ரேஷன் அரிசி

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

கோ. சிவசுப்ரமணியன்



த்……தேரி….ஸ்ஸூ….டே சுரேசு…அந்த மாட்ட முடுக்குடா…எழவெடுத்தது….பிஞ்சையெல்லாம் எப்படி கடிச்சி வெச்சிருக்குப் பாரு….

அவிழ்ந்து விழுந்த வேட்டியை ஒரு குத்துமதிப்பாக தூக்கிக் கட்டிக்கொண்டு தரையில் விழுந்த, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்த அந்த துண்டைத் தூக்கி கொடியை ஆட்டுவதைப்போல வேகமாக அசைத்துக்கொண்டே வெங்கட்ராமனும் அந்த “சுரேசு’ வோடு சேர்ந்து மாட்டைத் துரத்தினார். மாடு மிரண்டு ஓடி வரப்பில் தடுமாறி விழுந்து எழுந்து மறுபடியும் ஓடியது.

மாட்டை விரட்டி விட்டுத் திரும்பி தன் தோட்டத்தைப் பார்த்தார். வெண்டைச் செடிகள் அப்போதுதான் பிஞ்சு விடும் பருவத்தில் இருந்தன. அரைகுறையாய் மாடு கடித்து விட்ட இலைகளையும், பிஞ்சுகளையும் துண்டித்து தூர எறிந்துவிட்டு, பக்கத்தில் இருந்த வயலைப் பார்த்தார். விளைந்து நின்ற நெற்பயிர்கள் பாரம்தாங்காமல், முதல் முறை பெண்பார்க்க வருபவர்கள் முன் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப்போல தரை நோக்கியிருந்தன.

போன போகமே விதைக்க முடியவில்லை. மூத்தமகள் முதல் பிரசவத்துக்கு வந்தவள், உடல் நலம் குறைந்து ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இருக்கும் ஒரு ஏக்கர் கழனியில் இரண்டு போகம் விளைந்து கொண்டிருந்தார். வானம் பார்த்த பூமிதான். அதனால் கடனை உடனை வாங்கி ஒரு கிணறு வெட்டினார். அதற்கு இதுவரை மின்சார இணைப்பு கிடைக்கவில்லை. டீஸல் வாங்கி இயந்திரத்தை இயக்கி தண்ணீர் இறைத்து வந்தார். அவரது வயலுக்குப் போக பக்கத்து நிலங்களுக்கும் இறைத்ததில் டீஸல் செலவுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது.

இந்த முறை விதைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டார். விவசாய கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. வந்தாலும் டவுன் ஆட்களைப் போல குறிப்பிட்ட நேரம்தான் வேலை செய்வோம், சாப்பாடு போடவேண்டும், இவ்வளவு கூலி வேண்டுமென்று கறாராகப் பேசிக்கொண்டுதான் வருகிறார்கள். முன்பெல்லாம் அவர்களே வந்து கேட்பார்கள். வேலை முடிய எவ்வளவு நேரமானாலும் முகம் சுளிக்க மாட்டார்கள். அரசாங்கம் இலவசங்களும், இரண்டு ரூபாய் அரிசியும் கொடுக்க தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு இரண்டு நாட்கள்தான் வேலைக்கே போகிறார்கள். கேட்டால்,

“கிலோ ரெண்டு ரூபாய்க்கு அரிசி கிடைக்குது மாசமானா எங்க வூட்டுக்கு 40 கிலோ போதும். எங்க கூப்பனுக்கு(ரேஷன் அட்டை) 20 கிலோ கெடைக்குது. பேட்டையில(டவுனில்) இருக்கிற மவராசங்க வூட்டு கூப்பன் எதானா ஒண்ணு கெடைச்ச அதுல 20 கிலோ கிடைக்குது. 80 ரூபாயில சாப்பாட்டுப் பிரச்சனை தீந்துச்சி…மேல் செலவுக்கு வாரத்துக்கு ரெண்டு நாள் வேலை செஞ்சாலே போதும்”

என்று சொல்கிறார்கள்.

வெங்கட்ராமனின் மனைவி கூட சொல்லிப் பார்த்தாள்.

