வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

டைனோ


அதளபாதாளத்தை நோக்கி பாயும் தமிழ் திரையுலகை தன் கூன் முதுகில் சுமக்கும் நவீன ஹெர்குலிஸ் தங்கர் பச்சான் தன் சீரிய சிந்தனையில் ஒளி ஓவியம் வரைந்திருக்கிறார், கிழிந்த துணியில்.

பாக்கெட் நாவல் எழுதி குவிக்கும் யதார்த்தமான ஒரு எழுத்தாளன் நலங்கிள்ளி, பத்மஸ்ரீ பட்டத்தை ஜனாதிபதி இருக்கும் அதே மேடையில், பாசாங்கென மறுத்து தமிழ் விவசாயிகளுக்கு காவிரி தண்ணீர் வரும் நாளே பட்டத்தை பெறமுடியும் என்று ‘நோட் ‘ செய்யச்சொல்லி மதுரை பேருந்தில் துண்டு விரிப்பதைப் போல நம் மனதில் துண்டு விரித்து இடம்பிடித்துவிடுகிறார். பறை அடிப்பதே தமிழனின் பரம்பரை என்று மார்தட்டி தவிலும் நாதஸ்வரமும் அழிந்ததற்கு பிராமணர்களின் ஒருதலைபட்சமே காரணம் என்பதை ஆணித்தனமாய் சுத்தியல் கொண்டு ஓங்கி அடித்து, துண்டு விரித்து பிடித்த இடத்தில் குந்தியும்விடுகிறார்.

பத்திரிக்கையிலிருந்து தொடர்கதை பகுதிகளை வாங்க வரும் நிருபரை ‘தகவல் பொறுக்கி ‘ என்று கையில் கிடைத்ததை வீசி துரத்திவிட்டு பின்னர் தன் உதவியாளனிடம் சமரசத்துடன் மறுபடி அழைத்து வருமாறு கூறுவது நலங்கிள்ளியின் கொள்கைப்பிடிப்பை படம் பிடித்து காட்டுகிறது. டெபாசிட் காலியான தேவ பாஷையில் மட்டுமே திருக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டும் என்று பெரிய்ய்ய்ய இ(ம)டத்திலிருந்து வரும் ப்பிரசர்களை எதிர்த்து சுமார் ஐந்தாயிரத்து சொச்சம் வாக்குகளில் வென்ற தமிழ் மொழியில் இயற்றப்பெற்ற தேவாரத்தையும் திருவாசகத்தையும் ஐய்யர்வாள் துணையுடன் நம் எழுத்தாளர் ஓதி வெற்றி கண்டு சிறைக்கு அழைத்துச்செல்லும் தருவாயில் என் அருகில் அமர்ந்திருந்த தமிழ் நெஞ்சம் ஒன்று உணர்ச்சிப் பெருக்கில் ‘டமிள்ள் வாளுக! டமிள்ள் வாளுக!! ‘ என்று கூவியதைக் கேட்டதும் என் கண்களையும் சண்டே மார்க்கெட்டிலிருந்து வாங்கிவந்த டஜன் ஹேண்ட் கர்சீப்களிலிருந்து ஒன்றை உருவி துடைத்துக்கொண்டேன் (கர்சீப் – 1).

