வளரும் வலிகள்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

ஜெயந்தி சங்கர்கொஞ்ச நாட்களாகவே ரூபிணி கமலா வீட்டுக்கு அடிக்கடி போய்வருகிறாள். ஒரு வேளை ரூபிணி அங்கு போயிருப்பளோ. கமலா வீட்டுத் தொலைபேசி எடுக்க ஆளில்லாமல் அடித்துக் கொண்டே இருந்தது. குட்டி பிறந்த போது வந்து பார்த்தாள் கமலா. அப்போது தான் துவங்கியது ரூபிணியுடனான அவளின் நட்பு. ஒரு நாள் கூட நின்று நிதானமாக என்னோடு ரூபிணியால் பேசிட முடியாது. ஆனால், திருமணமாகாத என் வயதுப் பெண்ணான கமலாவோடு ரூபிணிக்கு அப்படி என்ன தான் பேசிட இருக்குமோ என்று பலமுறை யோசித்துப் பார்த்தும் எனக்குப் பிடிபடவேயில்லை. பொதுவாகவே ரூபிணியிடம், ‘உன்னைப்போல உண்டா?’, என்று யாரேனும் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டால் போதும், அவ்வார்த்தைகள் பொய்யாகவே இருந்தாலும் அப்படியே பனியாய் உருகிடுவாள்.

முன்பு நாங்கள் காலாங் வட்டாரத்தில் பத்தாவது மாடியில் குடியிருந்தோம். கமலா வசித்தது அதே அடுக்ககத்தின் இரண்டாவது மாடியில். ஆண்களை அடியோடு வெறுத்துவந்த கமலா எந்த வயதுப் பெண்ணைப் பார்த்தாலும் கட்டித் தழுவியும், கன்னத்தையும் முகத்தையும் வருடியபடியும் பேசுவாள். உற்சாகம் கரை புரண்டோடிடும் போதோ சடாரென்று கன்னத்தில் முத்தமிட்டு விடுவாள். கமலா அப்படியெல்லாம் பேசுவதை பெரும்பாலோர் வெறுத்ததில், கமலாவின் நட்பு வட்டம் மிகக் குறுகிப் போயிற்று. அக்கம்பக்கம் விதவிதமாகப் பேசினார்கள். அப்போது ரூபிணிக்கு பதினோராவது வயது நடந்து கொண்டிருந்தது. “பாய்ஸ் கூட தானேம்மா அப்படிப் பழகக்கூடாது”, என்று பெரிய மனுஷியைப் போலத் தன் கருத்தை முன்வைத்த போதும் கமலாவின் மீது எனக்கு எந்தவித எதிர்மறை அபிப்ராயமும் வளர்ந்திடவில்லை, கமலா மிகவும் வெகுளி என்பதைத் தவிர.

இடுப்பில் உட்கார்ந்து கொண்டு விடாமல் சிணுங்கினாள் குட்டி. தொழில்நுட்பப் பல்கலையில் படிக்கும் ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணுக்கு இரவு பதினோறு மணிக்கு வெளியில் அப்படி என்னதான் வேலையிருக்க முடியும்? கைத்தொலைபேசியை வேறு அணைத்து வைத்து விடுகிறாள் என் அழைப்பைத் தொல்லையென்று கருதி. வாலைப் போலக் கூடவே சுற்றிடும் நூருல் மற்றும் ஷ�ஹ்வான் இருவரின் எண்ணையும் அழைத்துக் கேட்கலாம். ஆனால், வீட்டிற்கு வந்த பிறகு ரூபிணி பத்ரகாளியாகிக் கத்துவாள். என்னையும் குட்டியையும் தவிர எல்லோரின் மதிப்பும் அன்பும் அக்கறையும் அவளுக்கு முக்கியமாக இருந்தது.

***

நேரமாக ஆக ரூபிணியைக் காணாது என்னில் வளர்ந்த பதட்டம் எட்டு மாதக் குட்டியையும் தொற்றிக் கொண்டதோ என்னவோ. மகளென்று ஒரு பொய்யையோ பேர்த்தியென்று உண்மையையோ வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடியாது அண்டை அயலின் அர்த்தம் பொதிந்த பார்வைகளுக்கும் முதுகுக்குப் பின்னால் பேசிய பேச்சுக்களுக்குமிடையேயும் இப்படி ஒரு குழந்தைவளர்ப்பு என் முப்பத்தொன்பதாவது வயதில் எனக்கு விதிக்கப் பட்டிருந்ததே என்று நொந்து கொள்ளும் தருணங்கள் பல.

