வள்ளி திருமணம் (பால பாடம்)

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

வ ஐ ச ஜெயபாலன்


தினைப் பாட்டு
———————–

தன்னே னான தானனா
தானே னான தானனா
தன்னே னான தானனா
தானே னானே தானேனா

பச்சை பச்சை தினைகள் நாம்
பனியில் குளித்த தினைகள் நாம்

வள்ளி என்ற குற மகள்
வந்து தினமும் காக்கிறாள்
கள்ளி முருகன் காதலில்
கவிதை பாடி தீர்க்கிறாள்

காவல் பரணில் பறவைகள்
கலைய ஆட்டம் போடுறாள்
ஆயலோட்டும் வேளையில்
யாரை வள்ளி தேடுறாள்

தேனீ பாட்டு
—————-
பொழில்கள் எங்கும் ஓடித் ஓடி
புதிய தேன் எடுத்துமே
எழில் மலர்கள் தேடித் தேடி
இனிய தேன் எடுத்துமே

தினைமா சேர்த்து வள்ளி தின்ன
தினமும் தேன் கொடுத்துமே
அனைத்து மலரும் நிகரிலாதவள்
அழகில் பாடல் தொடுத்துமே

பறவைப் பாட்டு
——————–
சிந்து பாடும் பறவை நாம்
திருடித் தின்ன வருகிறோம்
தெருவில் போகும் பசுக்களே
தினைப் புனத்தைக் காட்டுங்கள்

தினை பாட்டு
—————–

வள்ளி அக்கா வள்ளி அக்கா
வருகு தையோ பறவைகள்.
அள்ளித் தின்னப் போகுது
ஆயலோட்டிக் காத்திடு.

வள்ளிப் பாட்டு
——————

சூ சூ சூ சூ பறவைகாள்
தினைப்புனம் எனது காவலில்.
பேச்சு வேண்டாம் திரும்புங்கள்
பறந்து அப்பால் தொலையுங்கள்.

குனிந்து கல் எடுக்கவா
கவணிலே தொடுக்கவா
பணிந்து தப்பிச் செல்லுவீர்
இந்த நாளை வெல்லுவீர்.

கண்ணில் தெரிகிற தூரமெல்லாம்
கனகம் கடலாய் புரழுதே.
வண்ண மயில்கள் தோணிகளாய்
வயல் மிதந்து வருகுதே.
அண்ணல் முருகனைக் காணவில்லை.
ஆயல் ஓட்ட மனசுமில்லை
கண்ணில் தெரிகிற வானவில்லோ
காதல் கனவில் வரும்கனவோ

முருகன் பாட்டு
——————-
கண்ணில் காணாப் பெண் ணொருத்தி
என்மேல் காதல் கொண்டதாய்
எண்ணி எண்ணி தினைப் புனத்தில்
ஏங்கி ஏங்கி நின்றதாய்
சொன்ன தென்ன தோழரே என்
சிந்தை அவளைத் தேடுதே
உள்ளம் காதல் ஆழம் பார்த்து
உண்மை அறிய வாடுதே

வேடன் வேசம் போடப் போறேன்
வில்லைக் கையில் எடுக்கப் போறேன்
தேடும் மானைத் தினைப் புனத்தில்
சென்று நானும் பார்க்கப் போறேன்
சென்று நானும் பார்க்கப் போறேன்

வள்ளிப் பாட்டு
——————

நில்லடா யாரைக்கேட்டு
தினைப் புனத்துள்ளே வந்தாய்.
சொல்லடா சிறுவில் வேடா (உன்)
சிந்தையில் என்ன கொண்டாய்

முருகன்பாட்டு
——————
தேடி வந்தேனே வள்ளி மானை
இல்லை இல்லை
தேடி வந்தேனே புள்ளிமானை

வள்ளிப் பாட்டு
——————

வெற்றிவேல் முருகன் அந்த
வீரன் பேர் அழகனன்றி
மற்றவர் எவெர்க்கும் இந்த
வழியிலோர் வேலை இல்லை.
சொல்லடா சிறுவில் வேடா
சிந்தனை என்ன கொண்டாய்

முருகன்பாட்டு
——————

தேடி வந்தேனே வள்ளி மானை
இல்லை இல்லை
தேடி வந்தேனே புள்ளிமானை

வள்ளிப் பாட்டு
——————-

முருகனே என் காதல் நெஞ்சை
மோகத்தை நீ கண்டு கொண்டால்
தெருவில் போகும் வேடர் எல்லாம்
திரும்பி எனைப் பார்ப்பதுண்டோ