இதெல்லாம் ஒரு யதார்த்தமான எழுத்தாளன் செய்யும் வேளையா ? சுடுகாட்டிலும் ஒயின் ஷாப்களிலும் புத்தகம் ஒன்றை வெளியிட்டு, ஒரு WWE மல்யுத்தமாய் இல்லாவிட்டாலும், ஒரு கைக்குத்து சண்டை, குறைந்தபட்சம் காந்திமதி ஸ்டைலில் மண்ணை வாரி வீசுவது போன்ற எந்த கோணங்கித்தனமும் இல்லாதவன் யதார்த்த எழுத்தாளன் என்று கூறினால் தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது என்பதை தெரிந்து இயக்குனர், ஒரு யதார்த்த எழுத்தாளனின் இயல்பை நலங்கிள்ளி என்ற கதாபாத்திரத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். மினி வசந்த் & கோ நடத்தும் அளவு பர்னிச்சர் வசதிகள் இருந்தும் நம் எழுத்தாளன் தரையில் அமர்ந்து தாத்தா காலத்து கணக்குபுள்ளை பெஞ்சில் தலைசாய்த்து A4 எக்ஸிக்குட்டிவ் பாண்ட் பக்கங்களில் எழுதி திக்குக்கு ஒன்றாய் பறக்கவிடுகிறார். அதை பொறுக்கி தொகுக்கவும் காபி, சிப்ஸ், மது, மங்கை என்று சர்வமும் சப்ளை செய்யவும் சர்வர் சுந்தர வக்கீல் மாமா வேளைக்காரன் வீட்டிலேயே அவருடன் வசிக்கிறான். தீப்பொறிபறக்க பாக்கெட் நாவல் எழுதும் நலங்கிள்ளிக்கு அடிக்கடி உடலும் கொதித்துப்போக, அதை தணிக்க பக்கெட் பக்கெட்டாய் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, ஈரம் சொட்டும் தேகத்துடன் கதை எழுதி மறுபடியும் திக்கெங்கும் வீசுகிறார். நலங்கிள்ளியின் தீப்பறக்கும், ஈரம் சுரக்கும் எழுத்துக்கள் எட்டுத்திசைகளிலும் பரவுகிறது என்பதை சூசகமாய் தெரிவிப்பதற்காகவே இயக்குனர் இக்காட்சியை அமைத்துள்ளார் என்று நண்பர் ஒருவர் கூறியபிறகே எனக்கு தெரிந்தது (கர்சீப் – 2).

நலங்கிள்ளி அனல் பறக்க, ஈரம் சொட்ட எழுதாத போது தாசிகளை நேசிக்கிறான். எதுக்கு பொண்டாட்டி நிதமொரு பொம்மனாட்டி என்ற நாட்டி ப்ளேபாய் தான் அவனின் மறுபக்கம். பாக்கெட் நாவல், பக்கெட் தண்ணீர், இலக்கிய நயம், இளகிய மனம், தொட்டுக்க தாசி, தொடச்சு வக்க தோழன்னு நாளோரு வண்ணமும் பொழுதொரு மேனிகளுடனும் பொழுதைக் களிக்கும் நலங்கிள்ளிக்கு பால் விற்பனை செய்பவளின் மகள்தான் கதாநாயகி தாமரைச் செல்வி.

சினிமினி, சின்னத்திரை, தேவி, முத்தாரம், குமுதம், விகடன், பாக்யா, உஷா, மையம், ராணி, ராணிமுத்து, மங்கையர் மலர், மங்கை, குங்குமம், பேசும்படம், பிலிமாலயா, தராசு, நக்கீரன், துக்ளக், பெண்மணி வாசுகி, தேவி, ஞான பூமி, சாவி, பூட்டு, தாய் என்று தமிழகத்தில் பல இதழ்கள் இருந்தாலும், தன்னைப் பெற்றவள் அண்டை அயலார் வீட்டில் வேலை செய்து சம்பாதிப்பது தனக்கு கிடைக்கும் பாக்கெட் மணி அனைத்தையும் நம் நலங்கிள்ளி எழுதும் பாக்கெட் நாவல்களை வாங்கிக் குவிக்கிறாள் தாமரைச் செல்வி. கவர்ண்மெண்ட் பள்ளியில் எல்கேஜி படிக்கும் காலத்திலிருந்தே நலங்கிள்ளி மேல் ஒரு நேசம், அவள் வயதெய்தி விவரம் தெரியும் வயதிலும் தொடர்கிறது. ஒரு விபத்தில் தன் தாயை தீயின் கோரப் ‘பீடி ‘க்கு தாரை வார்க்க நேர்கிறது (கர்சீப் – 3). ஆனாலும் சன்னலை மூடிய தெய்வம் தன் தாய் பணிபுரிந்த கோடாஸ்வர வீட்டுக்காரனின் ரூபத்தில் கதவை திறக்கிறார். தாய்யிழந்த பெண்ணை தன் மகளைப்போல வளர்த்து ஆளாக்கும் அவர் தன் மகனின் விருப்பத்திற்காக தாமரையை தன் மருமகளாகவும் ஏற்கத்தயாராகிறார். ஆனால் நலங்கிள்ளியை நெஞ்சில் சுமந்திருக்கும் அவள், கோடிகளை உதறி நலங்கிள்ளியை தேடி மஞ்சப் பையுடன் சிறைக்கே செல்கிறாள். சிறைக்கு செல்லும் வழியில் ஏதோ ஒரு கிராமத்தில் தமிழ் சினிமா நெறிமுறைப்படி ‘குமாங்கோ… குத்துங்கோ ‘ (நன்றி: திண்ணை சொதப்பப்பா) என்று அர்த்தமே இல்லாமல் ஊரே கூடிக் கூத்தாடுகிறது.