போன மாதம் ஒரு நள்ளிரவில் ரூபிணி வீட்டுக்கு வந்த போது மீண்டும் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தில் கண்டித்துக் கேட்டதற்கு, “யூ திங்க் ஐ’ம் தாட் ஸ்டுபிட். டோண்ட் பீ நாக் லா மம்மி. நீங்க சும்மா இந்தமாதிரி ஏன் லேட்டா வரேன்னு கேட்டிருந்தீங்கன்னா நா வேற ரூமெடுத்து தங்கிக்குவேன்”, என்று சொன்னபடியே காலணிகளைக் கழற்றினாள்.

நான்கைந்து மணிநேரத் தூக்கத்திற்குப் பிறகு பாலையும் குடித்து விட்டு உற்சாகமாக இருந்த குட்டி ரூபிணியைப் சிரித்தது. ஒரு முறைப்புடன், “சிரிப்பப் பாரு, சாத்தான். என்னப்பாத்து இது எதுக்கு சிரிக்குது? எங்கண்ணு முன்னால இதக் கொண்டு வரதீங்கன்னு சொல்லியிருக்கேனில்ல”, என்று கோபத்துடன் கேட்டாள். அன்று மிகவும் சோர்வாயிருந்தாளோ என்னவோ, வழக்கமாக நறுக்கென்று கிள்ளிக் குழந்தையை அழவிட்டுப் போவதைப்போலச் செய்யவில்லை. “ஓஹோ, உங்கப்பா அமெரிக்காலயிருந்து பணமா அனுப்பற திமிரா? தனி பேங்க் அக்கௌண்ட் வேற உனக்கு,. ம்”, என்றதற்கு, “நா கமலா ஆண்டிகூடப் போயி இருந்துப்பேன்”, என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டவள் சாப்பிடாமலே தூங்கியும் போனாள்.

தன் அப்பாவைப் போலவே தோற்றத்தில் இருந்த காரணத்தினால் ரூபிணி தன் அப்பாவின் மீதிருந்த பிரியத்தை ஈடுகட்டும் விதமாகத் தான் தினேஷிடம் பழகியிருக்கிறாள் என்று பிறகு தான் மனோவியல் நிபுணர்கள் சொன்னார்கள். ஆறு வருடப் பிரிவில் ரூபிணி வெளிக் காட்டிடாமல் அப்பாவிற்காகவும் அவரின் அன்பிற்காகவும் ஏங்கியிருக்கிறாள். அவள் கருவுற்றிருப்பதை அறிந்திடும் போது அழிக்க முடியாமல் நான்கு மாதங்களாகிப் போனதில் பெற்றெடுப்பதைத் தவிரவேறு வழியிருக்கவில்லை. விஷயம் தெரிந்ததும் தலைமறைவானான் தினேஷ். முதலில் ‘தினேஷ், தினேஷ்’ என்று உருகினாள். சில வாரங்களிலேயே, “எப்டியெல்லாம் பேசினான். பாவி, பாக்க மட்டும் தாம்மா அவன் அப்பா மாதிரி. சரியான ரோக்”, என்று சொல்லவும், பிறகு என்னையே தன் பிரச்சனைகளுக்குக் காரணமாக்கி என்னிடம் ஆத்திரப் படவுமே செய்தாள். பிறந்த குழந்தையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதாவது பரவாயில்லை. “குப்பையில கொண்ட போடு. அது வேணாம்”, என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். தான் வெளியிட்ட மலத்தையே மிகுந்த அருவருப்புடன் பார்ப்பதைப்போல ரூபிணி தன் குழந்தையைப் பார்த்தாள். இதில் சீராட்டித் தாலாட்டி, தாய்ப்பால் புகட்டவும் டையாப்பர் மற்றவுமா செய்திடுவாள்? அந்தப் பச்சைமண் செய்த தவறென்ன என்று நினைத்து நான் தான் எடுத்துக் கொண்டு வந்து முழுக்க முழுக்க பராமரிவித்து வருகிறேன்.