முருகன் பாட்டு
——————-

வெண்தாடிக் கிழவனாக
வேல்கம்பு கையில் கொண்டேன்

தள்ளாத வயதிது பேத்தி
தனிக் காட்டு வழியில் வந்தேன்
பிள்ளைகள் உதவி இல்லை
பெரும் பசியாலே நொந்தேன்

வள்ளிப் பாட்டு
——————-
தேனும் தினைமாவும் தாத்தா நீங்க
தித்திக்க தித்திக்க தின்னுங்க தாத்தா.
மானென்று ஒரு வேடன் வந்து என்னில்
வழிந்ததைச் சொல்கிறேன் கேளுங்கள் தாத்தா.

முருகன் பாட்டு
——————–

விக்கல் எடுக்குதே பேத்தி ஐயோ
விக்கல் எடுக்குது தண்ணீர் தா பேத்தி

வள்ளியும் முருகனும்
————————–
விட்டிடு விட்டிடு கையைக் கிழவா

கட்டிடு கட்டிடு கல்யாணம் என்னை

விட்டாடு விட்டிடு கையைக் கிழவா

கட்டிடு கட்டிடு கல்யாணம் என்னை.

வள்ளிப் பாட்டு
——————-

முருகனே என் காதல் நெஞ்சை
மோகத்தை நீ கண்டு கொண்டால்
தெருவில் போகும் வேடர் எல்லாம்
திரும்பி எனைப் பார்ப்பதுண்டோ
அருகிலோர் கிழவன் வந்து
அணைக்கவும் துணிவ துண்டோ

யானப் பாட்டு
——————

வந்தேனே வந்தேனே யானை
வந்தேனே வந்தேனே யானை
வழியெல்லாம் காடு சிதைய
வானமும் மண்ணும் திசையும் அதிர
முன் வந்ததெல்லாமே பொடிப் பொடியாக

வள்ளிப் பாட்டு
——————

தாத்தா ஆபத்து தாத்தா
அபயம் அபயம் தாத்தா

ஐயோ தாத்தா ஐயோ தாத்தா
ஆபத்தான யானை தாத்தா
கெதியா வந்து விரட்டுங்க தாத்தா
கேட்டதெல்லாம் தருவேன் தாத்தா

முருகன் பாட்டு
——————–

தள்ளிப் போங்க யானையாரே – நான்
தாலிகட்டப் போகும் பொண்ணு
வள்ளி இப்போ பக்கம்வாடி
வண்ணத் தாலி கட்டப் போறேன்

வள்ளிப் பாட்டு
——————
ஏமாளிக் கிழவனாரே ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா
இப்போ யானை பூனை ஏதுமில்ல
கோமாளி ஆக்கிவிட்டேன் நீங்க
கொட்டமின்னும் அடிக்கலாமா

முருகன் வள்ளி
——————–

யானையாரே யானையாரே

ஐயோ தாத்தா ஐயோ தாத்தா

யானையாரே யானையாரே

ஐயோ தாத்தா ஐயோ தாத்தா

முருகன் பாட்டு
——————-

வேடனாக வந்ததும்யான்
வேல்முருகன் எந்தன் பேரு
கிழவனாக வேடம்கொண்டு
கொஞ்சியதும் கந்தன்தாண்டி

வள்ளிப் பாட்டு
———————-

முருகனே என் காதல் நெஞ்சின்
மோகத்தில் நீ மூழ்கி விட்டாய்
அருகில் வாடா எனது வாழ்வின்
ஆனந்தத்தை மீட்டுத்தாடா

மங்களம்
———–

மங்களம் மங்களம் மங்களம்
வள்ளி திருமணத்தை
வந்துபார்த்த எல்லோர்க்கும்
மங்களம் மங்களம் மங்களம்

தமிழ் கூறும் நல்லுலகில்
அறங்களும் அமைதியும்
மேன்மையும் ஓங்குக
ஈழமணி நாட்டிலே
போரிலாத பெருவாழ்வும்
நீதியும் மலருக

மங்களம் மங்களம் மங்களம்

—————————————————————————————————————-
visjayapalan@yahoo.com

Series Navigation