வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

மத்தளராயன்


புலி வரப்போவுது என்று ஏழெட்டு மாதமாக இங்கிலாந்திலும் மற்றும் எங்கும் – முக்கியமாக ஜப்பானில் – சொல்லிக் கொண்டிருந்தது நடந்தே விட்டது.

டேவிட் பெக்கம் இத்தனை நாள் விளையாடிய மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்தாட்டக் குழுவைத் துறந்து, இங்கிலாந்தை மறந்து, பார்சிலோனாவுக்கு அல்வா கொடுத்து விட்டு, ரியல் மேட்ரிட் ஜோதியில் கலந்து விட்டார். ரொனால்டோ, ரொபர்ட்டோ கார்லோஸ் போன்றவர்களோடு தோளொடு தோள் நின்று விளையாடுவார் இனி.

கோடிக் கணக்கில் பணம் புரள நடந்தேறிய இந்தக் குழுத் தாவல் நட்பு முறையிலானது என்று யுனைட்டட் மேன்செஸ்டரும் ரியல் மேட்ரிடும் அறிவித்துள்ளன. நம் அரசியல்வாதிகள் இதன்மூலம் என்ன பாடம் படித்துக் கொள்வார்களோ என்று கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

‘பாஷ் ஸ்பைஸ் ‘ விக்டோரியா பெக்கம், ஸ்பெயின் போய் இன்னொரு ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவைத் தொடங்குவாரா என்று தெரியவில்லை.

யார் எங்கே போனால் என்ன, அடுத்த யூரோப்பியன் கோப்பையை வெல்லப் போவது எ.சி.மிலன் தான்.

***

தொழில்நுட்பம் ஏகமாக வளர்ந்து தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் நம் வீட்டுக்குள் நுழைந்தபோது, போலி அறிவியலும் அதன் கூடவே வாலைப் பிடித்துக் கொண்டு நுழைந்து விட்டது.

எல்லா மலையாள, தமிழ் கேபிள் டிவி சானல்களிலும் முன் குடுமியைச் சிரைத்துவிட்டு, மேலே அவசரமாகச் சட்டை மாட்டிக் கொண்ட நம்பூதிரிகளும், அதீத மேக் அப் அப்சரஸ்களும், கண்ணாடி போட்ட கட்டை மீசை ஜோசியர்களும் தினசரி ராசிபலன் சொல்கிறார்கள்.

இடவ ராசிக்காரர்கள் இன்றைக்குப் புதுக் கார் வாங்குவார்கள். மேட ராசிக்காரர்கள் ரைஸ் குக்கர், மைக்ரோ ஒவன் போன்ற நூதன உபகரணங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. மீன ராசிக்காரர்களுக்கு இன்று எலக்ட்ரிக் ஷாக் அடிக்கலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

இது மலையாளச் சானலில் ராசிபலன்.

தமிழ்ச் சானலில் பெயர் ஜோசியர் ஒருத்தர் முறைத்துப் பார்த்துக் கொண்டு முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு சொல்வதாவது –

பெயரில் ARA என்று அவச் சொல் வரும்படியாக SANKARAN என்கிற மாதிரிப் பெயர் வைத்துக் கொண்ட ஆண்களுக்கு எதிர்காலம் ரொம்பக் கஷ்டமானதாக இருக்கும். அவர்கள் தொட்ட எதுவும் துலங்காது. அதேபோல் பெண்களின் பெயரில் SH என்ற எழுத்துக்கள் சேர்ந்து வர MEENAKSHI என்பது போல் பெயர் இருந்தால் அவர்களுக்குக் கல்யாண யோகம் வாய்ப்பது அரிது. வந்தாலும் நிலைக்காது.

விடிகாலையில் பேதி மருந்து துணையில்லாமல் வயிற்றைக் கலக்கி டாய்லெட்டுக்குப் பலரையும் ஓட வைக்கும் இந்த மாதிரி பயங்கரவாதிகளையும், அதை ஒளிபரப்பும் உப பயங்கரவாதிகளையும் பொடாவில் எப்போது உள்ளே தள்ளுவார்கள் என்று ஆற்றிங்ஙல் ராதாகிருஷ்ணனிடம் தான் ஆரூடம் கேட்க வேண்டும்.