பதினேழு வயதில் குழந்தை பெற நேர்ந்த போது தன்னை ஒரு நோயாளியாக நினைத்திடவும் மற்றவரின் கவனத்தைப் பெறவேண்டும் என்று எண்ணிடவும் செய்தளே தவிர குழந்தையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ரூபிணியின் அப்பாவால் சில முறை தொலைபேசிடவும் அள்ளி அள்ளிப் பணத்தால் அடித்திடவும் மட்டுமே முடிந்தது. “அப்பா பாவம். அவர ஒண்ணும் சொல்லதீங்க. அவருக்கு கால் �ப்ராக்ச்சர். இல்லன்னா, என்னப்பார்க்க ஓடி வந்திருப்பாங்க”, என்று அப்பாவுக்குப் பெண் சப்பைக்கட்டு கட்டினாள். “ஆமா, உங்கப்ப உத்தமரு, நல்லவரு, வல்லவரு”, என்ற என்னைப் பார்த்து, “வி யூ ஸ்டப். டோண்ட் பி ஸர்காஸ்டிக்”, என்று எரிந்து விழுந்தாள். வெள்ளைக்காரியைக் கட்டிக் கொண்டு அங்கே அவர் உருவாக்கியிருந்த அவரது குடும்பத்தின் பால் அவருக்கிருந்தது ரூபிணியின் மேலிருந்த அன்பைவிடப் பலமடங்கு என்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. எனக்கல்லவோ தெரியும் அதெல்லாம்.

***

குட்டி அயர்ந்து தூங்கிப் போயிருந்தாள். அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு மீண்டும் கூடத்தில் தொலைபேசியருகே உட்கார்ந்து கொண்டேன். அருகே சிறிய மேசையின் மீதிருந்த ரூபிணியின் பழைய நிழற்படம் ! அவள் ஆசையாசையாய் வளர்த்திருந்து கூந்தலை இரட்டைப் பின்னலாய்ப் பின்னி பெருமையாய் இருபுறமும் விட்டுக் கொண்டிருந்தாள் புகைப்படத்தில். இழைய இழைய இழுத்துச் சீவி, மூன்று கால்களாய்ப் பிரித்துப் பின்னி முடிப்பதற்குள் என் கைகளிரண்டிலும் வலியெடுத்து விடும். இரண்டே வருடங்களில் என்னென்ன மாற்றங்கள்! முழங்கால் வரை கருகருவென வளர்ந்திருந்த முடியைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி இப்போது பின்னாலிருந்து பார்த்தால் ஒரு பையனைப் போலத் தெரிகிறாள். அதுவும் இப்போதெல்லாம் பாவாடையோ ஸ்கர்ட்டோ பஞ்சாபி உடையோ அணிவதேயில்லை. எல்லாவற்றையும் மூட்டைகட்டி உயரே வைத்து விட்டிருந்தாள். யாருக்காவது கொடுத்து விடுமாறு என்னிடம் சொல்லி மாதங்கள் கடந்து விட்டிருந்தன. பத்து வயதில் கால்சட்டை வாங்கலாமென்ற போது, ‘நா என்ன பையனா? எனக்கு பட்டுப் பாவாட தான் வேணும்’, என்று பிடிவாதமாய்க் கேட்டவளா என்றே நம்பிட முடியாத படி முழுக்க முழுக்க ஆண்களின் உடைகளாகவே தான் உடுத்தி வருகிறாள்.

மணி பன்னிரெண்டாகப் போகிறது இன்னும் ரூபிணியைக் காணோமே என்று கவலையோடு யோசித்தபோது பரிமளத்திற்குத் தொலைபேசலாமா என்று தோன்றியது. இரவில் தொந்தரவாக இருக்குமோ? ஆனால், வேறு வழியுமிருக்கவில்லையே. பரிமளத்தின் அம்மா உடனே எடுத்தார். “ஹலோ, பரியோட அம்மாதான் பேசுறன். ஓம் இருக்கா, இப்பதான் நித்திர வருதெண்டு சொல்லிட்டுப் படுக்கப் போனவள். கொஞ்சம் இருங்கோ”, என்று என்னிடம் சொல்லிவிட்டு மறுமுனையில், ‘பரி, கெதியா வா பிள்ள. ரூபிணிட அம்மா போன்ல’, என்று சொன்னது லேசாகக் காதில் விழுந்தது. “ஹலோ, ஓமோம் அண்டி. ஆனா, ரூபிணி என்னோட கதச்சி கனநாளாச்சு. ம், நீங்க நூருல், ஷ�ஹ்வானுக்கு போன் போடுங்கோவன் அண்டி. ம், சரி, அண்டி. நான் செய்தி ஏதும் அறிஞ்சா சொல்றன் அண்டி”, என்று சொல்லி வைத்து விட்டாள்.

