற்கள். ஒரு பழுப்பு நிற பெரிய பொட்டலம் கிடந்தது. எடுத்து மூட்டையில் வைத்தான். ஒரிரு கற்களை நாய்களை விரட்ட என எடுத்துக் கொண்டான். சவரேறி வெளியே வந்தான்.

இரவு தாகமெடுத்த போது பையைத் துழாவினான். பெரிய் பழுப்புப் பொட்டலம் தென் பட்டது. பிரித்தான். வெள்ளி வாள். உயர்த்தி சுழற்றி ‘டேய்…ஏய்…”எனக் கத்தினான்.

Series Navigation