———————————————————————————————–

ஆங்கிலத்தில் வெண்டி கோப் போலவோ, வங்காளத்தில் சத்யஜித்ராயின் தந்தை சுகுமார்ராய் போலவோ nonsensical verse எழுதும் கவிஞர்கள் தமிழில் ஏன் இல்லை என்று தெரியவில்லை.

லண்டன் பாதாள ரயில் பெட்டிகளில் எழுதி வைத்திருக்கும் கவிதைகளில் ஏ.கே.ராமானுஜன் மொழிபெயர்த்த ‘யாயும் யாயும் ‘ சங்கப்பாடலில் இருந்து, வெண்டிகோப்பின் இந்த வாழைப்பழக் கவிதை வரை உண்டு.

கவிஞனின் நிச்சயமின்மை

நான் ஒரு கவிஞன்.

எனக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும்.

நான் வாழைப்பழம்.

எனக்குக் கவிஞனை மிகவும் பிடிக்கும்.

நான் வாழைப்பழக் கவிஞன்.

எனக்கு மிகவும் பிடிக்கும்.

‘நான் ‘ ‘நான் ‘ என்பது பிடித்த கவிஞன்.

மிகவும் வாழைப்பழம்.

‘நான் வாழைப்பழமா ? ‘ பிடித்தவன்.

மிகவும் கவிஞன்.

கவி வாழைப்பழம்!

எனக்குப் பிடிக்குமா ? மிகவும் ?

வாழைப்பழக் கவி நான்.

எனக்குப் பிடித்தது ‘மிகவும் ‘.

நான் மிகப்பிடித்த வாழைப்பழம்.

நான் கவிஞனா ?

( ‘Poems of the Underground ‘ கவிதைத் தொகுப்பில் இருந்து)

————————————————————–

நாடகத்தைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் இடையில் என்ன வித்தியாசம் ?

நாடகத்தைப் படிக்கும்போது, அதை மேடை நிகழ்வாகக் காணுவதில் ஏற்படும் அனுபவத்தில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடைப்பதில்லை. எழுத்தாக்கம், நடிப்பு, இயக்கம், சூழல் என்று பன்முகச் சிறப்புக் கொண்ட அந்த கலை-இலக்கிய வடிவம் எழுத்து என்ற ஒற்றைப் பரிமாணத்தில் வீரியம் குறைந்தே வெளிப்படுகிறது.

மராத்தி நாடகங்களைத் தொலைக்காட்சியில் இந்தியில் அளிக்க விஜயா மேத்தா எடுத்துக் கொண்ட முயற்சிகள் படிப்பதற்கும் மேடையில் பார்ப்பதற்கும் இடைப்பட்ட அனுபவத்தை அளித்தன. முக்கியமாக மகேஷ் எல்குஞ்ச்வரின் ‘வாதே சிராபந்தி ‘ (குடும்பம் அழைக்கிறது) யை ‘புலந்தி ‘ என்ற இந்தி நாடகமாக்கியதைக் குறிப்பிடலாம். எல்குஞ்ச்வரின் ‘ஆகாத் ‘ நல்ல நாடகமாக வந்திருக்க வேண்டியது. கோவிந்த் நிஹிலானி இயக்கத்தில் திரைப்படமானபோது நீர்த்துத்தான் போய்விட்டது (மலையாள நடிகர் பரத்கோபி நடித்த ஒரே இந்திப்படம் இது).

தமிழ் பரீட்சார்த்த நாடகங்கள் பற்றிக் கோமல் சொல்வார் – ‘தமிழில் பரீட்சார்த்த நாடகங்கள் வருடக் கணக்காக சென்னை எழும்பூர் ரயில்வே அரங்கில் அவ்வப்போது அரங்கேறுகின்றன. நானும் இருபது வருடமாகப் பார்த்து வருகிறேன். அதே நூறு பேர் தான் பார்க்க வருகிறார்கள். என்ன, அவர்கள் கொஞ்சம் கிழடாகி இருக்கிறார்கள் ‘

சபா நாடகக்காரர்களில் பூரணம் மேல் எனக்கு மதிப்பு உண்டு. அவரும் சுஜாதாவும் அமைத்த கூட்டணியை, ‘பூரணத்துக்காக சுஜாதா பிடித்த கொழுக்கட்டை நாடகங்கள் ‘ என்றார் ஒரு விமர்சகர்.