சிறையில் அடுத்தநாள் இறக்கப்போகும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பறை அடிப்பனுடன் ‘தாண்டவக்கோனே… குமாங்கோ… குத்துங்கோ ‘(மீண்டும் நன்றி: திண்ணை சொதப்பப்பா) என்று உடலை வளைத்து நெளித்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் நலங்கிள்ளி, கதாநாயகியை தான் நிதமும் உடல் பசியைத் தீர்க்க பயன்படுத்திய தாசிதான் தன்னை காணவந்திருப்பாள் என்ற தப்பர்த்ததில் சந்திக்க மறுக்கிறான். லேடிஸ் ஹோஸ்டலிலும் இடம் மறுக்கப்படுவதால் திக்குதெரியாத கட்டிடக் காட்டில் பார்வையற்ற கபோதியாய் அலைகிறாள். நலங்கிள்ளியின் எழுச்சிமிக்க புரச்சிகரமான இலக்கிய தரம்வாய்ந்த பாக்கெட் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் ஜில்பான்ஸ் மாமாப்பையனை அடையாளம் கண்டுகொள்ளாமல் அவன் வலையில் அவளே ‘தொபுக் ‘ என விழுகிறாள். ஆனால் தரகர் அவளை அழைத்துச்செல்லும் கஸ்டமர், நாம் எதிர்பார்த்த ஹீரோ நலங்கிள்ளி. நலங்கிள்ளியை கண்ணனாகவும் அவளை ஆண்டாளாகவும் பாவித்து அவனுடன் மஞ்சத்தில் புணர்கிறாள். ஆனால் நலங்கிள்ளி அவளை வழக்கமான விலைமாது என நினைத்து காரியம் முடிந்ததும் ‘முழு திருப்தி ‘ என சான்றிதழுடன் பணத்தை திணித்து அனுப்பிவிடுகிறான்.

மீண்டும் தெருவில் நாதியற்று திரியும் தாமரையை ஜில்பான்ஸிடமிருந்து காத்து அடைகலமளிக்கிறாள் ஜில்பான்ஸால் முன்பே பாதிக்கப்பட்ட முன்னால் விலைமாது. ஆனாலும் ஜில்பான்ஸ் மறுபடியும் தாமரையை கடத்தி சென்று மற்றொரு கஸ்டமரிடம் கூட்டிவிடுகிறான். அதை தெரிந்துகொண்ட முன்னால் வி.மா. கஸ்டமரின் ஆண்குறியை உலுக்கி தாமரையை காப்பாற்றுகிறாள் (கர்சீப் -4). பிழைப்பு தேடி பழனிக்கு( ?) பயணமாகிறார்கள். இதற்கிடையில் தாமரை கர்ப்பம் அடைந்த்திருப்பதை அறிந்து அதை கலைக்க மருத்துவச்சிகளிடம் அழைத்து செல்கிறாம் முன்னால் வி.மா. ஆனால் அது அவளே ஏற்ற கர்ப்பம் அதை கலைக்க சம்மதமில்லை என்று காட்சிக்கு ஒவ்வாத பின்னனி இசையில் தெரிவிக்கிறாள் (கர்சீப் -5). தேவையில்லாமல் முன்னால் வி.மா வின் குழந்தையும் தேள் கொட்டி சாகிறது (கர்சீப் – 6). அபிமன்யு தாயின வயிற்றில் வளரும்போதே வேதங்களையும் சூத்திரங்களையும் கற்பதைப்போல கதாநாயகி வயிற்றில் இருக்கும் அவள் குழந்தைக்கு ஸ்பீக்கரில் கேட்கும் நலங்கிள்ளியின் குரலை கேட்கச்செய்து (கர்சீப் – 7) கிள்ளிவளவன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள்.