‘இந்த அரை ஏக்கர்ல நெல்லு விதைக்கறதுகுள்ள தாவு தீந்துடுது. எதுக்கு இத்த கட்டிக்கினு மாரடிக்கிறே பேசாம கூப்பன் அரிசி வாங்கி திங்கலாமில்ல. இதுல பூவாச்சும் போட்டா வண்டிக்காரன் வந்து வாங்கிட்டுப் போவான்”

என்று எவ்வளவோ சொல்லியும்,

‘கழனி இருக்கும்போது கூப்பன் அரிசி சாப்பிடனுன்னு எதானா தலையெழுத்தா கம்முனு இருடி.இன்னொரு வாட்டி கூப்பன் அரிசியப் பத்திப் பேசுன….அதுவுமில்லாம, நெல் வெளையுறவெனெல்லாம் பூவையும், காயையும் வெளைஞ்சான்னா…நாளைக்கு அரிசிக்கு வேற நாட்டுக்கிட்டதான் கையேந்தனும். தலைமுறை தலைமுறையா சொந்த நெலத்துல வெளைஞ்சி சாப்பிட்டவங்கடி நாங்க. என்கிட்ட கூப்பன் அரிசி திங்க சொல்றியா? ”

என்று இவர் தன் மனைவியை சும்மா இருக்கச் சொல்லிவிட்டு அந்த ரேஷன் அரிசியையும் இப்படி கூலி வேலைக்கு வருபவர்களிடம் கொடுத்துவிடுவார்.

நெற்பயிரையே பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு பெரு மூச்சுடன் ” அறுப்புக்கு ஆள் தேட இன்னும் எவ்ளோ கஷ்டப்படனுமோ அந்த பச்சம்மா சாமிக்குத்தான் வெளிச்சம்” என்று நினைத்துக்கொண்டு பம்ப்செட் தொட்டியிலிருந்த நீரை எடுத்து கை கால்களைக் கழுவிக்கொண்டு அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்தார். ஏரி ஓரங்களில் வளர்ந்து நிற்கும் நாணல் புற்களால் வேய்ந்த கூரை. அதை அந்தப் பகுதி மக்கள் போதப்புல் என்று சொல்வார்கள். மண் சுவர். சாணம் மெழுகிய தரை. உள்ளே சென்று முட்டுக்காக கொடுக்கப்பட்டிருந்த தென்னை மரத்தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

வெங்கட்டம்மா கையில் பித்தளை குவளையில் தண்ணீரோடு அவரை அணுகி, அதை அவர் கையில் கொடுத்துவிட்டு,

‘எப்ப அறுக்கலானு கீற?’

“ரெண்டு நாள் போட்டும், தாசப்பனும் அவன் வூட்டுக்காரியும் வரன்னு சொல்லியிருக்காங்க…அப்படியே இன்னும் ரெண்டு பேரைப் பாத்து கூட்டியாரனும். எவனும் வரலன்னா நீயும் நானுந்தான் அறுக்கனும்” என்றதும்,

” அதுக்குத்தான் நான் தலப்பாடா அடிச்சுக்கறேன்…” என்று ஆரம்பித்தவளைப் பார்த்து,

“நிறுத்துடி! இவளுக்கு இதே ரோதனையாப் போச்சி. அதான் அந்த தாசப்பன் வரன்னு சொல்லியிருக்கனில்ல…வுடு”

சொல்லிக்கொண்டிருந்தவர் வாசலில் நிழலாடுவதைக் கவனித்துவிட்டு பார்வையைத் திருப்பினார். மூத்தமகள் கைக்குழந்தையுடன் வந்து கொண்டிருந்தாள். மகளையும் பேத்தியையும் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ச்சியுடன்,

வாடி சாந்தி, உங்க வூட்டுக்காரன் வர்ல? கேட்டுக்கொண்டே கைக்குழந்தையை வாங்கி புகையிலை மணக்கும் வாயால் பேத்தியை முத்தமிட்டாள்.

கேட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கொண்டு வந்த துணிப்பையையை கீழே வைத்துவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.

அந்த செயலைப் பார்த்ததுமே வெங்கட்ராமனுக்கு திக்கென்றாகிவிட்டது. இந்த முறை எதை எதிர்பார்த்து வந்திருக்கிறாளோ மகள் என்ற அச்சம் தோன்றிவிட்டது. எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்த அப்பனைப் பார்த்து முகத்தில் சுரு சுருவென்று ஏறிய கோபத்தோடு,