நான் புதுவையில் கல்லூரியில் படிக்கும்போது, பூர்ணம் ‘வாஷிங்க்டனில் திருமணம் ‘ (சாவி எழுதிய தொடர்கதை) நடத்த வந்திருந்தார். நாடகத்தில் மாப்பிள்ளை அழைப்பு காட்சி வரும். அதை அசலாக மாப்பிள்ளை அழைப்பு போல் கார், நாதசுவரம் என்று பக்கத்து மைதானத்தில் ஊர்வலம் நடத்தி மேடைக்கு வந்தார்கள். அது வரை எல்லாம் சரிதான்.

மேடையில் நாதசுவர கோஷ்டியைத் தொடர்ந்து, தலையில் பெற்றோமாக்ஸ் விளக்குகளுடன் குருவிக்காரர்கள். அவர்கள் கடந்து போகும்போது நாடகத்தை ஏற்பாடு செய்தவர் தடுத்து நிறுத்தி அவர்களை மேடையின் நடுவே திரும்பி வரச் செய்தார். கழுத்தில் ஏணை கட்டித் தூங்கும் குழந்தையும், பாசி மனியும் அழுக்குப் பாவாடையுமாக ஒரு நரிக்குறவப் பெண். பக்கத்தில் கோவணம் மட்டும் அணிந்த ஒரு கிழவன். அவன் கையைப் பிடித்துக் கொண்டு மூக்கை வடிய விட்டுக் கொண்டு ஒரு சின்னப் பையன். ஒளி வெள்ளத்தில் கண் கூச நின்ற அவர்களைப் பார்த்து அரங்கமே அதிர சிரிப்பு அலை புரண்டது. எல்லாரும் மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள். படித்தவர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள். அன்பான குடும்பத் தலைவிகள். அவர்களின் அன்புச் செல்வங்கள்.

இது நடந்து இருபது வருடத்துக்கு மேல் ஆனாலும் இன்னும் மனதை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. நமக்குக் கலை, இலக்கியத்தில் தேர்ந்த ரசனை இல்லாவிட்டால் பரவாயில்லை. சக மனிதர்கள் மேல் நேயம் கொள்ள முடியாத சமுதாயமாக நாம் எப்போது மாறினோம் ? மனிதம் மரித்த இந்த வெற்றிடத்தில் எந்தக் கலை வளரும் ? எந்த இலக்கியம் சூல் கொள்ள முடியும் ? வாழையடி வாழையாக இந்த வக்கரித்த ரசனை தலைமுறைகளின் ஊடாகத் தொடர்கிறது.

அன்றைக்குச் சிரித்தவர்களும் சிரிப்புக்கு இடமாக நின்றவர்களும் இடம் மாறி இருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

—————————————————————-

அறிவியல் புனைகதையாளர் வரிசையில் என்னையும் நண்பர் ஜெயமோகன் சேர்த்து இங்கே எழுதியிருப்பதைப் படித்து, மேஜிக்கல் ரியலிசம் துணை இல்லாமலேயே லெவிடேட் செய்து தரைக்கு அரை அடி மேல் மிதந்தேன்.

நான் எழுதிய அறிவியல் புனைகதைகளை ஒரு கை விரல்களில் அடக்கி விடலாம். அதிலும் ‘மூன்று விரல் ‘ அறிவியல் புனைவு இல்லை என்று வெட்டி விட்டால், மிஞ்சுவது ரெண்டே விரல் தான்.

ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இதைக் கேட்க, சட்டென்று என் பெயர் நினைவுக்கு வந்ததால் எழுதியதாகச் சொன்னார்.

இருக்கலாம். இரண்டு வாரம் முன்னால் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸ் ஞாயிற்றுக் கிழமைப் பதிப்பில் மலையாளக் கவிஞரும், சாகித்ய அகாதமித் தலைவருமான சச்சிதானந்தன் மொழிபெயர்ப்பு பற்றிக் கட்டுரை எழுதியிருந்தார். பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் விஷயத்தில் தெலுங்கு மொழிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று வருத்தப்பட்ட அவர், தமிழில் கூட சுந்தர ராமசாமியையும், ஜெயமோகனையும் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தார்.

கல்கி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் என்று நீளும் பட்டியல் அவருக்கு நினைவுக்கு வராமல் தொட்டடுத்த கன்யாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர்கள் பெயர் மனதில் வந்ததும் ஞாபக சக்தி தொடர்பானதாக இருக்கலாம்.