காம்ப்ளான் குடிக்காமலேயே குழந்தை தன் தந்தையின் குணாதியங்களோடு வளர்கிறான். வழக்கமான திரைப்படங்களைப் போல தகப்பன் பெயர் தெரியாதவன் என்பதனால் எள்ளி நகையாடப்பட்டு ஒரு சண்டையின் போது இரத்தம் சொட்டும் அளவு அடிவாங்குகிறான். அதேவேளையில் பழனிக்கு நடைப்பாதை வியாபாரிகள் கூட்டத்தில் உரையாற்றி திரும்ப வரும் நலங்கிள்ளியின் பார்வையில் சிக்கி, அனாதை என்று அவன் சொல்லும் பொய்யை நம்பி சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

சென்னையில் கிள்ளிவளவனின் கவனிப்பில் நலங்கிள்ளி புகை, உ.பா., மூக்கு பொடி, ஜில்பான்ஸ், மூக்கு குடைதல், காது குடைதல், சத்தமாக ஏப்பம் விடுதல், அண்டர்வேர் தெரிய வேஷ்டி கட்டுதல், செருப்பில் முதுகு சொறிதல், அவையோர் முன்னிலையில் வாயு வெளியேற்றம், புறம் கூறுதல் போன்ற தமிழ்நல்லுலகில் உள்ள அனைத்து தீய பழக்கங்களையும் துறந்து ஹீரோ ஸ்தானத்தை எட்டிவிடுகிறார்(கர்சீப் – 8). தன் மகனைதேடிக் கிடைக்காமல் நலங்கிள்ளியையாவது பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவனைக் காணவரும் தாமரை அவனைக் கண்டும் ஒரு வார்த்தை பேசாமல் தான் வைத்திருந்த மஞ்சப்பையை வீட்டிலேயே விட்டு செல்கிறாள். இத்தனைகாலம் தாயை மறந்திருந்த தனயன் தனக்கு முதுகில் அரிப்பெடுப்பதால், பழனியில் இருக்கும் அவன் தாய் மயில் மயிரால் நீவி விட்டாலே அரிப்பு நிற்கும் என்று அடம்பிடித்து பழனிக்கு அழைத்து போக சொல்கிறான். ஒரிரு பிரதிகளே விற்ற தன் பாக்கெட் நாவல்களையெல்லாம் கதாநாயகி தன் மீதிருந்த காதலினால் வாங்கிக்குவித்திருப்பதை அறிந்து புளங்காகிதமடைகிறான். கிள்ளிவளவன் தன்மகனாய்தான் இருக்க வேண்டும் என ஓரளவுக்கு ஊகிக்கித்து மறுபடி சென்னைக்கு திரும்புகிறான் (கர்சீப் – 8 இது ஆனந்தக்கண்ணீர் ஐயா!).

அந்தோ! விதி தன் கோரப்பிடியை இன்னும் இறுக்கியது. சாக்கடையில் விழுந்து கிடப்பவளை கிள்ளிவளவன் தன் தாய் என்று அடையாளம் காட்ட அவளை மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறார்கள். விழித்தெழும் தாமரை ஒருபக்க வசனத்தை உணர்ச்சி பெருக்குடன் பேசி நலங்கிள்ளியை கைக்காட்டி கிள்ளிவளவனிடம் ‘அப்பா டா! ‘ (நாம் ‘அப்பாடா!! ‘ என்று பெருமூச்சு) என்று கூறி உயிர்விடுகிறார் (கர்சீப் – 9 மற்றும் 10. அடப்பாவிகளா! டஜன் கர்சீப் என்று சொல்லி 10 கர்சீப்பை தலையில் கட்டிவிட்டாங்களே!).