“என்னான்னு ஒண்ணும் கேக்க மாட்டியா? ஒரலாட்டம் ஒக்காந்துனுக்குறதப் பாரு. உங்களுக்கென்னா…மவளக் கட்டிக்குடுத்துட்டா..வுட்டுதுடா ஏழ்றநாட்டு சனின்னு கம்முன்னு இருப்பீங்க. எங்க வூட்டுக்காரன்கிட்டயும், மாமியாக்காரிக்கிட்டயும் தெனம் பேச்சு வாங்கறது யாரு. பொட்டப்புள்ளையை பெத்து எடுத்துக்கினு வந்திருக்க, எங்கடி உங்கப்பன் போடறாதா சொன்ன ஒரு பவுனு சங்கிலின்னு இந்த ஆறு மாசமா என்ன நோவடிச்சிக்கினே இருக்காங்க. இன்னைக்கு அந்த ஆளு எந்த எழவையோ குடிச்சிட்டு காலங்காத்தால வந்து எட்டி ஒதைக்குறான். அதான் புள்ளைய தூக்கிகிட்டு வந்துட்டேன். ஒரு பவுனு போட்டாத்தான் நான் திரும்பி அந்த வூட்டுக்குப் போவேன் ஆமா…” உறுதியாய் சொல்லிவிட்டு அதற்குள் சிணுங்க ஆரம்பித்த மகளை தாயிடமிருந்து வாங்கி மடிமீது போட்டுக்கொண்டு சுவர் பக்கமாகத் திரும்பிக்கொண்டாள்.

“ம் கதுரு வெளைஞ்சிருக்கே குருவி வரலியேன்னு பாத்தேன். வந்துட்டா நான் பெத்த மகராசி. சரி அறுப்பு முடிஞ்சதும் அந்த ஒரு பவுனைப் போட்டுத் தொலைச்சிடலாம்” என்று நினைத்துக்கொண்டே மனைவியைப் பார்த்து சோறாக்கிட்டியா? என்றார்.

” ம்…சாறு மட்டும்தான் காச்சனும். நீ போய் கிருஷ்ணன் கடையில ஒரு பாக்கெட் போட்டி(குழல்போல இருக்கும் திண்பண்டம்) வாங்கிக்கினு வந்துடு. உன் மவளுக்கு இல்லன்னா சோறு எறங்காது.”

அடுத்த நாள் தாசப்பனைத் தேடி அவன் வீட்டுக்குப் போனார். உள்ளே தரையில் பாயைப் போட்டு தலையணையை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். டே தாசா என்னாடா டிவிபொட்டியெல்லாம் வாங்கிட்டியா? கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தவரைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்துகொண்டே வா மாமா. ஒக்காரு. நான் எங்க மாமா வாங்கறது. கவுர்மெண்ட்டு குடுத்தது. ஏன் மாமா உனக்கு குடுக்கலையா?

இல்லியேடா…

நீ அப்ப இந்த கட்சியில்லியா?

நான் எந்த கட்சியும் இல்லியேடா…

அது சரி. நான் கூடத்தான் இல்ல. வந்து கேட்டானுங்க இந்தக் கட்சியான்னு…ஆமான்னேன்…முன்சீப் ஆபீசாண்ட வந்து கை நாட்டு வெச்சுட்டு டிவி பொட்டி வாங்கிட்டு போடான்னானுங்க. போய் வாங்கியாந்துட்டேன்.

சரி வுட்றா எனக்கு என்னாத்துக்கு இந்த கருமம். நாளானன்னைக்கு நீயும் உங்க பொண்டாட்டியும் வந்துடுங்கடா. காத்தால ஆரம்பிச்சாத்தான் வெயில் ஏற்றதுக்குள்ள அறுப்பு முடியும்.

மாமா…வந்து…. அவன் இழுப்பதைப் பார்த்ததும் இவருக்கு பகீரென்றது. வரமாட்டானோ…?

என்னடா இலுக்கிற….

அதில்ல மாமா…வூட்டுக்காரி அவங்கம்மா வூட்டுக்கு போகனுன்னு சொன்னா? கொழுந்தியாளுக்கு நிச்சயம் பண்றாங்க அதுக்கு கண்டிசனா போகனுன்னு சொல்லிட்டா…அதான்….நீ வேற யாரையாவது பாத்துக்கறியா?

அடப்பாவி…இப்ப வேற எவனைப் போய் தேடச் சொல்றடா? எவனும் வர மாட்டேங்கறானுங்களே….சிறிது யோசனைக்குப் பிறகு,

சரி நான் போய் அந்த நாகனைப் பாக்குறேன்….என்று சொல்லி விட்டு…கொஞ்சம் தொலைவில் இருந்த நாகன் வீட்டுக்குப் புறப்பட்டார்.

