வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சொர்ணபாரதி


வைகறை இலக்கிய வாசல் என்னும் அமைப்பின் சார்பாக தமிழின் நவீன படைப்புச்சூழலும் புதிய பாதையும் என்னும் தலைப்பில் சென்னை அருகே உள்ள தனக்கில்லா முகாம் என்னும் குறுங்காட்டில் நடைபெற்றது.

18-5-03 அன்று காலை 10 மணிக்கு சென்னையின் நவீன இலக்கிய படைப்பாளர்கள் மையம் கொண்ட ஒரு பெரும் ஆல மரத்தினடியில் அமைந்த நிகழ்வின் முதல் பகுதியாக கவிதை வாசிப்பு நடைபெற்றது. வண்ணை சிவா கலகலப்பாக ஆரம்பித்தார்.

தமிழ்மணவாளன்,பூமா ஈஸ்வரமூர்த்தி,புகழேந்தி,செல்லம்மாள் கண்ணன்,கிருஷாங்கினி, ப்ரியம்,பால்நிலவன்,மு.முருகேஷ்,விஜேந்திரா என பலர் வாசித்தனர்.

புதிய நண்பர் ஒருவர் தன் கவிதைகளை ஆல இலைகளில் எழுதி வாசித்தது கவனிக்க வைத்தது. பறவைகளுக்கு அழைப்பில்லையோ -அவைகள் வரவில்லை என வாசித்ததுமே ஏராளமான பறவைகள் குரலெடுத்ததும் இனிய அனுபவம். செந்தூரம் ஜெகதீஷ்,ரவிச்சந்திரன்,வே.எழிலரசு ஆகியோர் கட்டுரை வாசித்தனர்.

வே.எழிலரசுவின் கட்டுரையில் பாரதிதாசனையும் பிச்சமூர்த்தியையும் இரு துருவங்களாய்பார்த்த இலக்கியப்பாகுபாட்டை விமர்சித்தார். நவீன இலக்கியம் தானே தனது புதிய பாதையை தீர்மானிக்கும் என்றும், அதற்கு இலக்கிய ச்மூக சூழலே பொறுப்பாகுமென்றார். பின்னர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் பல்வேறு பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதிய உணவிற்குப்பின் வட்டமிட்ட அனைவரும் கலந்துரையாடல் மூலம் புதிய கருத்தாக்கங்களை உருவாக்கும் வேகத்தோடு சொல்லாடினார்.

எஸ், ரா வும் ,ஜெயந்தனும் பெரும் பகுதி கலந்துரையாடலை தங்கள் வசப்படுத்திப் பல்வேறுகருத்துக்களையும், ஆழ்ந்த கேள்விகளையும் முன்வைத்தனர்.பலவேளைகளில்,கருத்துபதிவு, செயலாக்கம் எஅற தளங்களின் எதிர் முரணில் சற்றுக் கோபமான விமர்சனத்துக்குரிய சொற்கள் வெளிவந்தாலும் கூட அவையும் கலந்துரையாடலின் சுவராஸ்யத்திற்கு கூடுதல் பலம் சேர்ப்பவையாகவே அமைந்தன.

வெளிநாட்டு இலக்கியங்களில் காணும் மாய யதார்த்தம் நம் பாட்டிகள் சொன்ன கதைகள் தாம். எல்லா நம்பிக்கைகளுமே மீண்டும் நினைவு கொள்ளவும்,பரிசீலிக்கவும் கூடியவையே என எஸ்.ரா வும்,நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே உள்ள கோடு எதுவென ஜெயந்தனும் தங்கள் கருதுக்களை முன்வைத்தனர்.

சொர்ணபாரதி வரவேற்க,விஜேந்திரா நன்றி கூறினார். நிகழ்வில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்து சிலர் வராததும்,வராமைக்கான காரணம் கூடத் தெரிவிக்காததும் வழக்கமான துரதிர்ஷ்டமே.

கோடை நாளில் இயற்கைச் சூழலில் பல படைப்பாளிகளை ஒருங்கிணைத்த தமிழ்மணவாளன் பாராட்டுக்குரியவரே.

***

சொர்ணபாரதி

kalvettu2002@yahoo.co.in

Series Navigation