அவள் நினைவாக ஒரு வருடம் முழுதும் பாக்கெட் நாவல் எழுதுவதை நிறுத்தி தமிழ் இலக்கிய இயக்கத்தையே உலுக்கி பெரும் இழப்பை ஏற்படுத்திவிடுகிறார் நலம்கிள்ளி. தான் இத்தனை காலம் படைத்த பாக்கெட் நாவல்களைக்காட்டிலும் தாமரைச்செல்வி திருமண வீடுகளில் மொய் எழுத உபயோகிக்கும் 40 பக்க நோட்டில் எழுதிய வீட்டுக்கணக்குக்கு இணையில்லை என்பதை உணர்ந்து வருந்துவதுடன் படம் சுபம்.

1986ல் நடைபெறுவதாக ஆரம்பிக்கும் படம், தொழில்நுட்ப விசயங்களில் நம்மை 1968க்கே அழைத்துச் செல்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியும் அதன் முந்தைய காட்சியுடன் தொடர்பேதுமின்றி தனித்துவமாய் திகழ்வது எடிட்டரின் சிறப்பு. காட்சிகளுக்கும் பின்னனி இசைக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் அனைத்து காட்சிகளும் சிரத்தையுடன் கையாளப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் விறுவிறுப்பில் நாம் தொலைந்துபோகாமல் இருக்கவும், இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக 4 இடைவேளை கொடுக்கப்படவும், முத்தான பாடல்கள் படத்தின் இசையமைப்பாளரின் அவசியத்தை உணர்த்துகிறது. தமிழ் தொலைக்காட்சி கொடைகானல் சானல் ஆரம்பித்த புதிதில் செவ்வாய்க் கிழமைகளில் 7:30 மணிக்கு கம்பர் ஜெயராமன் கதாநாயகனாய் நடித்த காவியங்கள் சில ஒளிபரப்பப்பட்டது. அதில் அரங்க அமைப்பாளாராய் பணிபுரிந்தவரே ஆர்ட் டைரக்ஷன் செய்திருப்பாரோ என எண்ணி வியக்கும் வண்ணம் கலை அமைப்பு அருமையிலும் அருமை. கதாபாத்திரங்களை கண்டமேனிக்கு படைத்து அவர்கள் தேவையில்லாத போது கொன்றுவிடுவதும் (தாண்டவக்கோனே என்று பாடும் பறையடிப்பவனின் மகன், தாமரையின் அம்மா, நாய், வி.மா வின் குழந்தை) தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய உத்தி. அப்படியே கொல்லப்படாதவர்களை இயக்குனர் பாத்திரக்கொலை (Character Assacination) செய்து (நலங்கிள்ளியின் அடுத்தவீட்டு பிராமணன், நலங்கிள்ளிக்கு உதவி புரியும் பணக்காரன், வக்கீல் வேலைக்காரன், கவி அரசர், பழனி சித்த வைத்தியன்) தாகசாந்தி ஆகிவிடுகிறார்.

இப்படி கதை அமைப்பு, திணிக்கப்பட்ட தலித் எழுச்சி , தொழில்நுட்பம் என்று பல தளங்களிலும் நம்மை காலத்தின் அதிவேகத்திலிருந்து திருப்பி பண்டைய நாட்களை நினைவுபடுத்துகிறார். படத்தை பார்ப்பவர்களுக்கு மாலை நேரத்தில் அழகிய சென்னை மாநகரத்து கூவம்நதிக்கரையில் தென்றலை அனுபவித்த சுகம்.

. : டைனோ : .

dynobuoy@yahoo.com

Series Navigation