ஸிலோன் ரோட்டில் சித்திவிநாயகர் கோவிலில் வார இறுதியில் குடும்பத்தோடு பார்க்கலாம் அவர்களை. நல்ல குடும்பம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது பரிமளம் ரூபிணிக்கு அறிமுகமாகியிருந்தாள். அன்று வீட்டிற்குக் கூட்டி வந்திருந்தாள் பரிமளாவை. கண்ணோடு கண் பொருத்தித் தயங்கித் தயங்கிப் பேசினாள் பரிமளம். வீட்டைக் குறித்து விசாரித்தபோது, “திரிகோணமலையிலிருந்து வந்தநாங்க. அப்பா, அம்மா நாங்க ரெண்டு பெட்டைகளும் வீட்டில. எனக்கு மூத்தவ அக்கா. அம்மம்மா எங்ககூடத் தான் நிக்கிறவ”, என்று அவள் பேசிய தமிழ் வித்தியாசமாகவும் மிக இனிமையாயும் இருந்ததால் அவள் வாயைக் கிளறிப் பேசவைத்துக் கேட்பேன் நான் பலமுறை.
ஊரே உறங்கப் போகும் நேரத்தில் இந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பாதது மிகவும் கவலையாக இருந்தது. ப்ரியா வீட்டு போன் அடித்துக் கொண்டே இருந்தது ப்ரியாவும் சரி பரிமளமும் சரி இரண்டு வருடத்திற்கு முன்பு வரை ரூபிணியோடு நட்புடன் பழகியவர்கள் தான். இப்போதெல்லாம் இவளைத் தவிர்த்து வருவதைப்போலத் தோன்றியது. பல நல்ல நண்பர்கள் விலகிப் போயிருந்தார்கள். ரூபிணியின் பணப்பையின் பருமனைப் பார்த்துச் சேர்ந்த வேறு ஒரு கூட்டம் உருவானது.

***

வாசலில் நிழலாடியது. ஒரு வழியாக வந்து சேர்ந்தாள் ரூபிணி. கேட்டைத் திறந்து கொண்டே, “ரூபிணி, ஏன்லா இவ்ளோ லேட்? போன் போட்டா என்ன? ம்? “,என்று நன் கேட்ட கேள்விகளைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. பின்னாலேயே நூருலும் ஷ�ஹ்வானும் வந்தார்கள். “அல்லாம்மா 1, ஷீ இஸ் எ பெயின் யூ நோ,.. இக்நோர் ஹர். ஜஸ்ட் கம் டு மை ரூம்”, என்றபடி ரூபிணி இருவரின் இடைகளையும் இருகைகளாலும் அணைத்துக் கொண்டே அறைக்குள் போன போது தான் கவனித்தேன். ரூபிணியைப் போல உடுக்காமல் அவர்கள் பூப்போட்ட முக்கால் பாவாடை அணிந்திருந்தார்கள். மூவரிலும் நான் அதுவரை அறிந்திராத ஏதோ ஒரு வகையான புதிய மணமும் இருந்தது. “இவங்க வீட்டுல எல்லாம் தேட மாட்டாங்களா? இந்நேரத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க?”, என்றதற்கு, “இன்னிக்கு இங்கதான் படுக்கப் போறாங்க. அவங்க வீட்டுல தெரியும்”, என்றள் ரூபிணி. இது இரண்டாவது நாள் ஒரே மாதத்தில் இவ்விரு பெண்களும் இங்கு வந்து உறங்குவது.