அவர் தலை மறைந்ததும்,

“நல்ல வேல பண்ணய்யா…நாளான்னைக்கு காத்தால ஏலு மணியிலருந்து செறப்பு நிகழ்ச்சிங்கன்னு டிவியில சொன்னாங்க. புது படம் பதினோரு மணிக்கே போடறாங்களாம். அத்தப் பாக்குறத வுட்டுட்டு அறுப்புக்கு வா கறுப்புக்கு வான்னா…? தாசனின் மனைவி கணவனை மெச்சிக் கொண்டாள்.

நாகனும் வேறு வேலை இருப்பதாக சொல்லிவிட, தனக்குத் தெரிந்த அத்தனைப் பேரிடமும் போய்க் கேட்டும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தளர்ந்துபோய் திரும்பி வந்தார். வீட்டில் மகளைப் பார்த்ததும் அந்த ஒரு பவுனின் நினைவு வர என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

அடுத்த நாள் மனைவியைத் துணைக்கு வைத்துக்கொண்டு அறுப்பு வேலையை மேற்கொள்ளலாம் என்று இருவரும் வயலில் இறங்கினார்கள். ஒரு ஏக்கர்தான் நாளைக்கு முடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு வேகமாக அருவாளை வீசினார்கள். சர சரவென்று முன்னேறிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் மகளின் அலறல் கேட்டது. தூக்கி வாரிப்போட இரண்டு பேரும் வீட்டை நோக்கி ஓடினார்கள். அறுபட்ட பயிரின் முனைகள் வெறுங்காலை பதம் பார்த்தது. அதையும் சட்டை செய்யாமல் விழுந்தடித்து ஓடினார்கள். குழந்தை பேச்சு மூச்சில்லாமல் கிடந்தது.

“நைனா…புள்ளைய தேள் கடிச்சிடிச்சி. பெரிய தேளு…கஞ்சி காச்சிக்கினு இருந்தேன் புள்ள அழற சத்தம் கேட்டு ஓடியாந்தேன்..இதா இந்த சனியன் புடிச்ச தேளு பக்கத்துல இருந்திச்சி.” என்று நசுக்கிய தேளைக் காட்டிக்கொண்டே கதறினாள். உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலைக்கு வந்தவர்கள் அந்தப்பக்கமாய் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வேண்டிக் கேட்டுக்கொண்டு மகளையும் குழந்தையையும் அவருடன் பெரியாஸ்பத்திரி என்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வேகமாக நடந்து முக்கிய சாலைக்குப் போய் நகரப் பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்தார்கள்.

நல்லவேளையாக சரியான சமயத்தில் கொண்டு வந்தததால் குழந்தையின் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று சொல்லிவிட்டார்கள். மருத்துவமனையில் இருக்கும்போதே வெளியே மழை கொட்டும் சத்தம் கேட்டு ஓடி வந்த வெங்கட்ராமன்…பொத்துக்கொண்டு ஊற்றும் மழையைப் பார்த்ததுமே “அய்யோ கடவுளே என் பயிருக்கு என்னா ஆச்சோ’ என்று கதறினார். வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் இந்த மழை கன மழையாகத் தொடரும் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து அமர்ந்துவிட்டார்.

குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் அங்கிருந்து பேய் மழையால் நிரம்பிய நீரில் தாழ்ந்துபோயிருந்த பயிரைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். கண்ணிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

இரண்டு நாட்கள் விடாமல் பெய்த மழையால் அவரால் பயிரைக் காப்பாற்றமுடியவில்லை. அழுதுகொண்டே போன மகளை ஆறுதல்படுத்தவும் முடியாதவராக வாசலில் அமர்ந்துவிட்டார். வீட்டில் அரிசி தீர்ந்துவிட்டிருந்தது. வெங்கட்டம்மாள் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டாள். பள்ளி விடுமுறையால் வீட்டிலிருந்த சின்னவள் களைப்போடு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள். மனைவியையும், சின்ன மகளையும் பார்த்துக்கொண்டே இருந்தவர்..திடீரென்று எழுந்து வெளியே போனார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் வெங்கட்டம்மா அந்த கூப்பனை எட்றி. போய் அரிசி வாங்கிகினு வரேன். கிருஸ்ணன்கிட்ட 50 ரூபா கடன் வாங்கினேன். ஒரு 20 கிலோ அரிசி வாங்குனா இந்த மாசத்துக்கு சரியாப் போய்டும்.

சொன்னவரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டே அந்த குடும்ப அட்டையை எடுத்துக்கொடுத்தாள். கடைக்குப் போகும்போது நின்று அந்த வயலைப் பார்த்தவர் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பூச்செடி வெச்சிட வேண்டியதுதான்…………..

கோ. சிவசுப்ரமணியன்.

Series Navigation