———————————————————————————————–

பத்திரிகையாளரும், ஆஷியாநெட் தொலைக்காட்சி வைஸ் சேர்மனும் ஆன வி.கே. மாதவன் குட்டியின் ‘ஓர்மகளுடெ விருந்நு ‘ என்ற மலையாளச் சுயசரிதையை இரண்டாம் முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன்.

முதல் தடவை படித்தது, ‘கலாகெளமுதி ‘ பத்திரிகையில் பத்து வருடம் முன்னால் நம்பூத்ரியின் உயிரோட்டமுள்ள கோட்டுச் சித்திரங்களோடு இந்த வாழ்க்கை வரலாறு வெளியான நேரத்தில்.

அப்போது அந்தப் பத்திரிகையே ஓர் ஒளி வட்டத்தில் இருந்தது. கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் வாழ்க்கை வரலாறு, அச்சுத மேனோனின் டயரிக் குறிப்புகள், மாதவிக் குட்டி (கமலாதாஸ் என்ற சுரையா)வின் ‘நீர் மாதளம் பூத்த காலம் ‘ என்று வரிசையாக அருமையான தொடர்களும், புரபசர் கிருஷ்ணன் நாயரின் ‘சாகித்ய வாரபலனும் ‘, ஒ.வி.விஜயனின் ‘பிரவாசகண்டெ வழி ‘ நாவலும் வெளிவந்த காலம் அது. பத்திரிகை ஆசிரியர் ஜனார்த்தனன் நாயரும் வாரபலன்காரரும் ‘மலையாள நாடு ‘க்குக் குடிபெயர, மற்ற இலக்கியத் தரமான எழுத்துக்களும் இல்லாமல் போய் தற்போது வெளிவரும் கலாகெளமுதி நம் தமிழ்ப் பத்திரிகைகள் பலவும் போலத்தான். போகட்டே.

மாதவன் குட்டி, சுயசரிதம் என்ற பெயரில் சுய தம்பட்டம் அடிக்காமல், அறுபது வருடம் முந்திய பாலக்காட்டுப் பக்க மலையாளக் கிராமத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் பதிவுகளின் தொகுதி ‘ஓர்மகளுடெ விருந்நு ‘ புத்தகம்.

புத்தகத்திலிருந்து –

பொழுது புலரும்போது ஆண்டிகளும் காக்கைகளோடு விழித்து எழுந்து கிராமத்திலும் அதன் அருகிலும் பிச்சை தேடுவார்கள். காவடிக் காலங்களில் அவர்கள் காவடி எடுப்பதால் வருமானம் கூடும். காவடி எடுத்தால் பழனிக்குப் போகவேண்டும். பழனிக்குப் போனாலும் போகாவிட்டாலும் காவடி எடுப்பார்கள் சிலர். பாவைக்கூத்து (பொம்மலாட்டம்) கலையில் தேர்ச்சி பெற்ற இரண்டு ஆண்டிகள் அங்கே உண்டு. அவர்கள் கம்பராமாயணக் கதைகள் சொல்வார்கள்.

மழை பொய்த்துப்போன வருடங்களில் ஆண்டிப் பெண்கள் வீடு வீடாகப் போய், மழைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். கையில் ஒரு தீச்சட்டி இருக்கும். சட்டியின் கழுத்தில் பூமாலை சுற்றி இருக்கும். அந்தச் சட்டியை முற்றத்தில் வைத்து திருவாதிரைக்களி போல் அதைச் சுற்றி ஆடியபடியே பாடுவார்கள் :

‘மானத்தே மகாதேவா, மழை பெய்தால் ஆகாதோ ‘ என்று ஒருத்தி பாடுவாள். ‘கொப்பியாள..கொப்பியாள.. ‘ என்று மற்றவர்கள் இரண்டு கையும் கொட்டி இப்படியும் அப்படியுமாகச் சரிந்து ஆடுவார்கள்.

‘மேலத் தெருவில் பெய்த மழை, கீழத் தெருவில் பெய்யாதோ ‘ இன்னொருத்தி பாடுவாள். ‘கொப்பியாள..கொப்பியாள ‘…

***

சின்னான் நாயர்களுக்கு மட்டுமே முடிவெட்டுவான். அவனுக்கு இரண்டு தம்பிகள்.அவர்களில் கிருஷ்ணன், பட்டன்மாருடைய (பார்ப்பனர்கள்) நாவிதன். பாலன், ஈழவருக்கும் மற்ற தாழ்த்தப் பட்டவருக்கும் நாசுவம் செய்வான். இவர்களில் கிருஷ்ணனுக்கு வருமானம் குறைவு. சுற்றிப் பற்றி மொத்தமே மூன்று பட்டர் குடும்பங்கள் தான். உச்சிக் குடுமி வைத்து இருப்பார்கள் அங்கே. முகச் சவரமும் வாரம் ஒரு முறைதான். கிருஷ்ணன் முகச் சவரத்திற்கான கட்டணத்தை உயர்த்திப் பார்த்தான். பட்டர்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சவரம் போதும் என்று வைத்து விட்டார்கள்.