அன்று வந்திருந்த போது வீட்டிற்குள் நுழைந்த போது, கீழ்த்தளத்தில் பார்த்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரைப் பற்றி விமரிசித்துக் கொண்டே நுழைந்தார்கள். ‘க்ளாங் 2 புத்தி’, என்றாள் நூருல். ஷ�ஹ்வானும் சிரித்துக் கொண்டே, ‘ஸியேன் 3 லா’, என்றபடி ஆமோதித்தபடி தலையையாட்டினாள். “ஏய், நாங்கிட்ட இருக்கும் போதேவா?”, என்று கேட்டுக் கொண்டாள் அதட்டலாகவும் உரிமையுடனும். சங்கடத்துடன் நெளிந்தனர் இருவரும் நாக்கைக் கடித்துக் கொண்டே. அதுவரை நடந்த ஆங்கில உரையாடலினூடே, ‘ஏண்டி எங்கிட்ட இருக்கற பணத்தப் பார்த்து என்கிட்ட ஒட்டிக்கிட்டு என்னோட இனத்தையே கேவலமா பேசறீங்களா, ம்?’, என்று தமிழில் ரூபிணி பேசியது புரியாவிட்டாலும் ஏதோ திட்டுகிறாள் என்று மட்டும் புரிந்து கொண்டு அமைதியானார்கள்.

“ஏன், ரூபிணி இதுங்களோட சேராட்டி தான் என்னலா?”, என்று கேட்டதற்கு, “யாரும் சேரமாட்டேன்றங்களே என்னோட. இவளுங்களுக்கு என்னோட காசாவது பிடிக்குது. அடுத்த நாள் அவ்விருவரும் கிளம்பிப் போகும் போது இருவரையும் கன்னத்தில் முத்தமிட்டு கையில் எதையோ அழுத்திக் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள். சக தோழியிடம் கட்டிடும் அன்பைப்போலில்லாமல் இருந்த ரூபிணியின் செய்கை என்னைக் கூசிடச் செய்தது. கண்டபடி பூத்திருக்கும் காட்டு மலர்களைப் போல இருக்கும் இப்பெண்கள் மனதில் எதிர்காலம் குறித்து என்ன தான் இருக்கும்?
ரூபிணியின் போக்கு சரில்லை என்று மட்டும் பட்டபடியிருந்தது கொஞ்ச நாட்களாகவே. ரூபிணியை மீண்டும் கௌன்சிலரிடம் கூட்டிப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இவளைத் திருத்த என்ன தான் வழி என்று அன்றிலிருந்து யோசித்தபடியே இருந்தாலும், குட்டியைப் பார்த்துக் கொள்ளவும் மற்ற வேலைகளை கவனித்துக் கொள்ளவுமே சரியாக இருந்தது. நான் பார்த்து வந்த பகுதிநேர வேலையைக் கூட விட வேண்டியிருந்தது. இதில் இவள் பின்னால் போகத் தான் முடிகிறதா? நான் போகவும் பேசவும் தயாராயிருந்தாலும் ரூபிணி ஐந்து நிமிடம் நின்று பேசிடுவாளா? ஏதோ அவளின் பிறப்பிற்குக் காரணமான நான் தான் அவளின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகிப் போனதாக அவள் சொல்லாமல் சொன்னதைப்போலவே அவளின் செய்கைகள் எனக்குச் சொல்லின.

மூடியிருந்த கதவில் லேசாகத்தட்டி, “ரூபிணி சாப்ட வரல்ல?”, என்றதும் வேண்டாம் என்று கதவைத் திறக்காமலே சொல்லி விட்டாள். ரூபிணி வீட்டில் சாப்பிடுவது குறைந்து போனது. ‘பசை’ 4 முகர்கிறாளோ என்றும் என்னுள் சந்தேகமிருந்தது. கேட்டால், காட்டுக் கத்தல் கத்துவாள். இந்தப் பெண்களின் வீட்டில் தேட மாட்டார்களா? வீட்டுத் தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டாவது சொல்லலாம். நானும் போய்ப் படுத்துக் கொண்டேன்.

***

அடுத்த நாள் காலையில் சீக்கிரமே முழிப்புத் தட்டிவிட்டது. ரூபிணியின் அறையில் ஏதேதோ விநோத ஓசைகள். பசியாறிடப் பேசாமல் இன்று உணவகத்துக்குப் போகலாமா என்று யோசித்த படியே சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரூபிணிக்கு நாசிலிமா 5 என்றால் மிகவும் பிடிக்கும். சாப்பிட்டுவிட்டு மூன்று பெண்களுக்கும் வாங்கிக் கொண்டு வந்திடலாம். மெதுவோட்டமும் விரைவு நடையுமாகப் பலரைப் பார்க்க முடிந்தது. பழைய நாளிதழைச் சுருட்டி வைத்துக் கொண்டு நாயையும் உலவக்கூட்டிக் கொண்டு அதன் பின்னாலேயே நடந்தார் ஒரு பெண்.