கிராமத்தில் ஆட்களைப் பார்த்தால் அவர்களின் ஜாதியைச் சொல்லி விடலாம். நாயர்களுடைய தலை நன்றாக கிராப் செய்யப் பட்டிருக்கும். தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பப்பட வெட்டு தான் (அப்பளத்தைப் பரத்தியது போல தலையில் முடி வெட்டியிருக்கும்). சிலருக்கு எலி பிராண்டியது போல இருக்கும்.

ஒரு தடவை கிருஷ்ணனுக்குப் புத்தி பேதலித்துப் போனது. சாமிநாதய்யருடைய குடுமியைச் சீராக்குவதற்குப் பதில் அவருக்குப் பப்பட வெட்டு நடத்தி விட்டான். செய்து விட்டு, விசுவநாதய்யரைப் பார்த்துச் சிரித்தான். சுப்பாணிக்கு மொட்டையும் அடித்தான். அப்புறம் கிருஷ்ணன் கத்தியோடு வந்தாலே கிலிதான்.

****

ஆப்ரகாம் தபால்காரனாக கிராமத்துக்கு வந்தான். கிராமத்தில் முதல் கிறிஸ்துவன் அவன் தான். சுருட்டை முடியும், கனத்த புருவங்களும், கொஞ்சம் பூனைக் கண்ணுமாக வந்தவனைக் கிராமமே ஆர்வத்தோடு பார்த்தது. ஆப்ரகாம் தொட்டு எடுத்துக் கொடுத்த கடிதங்களை முதலில் நாயர்கள் கையில் வாங்கவில்லை. புரயத்தெ நாராயணன் நாயர், ‘இவன் தொட்டால் தீட்டில்லை ‘ என்று சொல்லிய பிறகே அவர்கள் ஆப்ரகாம் கையிலிருந்து கடிதம் வாங்கினார்கள். நாராயணன் நாயர் கோட்டயத்தில் உத்தியோகம் பார்க்கும்போது அங்கே கிறிஸ்துவர்களோடு நாயர்கள் பழகுவதைப் பார்த்திருக்கிறாராம். என்றாலும் ஆப்ரகாம் வீட்டிற்குள் வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தண்ணீரோ சாயாவோ கொடுத்தாலும் தூக்கிக் குடிக்க வேண்டும். ஆனால் அப்புறம் குவளையைக் கவிழ்த்து வைத்துவிட்டுப் போக வேண்டாம் என்று ஒரு சலுகை மாத்திரம் உண்டு.

ஆப்ரகாம் கிராமத்துக்கு வந்து சிறிது காலத்தில் போஸ்ட் ஆபீஸுக்கு எதிரே ஒரு தோட்டம் விலைக்கு வாங்கினான். அங்கே சின்னதாக ஒரு வீடும் கட்டிக் கொண்டான். கப்பை பயிரிட்டான். அமோக விளைச்சல். ரப்பர் செடி வைத்தான். கோட்டயத்திலிருந்து திரேசம்மையைக் கல்யாணம் கட்டி வந்தான். தலமைத் தபால்காரனானான். அவனுக்குக் கீழே பணிபுரிய நியமிக்கப் பட்டவன் ஒரு நாயராக இருந்தான். கிராமத்தில் கிறிஸ்தவக் குடும்பங்களின் எண்ணிக்கை எட்டு ஆனது.

ஆப்ரகாம், அவரச்சன் என்று மரியாதையோடு விளிக்கப்பட்டு இறந்த காலத்தில் கிராமத்தில் கேரள காங்கிரஸ் தலையெடுத்திருக்கவில்லை.

(வி.கே.மாதவன் குட்டியின் ‘ஓர்மகளுடெ விருந்நு ‘ – டி.சி.புக்ஸ், கோட்டயம் வெளியீடு)

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்