குட்டி எழுமுன்னரே சீக்கிரமே குளித்துவிட்டு வந்துவிடலாமென்று குளியலறைக்குள் புகுந்தேன். பாதிகுளித்துக் கொண்டிருக்கும் போதே அவளின் அழுகைச் சத்தம் கேட்டதுமே துண்டைப்போர்த்திக் கொண்டு அறைக்குள் பாய்ந்தோடினேன். அடுத்த அறையில் தானிருந்தாள் ரூபிணி தோழிகளுடன். அவளை நம்பமுடியாது, கவனிக்க மட்டாள். விழவிருந்த குட்டியைச் சட்டென்று பிடித்து விட்டேன். இப்போதெல்லாம் தவழத் துவங்கிவிட்டதால் குட்டி படுக்கையில் விளிம்புக்கு விழுவதைப் போல வந்துவிடுகிறாள். துண்டைக் கட்டிக்கொண்டு குடுகுடுவென்று சமையலறையிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு மீண்டும் அறைக்குள் புகுமுன்னர், “ரூபிணி, குட்டி அழுதுச்சுன்னா, கொஞ்சம் பார்க்கக்கூடாதா?”, என்று கேட்டதற்கு, “குட்டியா? என்ன குட்டி ஏது குட்டி?”, என்று கதவை ஒருக்களித்தபடி என்னிடம் கேட்டாள். குரலில் ஒருவித உற்சாகமும் கேலியும் கலந்திருந்தது. “ஏன் உன் கொழந்த தானேலா அது. இவ்ளோ அலுத்துக்குற? “, என்று கேட்டதற்கு, “ஏன், நானாலா உங்கள வளக்கச் சொன்னேன். இப்பக்கூட நாட் டூ லேட் லா. குப்பையில போடுங்க”, என்றாள் ரூபிணி. நின்றிடாமல் படீரென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

உடைகளைக் களைந்து விட்டு அவர்களோடு சேர்ந்து இவள் என்னதான் செய்கிறாள் உள்ளே? ப்தற்றத்துடன், ” ரூபிணி ரூபிணி, கதவச் சாத்திக்கிட்டு உள்ள என்னலா செய்றீங்க?”, என்று அறைக்கதவைத் தட்டினேன் சற்று பலமாகவே. மீண்டும் துண்டைப் போர்த்திக்கொண்டு வெளியேறியவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, “என்ன செய்றீங்கன்னா, தெரியாமக் கேக்கறீங்களா? இல்ல, தெரிஞ்சுகிட்டே தான்,..?”, என்று தோரணையுடன் கேட்டவளைப் பளேரென்று அறைந்தேன் அவளின் இடது கன்னத்தில். ரூபிணியை நான் அடித்தது அது முதல் முறை. அடுத்த நொடியிலேயே அவளைப்பற்றிய கவலையினூடே அவளின் மேல் ஒருவித இரக்கம் சுரந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, ப்ரியாவைச் சந்திக்க நேர்ந்தது ரயில் நிலையத்தில். பேச்சுக் கொடுத்தேன். ஒருமுறை தயங்கித் தயங்கி, “இல்ல ஆண்டி. முன்னயெல்லாம் பசங்ககூட ரொம்ப சுத்துவா. எங்கம்மா கூட ரூபிணியோட சேரவேணாம்னு சொல்லும்போதும் கூட அவகூடப் பேச எங்களுக்குப் பிரச்சனையாயில்ல. ஆனா, ரூபிணி இப்பல்லாம் தொட்டுத் தடவிப் பேசறா. ரொம்பக் கூச்சமாயிருக்கு. அதுவுமில்லாம ஷாப்பிங்க் போலாம் வான்னு அவ கூப்டு நாம் போலன்னா கோபத்துல் கத்தறா. அதான்,.. “, என்று இழுத்த போது அருகில் நின்றிருந்த பரிமளம் ஆமோதிப்பதைப் போல நின்றிருந்தாள். அப்போதும் கூட நம்பவில்லை. அதன் பொருளை அவள் வாயிலிருந்தே கேட்கவும் நேரும் என்று கொஞ்சமும் நினைத்திடவில்லை. “நாம கௌன்ஸ்லிங் போவோம்லா ரூபிணி, நான் ப்பாயிமெண்ட் �பிக்ஸ் பண்றேன்”, என்று சொல்லிக்கொண்டே அருகில் போய் அவளைச் சமாதான்ப்படுத்திட முயன்றபோது கையை வீசி என்னை விலக்கினாள். அழுதபடி என் இடுப்பில் இருந்த குட்டி வேகமாக அழத் துவங்கினாள்.
நினைத்ததை விட பலமாக இறங்கிவிட்டிருந்தது அடி. கன்னத்தைப் பிடித்துக் கொண்டே கண்களில் கண்ணீர் நிறைய, “நா ஒண்ணும் உங்க அடிமையில்ல. நா கமலா ஆண்டி வீட்டுக்கு போயிடறேன். இன்னிக்கே, இப்பவே”, என்றாள். வலது கை கட்டிருந்த துண்டு நழுவிடாமல் பிடித்திருந்தது. அவளின் கண்களில் தெரித்திட்ட கோபம் என்னை எரித்துவிடக் கூடியதாக இருந்தது.

அவளின் பின்னால் நூருலும் ஷ�ஹ்வானும் என்னவொ ஏதோவென்று அறியும் ஆர்வத்துடன் தயங்கித்தயங்கி நின்றார்கள். அவசர அவசரமாக அதற்குள் ஆடைகளை உடுத்திக் கொண்டிருந்தார்கள் போல. ரூபிணியிடம் கையசைத்து விடைபெற்றுப் போனார்கள். அறை அலங்கோலமாகக் கிடந்தது கூடத்திலிருந்தே தெரிந்தது. போக்கே மாறிப்போகிறதா? அப்படிக் கூடவா உடம்பு பரபரத்திடும்? அல்லது, பழி வாங்குகிறாளா? ஆனால், யாரை? எதை?

“அக்கம் பக்கம் கமலாவையும் அவளோட கூட்டாளிகளையும் பத்தி சொல்லும் போது நான் நம்பல்ல. இதெல்லாம் உனக்கெதுக்குலா ரூபிணி, நல்லாவா இருக்கு சொல்லு. நீ நல்லாப் படிச்சு நல்ல வேலைக்கிப் போய் குட்டிய,..”, என்று நான் முடிக்கும் முன்னர், “ஷட் அப். ஆண்டியப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நான் இனிமே இப்டித்தான். ஆம்பளத் தடியன்கள நான் நம்ப முடியாது. எனக்கு இது தான் பாதுகாப்பு. ‘என்னவானாலும் உனக்கு நானிருக்கேன் ரூபிணி’னு கமலா ஆண்டி சொல்லியிருக்கங்க. இது தெரியாமத் தான் எவன் கிட்டயோ அந்தக் குட்டிச் சாத்தான வாங்கிகிட்டு வந்துட்டேன். முன்னாடியே கமலா ஆண்டி கிட்டப் போயிருந்தேன்னா, அதெல்லாம் நடந்திருக்குமா? ம்? இதான் எனக்குப் பாதுகாப்பு”, என்றவளைப் பார்த்த‌படி அப்படியே உறைந்து நின்றேன்.

———————————————————————————————————————-
அல்லாம்மா – ஐய்யய்யோ/அடடா என்று அலுத்துக் கொள்ளும் உள்ளூர் வட்டார வழக்கு
க்ளாங் – இந்தியனைக் குறிக்கும் சொல் (ஆங்கிலேய ஆட்சியின் போது கடுமையான வேலைகளுக்கென அன்றைய மலேயாவிற்கு இந்தியாவிலிருந்து சிறைக் கைதிகளைக் கூட்டி வந்தனர். நடந்த போது அவர்களின் கால் சங்கிலிகள் ‘க்ளாங், க்ளாங்’ என்ற சத்தம் எழுந்ததால், அப்படியே இந்தியனைக் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்)
ஸியேன் – பைத்தியம் (சீனச் சொல்)
பசை – முகர்ந்திடும் ஒரு வகை போதைப் பொருள்
நாசிலிமா – தேங்காய்ச் சோறு (மலாய் சொல்)

நன்றி: வல்லினம் ‍ நவம்பர் 2007

http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp
http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=jayanthi
http://jeyanthisankar.blogspot.com/


sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்